இளைஞர்களே! நாளைய உலகம் உங்கள் கையில்.. இன்றைய உங்களை எதிர்காலத்திற்காகக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்

மருத்துவர் எம்.கே.முருகானந்தன் -‘நாளைய உலகம் உங்கள் கையில், நாளைய தலைவர்கள் நீங்கள்தான், எதிர்கால நட்சத்திரங்கள்’ இப்படியாக தேசிய அளவில் நீங்கள் பேசப்படுகிறீர்கள். எதிர்காலம் உங்களால் வளம் பெறும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் உலக மாந்தர். குடும்ப அளவில் நோக்கினால் ‘நாளை குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உன்கையில், சகோதரங்களை கரை சேர்க்கும் பொறுப்பு, குடும்பக் கடன்களை தீர்க்க வேண்டிய தார்மீகக் கடமை’ எனப் பல உங்களைக் எதிர்பார்த்திருக்கின்றன. இவற்றில் பல உங்களுக்கு எதிர்காலத்தில் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கப் போகின்றன. சில புகழின் உச்சங்களுக்கும் இட்டுச் செல்லப் போகின்றன. வேறு பல கடமைகள் உங்களுக்கு உற்சாகம் அளிக்காவிட்டாலும் மகிழ்வைத் தராது போனாலும் கட்டாயம் செய்ய வேண்டியவை. 

 நாட்டிற்காகவும் வீட்டிற்காகவும் செய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. ஆனால் இவற்றை முன்னெடுப்பதற்கு அத்திவாரம் உங்கள் நலன் மட்டுமே. அது நல்ல நிலையில் இருக்க வேண்டும். நலம் என்பது உடல் நலம் மட்டுமல்ல. உடல், உள்ளம், சமூக நோக்கு, ஆன்மீகப் பார்வை யாவும் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஒருவர் ஆரோக்கியமாக இருப்பதாகக் கொள்ளலாம்.

உணவும் போஷாக்கும்
போசாக்கான உணவு எந்தவொரு உயிருக்கும் அவசியமானது. உங்களுக்கும் அவசியம். ஆனால் இன்றைய தiமுறையினராகிய உங்களில் பெரும்பாலானவர்களது உணவுமுறைகள் மாறிவருகிறது. எமது பாரம்;பரிய முறைகளிலிருந்து விடுபட்டு மேலைத் தேய நாகரீகங்களின் பாதையில் வழிமாறிச் செல்கிறது. சோறு, இடியப்பம், புட்டு, அப்பம், இட்லி என்பவை பலருக்கும் வேண்டாத உணவாக இருக்கிறது.

“இவன் நான் சமைச்சு வைச்ச இடியப்பமும் சாம்பாரும் சரியில்லை என்று சொல்லிப் போட்டு ‘Pizza’ ஓடர் பண்ணி எடுப்பிச்சுச் சாப்பிடுகிறான்” என்று கவலைப்படும் அம்மாக்கள் பலர். பிட்ஸா மட்டுமல்ல, கொத்து ரொட்டி, ரோல்ஸ், மிக்ஸர் எனப் பலப்பல ரெடிமேட் உணவுகள் உணவகங்களை நிறைத்திருக்கின்றன. அங்கிருந்து ஹோம் டிலிவரி, பார்சல் என வீடு நோக்கிப் படை எடுக்கவும் செய்கின்றன. ஆம் அவை வாய்க்கு இதமானவை, உண்பதற்கு மென்மையானவை. கடைக்கு அருகில் சென்றாலே நாசியைக் கவர்ந்திழுப்பன. நாவின் சுவை மூளைகளை (Taste buds) சிலிர்க்க வைப்பவை. அதற்கு மேல் அது ஒரு பாஷன் போன்றதும் கூட. அவற்றிலிருந்து தப்புவதற்கு மிகுந்த மனஅடக்கம் தேவை.

