ஈழத்துத் தமிழ் இலக்கியம்: செ.யோகராசாவின் படைப்புத்துறைப் பங்களிப்புகளும் பயன்பாடுகளும்

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மொழியியல்துறை பீடத்தின் தலைவராக இருந்து செயற்படும் கலாநிதி செ. யோகராசா நவீன கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மொழியியல்துறை பீடத்தின் தலைவராக இருந்து செயற்படும் கலாநிதி செ. யோகராசா நவீன இலக்கியத்தின் பல்துறைப் பரிமாணங்களையும் அலசி ஆராய்ந்து தமது கருத்துக்களை முன்வைப்பதில் முன் நிற்பவராக முகிழ்ந்து நிற்கின்றார். கடந்த மூன்று தசாப்த காலத்திற்கும் மேலாக நவீன இலக்கியம் சம்பந்தமான பல்துறை சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை வெளிக்கொணர்ந்துள்ளார். சிறுவர் இலக்கியம் பற்றிய இவரது சிந்தனையை முதலில் நோக்குவோம். ‘ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்! ‘ஈழத்து சிறுவர் பாடல் களஞ்சியம்’ என்ற இவரது நூல்கள் இரண்டையும், ஆழ்ந்த அகன்ற அறிவிற்காய் ‘குமரன் புத்தக இல்லம் ‘வெளிக்கொணர்ந்துள்ளது. நவீன இலக்கியத்துறைகள் வளர்ந்துள்ள ஈழத்துத் தமிழ்ச் சூழலில் சிறுவர் இலக்கியத்துறையின் வளர்ச்சி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதென்பதனை ஈழத்து இலக்கிய ஆர்வலர்கள் நன்கறிந்திருப்பர். மேலை நாடுகளில் இத்துறைசார் வளர்ச்சி பிரமிப்பை ஏற்படுத்தக் கூடியதாய் உள்ளமை மனங்கொள்ளப்பட வேண்டியது. இந்நிலையில் சிறுவர் இலக்கியத்துறையில் நாம் எங்கே நிற்கின்றோம் என்று எம்மை நாமே கேட்டுக்கொள்வது அவசியமானது.

இந்த நூலில், தமிழ்ப் பாரம்பரியத்தில் சிறுவருக்கான இலக்கியம், தமிழில் குழந்தைக் கவிதைகள், சிறுவர் இலக்கியம், சில சிந்தனைகள், ஈழத்துக் குழந்தைப் பாடல்கள்: ஒரு பார்வை, ஈழத்துச் சிறுவர் அறிவியல் பாடல்கள், சிறுவர் உளப்பண்பும் இலங்கையில் தமிழில் சிறுவர் இலக்கியமும், இலங்கையில் சிறுவர் இலக்கிய வளர்ச்சி: ஒரு கண்ணோட்டம், ஈழத்தில் சிறுவர் இலக்கியம் வளர்ந்துள்ளதா?, குருவியின் தலைமீது பனங்காயை சுமத்தலாமா? குழந்தைக் கவிதைகள் பற்றிய சில சிந்தனைகள், சிறுவர் விமர்சனம்: அனுபவத்தினூடான மனப்பதிவு, யாழ்ப்பாணப் பிரதேசச் சிறுவர் பாடல் வளர்ச்சி: ஒரு நோக்கு, மட்டக்களப்புப் பிரதேசத்தில் குழந்தைக் கவிதை வளர்ச்சி, மட்டக்களப்புப் பிரதேசச் சிறுவர் இலக்கியத்தின் முன்னோடி எஸ்.இ. கமலநாதன் ஆகிய சிறுவர் இலக்கியம் பற்றிய பலவகையான கட்டுரைகளைத் தந்துள்ளார்.

‘ஈழத்துச் சிறுவர் பாடல் களஞ்சியம், ஈழத்தில் வெளிவந்த குழந்தைப் பாடல்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட நூற்றிப் பதின்மூன்று பாடல்களைக் கொண்ட தொகுதியாக வெளிவரும் இந்நூல் ஒரு முயற்சியின் பயன் என்றே கூற வேண்டும்.

