எண்பது அகவையில் பேராசிரியர் சண்முகதாஸ்! நினைவழியா நாட்களில் நீடித்து வாழும் கலை, இலக்கிய சகா!

பேராசிரியர் அ.சண்முகதாஸ்பேராசிரியர் சண்முகதாஸ், வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் 1950 களில் எனக்கு மூன்று வகுப்புகள் மூத்தவராகக் கல்வி பயின்றவர். நான் எனது 11ஆவது வயதில் அப்பாடசாலையுள் தயங்கித் தயங்கிக் கண் விழிக்காத பூனைக்குட்டியாகக் காலடி வைத்தபோது எனக்கு வயது 11. சண்முகதாஸுக்குவயது 14. தன் இனிய குரலால் அனைவரையும் வசீகரித்து அனைவரும் அறிந்த சிறுவனாக இருந்தார் சண்முகதாஸ். அண்ணன் என்றுதான் நாம் அவரை அன்று அழைத்தோம். என்னைப்போல அவரும் கட்டையானவர். வண்டுகள் போல நாம் அங்கு ஓடித்திரிவோம். 6 வருடங்கள் அந்த விடுதியில் நாங்கள்ஒன்றாக வளர்ந்தோம். 1954 ஆம் ஆண்டு மஹா பாரதம் தழுவிய நச்சுப் பொய்கை எனும் பாடசாலை நாடகம் ஒன்றில் 15 வயது சண்முகதாஸ் கதாயுதம்தாங்கி ஹா ஹா என்று சப்தமிட்டபடி வீமனாக மேடைப் பிரவேசம் செய்தமையும், கையினால் தண்ணீர் பருகாது பொய்கையிலிருந்த தண்ணீரைகதையினால் அடித்து அடித்து வாயினால் ஆவ் ஆவ் எனப் பருகிய காட்சியும் இப்போது ஞாபகம் வருகிறது.

திருகோணமலைக் கிராமம் ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பெற்று அக்கல்லூரிக்கு அவர் வந்திருந்தார். அவர் வந்து மூன்றுவருடங்களின் பின் மட்டக்களப்புக் கிராமம் ஒன்றிலிருந்து நான் ஐந்தாம் வகுப்புப் புலமைபரிசில் பெற்று, புலமைப்பரிசில் பெற்றோர் பயில கன்னங்கரா திட்டத்தில் உருவான அந்த மத்திய கல்லூரியில் கல்வி பயிலச் சென்றேன். விடுதி வாழ்க்கை. சண்முகதாஸ் அவரது வகுப்பில் என்றும் முதன்மாணவர். அவருடன் போட்டிக்கு நின்றார் அருணாசலம் என்ற மாணவர். படிப்பில் இருவரும் தீரர். அருணாசலம், சண்முகதாஸின் உயிர் நண்பன். திரியாயைச் சேர்ந்த இருவரும் கெட்டிக்காரர்கள். இணைபிரியா இரட்டையர்கள். அவர்களை எமக்குமுன்னுதாரணங்களாக ஆசிரியர்கள் காட்டுவர். இருவரும் ஒரு நாள் சாரண இயக்க காரியமாகச் சென்றபோது, ஒருகுளத்தில் இருவரும்சிக்குப்பட்டுக்கொண்டனர். அருணாசலம் காலமானர். சண்முகதாஸ் அதிஷ்டவசமாகத் தப்பித்துக்கொண்டார். அருணாசலத்தின் உடல் பாடசாலைமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தபோது சண்முகதாஸ் நண்பனுக்காக இரங்கி குலுங்கிக் குலுங்கி அழுத குரல் இன்னும் காதில் கேட்கிறது. கல்விப்பொது சாதாரண தர வகுப்பு சித்தியடைந்ததும், வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்பு அன்று இன்மையினால் மட்டக்களப்புசிவானந்தா கல்லூரியில் இணைந்து அங்குள்ள விடுதியில் சேர்ந்து இரண்டு வருடங்கள் கல்வி கற்றார் சண்முகதாஸ். அது அவருக்கு இன்னுமோர் அனுபவமாயிற்று.