ஆனால் இவற்றில் இருப்பவை என்ன? மாப் பொருளும் எண்ணெய், மாஜரீன், அஜினமோட்டோ போன்ற சுவையூட்டிகள், கலரிங் ஆகியவைதானே உள்ளன. ஊதிய பலூனில் காற்று நிறைந்திருப்பது போல அவற்றில் நிறைந்திருப்பது வெற்றுக் கலோரிகள்! அது மட்டுமே. நார்ப்பொருள், விட்டமின், கனியம் புரதம் போன்ற போஷாக்குகள் அற்றவை. எனவே எடை அதிகரிக்கும். குனிந்து பாருங்கள். உங்கள் இடுப்புப் பட்டிக்கு மேல் தொப்பை வயிறு சரிந்து தொங்குகிறதா? ஆம் எடை அதிகரிக்கும்போது கொழுப்பு உங்கள் உடல் முழவதும் படிகிறது. முகத்தில் கை கால்களில் உடல் முழுவதும். அதே போல வயிற்றிலும் படிகிறது. வயிற்றின் வெளிப் பகுதியில் மட்டுமின்றி வயிற்றறைக்குள்ளும் கொழுப்புப் படிகிறது. இவ்வாறு கொழுப்புப் படிவது நல்லதல்ல. அதனால் எதிர்காலத்தில் இருதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

பொரிப்பதாலும், ஓரே எண்ணெயை மீண்டும் மீண்டும் உபயோகிப்பதாலும் மேற் கூறிய பாஸ்ட் பூட்ஸ் அனைத்துமே ரான்ஸ் கொழுப்பு அமிலங்களால் நிறைந்திருக்கின்றன. இவை கொலஸ்டரொலை அதிகரிப்பதுடன் இருதய நோய்களுக்கும் காலாகின்றன. எதிர்காலம் நோக்கிய முன்னேற்றப் பாதையில் இருதய நோய்கள் ஒரு தடைக்கல்லாக இருப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்கள். எனவே உணவு முறையில் மாற்றத்தைக் கொண்டு வாருங்கள்.

போசாக்குக் குறைபாடு
அதீத எடை கொள்ளை நோய் போல உலகெங்கும் பிரச்சனையாக உருவாவதைக் கணக்கில் எடுக்கும் அதே  நேரம் குழந்தைப் பருவத்திலும் கட்டிளம் பருவத்திலும் நிலவும் போசாக்குக் குறைபாடு எதிர் காலச் சமூகத்தின் வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கும் என உலக சுகாதார நிறுவனம் தனது வெளியீடு ஒன்றில் சுட்டிக் காட்டுகிறது.

குழந்தைப் பருவத்திலும் கட்டிளம் பருவத்திலும் தொடர்ந்து நிலவும் போசாக்குக் குறைபாடு ஒருவனது வளரச்சியைக் குன்றச் செய்வதுடன் சமூக மட்டத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தும். IQ யையும் குறைக்கும் உங்களது வளர்ச்சியும் ஆரோக்கியமும் உங்களில் மட்டுமல்லாது பெற்றோர்களின் ஆரம்ப காலக் கவனிப்பிலும் தங்கியுள்ளது. முக்கியமாக குழந்தை மற்றும் பதின்ம வயதிலும் அவர்களது அக்கறையும் கவனிப்பும் முக்கியமானது என்பது தெளிவு.

இரத்தசோகை எவரது உடல்ஆற்றலையும் செயற்திறனையும் குன்றச் செய்யும். சோர்வை ஏற்படுத்தும். சிந்தனை ஆற்றலையும் குறைக்கும். ஆனால் பெண்களில் இது மேலும் முக்கியமானது. காரணம்அவர்கள் வெறும் பெண்கள் மட்டுமல்ல. எதிர்காலத் தாய்மாரும் கூட. பெண்களாகிய நீங்கள் கர்ப்பம் தங்குவதற்கு முன்னரே உங்கள் பொதுவான உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், இரத்தை சோகை ஏற்படாமல் தடுக்க வேண்டும்.

சமபல வலு உணவு
ஆரோக்கியமான சமபல வலுவுள்ள உணவுமுறையைக் நீங்கள் கடைப்பிடித்தால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், இரத்தை சோகை ஏற்படாமல் தடுக்கவும் முடியும். உணவில் மாச்சத்து 55 சதவிகிதமாகவும், புரதம் 35 சதவிகிதமாகவும், கொழுப்பு 15 சதவிகிதமாகவும் இருக்க வேண்டும். அத்தகைய உணவுமுறையைக் கடைப்பிடிப்பதற்கு உணவு வழிகாட்டி கூம்பகம் உங்களுக்கு உதவும்.