ஈழத்துச் சிறுவர் பாடல்களின் தொகுப்பு எதுவுமே ஈழத்திலோ தமிழ் நாட்டிலோ வெளிவந்திருப்பதாகத் தெரியவில்லை. எனவே இத்துறையில் பெரிய அளவிலான முதன் முயற்சியாக இத்தொகுதி அமைகின்றது. கலாநிதி செ. யோகராசா ‘ஈழத்து சிறுவர் கதைகள்’ தொகுப்பு ஒன்றையும் வெளியிடவுள்ளார்.

பதிப்பாசிரியர் கலாநிதி செ. யோகராசா ‘ஈழத்துத் தமிழ் சிறுகதைக் களஞ்சியம்’ என்னும் நூலை மிக விரைவில் வெளிக்கொண்டு வரவுள்ளார். “இலங்கையில் வெளிவந்த மிக முக்கிய, மிகச் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பாக இந்நூல் அமைகின்றது. நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களையும் கொண்ட இத்தொகுப்பு இலங்கைச் சிறுகதை வரலாற்றில் முக்கிய தடம் பதித்த சிறு கதை ஆசிரியர்கள் பற்றிய குறிப்பினையும் கொண்டுள்ளது” என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது.

ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் சிறு சஞ்சிகைகளின் பங்களிப்பு விசாலமானது. கணிசமானதாகவும் காத்திரமானதாகவும் இருந்து வந்துள்ள தெனினும் அத்தகைய சஞ்சிகைகள் பற்றிய அறிமுகங்களோ ஆய்வுகளோ போதியளவு நடைபெறவில்லை என்று கூறும் செ. யோகராசா, 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற இலக்கியப் பேரரங்கு ‘புதுமை இலக்கியம்’ சிறப்பு மலரின் ‘நவீன இலக்கிய வளர்ச்சியில் ‘பாரதி’ என்னும் கட்டுரையை வரைந்துள்ளார். இலங்கையின் நவீன இலக்கிய வளர்ச்சிப் போக்கில் முக்கியமான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள ‘மறுமலர்ச்சி’ (1946 – மார்ச்) யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த அதே காலப்பகுதியில் சற்று முன்னர் ‘பாரதி’ (1946 – தை) கொழும்பிலிருந்து வெளிவந்தது.

எனினும் மறு மலர்ச்சியின் முக்கியத்துவம் அறியப்பட்டளவுக்கு பாரதியின் முக்கியத்துவம் பரவலாக அறியப்படவில்லை. கே. கணேஷ், கே. ராமநாதன் ஆகிய இருவரையும் கூட்டாசிரியர்களாகக் கொண்டு பாரதி ஆறு இதழ்கள் மட்டுமே (1946 ஜனவரி – ஆகஸ்ட்) வெளிவந்துள்ளது. பாரதி எத்தகு இலட்சியங்களுடன் வெளிவந்தது என்பதனை முதலில் கவனிப்பது பொருத்தமானது. இலங்கையிலிருந்து வெளியான தமிழின் முதல் முற்போக்குச் சஞ்சிகை பாரதியே எனலாம்.

பாரதியில் வெளிவந்த மூன்று கவிதைகள் பற்றி இங்கு குறிப்பிடுகின்றார். கவீந்திரன் (அ.ந. கந்தசாமி) மலையகம் சாராத ஒருவர் மலையகக் கவிஞர்கள் பலர் எழுதுவதற்கு முன்பே ‘தேயிலைத் தோட்டத்திலே’ என்னும் கவிதையை எழுதியுள்ளார். மற்றொரு கவிதை ‘எங்கள் இலங்கை’ என்ற தலைப்பில் கலாதேவன் (கே. கணேஷ்) எழுதியதாகும். பாரதியில் வெளியான இன்னொரு முக்கிய கவிதை மொழி பெயர்ப்புக் கவிதையாகும். மேலும் பண்டிதர் (மஹாகவி) எழுதிய ‘மாரி’ என்ற கவிதையும் விரைந்துரைக்கப்பட வேண்டியதுதான். உள்ளடக்கம், வெளிப்பாடு, உருவம் என்ற விதங்களில் நவீன கவிதை வளர்ச்சிப் போக்கில் பாரதியின் பங்களிப்பு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

பாரதியில் பிரசுரமான சிறுகதைகளுள் அ.ந. கந்தசாமியின் ‘வழிகாட்டி’ அ.செ.முருகானந்தனின் ‘உழவு யந்திரம்’ ஆகியவை குறிப்பிடத்தக்கன. மானிட நேயத்தைச் சிறப்பாக வெளிப்படுத்துவதாக ‘வழிகாட்டி’யும் மண்வாசனைக்கதையாக ‘உளவு யந்திரமும் அமைந்துள்ளன. கவிதை மொழிபெயர்ப்புப் போன்றே தரமான சிறுகதை மொழிபெயர்ப்புகளையும் பாரதி தந்துள்ளது. மாக்ஸிம் கோர்க்கி, முல்கிராஜ் ஆனந்த் முதலானோரின் படைப்புகளை உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.

