இலங்கையில் இலக்கிய நடை முறைகளை எப்படி ஊக்குவிப்பது?

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!இலங்கையில் தமிழ் இலக்கியம் கடந்தகாலப் போரினால் ஏற்பட்ட தடைகளையும் மீறி தற்பொழுது துளிர்த்து வருகிறது. பலர் தனிப்பட்ட ரீதியிலும் குழுவாகவும் வெவ்வேறு பிரதேசத்தில் இயங்குகிறார்கள் என்பது, பல இலங்கை நண்பர்களோடு பேசியபோது எனக்குப் புரிந்தது. இந்த இலக்கியச் செடியை உரமீட்டு மேலும் வளம்பெற செய்யவேண்டும் என்ற எனது விருப்பத்தால் பலருடன் கலந்துரையாடியபோது, தொடர்ச்சியான நடவடிக்கைகளால் மட்டுமே அதை ஏற்படுத்தமுடியும் என்பதும் மேலும் இந்த நடவடிக்கைகளுக்கு நிதிவளமும் தேவை என்பதும் புரிந்தது. ஆங்காங்கு நடத்தப்படும் மாநாடுகளையும் இலக்கிய சந்திப்புகளையும் விட்டு விட்டு வெளிச்சத்தை ஏற்படுத்தினாலும் தொடர்ச்சியான செயற்பாடுகளே உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது எனது கணிப்பு. இது போன்ற விடயங்களை அங்கே தனிநபர்களோ அல்லது தற்போதைய அரசாங்கமோ செய்யும் நிலையில்லை. மொழியில் ஏற்படும் முன்னேற்றம் எழுத்தாளர்கள் அல்லது இலக்கியத்தோடு நின்று விடாது. தமிழ் எமது நாட்டில் புவியியல் மதம் என பிரிந்திருக்கும் தமிழர்களை இணைக்கும் பாலமாகும். அதை வலுப்படுத்துவது எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்யவேண்டிய கடமையாகும். இந்த நிலையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களது வளத்தில் சிறிய பகுதியை ஒருங்கிணைத்தால் அதனால் ஏற்படும் மாற்றம் மிகவும் பெரிதாக இருக்கும் என்ற கணிப்பில் சமீபத்தில் கனடாவில் எழுத்தாளர்கள் இலக்கிய ஆர்வலர்கள் சிலருடன் பேசியபோது அவர்களும் இக்கருத்தை வரவேற்றார்கள். நோக்கம்:
1. இலங்கையில் புனைவு அபுனைவுகளை வெளியிட உதவுவது.
2. நாவல் – சிறுகதை இலக்கியப் போட்டிகள் நடத்தி வெகுமதியளிப்பது அதிலும் முக்கியமாக இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பது.
3. இலக்கிய விமர்சனம் செவ்விதாக்கம் மற்றும் விநியோகம் விற்பனை முதலானவற்றின் தரத்தை அதிகரிக்க ஊக்குவிப்பது.
4. தற்போது சென்னையில் நடப்பது போல தமிழ்புத்தக கண்காடசியை நடத்துவது

பொறிமுறை:
இலங்கையில் நல்ல நோக்கமுள்ளவர்களின் நிறுவனமாக (Foundation) இயங்குவதற்கு ஊக்கமளிப்பதோடு. வெளிநாட்டில் முக்கியமாக மேற்குலகத்தில் ஒரு ஆலோசனைச் சபை அமைப்பது. அந்த ஆலோசனைச் சபையில் இணையும் அங்கத்தவர்கள் வருடாந்தம்; பத்தாயிரம் இலங்கை ரூபா செலுத்தி அங்கம் வகிப்பதுடன் அவர்கள்; நாடுசர்ந்த ரீதியில் அதன் இணைப்பாளர்களாக இருந்து ஊக்குவித்து இயக்குவது.

இலங்கையில் அமைக்கும் நிறுவனமும் வெளியே இயங்கும் ஆலோசனை சபையும் ஜனநாயகமாகவும் வெளிப்படையாகவும் தொழில்படுதலும் அவசியமானது.

இதில் குறிப்பிடப்படும் ஆலோசனைகள் முதல்கட்ட வரைபு மட்டுமே.மேலும் ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது. இதில் இணைந்து ஆக்கபூர்வமாக இயங்கவிரும்புபவர்கள் தொடர்புகொள்ளலாம். மின்னஞ்சல்:uthayam12@gmail.com | தொலைபேசி: 61452631954…

தகவல்: uthayam12@gmail.com