ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர் குந்தவையுடனான நேர்காணல்!

1. 1  நீங்கள் ஒரு மூத்த எழுத்தாளர் என்ற வகையில் உங்களைப் பற்றியும் உங்கள் எழுத்துக்கள் பற்றியும் கூறமுடியுமா? உங்களுக்கு எழுதும் உத்வேகத்தை எது தருகிறது?

எழுத்தாளர் குந்தவைஎழுத்தாளர் சு.குணேஸ்வரன்வணிகரான என் தந்தைக்கு ஒன்பது பிள்ளைகள் அவர்களில் கடைசியாகப் பிறந்த ஒரே பெண் நான். தொடக்கக் கல்வியை உள்ளுர்ப் பாடசாலையிலும் இடைநிலைக்கல்வியை சுன்னாகம் இராமநாதன் கல்லூரியிலும் (அக்கடமி) பட்டப்படிப்பை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கற்றேன். (பத்தாண்டுகளுக்குப் பின்னர்) புத்தளம் மாவட்டத்திலும் பின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியிலும் ஆசிரியையாகப் பணியாற்றி 1990 ஆம் ஆண்டு இறுதியில் கொண்டுவரப்பட்ட விசேட சுயவிருப்பு ஓய்வுத்திட்டத்தின்கீழ் ஓய்வு பெற்றேன். முதலில் சில கதைகள் எழுதினாலும் என் புனைபெயரை பரவலாக அறியச் செய்தது 1963இல் ஆனந்தவிகடனில் அந்தக்கிழமையின் சிறந்த கதையாக வெளிவந்த ‘சிறுமைகண்டு பொங்குவாய்’ என்ற கதையே. (அந்தக்காலத்தில் இப்பொழுது உள்ளதுபோல் விகடனும் குமுதமும் தரம்கீழ் இறங்கியவையாக இல்லை) நீண்ட இடைவெளிக்குப் பின் கணையாழியில் வெளிவந்த ‘யோகம் இருக்கிறது’ இதுவும் பலராலும் வாசிக்கப்பட்டது. கதை எழுதவேண்டும் என்ற உந்துதலை புறச்சூழலும் நாட்டின் நடப்பு நிகழ்வுகளுமே ஏற்படுத்துகின்றன. பேரினவாதம் தலைதூக்கியாடும் எம் நாட்டில் மனத்தை சலனப்படுத்தி சஞ்சலப்படுத்தும் நிகழ்வுகள் பல. நான் அநேகமாக அவற்றை வைத்தே கதைகள் எழுத விரும்புகிறேன்.

 1.2.   பெண்களது உரிமைகள் பற்றி பொதுவாக என்ன நினைக்கிறீர்கள்?உங்களுடைய சிறுகதைகளில் பெண்களுக்கான குரல்கள் எதிர்பார்ப்புகள் பெண் எழுத்துக்களில் வெளிப்படுகிறதுபோல இருப்பதாக நினைக்கிறீர்களா?

பெண்கள் இன்று அநேகமாக எல்லாத் துறைகளிலும் நுழைந்து பிரகாசித்தாலும் சம உரிமை என்பது எட்டாத தூரத்தில்தான் உள்ளது. ஒடுக்குதல் என்பது ஆணாதிக்கத்திலிருந்து சில சமயங்களில் வெளிப்படத்தான் செய்கிறது.

ஆண் பெண் என்ற கருத்தியல்கள் தனியே இருக்கும்பொழுது அவற்றுக்கு அடையாளத்தைபேண தேவையிராது. முரண்பட்ட ஆண்மை ஒன்றோடு மற்றது இணையும்பொழுதுதான் அர்த்தப்படும் அடையாளங்களில் பேண வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இங்குதான் ஆண்களின் ஒடுக்குமுறை தோன்றுகிறது.

பெண் பாலியல் ரீதியிலும் இரண்டாம் இடத்திலிருக்கும்  பெண்கள் வேலைத்தளத்தில் வீட்டில் தெருவில் பல பின்னடைவுகளை ஒடுக்குதலை சமாளிக்க வேண்டியுள்ளது. எனது கதைகளில் ‘சொல்லமாட்டாளா’ (ஜீவநதி 2) என்ற கதை பெண்ணின்மீது ஆண் செலுத்தும் அதிகாரத்தை ஒடுக்குமுறையைச் சொல்கிறது. ‘இடம்மாறலுக்காய்’ (கணையாழி) என்ற சிறுகதை வரப்போகும் கணவனின் இசைவிற்கேற்ப நடக்கவேண்டிய ஒரு பெண்ணைப் பற்றிக் கூறுகிறது.

