எம் . ஜெயராமசர்மா (மெல்பேண், அவுஸ்திரேலியா ) கவிதைகள்!

- எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா        -

1. வசந்தமாய் மாறும் !

ஆண்டவன் படைப்பிலே அனைத்துமே அற்புதம்
ஆயினும் மனிதனோ அனைத்திலும் அதிசயம்
வேண்டிய அனைத்தையும் விரைவினில் பெற்றிடும்
வித்தைகள் அவனிடம் சொத்தென இருக்குதே !

மனிதனைப் படைப்பினில் உயர்வெனக் கருதிட
மனிதனின் செயல்களே காரணம் ஆயின
புனிதனாய் மனிதனும் புவிதனில் இருக்கையில்
மனிதனின் மாண்புகள் மாட்சிமை ஆகிடும் !

தானமும் செய்தான் தவமும் செய்தான்
ஈனமாம் காரியம் எண்ணிலாச் செய்தான்
யானது என்னும் ஆணவக் குப்பை
போனது போலத் தெரியவே இல்லை !

குப்பைகள் குவிந்திடின் குணமெலாம் சிதறும்
தப்பிதமாகவே செயல் எலாம் அமையும்
எப்பவும் மனநிலை இறுகியே இருக்கும்
எதை நினைத்தாலும் பதட்டமே பெருகும் !

விருப்புகள் வெறுப்புகள் நிறையவே இருக்கும்
வேதனை சோதனை நாளுமே குவியும்
மனமதில் குப்பையாய் இவற்றினைச் சேர்த்தால்
வாழ்கின்ற வாழ்வு வதங்கியே போகும் !

வீட்டிலே குப்பைகளைச் சேர்த்துமே வைத்தால்
வேண்டாத விளைவுகள் வந்துமே சேரும்
நாற்றமது எடுக்கின்ற நரமதாய் ஆகி
நம்மகிழ்ச்சி ஆரோக்கியம் நாசமாய் போகும் !

குப்பைகளைச் சேரவிடல் எப்பவுமே தப்பு
குப்பைகளை குழிதோண்டி புதைத்துவிடல் வேண்டும்
தப்பான எண்ணமதை எப்பவுமே நாளும்
தலைமீது வைப்பதனை  நிறுத்திடுதல் நன்றே !

மனமதிலே குப்பையாய் குவிந்துவிடும் அனைத்தும்
மனமதனை மாய்த்துவிட வழிவகுக்கும் அன்றோ
தினமே குப்பைகளை சேராது காத்தால்
மனமென்னும் மாளிகை வசந்தமாய் மாறும் !

2. முறையாமோ !

தோல்கொடுத்துப் பால்கொடுத்து தோள்கொடுக்கும் விலங்குகளை
வாழ்வெல்லாம் மனிதவினம் வசைபாடல் முறையாமோ
விலங்குகளோ தம்பாட்டில் இருக்கின்ற வேளைதனில்
வேணுமென்று மனிதன்சென்று வீண்தொல்லை கொடுப்பதேனோ !

பசுவந்து தன்பாலை கறவென்று சொன்னதில்லை
மான்வந்து தனைக்கொன்று தின்னென்று சொன்னதில்லை
ஆனைவந்து மனிதனிடம் அடிமையாக்கச் சொன்னதுண்டா
ஆனாலும் மனிதன்சென்று அத்தனையும் செய்கின்றான் !

காட்டிலே வாழ்ந்துவிட்டு நாட்டுக்கு வந்தபின்பும்
காட்டையே அழிப்பதற்குக் காரணந்தான் தெரியவில்லை
காட்டிலே இருக்கின்ற விலங்குகளை அழித்தொழிக்க
நாட்டிலே இருப்பார்க்கு யார்கொடுத்தார் அதிகாரம் !