இங்கே ஒரு இலக்கியச் சஞ்சிகையைப் பற்றிய தேடல், அவதானிப்பு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அந்த வகையில் செ. யோகராசாவின் இலக்கியத் தேடலின் பங்களிப்பை உணர முடிகின்றது.

‘ஈழத்து இலக்கியமும் இதழியலும்’ என்னும் நூலில், நவீன இலக்கியத்தின் தோற்றத்திலும் வளர்ச்சியிலும் இலக்கிய சஞ்சிகைகளுக்கும் ஆய்விதழ்களுக்கும், பத்திரிகைகளுக்கும் முக்கிய பங்குண்டு என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்நூல் ஈழத்துத் தமிழ் இலக்கியச் சூழலில் வெளிவந்த இச்சஞ்சிகைகள், ஆய்விதழ்கள், பத்திரிகைகளின் தாக்கத்தைப்பற்றி விரிவாக விபரிக்கின்றது.

ஈழத்து இலக்கிய சஞ்சிகைகள்: தோற்றமும், வளர்ச்சியும் தளர்ச்சியும், ஈழத்து முதற் பெண் சஞ்சிகை: ‘மாதர் மதி மாலிகை, மட்டக்களப்பு பிரதேசத்தின் முதற் சஞ்சிகை: ‘பாரதி’, ‘மறுமலர்ச்சி’ச் சஞ்சிகையும் ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சியும்: மறுமதிப்பீடு, ஈழத்தின் மற்றொரு முற்போக்கு சஞ்சிகை: ‘குமரன்’, ஈழத்து தமிழியல் ஆய்விதழ்கள், ஈழத்து தமிழியல் சார் தமிழ் ஆய்விதழ்கள்: தோற்றமும் வளர்ச்சியும் தளர்ச்சியும், ஈழத்துப் பத்திரிகைகள், 19 ஆம் நூற்றாண்டில் ஈழத்துப் பத்திரிகைகளும் நவீன இலக்கிய உருவாக்கமும், 20 ஆம் நூற்றாண்டில் ஈழத்துப் பத்திரிகைகளும் நவீன இலக்கிய உருவாக்கமும், ஈழத்து நவீன இலக்கிய உருவாக்கமும் ‘ஈழகேசரி’யும்: திZதிதிப்பீடு ஆகிய கட்டுரைகள் ஆய்வு நிலையில் நின்று எழுதப்பட்டுள்ளன.

‘ஈழத்து நவீன கவிதை – புதிய உள்ளடக்கம் – புதிய தரவுகள் – புதிய போக்குகள்’ என்ற நூலையும் கலாநிதி செ. யோகராசா ஆக்கித் தந்துள்ளார்.

இந்நூல் ஈழத்து நவீன கவிதையின் வளர்ச்சி பற்றி முழுமையாக விபரிக்கின்றது. இந்நூலிலுள்ள இருபத்து நான்கு கட்டுரைகளும் ஈழத்து நவீன கவிதையின் தோற்றம் குறித்தும், முக்கியமான முன்னோடிகள் ஆளுமைகள் சிலர் குறித்தும், பிரதேச அடிப்படையிலும் கோட்பாட்டு நிலையிலும் பொதுப்பார்வையிலும் ஈழத்து நவீன கவிதை பற்றிப் பேசுகின்றன. இந்நூல் ஈழத்து நவீன கவிதையின் புதிய உள்ளடக்கங்களையும் புதிய போக்குகளையும் விபரிப்பதுடன் புதிய தரவுகளையும் தருகின்றது.

