ஈழத்து இசைவாணர் கண்ணன் அவரது புதல்வர் சாயிதாசனுடன் வழங்கும் இசையுடன் கூடிய கலந்துரையாடல்

– நிலாச்சோறு விசேட நிகழ்ச்சி 17.06.2011 வெள்ளிக் கிழமை பிரித்தானிய நேரம் 06.00 முதல் 08.30 மணி வரை இந்திய-இலங்கை நேரம் இரவு 10.30 முதல் 01.00 மணி வரை –

 ஈழத்து இசைவாணர் கண்ணன் அவரது புதல்வர் சாயிதாசனுடன் வழங்கும் இசையுடன் கூடிய கலந்துரையாடல்இசையமைப்பாளர் கண்ணன் என்று கூறினால் 70 களில் அனைவருக்கும் ஞாபகம் வருவது கண்ணன் நேசம் இசைக்குழுவாகும். கண்ணன் நேசம் இசைக்குழு ஈழத்து சினிமாவுக்கும் மெல்லிசைக்கும் பொப்பிசைக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருந்தது. ஆரம்ப காலத்தில் கண்ணன் நேசம் இசையமைத்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான புது ரோஜா மலரே என்னும் பாடலை அனைவரும் நினைவு கூருவர். மேலும் அருவி வெளியீட்டகத்தினால் வெளியிடப்பட்ட குளிரும் நிலவு இசைத்தட்டில் உள்ள பாலை வெளி என்ற என்.சண்முகலிங்கம் எழுதிய  பாடலையும்; கண்ணன் நேசம் இசையமைத்தமை இங்கு நினைவு கூரலாம். இவ்வாறு கண்ணன் நேசம் குழுவினூடாக அறிமுகமான கண்ணண் அவர்களின் ஆளுமை பின்னாளில் பல பரிமாணங்களைக் கொண்டதாக பரிணமிக்கிறது.

 

போராட்டகாலங்களின் எழுச்சியுடன் இசைக்குழுக்கள் மறைகின்ற போது கண்ணன் அவர்கள் மறைந்து போகவில்லை. பதிலாக போராட்டத்துடன் அவரது இசையும் இணைகிறது. 1980 களில் கண்ணன் அவர்களின் இசையில் கானசாகரம் என்ற நிகழ்ச்சியும் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நிகழ்த்தப்பட்டிருந்தது. பொப்பிசை மெல்லிசையிலிருந்து கண்ணனின் இசை ஈழத்து நாடக உலகத்துக்குள்ளும் இணைக்கப்படுகிற பரிமாணத்தையும் 80 களில் காண்கிறோம். நாடக உலகுடன் இணைந்து நடைபோட்ட கண்ணனின் இசைப்புலமை குறித்தும் நாடகம் என்னும் கலைமீது அவருக்கிருந்த ஈடுபாடு குறித்தும் ஈழத்தின் மிக முக்கியமாக நாடக கர்த்தாவான குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் தனது கருத்துப் பரிமாற்றங்களில் விதந்து குறிப்பிட்டுள்ளார்.

சிதம்பரநாதன் நெறியாள்கை செய்த மண்சுமந்த மேனியர் நாடகம் மற்றும் சேரனது கவிதா நிகழ்வு போன்றவை யாழ்க்குடாநாட்டில்  மிகப்பெரும் பாதிப்புக்களை உருவாக்கிய கலை நிகழ்வுகளாக அமைந்தன இவற்றுக்கான இசையமைப்பை கண்ணனே செய்திருந்தார். அன்றைக்கு மக்கள் மத்தியில் பெரும்பாராட்டைப் பெற்ற நாடகங்களின் வெற்றிக்கு கண்ணனின் இசையும் முக்கியமான காரணம் என்பதைக் குறிப்பிடாத நாடக விமர்சகர்கள் இல்லை.

85களில் கவிஞர்கள் சேரன், வ.ஐ.ச ஜயபாலன் ஆகியோரது பாடல்களை தொகுத்து தமிழீழ மாணவர் பேரவையின் சார்பாக குருபரனால் வெளியிடப்பட்ட விடுதலைப் பாடல்கள் என்ற இசைத்தட்டிற்கான இசையையும் கண்ணன் அவர்களே வழங்கியிருந்தார்.

90களில் விடுதலைப்புலிகள் எழுச்சியடைகிற போது ஈழத்து இசைப்பாடல்கள் விடுதலைப் பாடல்களாக அல்லது போரிலிருந்து பிறந்த பாடல்களாக பரிணமிக்கின்றன.  இந்தப் பரிமாணத்திலும் கண்ணனின் பங்களிப்பு கனதியானதாகும்.வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம் என்ற பாடலை அறியாதவர் இருக்கமுடியாது. கண்ணன் ‘1996’ என்கிற வெளிவராத குறும்படத்திற்கான பின்னணி இசையையும் அமைத்திருந்ததை இங்கு நினைவு கூரலாம் .

அண்மையில்  முள்ளிவாய்க்கால் பேரழிவினை நினைவு கூரும் முகமாக குளோபல் தமிழ்  ஊடக நிறுவனம் தயாரிக்க சோமிதரன் தொகுத்த  காலத்துயர் என்னும் விவர்ணப்படத்தின் தேவ அபிரா எழுதிய மூங்கிலாறே முதுநாள் நதியே மூச்சின்றிக் கிடந்தாய் என்னும் அறிமுகப்பாடலையும் கண்ணண் அவர்களே இசை அமைத்திருந்தார். ஈழக்கவிஞரான தீபச்செல்வனின் கவிதை வரிகளை பூப்பூத்த நகரில் யார் வந்து புகுந்தார் எனும் பாடலாகவும் மாற்றியிருக்கிறார் இசைவாணர் கண்ணன். இவ்வாறு மூன்று தசாப்தங்களாக தொடர்கிறது கண்ணன் அவர்களின் இசைப்பயணம.

இசைவாணர் கண்ணனின் புதல்வரான சாயிதர்சன் தந்தையின் முதுமரபை உள்வாங்கி, நவீன தொழில்நுட்ப கணணி உலகுக்குள் நுளைந்து ஈழத்து மெல்லிசையை புதிய உலகிற்குள் கொண்டு வருகிறார். இவரது இசைப் பேழை ஒன்று குளோபல் தமிழ் நியூஸ் நெட்வொர்க் நிறுவனத்தினால் விரைவில் வெளியிடப்படவும் இருக்கிறது.

நிகழ்ச்சித் தயாரிப்பு
குருபரன்-யமுனா ராஜேந்திரன்

Kasthurisamy Rajendran  rajrosa@gmail.com