இதன்படி உணவு வகைளை ஆறு வகைகளாகப் பிரிக்கலாம்.

கூம்பகத்தின் அடியில் இருப்பது மாப்பொருள் உணவுகள். சோறு, பாண், இடியப்பம், புட்டு, அப்பம், இட்லி. நூடில்ஸ் போன்றவை.

இவற்றிற்கு அடுத்து இருப்பது நார்ப்பொருள் அதிகமாக உள்ள காய்கறிகளும், பழவகைகளும் கொண்ட அடுக்கு ஆகும். அவை இரண்டும்

மட்டுமே ஒருவரது உணவின் பெருப் பகுதியாக இருக்க வேண்டும். ன், இறைச்சி. பால், மீன் வகைகள் 15 சதவிகிதம் இருக்கலாம்.

எண்ணெய், பட்டர் ஏனைய கொழுப்புகள், கேக், ஐஸ்கிறீம் அடங்கிய பகுதியானது கூம்பகத்தின் உச்சியில் உள்ளது. இவற்றை மிகக்

குறைவாகவே உட்கொள்ள வேண்டும். ஆனால் இன்றைய நாகரீக உணவு முறையில் இது தலைகீழாக மாறிவிட்டமையே நீரிழிவு. உயர் இரத்த அழுத்தம், கொலஸ்டரோல், அதீத எடை ஆகிய பிரச்சனைகள் தலைவிரித்து ஆடுவதற்குக் காரணமாகும்.

ஆரோக்கியமான உணவுமுறைகளைக் கடைப்பிடிப்பதுடன், தினசரி உடற்பயிற்சி செய்வதும் அவசியமாகும். உடல்நலத்திற்கு உதவக் கூடிய வாழ்க்கை முறைகளை உங்கள் இளவயதிலேயே ஆரம்பிக்க வேண்டும்.

பாலியல் மற்றும் இனவிருத்தி அறிவை வளர்த்துக் கொள்ளல்
குழந்தைப் பருவத்திலிருந்து கட்டிளம் பருவத்திற்கு மாறும் போது உங்களது உடலிலே பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. பெண் குழந்தைகள் வளரும் போது உடல் வாளிப்படைகிறது, மெருகேறுகிறது. தட்டையான மார்பில் மார்பகங்கள் உருண்டு திரள்கின்றன. எங்கிருந்து வந்ததெனத் தெரியாது கவர்ச்சி ஓடி வந்து அப்பிக் கொள்கிறது. பருவமடைதல் செய்யும் அற்புதம் இது. முதல் பீரியட் வந்ததும் அவள் பெரிய பெண்ணாகிறாள்.

ஆண்களில் வேறுவிதமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. உடல் வளர்கிறது. குரல் தடிப்படைகிறது. மீசை அரும்புகிறது. ஏனைய இடங்களிலும் முடி வளர்ச்சி ஏற்படுகிறது. 9 முதல் 14 வயதுவரையான காலத்தில் பொதுவாக ஏற்படுகிறது. ஒவ்வொரு பையனும் தனது வளர்ச்சிக் கட்டத்தின் ஓரிடத்தில் பருவமடைகிறான். அவை உடல் ரீதியான மாற்றங்கள். ஆனால் அதற்கு மேலாக உணர்வுகள் தீட்சண்யம் அடைகின்றன. எதிர் பாலினரைக் காணும்போது உள்ளத்தில் ஏதோ ஒரு உணர்வு பெருக்கெடுக்கிறது. சிலரைப் பார்க்கும்போது மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்குகிறது. உள்ளத்து உணர்வுகள் பாலுறுப்புகளுக்கும் தாவும். ஆண் பிள்ளைகளில் உறுப்பு வீறு கொண்டு எழுந்து நிற்கிறது. அதை அடக்கி வைக்க இறுக்கமான உள்ளாடைகள் தேவைப்படுகின்றன. பெண் பிள்ளைகளிலும் உணர்வுகள் எழவே செய்கின்றன. ஆனால் அடக்கமானவை. வெளியே பெருமளவு தெரிவதில்லை. உள்ளத்து உணர்வுகளை முகம் மறைக்க முனையும். மற்றவர்களுக்கு மறைத்துவிடலாம். அவளது உறுப்பு சற்று ஈரலிப்பாகும். சில வேளைகளில் வெள்ளை போலப்பட்டு உள்ளாடை நனைந்து விடலாம்.