இராமகிருஷ்ண மிசன் வளர்ப்பு அவரை மேலும் பதப்படுத்தியது. வளப்படுத்தியது. அங்கிருந்து பல்கலைக்கழகம் தெரிவாகிப்பேராதனைப் பல்கலைக்கழகம் சென்றார். அங்கு அவர்தன் கூரிய அறிவாலும் நல்ல குணங்களாலும், பேராசிரியர் கணபதிப்பிள்ளை, வித்தியானந்தன், கைலாசபதி, செல்வநாயகம் ஆகியோரின் மிக விருப்புக்குரிய மாணவரும் ஆனார். 1961 இல் அவர் பேராதனைப் பல்கலைத் தமிழ்ச்சங்கத் தலைவராயிருந்தார். அப்போது அவர் மாணவர்.

அவர் தலைமையில் பட்டப்பகலில் பாவலர்க்குத்தோன்றுவது எனும் கவி அரங்கு நடைபெற்றது. அக்கவி அரங்கப்போட்டியில் முதற்பரிசு பெற்ற என் கவிதையை நான் அரங்கேற்றினேன். மூன்றாவது பரிசு பெற்ற அவரது கவிதையை மனோன்மணி முருகேசு அரங்கேற்றினார். இவரே பின்னர் மனோன்மணி சண்முகதாஸ்  ஆனார். அது ஓர் காதல் காவியக் கதை. பேராசிரியர் வித்தியானந்தன் 1960 களில் கூத்து மீளுருவாக்க இயக்கம் ஆரம்பித்தபோது, அதன் உள் விசைகளில் சண்முகதாஸும் ஒருவரானார்.  1960 களில் பேரா.வித்தியானந்தன் தயாரிப்பில் கர்ணன் போரில் அவர் கிருஸ்ணனாக வர, நான் கர்ணனாக வந்து இருவரும் பலமேடைகளில் ஆடிப் பாடியமை ஞாபகம் வருகிறது.

சிறீதரன் தாமோதரன் நந்தகோபன் ஜெய வாசுதேவன் நல்ல
ஜெயசக்கர பூபரன் பரந்தாமன் வாமனன் திரிலோக சிந்தாமணி
பூதவன் புங்கவன் புகழ் கருட வாகனன் பூதனை முடித்த நாதன்
பூலோக நாயகன் வைகுண்ட வாசவன் புங்கவன் படி அளந்தோன்
மாதவன் மாமாயன் அச்சுதன் கண்ணனாய் மாகடலிலே தூயின்றோன்

எண்பது அகவையில் பேராசிரியர் சண்முகதாஸ்! நினைவழியா நாட்களில் நீடித்து வாழும் கலை, இலக்கிய சகா!

எனக் கண்ணனின் பெயர்களையும் செயல்களையும் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி, ஈசன் எனவே ஶ்ரீ கிருஸ்ண ராஜபதி இனிமையாய்க் கொலு வந்தாரேஎன விருத்தத்தினை மெல்லிய புல்லாங்குழல் பின்னணியில் இழுத்து உச்ச ஸ்தாயியில் பாடுவார். அவரின் இந்தக் கண்ண வருகையின் போது பாடல் கேட்ட மக்கள் சிலர் கைகூப்பி வணங்கியமையும் ஞாபகம் வருகிறது

1963 நொண்டி நாடகத்தில் அவர் பிரதான பாடகர். பாடல் அவரது பலம். ஆடல் எனது பலம். இவை இரண்டும் இணைந்தன இராவணேசனில் 1964 இல்.இராவணனாக நான், அவரின் கணீர் என்ற குரலின் பின்னணியில் இராமனுக்கு எதிராக ஒன்றன் பின் ஒன்றாகப் படைகளை அனுப்புவேன்.