ஒன்று சொல்லவேண்டும் கதைகளில் வரும் பெண் பாத்திரங்கள் இயல்பாக உருவானவை. நான் ஒரு பெண்ணியவாதி இல்லை. அப்படி முத்திரை குத்தி என் கதைகளை வரையறை செய்து கொள்ள நான் விரும்பவில்லை.1

1.3.   இலங்கையில் மற்றைய சமூகங்களுடன் ஒப்பிடுகின்றபோது யாழ்ப்பாணப் பெண்களின் வாழ்க்கை மற்றும் சமூகப் பிரச்சினைகள் எவ்வாறிருக்கின்றன?

கடந்த 40,50 ஆண்டுகளுக்கு முன்னிருந்த நிலையைவிட யாழ்ப்பாணத்தில் பெண்களின் நிலை எவ்வளவோ முன்னேறியிருக்கிறது அந்தக் காலத்தில் வயதுக்கு வந்த பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை வருவதென்றால் எத்தனையோ காபந்துகள்.

இன்று இளம்பெண்கள் சுதந்திரமாக வெளியே போய் தமக்கு தமது குடும்பத்திற்கு வேண்டியதை வாங்கிக் கொள்கிறார்கள் சைக்கிள், மோட்டார் சைக்கிள் என்று எல்லாம் ஓட்டுகிறார்கள். சுதந்திரமாக தங்கள் கால்களில் நிற்கிறார்கள்.

   காதல் திருமணங்கள் பெற்றோர் சம்மதத்துடன் நடக்கின்றன. சாதிக்கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து வருகிறது. முஸ்லிம் பெண்களோடு ஒப்பிடுகையில் நம் பெண்கள் முன்னேறி இருக்கிறார்கள். சிங்களப் பெண்களிடையே கிராமப்புறம் நகர்ப்புறம் என்ற வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது.

1.4.   போர் தமிழ் மக்களின் கனவுகளையும் இயல்பான வாழ்வையும் தின்றுவிட்டது. உங்களுக்கும் போரின் நேரடித்தாக்கம் இருக்கிறதா?

இறுதிப்போரின் நேரடித்தாக்கத்தில் நான் சம்பந்தப்படவில்லை வன்னியில் இருந்த மக்களை விடுவித்ததன் பிறகுதான் எங்களுக்கு அங்கு நடந்த அநியாயங்கள் கொடூரங்கள் அங்கிருந்து வந்த மக்கள் சொல்லித்தான் எங்களுக்குத் தெரியும். அதற்கு முன்பு புலிகளிடமிருந்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற முனைந்த அரசு மற்றும் இந்திய சமாதானப்படைத் தாக்குதலினால் பெரும்பாலும் பொதுமக்களே பாதிக்கப்பட்டனர். எந்த நேரமென்றில்லாமல் பலாலி இராணுவ முகாமிலிருந்து மக்கள் குடியிருப்புக்களை நோக்கி நேரகாலமின்றி ஷெல்கள் வீசப்பட்டன. பொம்மர்கள் வட்டமிட்டு வந்து குண்டுகளை வீசின. நாங்களும் மூன்றுமுறை பாதுகாப்புத்தேடி எங்கள் ஊரைவிட்டு இடம்பெயர்ந்தோம்.

1.5.  ஈழத்தின் போர் இலக்கியங்கள் எத்தகைய வரலாற்று அனுபவங்களைச் சேகரித்து வைத்துள்ளன?  நீங்களும் போர் பற்றிய இலக்கியங்களைப் படைத்துள்ளீர்களா?

என்னுடைய ‘பெயர்வு’ என்ற சிறுகதை போர்க்காலத்தில் அகதிகள் இடம்பெயர்ந்த கஷ்டத்தை, குழந்தைகளின் பசியைச் சொல்கிறது. போர்முடிந்து ஊருக்குத் திரும்பிய மக்கள் சொந்த ஊர்களுக்குப் போகமுடியாமல் தடுக்கப்பட்டு அனுபவித்த கஷ்டங்களைச் சொல்கிறது. ‘காலை இழந்தபின்’ என்ற எனது சிறுகதையும் சொல்கிறது. போர் முடிந்தபின்பும் அங்கு நடந்த சம்பவங்களை, நேரடியாகப் பாதிக்கப்பட்ட உறவுகளை இழந்த சிறுவர்கள் மனம் பேதலித்துப் போனதைப் பற்றி ‘நீட்சி’ (ஜீவநதி 4 வது ஆண்டுமலர்) என்ற சிறுகதை கூறுகிறது.