ஆணாயினும் பெண்ணாயினும் உள்ளம் குதூகலிக்கும். உடல் சிலிர்க்கும். முகத்தில் வியர்வை அரும்பவும் செய்யலாம். விரும்பியவரது நினைவு அருட்டும். இரவு படுக்கப் போகும்போதும் நினைவு கிளறும். கனவுகளும் வரலாம். இத்தகைய எதிர்பாலினர் மீதான ஈர்ப்பு இயல்பானது. பாலியல் ரீதியானது. முழுமையான பாலுணர்வும் வேட்கையும் வர மேலும் சிலகாலம் செல்லலாம்.

பாலியல் கல்வி
இவை போன்றவற்றையும், உடல் உறுப்புகளின் அமைப்பு அவற்றின் வளரச்சி, இனப்பெருக்கத்தில் அவற்றின் பங்கு ஆகியன பற்றிய அடிப்படை அறிவை நீங்கள் பெற வேண்டும். உண்மையில் இவை பற்றி எமது கல்வித் திட்டத்தில் இருந்தாலும் அவை போதிக்கப்படாமை மிக முக்கிய குறைபாடாகும். இவை பற்றி சுயமாக நீங்கள் கற்பதற்கு ஏதுவான நல்ல நூல்கள் தமிழில் இல்லை என்பது உண்மைதான். பெற்றோர்களும் சொல்லித் தருவதில்லை. ஏனெனில் எமது கலாசாரத்தில் இவை பற்றி வெளிப்படையாகப் பேசுவதில் தயக்கம் இருக்கிறது. அது தவறானது. பெற்றோர் பிள்ளைகளுக்கும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கும் சொல்லித் தரவேண்டும்.

இது நடைபெறாததால் அவை பற்றி அறிய நீங்கள் படிக்கப் புகும் பெரும்பாலான புத்தகங்களும் இணையத் தளங்களும் ஆபாசமானவை. வெறுமனே பாலியல் உணர்வுகளைக் கிளறுபவைகளே அன்றி அறிவு விருத்தியை நோக்கமாகக் கொண்டவை அல்ல. எனவே பாலுறுப்புகள், இனப்பெருக்கம், பால் உறவு, கட்டிளம் பருவத்து உணர்வுகள் அவை பற்றிய விளக்கங்கள் போன்றவற்றை பதின்ம வயதினரும் கட்டிளம் பருவத்தினரும் இலகுவாகப் பெறக் கூடிய வசதி வாய்ப்புகள் வளர்க்கப்பட வேண்டும். இவை சமூக, தேசிய, அரசாங்க மட்டங்களில் பரவலாக மேற் கொள்ளப்பட வேண்டியது அவசியம். இதன் தொடர்ச்சியாக பாதுகாப்பான பாலுறவு பற்றிய தெளிவு அவர்களுக்கு இலகுவில் கிட்ட உதவுவது அவசியம்.

தவறான நடவடிக்கைகள் அவற்றிற்கான தீர்வுகளும்.
மேற் கூறியவை கிட்டாத காரணத்தால் தவறான பாலியல் நடவடிக்கைகளில் இளவயதினர் பலரும் அறியாமையால் ஈடுபட நேர்கிறது. இதனால் சிபிலிஸ், கொனரியா, கிளமிடா. ஹேர்பிஸ், வைரஸ் வோர்ட்ஸ் முதல் எயிட்ஸ் வரையான பாலியல் தொற்றக் கூடிய அபாயம் உண்டு. இவற்றில் ஹேர்பிஸ், வைரஸ் வோர்ட்ஸ்,; எயிட்ஸ் போன்ற சில முழுமையாக குணப்படுத்த முடியாதவை. கட்டுப்பாடிற்குள் மட்டும் வைத்திருக்கக் கூடியவை. இதனால் வாழ்நாள் முழுவதும் தொல்லை கொடுக்கக் கூடியன. ஆனால் வேறு சில முற்றாகக் குணப்படுத்தக் கூடியன.