“எட்டினோடிரண்டினாய திசை வென்று தந்த தம்பி
பட்ட அச் செய்தி கேட்டுப் பதைத்தனன் இராவணேசன்”

என அவர் தனது உச்சக் குரலில் விருத்தம் ஆரம்பிப்பார். எனக்கு அவர் தொனி உடலில் உருவேற்றும். அவர் ஒவ்வொரு சொல்லாக அழுத்தி அழுத்திஉணர்ச்சி பாவத்தோடு விருத்தம் சொல்ல, அதற்கு நான் அபிநயித்து ஆட ஆஹா மறக்கமுடியாத மேடை அனுபவம் அது. அதுவோர் அற்புதமானகாலம் அந்தப் பாடல் ஆடல் இணைப்பு ஞாபகம் வருகிறது. அக்காட்சியை அனைவரும் ரசிப்பர். அதன் முதல் ரசிகையும் பாராட்டுநரும் பேரா.வித்தியானந்தனின் மனைவி கமலா அக்கா.

பேராசிரியர் வித்தியானந்தன் ஆலோசனையுடனும் பணிப்பின் பேரிலும் நான் இராவணேசன் நாடகத்தை 1964 இல் எழுதியதை அருகில் இருந்துஅவதானித்தவர் ஆலோசனைகள் சொன்னவர் சண்முகதாஸ். நான் அதனை உருவாக்க எத்தனை சிரமப்பட்டேன் என்பதனை அவரே அறிவார்.

இராவணேசன் உருவான அந்தக் காலங்கள் (1963 1964) ஞாபகம் வருகின்றன. தமிழ் சிறப்புப் பாட நெறியில் முதல் வகுப்பில் சித்தி பெற்ற சண்முகதாஸ்,1965 இல் பல்கலைக்கழகத்தில் எனது விரிவுரையாளரும் ஆனார். நானும் அவர் மனைவியார் மனோன்மணியும் அவரிடம் அன்று புதுமைப்பித்தன் கதைகளும் தண்டியலங்காரமும் பயின்றோம். மிக சிறந்ததோர் விரிவுரையாளர். அவர், பலமணிநேரம் நூல் நிலையத்தில் உழைத்து அழகாகவும்ஆழமாகவும் விரிவுரைகள் தயாரித்து வந்து உரையாற்றுவார். இது அன்றைய விரிவுரையாளர்களின் இயல்பு.

அவரின் பலம் அவரது கணீரென்ற குரல்.அந்தக் கணீர்க் குரல், விரிவுரைகள் ஞாபகம் வருகின்றன. அக்காலத்தில் அவருடன் இணைந்து கண்டி,கம்பளை, தெல்தெனியா ஆகிய இடங்களில் பாரதிவிழா, வாணிவிழா ஆகியவற்றிற்குச் சென்று பேசியமை ஞாபகம் வருகிறது. இவற்றை ஒழுங்கு செய்து எம்மை அனுப்பியவர் பேரா. வித்தியானந்தன். சில வேளைகளில் அவரும் பங்கு கொள்வார். சண்முகதாஸ் உரை, பாட்டுமுரையும் கலந்ததாக இருக்கும். மிகக் கவர்ச்சிகரமானதாகவும்இருக்கும்.

சண்முகதஸுக்கு நாலாயிரத் திவ்விய பிரபந்தம் மீது பெரும் காதல். ஆழ்வார் பாடல்களை முக்கியமாக, பெரியாழ்வார் திருமழிசை ஆழ்வார், ஆண்டாள் பாடல்களை மேற்கோள் காட்டி அவர் மலைநாட்டில் கோவில்களில் நிகழ்த்திய உரைகள் ஞாபகம் வருகின்றன.

