எம் . ஜெயராமசர்மா ( மெல்பேண் … அவுஸ்திரேலியா ) கவிதைகள்!

- எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா        -1. காலமெலாம் வாழுகிறாய்

* கவிஞர் கண்ணதாசன் நினைவுக் கவிதை.

எங்கள்கவி கண்ணதாச
என்றும்நீ வாழுகிறாய்
தங்கநிகர் கவிதந்த
தமிழ்க்கவியே நீதானே

தங்கிநிற்கும் வகையினிலே
தரமிக்க கவிதைதந்து
எங்களுக்கு அளித்தவுன்னை
எம்மிதயம் மறந்திடுமா

பொங்கிவரும் கடலலைபோல்
புதுப்புதிதாய் பாட்டெழுதி
எங்கும்புகழ் பரப்பியதை
எம்மிதயம் நினைக்கிறதே

தங்கத் தமிழ்மகனே
தரமான தமிழ்ப்புலவா
எங்குநீ சென்றாலும்
எல்லோரும் உனைமறவோம் !

கவிச்சிங்கம் உனக்காக
பலசங்கம் எழுந்துளது
கவிபாடி கவிபாடி
கவிஞரெலாம் போற்றுகிறார்

புவிமுழுதும் உன்புகழோ
பொலிந்தெங்கும் இருக்கிறது
கவியரசே கண்ணதாச
காலமெலாம் வாழுகிறாய் !

நீபாடாப் பொருளில்லை
நீயெடுக்கா உவமையில்லை
தாய்த்தமிழே உன்னிடத்தில்
சரண்புகுந்து இருந்திடுச்சே !

களைப்பெமக்கு வந்தாலும்
கவலையெமைச் சூழ்ந்தாலும்
கண்ணதாசா உன்பாட்டே
கைகொடுத்து நின்றதையா !

வைத்தியர் முதற்கொண்டு
நோயாளி யாவருக்கும்
வரமாக உன்பாட்டே
வாய்த்ததை நாம்மறக்கமாட்டோம் !

அர்த்தமுள்ள கருத்துகளை
அள்ளித்தந்த பெருங்கவியே
ஆண்டாண்டாய் உன்புகழை
அனவருமே போற்றிடுவோம் !

 

2. நாட்டுக்குத் தேவை !

- எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா        -ஒன்றுபட்டால்  உண்டுவாழ்வு
ஒற்றுமை அகன்றிடின்
அனைவர்க்கும் தாழ்வு
என்றிடும் வாக்கினை
மனத்தினில் இருத்தி
இணைந்திட நினைப்போம்
ஏற்படும் உயர்வே !

கூட்டுறவென்பது நாட்டுயர்வாகும்
கூடிடும்போது கூடிடும்வலிமை
நாடுகள் பிரிந்தால்
நன்மைகள் உடையும்
கேடெலாம் சூழ்ந்து
நாடெலாம் குலையும்
குலைவினைத் தடுத்திட
கூட்டுறவதனை தலையெனக்கொண்டு
நிலைபெறச் செய்வோம் !

ஒருமித்து நின்றால்
உன்னதம் விளையும்
உடைந்துமே போனால்
உயர்வெலாம் சரியும்
கூடிடும் பொழுதில்
குறையெலாம் அகலும்
கூட்டுற வென்பது
நாட்டுக்குத் தேவை !

பொதுநலனை வளர்ப்பதற்கு
புறப்பட்டு வந்த
புத்தூக்கம் கூட்டுறவு
புதுப்பாதை அன்றோ
அதைவளர்க்க பலபேரும்
ஆண்டாண்டு காலம்
அயராது உழைத்ததனை
அகம்நிறைத்து வைப்போம் !

தனிமனித கூட்டுறவு
சமுதாய கூட்டுறவு
பொருள்விரியக் கூட்டுறவு
போரகற்றக் கூட்டுறவு
கூட்டுறவு எனும்கருத்து
மொட்டாக இல்லாமல்
மலர்ந்விடும் வேளைதனில்
மாவிளைவைத் தந்துநிற்கும் !

பலசபைகள் அமைக்கின்றார்
பலசட்டம் தீட்டுகிறார்
உலகசமாதனம் என்று
உரத்தெல்லாம் உரைக்கின்றார்
கலவரமோ நாடெல்லாம்
கனத்ததீயாய் எழுகிறது
கூட்டுறவை வளர்த்திருந்தால்
குழப்பங்கள் வந்திராதே !