இளமைத் துடிப்பில் தவறான பாலுறவு கொண்ட பின் தனக்கு ஆபத்தான நோய்கள் தொற்றியிருக்குமா என அஞ்சி மருத்துவர்களை நாடுபவர்கள் பலர். அத்தகைய நோயோடு தொடர்பில்லாத வேறு பல அறிகுறிகளோடு அவற்றை வெளியே சொல்ல முடியாது மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருப்பவர்கள் மேலும் பலர். தகுதியான மருத்துவரைச் சந்தித்து வெளிப்படையாகப் பேசி சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள பழகுதல் வேண்டும்.  வீணாகக் காலத்தைக் கடத்துவதால் நோயின் தீவிரம் அதிகரிக்கும். ஆனால் பாதகமான நோய்கள் இல்லாவிட்டால் வீணான மனஉளைச்சலால் துன்பப்படுவதே மிச்சம்.

இளமைப் பருவத்தினர் கிளினிக்குகள்
கார்ப்பணிகளுக்கு, தாய்மாருக்கு. குழந்தைகளுக்கு, முதியோருக்கு என தனித்தனியான மருத்துவ கிளினிக்கள் உண்டு. இவை அவர்களுக்கு அரும் பணியாற்றி வருகின்றன. நோய் தீர்ப்பது மட்டுமின்றி வருமுன் காக்கவும் செய்கின்றன. அதேபோல இளமைப் பருவத்தினருக்கு என்று தனியாக விசேட கிளினிக்குகள் (Adolcent Clinic) அமைப்பது நல்லது எனக் கருதுகிறேன். பாலியல் நோய்களுக்கு என விசேட கிளினிக்குகள் இருக்கின்றனவே அவற்றைப் பயன்படுத்தலாம் எனச் சிலர் சொல்லக் கூடும்.உண்மைதான். ஆனால் அங்கு சென்றாலே தங்களுக்கு சமூகத்தால் கறுப்பு முத்திரை குத்தப்பட்டுவிடும் என தயங்குபவர்களின் உணர்வுகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பாலியல் அத்துமீறல்கள் வன்முறைகளுக்கு எதிரான நடவடிக்கைகள்
இளமைப் பருவத்தினரின் பாலியல் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் அதே நேரம், பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள், அத்துமீறல்கள் வன்முறைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியம். அதற்கான விசேட சட்டங்களை கொண்டு வருவதும் விரும்பத்தக்கது. வீதிகளில் நின்று பெண்களுக்கு தொல்லை கொடுப்போர், பாலியல் ரீதியான சேஷ்டைகளில் ஈடுபடுவோர் இடத்தில் கருணை கூடாது. சட்டம் தன் கையை வலுப்படுத்துவதுடன் செயலிலும் இறங்குவது அவசியம்.

கருச்சிதைவு சட்டமாக்கப்படுவது அவசியம்
அறியாமையால், அல்லது எதிர்பாராமல், அல்லது பாலியில் வன்முறை மூலம் ஒரு பெண் கரப்பமாகிவிட்டால் அத்தகையவர்களுக்கு எமது சமூகமும் அரசாங்கமும் என்ன பாதையைக் காட்டுகிறது? இது சட்டத்திற்கு முரணானது என்று சொல்லிக் கண்ணை மூடிக் கொள்கிறது. எமது நாட்டுச் சட்டப்படி கருச்சிதைவு செய்வது குற்றம். ஒரு பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என இரு மருத்துவர்கள் அத்தாட்சிப்படுத்தினால் மட்டுமே செய்ய முடியும். தவறுதலாலோ வன்முறையாலோ ஒரு பெண் தனது விருப்பத்திற்கு மாறாகக் கர்ப்பமானால் அவளால் அவள் அந்தக் கருவுடன் சமூகத்தின் கேலிக்கும் அவதூறுக்கும் ஆட்பட வேண்டியதுதான். அவமானத்துடன் வாழ வேண்டும். அல்லது தற்கொலை செய்ய வேண்டிய நிலை கூட ஏற்படும். அவளது எதிர்காலம் பாழாகுகிறது.

இல்லையேல் சுகாதார முறைப்படி நடக்காத போலி வைத்தியர்களின் கிளினிக்குகளில் கருச்சிதைவு செய்து கொள்ள நேரிடும். இத்தகைய இடங்களில் அனுபவமும், கல்வியறிவும் இல்லாத மருத்துவர்களால் செய்யப்படும்; கருச்சிதைவுகளில் பல பெண்கள் நாளாந்தம் உயிரிழக்கிறார்கள் என்பதை பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.