‘ஈழத்துத் தமிழ் நாவல்: வளமும் வளர்ச்சியும்’ என்னும் ஆய்வு நூலை தந்த நூலாசிரியர் பத்துக் கட்டுரைகளில் தமது தரவுகளை முன்வைத்துள்ளார். ஈழத்துத் தமிழ் நாவலின் தோற்றமும் எழுபதுகள் வரையான வளர்ச்சியும்: மறுமதிப்பீடு, எழுபதுகளில் ஈழத்துத் தமிழ் நாவல்கள், எண்பதுகளில் ஈழத்துத் தமிழ் நாவல்கள், ஒரு புதிய அலை, தொண்ணூறுகளில் ஈழத்துத் தமிழ் நாவல்: புதிய போக்குகள், மட்டக்களப்பின் முதல் நாவல்: ‘அரங்க நாயகி, நாற்பதுகளில் எழுதப்பட்ட ஈழத்து நாவல்’ அனிச்ச மலரின் காதல்’, மார்க்சிய நோக்கில் ஈழத்துத் தமிழ்நாவல்கள்: செ. கணேசலிங்கன் நாவல்கள் பற்றிய அவதானிப்பு, ஈழத்துச் சாதிய நாவல்களின் பின்புலத்தில் டானியலின் நாவல்கள்: கானல், அடிமைகள் பற்றிய சில குறிப்புகள், எண்பதுகளில் வெளிவந்த ஒரு நாவல்: ‘மரக்கொக்கு’ என்பனவாகும்.

ஈழத்து நாவல் இலக்கிய வளர்ச்சி தொடர்பாக வெளிவந்த நூல்கள் எழுபதுகள் வரையான நாவல் வளர்ச்சி பற்றிக் கூறுவதுடன் நின்றுவிட பிற்பட்ட கால நாவல் வளர்ச்சி பற்றி நூலுருவில் எவையும் வெளிவராத ஆரோக்கியமற்ற சூழலில் அத்தகைய குறைபாட்டினை பூர்த்தி செய்யும் வகையில் இந்நூல் வெளிவருகிறது. ஈழத்துத் தமிழ் நாவல் வளர்ச்சியினை முழுமையாக விபரிக்கும் இந்நூல் எழுபதுகளுக்குப் பின்னர் ஏற்பட்ட வளர்ச்சியினை மேலும் நுண்மையாக ஆராய்கின்றது.

‘ஈழத்து நாவலும் பண்பாடும்: சில அவதானிப்புகள்’ என்னும் கலாநிதி செ. யோகராசாவின் கட்டுரை கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவை ஒட்டி நடத்தப்பட்ட ஆய்வரங்கில், இக்கட்டுரை வாசிக்கப்பட்டது. “பண்பாடு என்பது குறிப்பிட்ட ஒரு மக்கட் கூட்டம் தனது சமூக வளர்ச்சியினடியாகத் தோற்றுவித்துக் கொண்ட பெளதீகப் பொருட்கள், ஆத்மார்த்தக் கருத்துக்கள், மத நடைமுறைகள், சமூகப் பெறுமானங்கள் ஆகியவற்றின் தொகுதியாகும்” என்று பண்பாட்டுக்கு வியாக்கியாணம் தந்துள்ளார்.

ஈழத்தில் தமிழில் வெளிவந்த முதல் நாவல் ‘அசன் பேசரித்திரம்’ (1885) என்பதே ஆய்வாளர் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு விடயமாகும். அந்நாவல் தொடக்கம் ஈழம் சுதந்திரம் பெற்ற காலம்வரை வெளிவந்த பெரும்பாலான நாவல்கள் பின்வரும் பண்புகளைக் கொண்டிருந்தன. தழுவலாகவும் மொழி பெயர்ப்பாகவும் விளங்கியமை, அந்நியச் சூழலில் இடம்பெற்றமை, துணிகரச் செயல்களை வெளிப்படுத்தியமை, துப்பறிதல், மர்மம் ஆகிய இயல்புகள் விரவிவந்தமை, கீழ்தர உணர்ச்சிகளைத் தூண்டியமை, பெயரளவிலேயே ஈழத்து மக்களது வாழ்வியலைச் சித்திரித்தமை என்பனவாகும்.