நானும் அவரது மனைவி மனோன்மணியும் பேராதனைப் பலகலைக்கழகத்தில் ஒரு வகுப்பு மாணாக்கர். மனோன்மணியும் சண்முகதாஸும் காதலர்களானார்கள். நானும் அவரது மனைவி மனோன்மணியும் பேராதனைப் பலகலைக்கழகத்தில் ஒரு வகுப்பு மாணாக்கர். மனோன்மணியும் சண்முகதாஸும் காதலர்களானார்கள். மாணவப் பருவக்காதல் குரு சிஸ்யை ஆன பின்னும் நீடித்தது. 1965 இல் அவர்களது திருமணத்தை நாம் அனைவரும் இணைந்து கண்டி கட்டுக்கலைப்பிள்ளையார் கோவிலில் நடத்தியும் வைத்தோம். அதற்காக வாழைமரம் வெட்டிச் சுமந்ததும் , மணமக்களை காலம் சென்ற கல்விப்பணிப்பாளர் சமீமின் காரில் ஏற்றிக்கொண்டு கட்டுக்கலைப் பிள்ளையார் கோவில் சென்றதும் ஞாபகம் வருகிறது.

தற்காலிக விரிவுரையாளராக இருந்த அவரை வட்டுக்கோட்டை கல்லூரி நிரந்தர விரிவுரையாளராக ஏற்றுகொண்டது. வட்டுக்கோட்டை கல்லூரியில் கற்பித்த அவரை, மீண்டும் பேராதனைப் பல்கலைக்கழகம் நிரந்தர விரிவுரையாளராக ஏற்றுக்கொண்டது. அங்கிருந்து 1967 இல் உயர் கல்வி பெற லண்டன் பயணமானார். பயணமாகுமுன் தனது ஆய்வுக்கான தகவல்கள் சேகரிக்க மட்டக்களப்புக்கு களப்பணிக்காக வந்தார்.

அவரை நான் பலகிராமங்களுக்கும் அழைத்துச்சென்றேன். அக்கள ஆய்வு பெரியதோர் அனுபவம். மிகச் சுவராஸ்யமான அனுபவங்களை அங்கு நாங்கள் பெற்றோம். மட்டக்களப்புக்கு வந்தால் எங்கள் வீட்டுக்கு வந்து எனது அம்மாவின் சுவையான உணவு உண்ணாது செல்ல மாட்டார். சண்முகதாஸின் சுவையுணர்வை என் அம்மா நன்கு அறிந்து வைத்திருந்தார். என் தந்தையாருடன் அவர் அளவளாவுவது, சண்முகதாஸ்வருகிறார் என என் அம்மா தனியாக சமைப்பது எல்லாம் ஞாபகம் வருகின்றன.

1974 களில் பேராசிரியர் கைலாசபதியின் அழைப்பினை ஏற்று சண்முகதாஸ் பேராதனைப் பல்கலைக் கழகம் விட்டு, யாழ். பல்கலைக்கழகம் வருகிறார். தமிழ்த் துறைத் தலைவரும் ஆக்கப்படுகின்றார். கைலாசபதியுடன் இணைந்து யாழ். பல்கலைக்கழக கலைப் பீடத்தை வளர்க்க அவர் ஆற்றிய பணி இன்னொரு கதை. சண்முகதாஸுடன் யாழ்ப்பாணத்தில்பணியாற்று வாய்ப்பு எனக்கு 1978 இல் கிடைக்கிறது.

1978 இல் யாழ்ப்பாணத்தில் அவர் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தபோது நான் அங்கு தயாரித்த போர்க்களம் நாடகத்தில் என் வேண்டுகோளை ஏற்றுவேடமிட்டுமேடையேறி நடித்தார். அவரின் பாடல் அன்று யாழ் பல்கலைக்கழகத் திறந்த வெளியில் கணீரென ஒலித்தமை ஞாபகம் வருகிறது.

1978 இலிருந்து 1991 வரையான யாழ்ப்பாண வாழ்வில் அவருடனும் அவர் குடும்பத்துடனும் நெருக்கமாக நன்கு பழகும் வாய்ப்பு மீண்டும் கிடைக்கிறது. அங்கு நாம் செய்த வேலைகள் தனியாக எழுதப்பட வேண்டியவை கருத்தரங்குகள். இலக்கியக் கூட்டங்கள், ஊர்க்கூட்டங்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள், நாடகங்கள் என அவை விரியும். அப்போதுதான் முதன் முதலாக ஈழத்து இசை இடம்பெற்ற இசைத்தட்டு தயாரிக்கப்பட்டது.

