எதிர்வினை: என்னைக் கவர்ந்த கவிதை வரிகள்

சிலோன்' விஜயேந்திரன் [ பதிவுகளில் வ.ந.கிரிதரனின் பக்கத்தில்  ‘சிலோன் விஜயேந்திரன்’ பற்றி வெளியான குறிப்பு பற்றிய குரு அரவிந்தனின் எதிர்வினை இது. இங்கு ‘சிலோன்’ விஜயேந்திரன் பற்றிய மேலதிகத்தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றார். அவருக்கு நன்றி. – பதிவுகள்-]

”பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும்
பைந்தமிழில் அழுமோசை கேட்கவேண்டும்.
ஓடையிலே என்சாம்பர் கரையும் போதும்
ஒண்தமிழே சலசலத்து ஓயவேண்டும்.” –
கவிஞர் ராஜபாரதியின் கவிதை வரிகள் –

கல்லூரி நாட்களிலே இராஜேஸ்வரன் மனப்பாடம் செய்து வைத்திருந்த கவிதைகளில் இதுவும் ஒன்று. கல்லடி வேலுப்பிள்ளையின் பேரன் என்பதால் இவரிடம் இயற்கையாகவே விகடம் குடியிருந்தது. இலக்கிய ஆர்வத்தால் தனது கல்வியைத் தொலைத்தவர். தனது சகோதரியின்  அகால மரணத்தைத் தொடர்ந்து மகிழ்ச்சியைத் தொலைத்திருந்தார். சகோதரியின் பெயரான விஜயா என்பதையும், அவரது நெருங்கிய நண்பனான மகேந்திரன் என்பவரின் பெயரையும் இணைத்து  விஜயேந்திரன்  என்ற புனைப் பெயரை சூடிக் கொண்டார். படிக்கும் காலத்திலேயே துவிச்சக்கர வண்டியில் யாழ்ப்பாணம் சென்று படம் பார்த்து விட்டு வருவார். பேச்சு வன்மை மிக்கவரான இவர் பைலட் பிரேமநாத் போன்ற படங்களில் நடித்திருக்கின்றார். தமிழ்நாட்டிற்குப் புலம் பெயர்ந்ததால் சிலோன்  விஜயேந்திரன் என அழைக்கப்பட்டார். நடேஸ்வராக் கல்லூரி தமிழ் மன்றத்தில் இலக்கிய ஆர்வம் உள்ள சிலர் ஒன்றாக இணைந்து கையெழுத்துப் பிரதி நடத்தினோம்.உயர் வகுப்பில் இருந்த இவரே இதற்குப் பொறுப்பாகவும் இருந்தார். மாவை ஆனந்தனும் இவரும் இணைந்து தமிழ் இலக்கிய வட்டம் ஒன்றை நடத்தினார்கள். ஆண்டு விழாவிற்காகச் சிறுகதை, கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடத்தினார்கள். என்னிடம் வீடு தேடி வந்து சிறுகதை ஒன்றைப் போட்டிக்காகப் பெற்றுச் சென்றார்கள். முதற்பரிசு அந்தக் கதைக்குக் கிடைத்ததால் அதற்குப் பரிசாகப் பாரதி பாடலும், பாரதிதாசன் பாடலும் அடங்கிய புத்தகங்களைப் பரிசளிப்பு விழாவில்  பரிசாகத் தந்தார்கள். அதுவே நான் இலக்கியத்திற்காகப் பெற்ற முதற் பரிசாகும் என்பதால் இன்றும் நினைவில் வைத்திருக்கின்றேன்.  தீவிபத்து ஒன்றில் அவர் இறந்ததாகக் கேள்விப்பட்டேன். நல்லதொரு கவிஞரை இழந்துவிட்டோம்.

kuruaravinthan@hotmail.com