இந்தியா உட்பட கலாசார பாரம்பரியம் அதிகமுள்ள நாடுகள் பலவும் கருச்சிதைவை சட்டபூர்வமாக்கிய பின்னரும் ஆசாட பூதிகளாக நாங்கள் கண் மூடித் தியானத்தில் இருக்கிறோம். எமது கலாசார மேன்மைகளைப் பாதுகாப்பதாக வேசமிடுகிறோம். நாடகமாடுகிறோம். சமூகத்திற்கு பயன்தரக் கூடிய பல இளம் உயிர்களை சட்டத்தின் பேரால் பலியிடுகிறோம். அர்த்தமற்ற உயிர் இழப்புகளைத் தவிர்க்க வேண்டுமாயின் கருச்சிதைவு சட்டபூர்வமாக்கப்பட வேண்டும். அல்லது அது தொடர்பான சட்டங்களில் நெகிழ்ச்சித் தன்மை இருப்பது அவசியம்.

உளநலம்
பள்ளிப்பருவத்திலும் பதின்ம வயதுகளிலும் பல்வேறுவிதமான உளநலப் பிரச்சனைகள் அதிகரித்து வருவதை மருத்துவர்களாலும், அவர்களோடு அதிகம் பழகும் ஆசிரியர்களாலும் அவதானிக்க முடிகிறது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கலாம்.

1. முக்கிய காரணம் குடும்ப அன்னியோன்யம் குறைந்து வருவதாகும். பெற்றோர்;கள் இருவரும் வேலைக்கு போகிறார்கள். கூட்டுக் குடும்பமுறை சிதைவுறுவதால் உதவிக்கு பாட்டன் பாட்டி இல்லாமல் போவதால் குழந்தைகளின் மீதான அக்கறையும் அவதானிப்பும் நேச உணர்வும்; குறைந்து போகிறது.

2. ஆனால் அதே நேரம் கல்வி ரீதியாக பிள்ளைகளிடமிருந்து உயர் பெறுபேறுகள் பெற்றோரால் எதிர்பார்க்கப்படுகிறது.  இவற்றிற்கு ஈடு கொடுக்க முடியாத பிள்ளைகள் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள். ஆசிரியர் பெற்றோருக்கு கீழ்ப்படியாமை, முரட்டுத்தன்மை, தவாறான பழக்கங்கள் போன்ற நடத்தைப் பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள். தவறான உணவு முறைகளைப் பழகிக் கொள்கிறார்கள்.

அதனால் மனப்பதற்றம், மனச்சோர்வு போன்ற உளவியல் பிரச்சனைகளுக்கு பலரும் ஆளாகிறார்கள். தவறான பாலியல் பழக்கங்களுக்கும் ஆளாகி நோய்களைத் தேடும் அபாயமும் ஏற்படுகிறது. போதைப் பொருள் பாவனையும் இதன் நீட்சியே ஆகும். எனவே பாடசாலை, பல்கலைக்கழகம், மற்றும் சமூக நிலைகளில் இளம் வயதினர் உளவியல் பாதிப்புக்கு ஆளாகுமிடத்து அதனை ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து நெறிப்படுத்துவது அவசியம். இதற்கான அறிவையும் ஆற்றலையும் பெற்றோர் ஆசிரியர்களிடத்து வளர்ப்பது அவசியமாகிறது. மேலதிகமாக இது சம்பந்தமாக தொழில் ரீதியான மருத்துவ பணியாளர்களை பயிற்றுவித்து சேவையில் ஈடு;படுத்துவது அவசியம். தேவையானவர்களுக்கு உளவளத்துணை, அறிவார்ந்த நடத்தை முறை மாற்றங்களுக்கான சிகிச்சை முறைகள் போன்றவை அவர்களுடாக இலகுவில் கிட்டும்படி செய்யலாம்.