சூலதேவர்கள் தொழுது போற்றவே என்ற மாரி அம்மன் பாடலையும்
சித்திரமுடியது நெற்றியில் ஒளி செய என்ற இராவணேசன் பாடலையும்

இருவரும் இணைந்து பாடினோம். அதனை தயாரித்தவர் இலங்கை வானொலி இசைத் தயாரிப்பாளர் நவராஜகுலம் முத்துக்குமாரசாமி அவருக்கு ஆலோசனைகள் வழங்கி உதவியும் புரிந்தார்கள் பேராசிரியர்களான வித்தியானந்தனும் சிவத்தம்பியும். சண்முகதாஸுக்கும் எனக்கும் கருத்தியலில் அதிக வித்தியாசம்இருந்தது. எனினும் அன்பும் கலையும் எங்களை மிக நெருக்கமாக வைத்திருந்தன. 1986 இல் மீண்டும் இராவணேசனை மேடையேற்ற ஊக்கம் தந்து, தான் அதில் பின்னணி பாடுகிறேன் எனக் கூறி அதனை இன்னும் புதிதாக எழுத வைத்தசண்முகதாஸ், அதனை மீண்டும் தயாரிக்க முனைந்தபோது அப்பிரதியினை தட்டச்சு செய்து கையில் எடுத்துக்கொண்டு வந்த அந்தக் காலங்கள்ஞாபகம் வருகின்றன. 1991 இல் நான் கிழக்குப் பல்கலைக் கழகம் வந்து விடுகிறேன்.

கிழக்குப் பல்கலைக் கழகத்தால் தயாரிக்கப்பட்ட இராவணேசனை 2005 ஆம் ஆண்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் நாம் மேடையேற்றியபோது அருமையானதோர் அறிமுக உரையினை அதற்கு வழங்கிப் பழைய இராவணேசன் காலங்களை நினைவு கூர்ந்தார். மிக அருமையான அந்த நினைவுகூரல் ஞாபகம் வருகிறது. சில காலங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் ஒரு கூட்டத்தில் ஓர் இளைஞர் தாம் அறிந்த பிழையான தகவல்களின் அடிப்படையில் உணர்ச்சியுடன், “இராவணேசனை மௌனகுரு எழுதவில்லை. வித்தியானந்தனே எழுதினார்” என பொங்கி எழுந்து உரையாற்றிய போது, அவரது உரையை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த சண்முகதாஸ், ஆறுதலாக எழுந்து “அதனைமௌனகுருவே எழுதினார். மௌனகுரு அதனை எழுதுகையில் நான் அருகில் இருந்தேன்” என ஒரு துளித் தண்ணீர் விட்டு அப்பையனின் பொங்குதலைதணித்தாராம் எனவும் கேள்விப்பட்டேன்.

சண்முகதாஸுடனான அனுபவங்கள் எனக்கு மிக மிக அதிகம். ஆராய்வுக்காக அவருடன் மட்டக்களப்பின் கிராமங்கள் தோறும் அலைந்தமை,பேராதனைப் பல்கலைக்கழகக் காலத்தில் நாடகங்கள் போட அவருடன் நாடு பூராவும் திரிந்தமை, அவரின் வழிகாட்டலில் எனது பி.எச்.டி ஆய்வினைமேற்கொண்டமை, இவ்வாறு எத்தனை எத்தனை அனுபவங்கள்.

அவரின் நாடக வாழ்வு பற்றியும் கலை வாழ்வு, சமூக வாழ்வு பற்றியும் எழுத என்னிடம்நிறையத் தகவல்கள் உண்டு. அது அவரது இன்னுமோர் பக்கத்தைக் காட்டும். அவரின் எண்பதாவது ஆண்டினை நினைவு கூர்ந்து அன்பர்கள் விழா எடுக்கஇருப்பதாக அறிந்தேன். அவருக்கு விழா எடுத்துஅவரை கௌரவிக்கவிருக்கும் குழுவினருக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

பேராசிரியர் சண்முகதாஸ் நீடூழி வாழவேண்டும்.