ஈழத்தின் மறுமலர்ச்சிக் காலகட்டமும், அ.ந.க.வும்: சில குறிப்புகள்!

அறிஞர் அ.ந.கந்தசாமிஅண்மையில் நூலகம்.நெற் (Noolaham.net) இணையத் தளத்தில் ‘திசை புதிது ‘ இதழ்-1 (2003)இல் வெளிவந்திருந்த ‘மூத்த எழுத்தாளர் வரதர் ‘ என்னும் கட்டுரையொன்றினைப் பிரசுரித்திருந்தார்கள். அந்தக் கட்டுரையில் ஈழத்தின் மறுமலர்ச்சிக் காலகட்டம் பற்றிய சில குறிப்புகள் காணப்படுகின்றன. அவற்றை வாசித்தபொழுது பெரிதும் ஆச்சரியமாகவிருந்தது. அதில் ஓரிடத்திலாவது அறிஞர் அ.ந.கந்தசாமியைப் பற்றிய குறிப்பு எதுவும் காணப்படவில்லை. மறுமலர்ச்சிக் காலகட்டம் என்று நாம் குறிப்பிடும்போது ‘மறுமலர்ச்சிச் சங்க’த்தின் காலகட்டத்தையும், அச்சங்கத்தால் வெளியிடப்பட்ட ‘மறுமலர்ச்சி ‘ சஞ்சிகையின் (கையெழுத்துச் சஞ்சிகை / அச்சில் வெளிவந்த சஞ்சிகை) காலகட்டத்தையும் உள்ளடக்கிய காலகட்டத்தையே குறிப்பிடுகின்றோம். சஞ்சிகை அச்சில் வெளிவந்தபோது வெளியிட ஐவர் கொண்ட குழு பண உதவி செய்ததாக வரதர் தன் நேர்காணல்களில் குறிப்பிடுவார். ஆனால் மறுமலர்ச்சிச் சங்கத்தினை 1943இல் அமைத்து 1945வரை ‘மறுமலர்ச்சி ‘ கையெழுத்துச் சஞ்சிகையினை வெளியிட்டவர்களையே அக்காலகட்டத்தின் மூலவேர்களாகக் குறிப்பிடவேண்டும். இச்சங்கத்தை உருவாக்கியவர்கள் அவ்வப்போது கூடி இலக்கியத்த்தின் பல்வேறு வகையான போக்குகள் பற்றி, அவற்றின் தன்மைகள் பற்றியெல்லாம் விவாதித்து வந்துள்ளதோடு அச்சங்கத்தின் குறிப்பிட்ட காலத்தின் வெற்றிக்கும் காரணமாக விளங்கியிருக்கின்றார்கள். இதனை நாம் மறந்து விடக் கூடாது.

சரி விடயத்திற்கு வருவோம்… அதாவது மேற்படி திசை புதிது இதழின் மேற்படி கட்டுரை அறிஞர் அ.ந.கந்தசாமியின் மறுமலர்ச்சிக் காலகட்டப் பங்களிப்பினை மறைத்து விட்டாலும் நல்லவேளையாக மறுமலர்ச்சியின் ஸ்தாபகர்களில் ஒருவரான மூத்த எழுத்தாளர் வரதர் அவ்விதம் மறைத்து விடவில்லையென்பது ஆறுதலான விடயம். ‘வரதர் 80 ‘ நூலில் பத்மா சோமகாந்தனின் வரதருடனான நேர்காணலொன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில் அவர் மறுமலர்ச்சிக் காலகட்டம் பற்றிக் கூறும் போது பின்வருமாறு கூறுவார்:

‘….இலங்கை வானொலியிலும் லண்டன் பி.பி.சி. தமிழோசையிலும் கடமையாற்றி உலகப் புகழ்பெற்ற சோ. சிவபாதசுந்தரம் ஈழகேசரி ஆசிரியராகவுமிருந்தவர். மறுமலர்ச்சி இயக்கத்தைத் தோற்றுவித்த இளைஞர்கள் பலரும் சோ. சிவபாதசுந்தரத்தின் வழிநடத்தலில் ஈழகேசரிப் பண்ணையில் தான் வளர்ந்தவர்கள். எமது ‘மறுமலர்ச்சி ‘ ஆர்வத்துக்குக் கை கொடுத்தது ஈழகேசரியே. புதிய இலக்கியத்தில் ஆர்வமுள்ள இளைஞர்கள் ஒன்று கூடினோம். ‘புதுமைப் பித்தர்கள் சங்கம் ‘ எனப்பெயர் சூட்ட நான் விளைந்தேன். எனது விருப்பம் எடுபடவில்லை. தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் எனப் பெயரிட்ட, அதில் என்னோடு அ.செ.முருகானந்தன், அ.ந.கந்தசாமி, கனக செந்திநாதன், பண்டிதர் ச.பஞ்சாட்சரசர்மா, க.இ.சரவணமுத்து (சாரதா), நாவற்குழியூர் நடராசன், து.ருத்திரமூர்த்தி (மகாகவி) முதலியோருடன் சுமார் 30 பேர் இருந்தனர். ‘(பக்கம்58).

மேற்படி மறுமலர்ச்சிச் சங்கத்தின் உருவாக்கம் பற்றி வரதர் மேலும் பின்வருமாறு அந்நேர்காணலில் கூறுவார்:

‘…. ஈழகேசரி இளைஞர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்த அ.செ.முருகானந்தன், அ.ந.கந்தசாமி, நாவற்குழியூர் நடராசன் போன்ற சிலருடன் கடிதத்தொடர்பு கொண்டேன். எங்களுக்குள் ஓர் இலக்கிய சங்கத்தை ஏற்படுத்தினால் என்ன என்ற எண்ணத்தை அவர்களிடம் விதைத்தேன். நல்ல வரவேற்பிருந்தது. நண்பர்களின் சந்திப்புக்காக காலமும் இடமும் குறிப்பிட்டு சில நண்பர்களுக்கு அறிவித்தேன். அவர்களும் தமக்குத் தெரிந்தவர்களுக்கு அறிவித்தார்கள். 13.06.1943 யாழ் நகரில் கன்னாதிட்டியிலிருந்த ரேவதி குப்புசாமி என்ற சிற்பக் கலைஞரின் வீட்டு விறாந்தையில் 15-20 பேர் கூடினோம். இப்படித்தான் தமிழ் மறுமலர்ச்சிச் சங்கம் தொடங்கப்பட்டது…. ‘ (பக்கம் 68)

மேலும் வரதர் மறுமலர்ச்சி சஞ்சிகை பற்றிக் குறிப்பிடும்போது பின்வருமாறு குறிப்பிடுவார்:

‘…. தமிழ் மறுமலர்ச்சிச் சங்கத்திலேயே மறுமலர்ச்சி என்ற கையெழுத்துப் பத்திரிகை தயாரிப்பதென்று தீர்மானித்தோம். அதற்கும் நான் தான் ஆசிரியராக இருந்தேன். கையினால் சில இதழ்களைக் கையெழுத்துப் பத்திரிகையாகத் தயாரித்தோம். எங்களுக்கிடையில் மாறி மாறி வாசித்து மகிழ்ந்தோம். மறுமலர்ச்சியை அச்சுப் பத்திரிகையாக வெளியிடவேண்டுமென்று கனவு என் மனதில் படரத் தொடங்கியது… ‘ (பக்கம் 69). மேற்படி நூலிலுள்ள கட்டுரையான ‘வாழ்நாளை நீட்டிடும் வல்லமை படைத்த வரதர் ‘ என்னும் கட்டுரையில் பிரபல எழுத்தாளர் சொக்கன் அவர்கள் வரதரை ‘மறுமலர்ச்சி ‘ சஞ்சிகையின் இணையாசிரியராக்கக் குறிப்பிடுவார் (பக்: 9).