போதைப் பொருள் பாவனை
மேற் கூறிய பல்வேறு காரணங்களால் இளம் பராயத்தினர் பலரும் மது, புகைத்தல் மற்றும் போதைப் பொருட்கள் பாவனையில் இறங்கி போலிச் சுகம் காண முயல்கிறார்கள். ‘ஒருக்கால் பாவித்துப் பார்ப்பம்’ என இவற்றில் விளையாட்டாக இறங்கிவிட்டால் கூட மீள்வது கடினமாகும். ‘சும்மா குடிச்சுப் பாரடா’ என நண்பர்களின் தூண்டுதலால் விளையாட்டாகப் பரீட்சிக்கும் உங்கள் செயல் மீளாக் குளியில்தள்ளிவிடும் என்பதை மறக்கக் கூடாது. மற்றவர்கள் முகத்திற்காக அவர்களது வேண்டுதலுக்காக இவற்றில் இறங்க வேண்டாம். ‘மாட்டேன், வேண்டாம்’ என முகத்திற்கு நேரே மறுக்கும் தைரியத்தை வளர்த்துக் கொள்வது இளம் பராயத்தில் அவசியம். இதற்கான பயிற்சி பெற்றொர்களிடமிருந்துதான் வரவேண்டும். மது, போதைப் பொருட்கள், சிகரட் போன்றவை எங்கும் கேள்வியின்றி விற்பனையாவது ஆபத்தானதாகும். முக்கியமாக இளம் வயதினருக்கு அவ்வாறு கிட்டவிடக் கூடாது. சட்டங்களால் மட்டும் இவற்றை அமுல் படுத்த முடியாது. சமூகத்தில் இவற்றிக்கு எதிரான உணர்வு வளர்க்கப்பட வேண்டியது அவசியமாகும். ரேடியோ, ரீவீ, இணையம் போன்றவை ஊடாக வழிகாட்டலாம்.

இதற்கு மகிழ்ச்சியான குடும்பச் சூழலும், முதியவர்களின் வழிகாட்டலும் துணைநிற்கும். புகைத்துக் கொண்டிருக்கும் அல்லது போதையில் மிதக்கும் அப்பனால் குழந்தைக்கு நல்லவற்றைப் போதிக்க முடியாது. சட்டங்களாலும் கட்டாயப்படுத்தலாலும் செய்ய முடியாதவற்றை புரிந்துணர்வுள்ள அணுகுமுறை மூலம் செய்ய முடியும்.

சும்மா இருத்தல்
செயலின்றிய மனம் சாத்தானின் வீடு என்பார்கள். அதிலும் முக்கியமாக உடலிலும் உள்ளத்திலும் சக்தி வெள்ளமாகப் பாயும் இளமைப் பருவத்தில் வாழா இருப்பதைப் போல மோசமான செயல் எதுவும் இருக்காது.

“தம்பி என்ன செய்யிறார்” என விசாரித்தால், அவன் மறுமொழி சொல்ல முன் தகப்பன் அல்லது தாய்”அவனுக்கு என்ன கொஞ்ச நாளில் வெளிநாட்டுக்குப் போகப் போறான்” என்பார்கள்.  எமது சமூகத்தின் மிகப் பெரிய சாபக்கேடு இந்த வெளிநாட்டு மோகம்தான். பல இளைஞர்களும் யுவதிகளும் வெளிநாடு போகும் கனவுகளுடன் சும்;மா இருக்கிறார்கள்

சும்மா இருத்தலால் சாத்தான்கள் குடி கொள்கிறார்கள். உடல் ஆரோக்கியம் நலிகிறது, வேலை செய்யாமல் சோம்பேறிகள் ஆகிறார்கள். உள்ளுரில் இருக்கும் பெற்றோரினதும், வெளிநாட்டில் கூப்பிட இருக்கும் உறவினரதும் பணம் விரயமாகிறது. நீண்ட நாட்கள் செல்வதால் மனம் சோர்க்கிறது. போதைப் பழக்கங்கள் நெருங்கி வருகின்றன. எதற்கும் உதவாதவர்கள் ஆகி மற்றவர்களின் ஏளனத்திற்கு ஆளாகிறார்கள்.

இங்கும் நிறைய வேலைகள் இருக்கின்றன. அல்லது கல்வி இருக்கிறது. பட்டப்படிப்புகள் மட்டுமின்றி தொழிற் கல்விகளும் இருக்கின்றன. அவற்றில் பயிற்சி பெறுவது எதிர்காலத்தில் உதவும் அல்லவா? வெறும் கனவுகளுடன் வாழ்வதைவிட ஏதாவது வேலை பாரப்பது உடல் உள்ளம் பொருளாதாரம் அனைத்திற்கும் நல்லது.