ஆதிக்கம் ஆதிகாராம்
ஆணவத்தால் உலகமெலாம்
அழிவான பாதைசென்று
ஆக்கமெலாம் இழக்கிறது
கூட்டுறவு எனும்கருத்தை
நாடெல்லாம் கடைப்பிடித்தால்
ஆட்டிநிற்கும் ஆணவங்கள்
அடியற்றுப் போகுமன்றோ !

3. அப்பாவும் மகளும் !

ஈன்றெடுத்த அம்மாவை என்னாளும் நான்மறவேன்
என்றாலும் அப்பாதான் என்னருகில் நிற்கின்றார்
என்தோழன் என்பாடம் என்னுணர்வும் அப்பாதான்
நான்பசித்து உண்ணும்வரை தானுண்ண வரமாட்டார்
நான்விழிக்கும் போதெல்லாம் என்னருகில் அவரிருப்பார்
நான்தூங்கி விட்டதன்பின் தான்தூங்க அவர்செல்வார்
என்கண்ணுள் ஒளியாக இருக்கின்ற அப்பாவை
இவ்வுலகில் தெய்வமாய் ஏற்றிநான் போற்றுகின்றேன் !

அம்மாவின் அரவணைப்பு அனைவருக்கும் அவசியமே
ஆனாலும் அப்பாதான் அரணாக அமைகின்றார்
பெண்பிள்ளை அத்தனைக்கும் பெரியதுணை அப்பாதான்
மண்மீது அப்பாதான் மாமலையாய் விளங்குகிறார்
பாலகராய் இருந்தாலும் பருவத்தை அடைந்தாலும்
வேலிபோல நிற்பவர்தான் மேதினியில் அப்பாவே
நாலுபேரைக் காட்டிநின்று நல்லவழி கூட்டிச்சென்று
நமையென்றும் காத்துநிற்பார் நம்முடைய அப்பாதான் !

அண்ணா அழுதபடி அம்மாவை அணைத்திடுவார்
அவ்வேளை நானழுதால் அப்பாதான் தூக்கிநிற்பார்
ஆண்பிள்ளை எல்லோரும் அம்மாவின் அருகணைவார்
இயல்பாக பெண்பிள்ளை அப்பாவை நெருங்கிடுவார்
இந்தவிதி இவ்வுலகில் இறுக்கமாய் இருக்கிறது
எக்கணமும் பெண்பிள்ளை அப்பாவை இணைக்கிறது
சொந்தம்பல இருந்தாலும் தோழ்மீது சாய்வதற்கு
பந்தமுடன் பெண்பிள்ளை அப்பாவை அழைக்கிறது !

பட்டம்பல பெற்றாலும் பதவிகளில் இருந்தாலும்
இட்டமுடன் அப்பாவை இறுகணைத்தே நிற்கின்றார்
கெட்டகுணம் வாராமல் துட்டரெலாம் சேராமால்
கஷ்டப்பட்டு வளர்த்தஅப்பா காலமெலாம் துணையவர்க்கு
கோட்டுவாசல் ஏறாமல் குறையெதுவும்  வாராமல்
நாட்டினிலே நல்லபெயர் மகள்பெறவே வேண்டுமென்று
நாட்டமுடன் செயல்பட்டு நாளும்நிற்பார் அப்பாவே !

மணம்புரிந்து மகள்சென்று மறுவீட்டில் வாழ்ந்தாலும்
உடன்போயி உதவிநிற்பார் உணர்விறை அப்பாவே
மாப்பிள்ளை வெளிசென்றால் மகளுக்குக் காப்பாக
அப்பாதான் அங்கிருந்து அனைத்தையுமே பார்த்துநிற்பார்
குழந்தை பிறந்தாலும் கூடவே அவரிருப்பார்
கொண்டாட்டம் என்றாலும் குறைவராமல் பார்த்திடுவார்
பேரர்களைத் தூக்கிவைத்துப் பெருங்கனவு கண்டுநிற்பார்
ஓர்நாளும் ஓய்வின்றி உழைத்துநிற்பார் மகளுக்காய் !