அரசியலும் தெரியாது ஆட்சியிலும் ஆசையில்லை
அலைபாயும் மனங்கூட அவற்றுக்குக் கிடையாது
நிலபுலனும் சேர்க்காது நிம்மதியும் இழக்காது
வனமதிலே தன்பாட்டில் வசிக்கிறது விலங்கினமோ !

சிங்கத்தைப் பிடிக்கின்றான் சிறுத்தையையும் பிடிக்கின்றான்
வெங்கரிகள் தனைநாளும் விரட்டியே பிடிக்கின்றான்
காட்டிலே இருப்பவற்றை நாட்டுக்கே கொண்டுவந்து
காட்சிப் பொருளாக்கிக் காசெடுத்து நிற்கின்றான் !

வேட்டையெனும் பெயராலே காட்டையே கலக்குகிறீர்
விலங்குகளைக் கொன்றுவிட்டு வீறாப்பும் பேசுகிறீர்
காட்டிலுள்ள விலங்குகளை வேட்டையாடும் மனிதர்களே
நாட்டிலுள்ள விலங்குகளை வேட்டையாட யார்வருவீரா !

மிருகவதை கூடாது எனச்சொல்லும் சட்டமெலாம்
வேட்டையாடும் வெறியர்களை விட்டுவைத்தல் எப்படியோ
காட்டைவிட்டு வந்தபின்பும் காருண்யம் தொலைத்துவிடின்
நாட்டிலே வாழுவதில் நம்வாழ்வு உயிர்ப்பெறுமா !

குரங்கென்றும் கழுதையென்றும் கரடியென்றும் திட்டுகிறோம்
நாயென்றும் மாடென்றும் நரியென்றும் நகைக்கின்றோம்
மிருகமாய் இருந்தாலும் இவைதிட்டை நினைப்பதுண்டா
மனிதராய் இருக்கும்நாம் திட்டுவது முறையாமோ !

3. மழலை மொழி !

குழலினிது யாழினிது என்பர்  ஆனால்
குழந்தைகள் மொழியோ அதனினும் இனிது
மழலைகள் நிறைந்திடும் போது அங்கு
மகிழ்வெனும் ஊற்று பொங்கியே நிற்கும் !

கோடிகள்கொட்டி திருமணம் செய்வர் ஆனால்
குழந்தைகள் இன்றில் கொடுமையோ கொடுமை
கூழது குடித்துமே வாழ்வார் வீட்டில்
குதூகலம் கொடுத்திட மழலைகள் குவிவார் !

ஓடிநாம் களைத்துமே வந்தால் அங்கு
ஓடியே வந்துமே மடிதனில் அமர்ந்து
நாவினால் மழலைகள் உதிர்ப்பார் அது
நாளுமே நமக்கின்பம் நல்கியே நிற்கும் !

கோபங்கள் வந்திடும் வேளை வீட்டில்
குழந்தைகள் அங்கு வந்துமே நின்றால்
கோபங்கள் ஓடியே போகும் அவர்
குறும்புகள் மழலைகள் கொடுக்குமே இன்பம் !

வறுமையிலே கிடந்தாலும் வாடிநாம் நின்றாலும்
தலைதடவும் பிஞ்சுவிரல் தளர்வெல்லாம் போக்கிவிடும்
புவியினிலே வாழ்கின்றார் பொலிவுடனே வாழுதற்கு
அவர்வீட்டில் மழலைமொழி அருந்துணையாய் அமையுமன்றோ !

4. உதவிடுமா !

பிறந்திடும் போது இறப்பினைப் பற்றி
நினைந்திடும் மனிதர் உலகினி லுண்டா
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையினில் தானே
பெரும் போராட்டம் நடக்குது இங்கே
சொத்துக்கள் சேர்ப்பதும் சொகுசெலாம் காண்பதும்
நித்தியம் என்று நினைக்கிறார் மனிதர்
எத்தனை இடர்கள் வருமென நினையா
இருப்பதைப் பெருக்க நினைக்கிறார் நாளும் !