மறுமலர்ச்சி இயக்கம் 1943இல் வரதர், அ.ந.கந்தசாமி, அ.செ.மு, நாவற்குழியூர் நடராசன் போன்றோரால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் மேற்படி மறுமலர்ச்சிச் சங்கம் மறுமலர்ச்சி என்னும் கையெழுத்துச் சஞ்சிகையினை வெளியிட்டுள்ளது. அக்கையெழுத்துச் சஞ்சிகை மறுமலர்ச்சிக் காலகட்டத்தில் முக்கியமானது. அச்சஞ்சிகையில் யார் யார் எழுதினார்கள், எத்தகைய ஆக்கங்கள் வெளிவந்தன என்பது பற்றிய விபரங்கள் அறியப்பட வேண்டியவை. ஏனெனில் அக்கையெழுத்துச் சஞ்சிகையின் பரிணாம விளைவே பின்னர் அச்சில் வெளிவந்த மறுமலர்ச்சி சஞ்சிகை. எனவே மறுமலர்ச்சிக் காலகட்டம் என்னும் போது அது மறுமலர்ச்சிச் சங்கத்தின் காலகட்டத்துடன், ‘மறுமலர்ச்சி ‘ கையெழுத்துச் சஞ்சிகை மற்றும் பின்னர் அச்சில் வெளிவந்த ‘மறுமலர்ச்சி ‘ சஞ்சிகை ஆகியவற்றின் காலகட்டமுமாகுமென்பதை யாரும் மறந்து விடக் கூடாது.

மேற்படி மறுமலர்ச்சி காலகட்டத்துடன் அ.ந.கந்தசாமியை இணைத்து அந்தனி ஜீவா தனது ‘சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன் ‘ என்னும் கட்டுரைத் தொடரில் ‘….பண்டிதர்களையும் பட்டதாரிகளையும் மிஞ்சும் அளவுக்கு அ.ந.கந்தசாமி புலமை பெற்றிருந்தார். அதனால் தான் மறுமலர்ச்சிக் குழுவுக்கே தலைமை தாங்கும் அளவுக்குத் தகுதி பெற்றிருந்தார். கதைகளையும், கவிதைகளையும் ,கட்டுரைகளையும் விரும்பிப் படித்தார். பழைய இலக்கியங்களையும் ஆர்வத்துடன் ஆழ்ந்து கற்றார். இளமையிலிருந்து இலக்கியத்திலிருந்து வந்த ஆர்வந்தான் மறுமலர்ச்சிக் குழுவுக்கு முன்னோடி என்றழைக்கப்படும் அளவுக்குச் சிறந்து விளங்க அவருக்குப் பக்கத் துணையாகவிருந்தது…. ‘ என்று குறிப்பிடுவார்.

மறுமலர்ச்சிக் காலகட்டத்தின் தோற்றுவாய் பற்றி விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டியதவசியம். தற்போது அக்காலகட்டத்துக்குரிய படைப்பாளிகளில் எஞ்சி நிற்பவர் வரதர் ஒருவரே. அச்சில் வெளிவந்த மறுமலர்ச்சி இதழ்கள் மட்டும் மறுமலர்ச்சிக் காலகட்டமாகிவிடாது. மறுமலர்ச்சிச் சங்கத்தினதும், மறுமலர்ச்சி கையெழுத்துச் சஞ்சிகையினதும், மறுமலர்ச்சிச் சங்கத்தின் ஸ்தாபகர்களின் கலந்துரையாடல்கள், விவாதங்கள் ஆகியவற்றினதும் தொடர்ச்சியான விளைவாகவே அச்சஞ்சிகையினைக் கருத வேண்டும். எனவே மறுமலர்ச்சிக் காலகட்டம் பற்றிய விரிவான ஆய்வுகள் மட்டுமே மேற்படி ‘திசை புதிது ‘ இதழின் கட்டுரை போன்ற ஒருபக்கச் சார்பான, ஆழமற்ற கட்டுரைகள் எதிர்காலத்தில் வெளிவருவதைத் தடுக்க உதவுமென்பது அடியேனின் கருத்தாகும்.

நன்றி: திண்ணை, பதிவுகள்.

 

மீள்பிரசுரம்: பதிவுகள் – ஆகஸ்ட் 2007; இதழ் 92.