ஆயினும் இக்காலப்பகுதியில் வெளிவந்த நாவல்களுள் சில முக்கியமான கவனிப்பிற்குரியவை. மங்கநாயகம் தம்பையாவின் ‘நொறுங்குண்ட இருதயம் (1914), ம.வே. திருஞான சம்பந்தப்பிள்ளையின் ‘உலகம் பலவிதக் கதைகள்’ (1924), இடைக்காடரின்’ நீலக்கண்டன் ஒர் சாதி வேளாளன் (1925) என்பனவே அவை. ‘நொறுங்குண்ட இதயம்’ கிறிஸ்தவ மதமாற்றத்திற்கு ஆற்றுப்படுத்துகின்ற கைங்கரியத்தில் ஈடுபடுகின்றது. அந்த நாவலில் வரும் கண்மணி கிறிஸ்தவ மதத்தில் அமைதிகாண முயன்று இறுதிவரை கிறிஸ்தவ பெண்ணாகவே வாழ்கின்றாள். நொறுங்குண்ட இருதயம் நாவலூடாக கிறிஸ்தவ மதம் சார்ந்த புதியதொரு பண்பாட்டுச் சூழல் ஈழத்து வாசகருக்கு அறிமுகமாகின்றது. ம.வே. திருஞான சம்பந்தப் பிள்ளையின் ‘உலகம் பலவிதக் கதைகள்’ சைவ சமயஞ்சார்ந்த வாழ்வியலின் சிறப்புகள் வெளிப்படுத்துவது குறிப்பிடத்தக்கது. ‘நீலகண்டன் ஓர் சாதி வேளாளன்’, சாதியத்தை முதன்மைப்படுத்தி வெளிவந்த முதல் நாவலாயினும் இந்நாவல், சைவ சித்தாந்த வழி நின்று சாதியப் பிரச்சினைக்கு சமரசங்காண முற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் மேற்குறிப்பிட்ட நாவல்கள் பிரச்சினைகளுக்கும் போதனைகளுக்கும் கொடுத்த முக்கியத்துவத்தை வாழ்வியல் சித்தரிப்பிற்கு கொடுத்துள்ளன என்று கூறுவதற்கில்லை.

தில்லைநாதனின் ‘அனிச்ச மலரின் காதல்’ (1942), அ.செ. முருகானந்தம் எழுதிய ‘வண்டிற் சவாரி’ (1944), புகையில் தெரிந்த முகம் (1950) ஆகிய நாவல்களின் வருகையின் பின் பிரக்ஞை பூர்வமாக ஈழத்து மக்களது வாழ்க்கையை பிரச்சினைகளை வெளிப்படுத்தும் நாவல் செல்நெறி உருவாகின்றது. அந்தவகையில் கனக. செந்திநாதனின் ‘விதியின்கை’ (1953), இளங்கீரனின் ‘தென்றலும் புயலும்’, மு. தளையசிங்கத்தின் ‘ஒரு தனி வீடு’ (1964), இளங்கீரனின் ‘நீதியே நீகேள்’ (1959), செ. கணேசலிங்கத்தின் ‘நீண்ட பயணம்’ ஆகியவை முக்கியமானவையெனினும் இவற்றுள் நீண்ட பயணமே முதன்மையிடம் பெறுகின்றது. அடித்தள மக்களின் அன்றாட வாழ்க்கை முதன் முதலாகப் பேசப்படுவது இந்த நாவலிலேதான்.

சிறுவர் இலக்கியம், சிறுகதை, கவிதை, நாவல் சஞ்சிகைகள் ஆகிய துறைகளில் கொண்ட ஈடுபாடும், அக்கறையும், தேடலும் அவரைச் சிறந்த ஆய்வாளராக ஆக்கியுள்ளது. நவீன இலக்கிய வளர்ச்சியில் அவரது பங்களிப்பு விசாலமாக அமைந்துள்ளது. எந்த ஆய்வரங்கிலும் தமது காத்திரமான கட்டுரைகளை முன்வைத்து ஆற்றுகின்ற உரை புதிய அணுகுமுறைகளைப் பிரதிபலித்து நிற்பதைக் காணலாம். அந்த வகையில் கலாநிதி செ. யோகராசா பல்துறைப் பரிமாணங்களைக் கொண்ட படைப்பாளியாகவும், ஆற்றல் மிக்க ஆய்வாளனாகவும், பலராலும் மதிக்கப்படுகின்ற பண்பாளனாகவும் இருந்து கொண்டு, சிறந்த திறனாய்வாளராக உயர்ந்து நிற்கிறார்.

நன்றி: தினகரன் (இலங்கை)