வாழும்வரை வாழுங்கள் வகைவகையாய் சுவையுங்கள்
நாளைபற்றி நினைக்காமல் நன்றாக மகிழுங்கள்
ஊணுறக்கம் தனைமறந்து உழையுங்கள் உழையுங்கள்
உங்களுக்குப் பின்னாலே உங்கள்சொத்து யாருக்கு
உயிருடம்பில் இருக்கும்வரை உங்கள்சொத்து உங்களுக்கே
உயிர்பிருந்து போனபின்னால் உங்கள்சொத்து என்னவாகும்
பிள்ளைகளும் பேரர்களும் பிய்த்தெடுத்து நிற்பார்கள்
அவர்களுக்குள் போராட்டம் ஆரம்பம் ஆகிவிடும் !

மனைவி பிரிந்துவிட்டால் வாழ்க்கையே கசந்துவிடும்
மகிழ்ச்சி அமைதியெல்லாம் மங்கியே இருந்துவிடும்
சேர்த்துவைத்த சொத்தெல்லாம் பார்த்துநிற்கும் ஓரக்கண்ணால்
சிந்தனையோ எமைவிட்டு சிதறியே சென்றுநிற்கும்
ஆறுதலைக் கூறிநிற்க வந்திடுவர் சிலமக்கள்
ஆஸ்த்திதனை மனமெண்ணி வந்தணைவார் சிலமக்கள்
தேறுதலும் ஆறுதலும் உயிருள்ள உடம்பினுக்கே
உயிர்பிரிந்து போனபின்னர் உங்கள்சொத்து யாருக்கோ !

இல்லறத்தில் இருந்திடுங்கள் இன்பமாய் வாழ்ந்திடுங்கள்
பிள்ளைச்செல்வம் பெற்றிடுங்கள் பேணி வளர்த்திடுங்கள்
நல்லகல்வி கொடுத்திடுங்கள் நற்றுணையாய் இருந்திடுங்கள்
நாளுமவர் உயர்ச்சிக்காய் நாழுமே உழையுங்கள்
ஆளாக்கி விட்டபின்னர் அன்புடனே இருந்திடுங்கள்
அவர்களுக்கு வேண்டியதை ஆசையுடன் கொடுத்திடுங்கள்
அவர்கள்தான் கதியென்று அடிமனதில் பதியாது
அன்றாடம் வாழ்வுதனை அகமகிழ வாழுங்கள் !

எதிர்பார்ப்பு எப்பவுமே ஏமாற்றம் தந்துவிடும்
இருக்கின்ற வாழ்வுதனை பொறுப்புடனே வாழுங்கள்
கிடைக்கின்ற வாய்ப்புகளை முடக்கிவிட நினைக்காதீர்
மடைத்தனமாய் மகிழ்ச்சியினை மழுங்கடிக்க முயலாதீர்
கொடுத்துநிற்கத் தயங்காதீர் குதூகலத்தைத் தொலையாதீர்
எடுத்துவைத்துச் சேமித்து இல்லையென வாழாதீர்
பிடித்தமுடன் வாழுங்கள் பேராசை விட்டிடுங்கள்
அடுத்தவர்கள் வியந்துநிற்க ஆனந்தமாய் வாழுங்கள் !

இருக்கும் வரையினிலே இன்பமாய் வாழுங்கள்
கொடுக்கும் பொருளையெல்லாம் கொடுத்துமே மகிழுங்கள்
சேர்த்துவைக்கும் எண்ணமதைச் சிந்தனையில் கொள்ளாதீர்
ஆர்க்குமே பாராமாய் இருந்துவிட நினையாதீர்
வாழுகின்ற வாழ்நாளில் வண்ணமுற வாழுங்கள்
செய்கின்ற அத்தனையும் சீராகச் செய்யுங்கள்
உங்கள்வாழ்வு உங்களிடம் என்பதையே உணருங்கள்
உயிர்பிரிந்தால் வாழ்வெமக்கு உதவிடுமா சிந்தியுங்கள் !

jeyaramiyer@yahoo.com.au