 1.6.   நம் சமூகத்தில் சிறுகதை எழுத்தாளர்களுக்கு இருக்கும் இடமும் அந்தஸ்தும் உங்களுக்குத் திருப்தியானதுதானா?

திருப்தி இல்லை. பொதுவாக மக்கள் சிறுகதையை வாசிப்பதில்லை. இன்று பொதுவாக பத்திரிகைகள் இலக்கியம் பற்றிய செய்திகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே தருகின்றன. வார இதழ்கள் சிறுகதைகள் வந்தாலும் அநேகர் அதனை வாசிப்பதில்லை. எழுத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே சிறுகதைகளை வாசிப்பார்கள். சாதாரண மக்கள் வாசிப்பதில்லை. அவர்கள் தொலைக்காட்சியில் தொடர் நாடகங்களைப் பார்ப்பதிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள். இந்நிலையில் எழுத்தாளர்களின் அந்தஸ்து எவ்வாறு பேணப்படமுடியும்.

1.7.   உங்கள் கதைகளை நாடகங்களாக மாற்றியமை குறித்து உங்கள் கருத்தென்ன?

லண்டன் அவைக்காற்றுக் கழகத்தினர் எனது ‘பெயர்வு’ என்ற சிறுகதையைப் பெருப்பித்து நாடகமாக்கி நடித்தார்கள். அக்கதையில் உள்ள சிறிய விடயங்களையும் பெரிதாக விஸ்தரித்து மக்கள் உணர்ச்சிவசப்படக்கூடிய  வசனங்களை அமைத்து மேடையேற்றினார்கள். என் கதையை மூலக்கதை என்றே கூறலாம். அந்த நாடகத்தை நான் பார்க்கவில்லை. என் அனுமதியையும் கேட்கவில்லை.

1.8.   ஒரு எழுத்தாளராக இருக்கும் நீங்கள் தற்போதைய புதிய இளம் எழுத்தாளர்கள் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

அரைத்த மாவை அரைக்காமல் புதிது புதிதாக வரும் இலக்கியங்களை படித்துவிட்டு கதை எழுத வேண்டும். இன்றைய சமூக இலக்கிய மாற்றங்கைள அவதானித்து புதிய திருப்பங்களை உள்வாங்கி கதை எழுத வேண்டும். பிறமொழி இலக்கியங்களைப் படித்தல் மிக அவசியம்.

1.9.   எழுத்தில் பெண் எழுத்து ஆண் எழுத்து என்றெல்லாம் கதைக்கப்படுவது தொடர்பில் உங்கள் நிலையினை சிறிது விளக்கிக் கூறுவீர்களா?

இப்படி தனித்துத்தனித்துப் பார்ப்பது சரியென்று நான் நினைக்கவில்லை. பெண்களுக்கு மட்டுமேயான தனிமொழி தனிப்பட்ட பிரச்சினை என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. வேலைக்குப் போய் வரும் பெண்ணின் மொழி வீட்டில் இருக்கும் பெண்ணின் மொழி எல்லாம் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்குமென்று என்னால் சொல்லமுடியாது பெண்ணிற்குரிய மொழி என்று சொல்வதே ஆணின் கட்டுபிடிப்புத்தான் என்கிறார் கனிமொழி. மீண்டும் பெண்ணை ஒரு குறுகிய வட்டத்தில் வைத்து அடைத்துவிடும் முயற்சியே இது

1.10.  உங்கள் பார்வையில் இன்றைய எழுத்துச் சூழல் எப்படி இருக்கிறது?

எழுத்தாளர்களுடைய பிரச்சினைகள் வாக்குவாதங்கள் தோன்றியவண்ணம்தான் இருக்கிறது. ஒருவரை ஒருவர் மட்டம் தட்டுவதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். புதிதாக வரும் இளம் எழுத்தாளர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த நிலை மாறவேண்டும்

1.11.   உங்கள் படைப்புகள் எப்படி இருக்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்?

என் படைப்புகள் உலகத்தைத் சீர்திருத்தவேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அன்றாட வாழ்வில் ஏற்படும் சாதாரண பிரச்சினைகளையே மையமாகக் கொண்டு நான் எழுதுகிறேன். அவ்வளவுதான்.

நன்றி: சு. குணேஸ்வரன் ஊடறு இணைய இதழுக்காகக் கண்ட நேர்காணல்; நேர்காணலுக்கான கேள்விகள் – றஞ்சி  (சுவிஸ்). அதனைப் பதிவுகள் இணைய இதழுக்கும் அனுப்பியுள்ளார்.

kuneswaran@gmail.com