அரசியல் ரீதியாக, ‘இது எங்களது நாடும் கூட’ என தமிழ் இளைஞர்களை எண்ண வைக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளது. கடந்தகால அரசியலாலும், போரினாலும், அதீத தமிழ்தேசிய உணர்வாலும் தாம் வேண்டப்படாதவர்கள் என்ற உணர்வு அவர்களில் விதைக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து மீள்வதற்கு அவர்களுக்கான விசேட தொழில்முறைக் கல்விகள், வேலைவாய்ப்புகள், சுயதொழில் ஊக்குவிப்பு போன்றவை செயற்பட வேண்டும்.

வன்முறையை நிராகரியுங்கள்.
சும்மா இருப்பது வன்முறைக்கும் இட்டுச் செல்கிறது. அதேநேரம் சரியான வாழ்க்கை நெறிமுறைகளை புரிந்து கொள்ளாததும், பரந்த சமூக அக்கறை இல்லாமையும், நான் என்ற அகந்தையும் காரணங்களாகின்றன. நான், எனது சுகம், எனது மகிழ்ச்சி, எனது குடும்பம் என்பதற்கு அப்பாலும் சிந்திப்பது இளம் வயதிலேயே ஆரம்பிக்க வேண்டும். மாறாக எமது சமூகம் எமது நாடு எனச் சிந்தனைகள் விரிந்தால், மற்றவர்களது தேவைகளையும் உணர்வுகளையும் புரிந்து கொண்டால்வன் முறை உணர்வு ஏற்படாது.

தெருவில் நின்று பெண்களுக்கம் மற்றவர்களுக்கும் கொமன்ட் அடித்தும், சில்மிசங்கள் செய்வதைக் கைவிடுவதற்கு சமூகம் பற்றிய உணர்வு கைகொடுக்கும். இல்லையேல் சில்லறை அடிபிடி என ஆரம்பித்து பேட்டை ரவுடி, கொள்ளை கடத்தல் என விரிய ஆரம்பிக்கும்.

போரும் இனரீதியான ஒடுக்கு முறைகளும் எம்மிடமிருந்த நல்ல பல விழுமியங்களை அழித்துவிட்டன. வன்முறையால் எதற்கும் தீர்வு காணலாம் என்ற உணர்வு பலரிடம் குடி கொண்டுவிட்டது.  இது தவறு வன்முறையை நிராகரித்து எதனையும் பேசி இணக்கப்பாடு காணும் பாதையை தேர்ந்து எடுக்க வேண்டும். பிரச்சனைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது பற்றிய அறிவு ஒவ்வொருவர்க்கும் தேவை.

பிரச்சனை என்பது வீட்டுப் பிரச்சனையாக இருக்கலாம், வெளியே காதல் பிரச்சனையாக இருக்கலாம். அல்லது தொழில் செய்யும் இடத்தில் ஏற்படும் சிக்கல்களாக இருக்கலாம். அல்லது கோயில், வாசிகசாலை போன்ற பொது இடங்களில் ஏற்படும் சங்கடங்களாக இருக்கலாம்.

எதையும் திறந்த மனத்தோடும் விட்டுக் கொடுப்புகளுடனும் செய்து சுமுகமாக தீர்வு காண்பதற்கான பயிற்சியை கல்வி மட்டுமின்றி ஆன்மீக ஸ்தாபனங்களும் செய்ய முடியும்.  எனவே காத்திருக்கும் எதிர்காலத்தை ஒளிமயமாகவும், பொன்விளைவதாகவும், மகிழ்ச்சி நிறைவதாகவும் ஆக்க முயலுங்கள். அதற்கு ஏற்றவகையில் உங்கள் உடலையும் உள்ளத்தையும் நலமாகப் பேணுங்கள்.

நாளைய உலகம் உங்கள் கையில் உங்களுக்காக மட்டுமல்ல முழு உலகத்திற்காகவும்.

Dr.M.K.Muruganandan
Family Physician
visit my blogs
http://hainallama.blogspot.com/
http://suvaithacinema.blogspot.com/
http://stethinkural.blogspot.com/
http://msvoldpupilsforum.blogspot.com/
http://www.geotamil.com/pathivukal/health.html

kathirmuruga@gmail.com