பிரசவத்தில் மகளழுதால் பித்தாகிப் போயிடுவார்
அவள்சுகமாய் குழந்தைபெற ஆண்டவனை வேண்டிநிற்பார்
மகள்பெற்ற குழந்தையினை மடிமீது தூக்கிவைத்து
தனதுமகள் நினைப்புடனே தான்கொஞ்சி மகிழ்ந்திடுவார்
மகளுக்குத் துணையாக மாமருந்தாய் இருந்திடுவார்
மகள்வேலை எனச்சென்றால் மகளுக்கே துணையாவார்
எப்போதும் மகள்தன்னை எண்ணிநிற்கும் அப்பாவை
இவ்வுலகில் பெண்மக்கள் இருத்திடுவார் உள்ளமதில் !

பாடம் நடத்துவார் பலகதைகள் சொல்லிநிற்பார்
கூடத்திலே இருத்திவைத்து கொடுத்திடுவார் உணவுதனை
ஆடி மகிழ்ந்திடுவார் அணைத்துவைத்துக் கொஞ்சிடுவார்
தோடுபோட்ட காதைத்தொட்டு துள்ளிதுள்ளி மகிழ்ந்திடுவார்
நாடிதனை வருடி   நல்ல    பலகாரமெலாம்
ஊட்டியூட்டி தன்மகளின்  உச்சினை மோந்திடுவார்
அப்பாவும் மகளுமாய் ஆடிநிற்கும் கூத்தையெல்லாம்
அடுக்களையில் நின்றபடி அம்மாவும் ரசித்துநிற்பார் !

அன்புநிறை நண்பனாய் அறிவுநிறை ஆசானாய்
பண்புநிறை பெரியோனாய் பார்வையிலே சேவகனாய்
உண்மையிலே உழைத்துநிற்கும் உயர்வுநிறை உத்தமனாய்
மண்மீது தந்தையினை மகளிடத்துப் பார்த்திடலாம்
இப்புவியில் தந்தைமகள் இணைந்துநிற்கும் எழிலுறவை
எல்லோரும் பார்த்துநிற்பின் இன்புலகைக் கண்டிடலாம்
கைப்பிடித்துக் கருணையொடு காதலித்து நிற்குமவர்
எப்போதும் மகள்களுக்கு  இருந்திடுவார் நற்றுணையாய் !.

4. நெஞ்சமே ஏங்கிறது !

நிலம்பெயர்ந்து போனாலும்
நினைவுமட்டும் மாறவில்லை
மனமுழுக்க ஊர்நினைப்பே
மெளனமாய் உறங்கிறது
தலைநிறைய எண்ணெய்வைத்து
தண்ணீரில் மூழ்கிநின்று
குளங்கலக்கி நின்றதெல்லாம்
மனம்முழுக்க வருகிறது !

பக்கத்து வீட்டினிலே
பந்தல்போட்டுக் கல்யாணம்
படுஜேராய் நடக்கையிலே
பாய்ந்துசென்று அமர்ந்திருந்து
சுட்டுவைத்த பலகாரம்
அத்தனையும் சுவைபார்த்து
சுருட்டிக்கொண்டு ஓடிவரும்
சுகமங்கே கிடைத்ததுவே  !

பழுத்தகுலை வாழைமரம்
இருமருங்கும் சிரித்துநிற்கும்
பழம்மீது எங்கவனம்
விழுந்தபடி அங்கிருக்கும்
வரவேற்கும் சாட்டினிலே
வாழைக்குலை அருகணைந்து
பழம்பறித்துப் பையில்போட்டு
பாய்ந்திடுவோம் மறைவினுக்கு !

அப்பம்சுடும் ஆச்சிவீட்டில்
அதிகாலை நாமிருப்போம்
துப்பரவு செய்வதற்கு
துணிவுடனே முன்வருவோம்
பிய்கின்ற அப்பமெலாம்
ஆச்சிதரத் சம்மதிப்பார்
பேசாமல் வாங்கியுண்டு
பேரின்பம் பெற்றிடுவோம் !

வாத்தியார் அடித்துவிட்டால்
வசைபாட மாட்டோம்நாம்
வாத்தியார் சைக்கிளுக்கு
வைத்திடுவோம் நல்லஆப்பு
வீட்டுக்குத் தெரிந்துவிட்டால்
வெளுத்தெடுத்து விடுவார்கள்
அடிகொடுத்த அப்பாவே
அணைத்ததையும் நினைக்கின்றோம் !

திருவிழா வந்துவிட்டால்
பெருமகிழ்ச்சி வந்துவிடும்
சின்னமேளம் பெரியமேளம்
திருவிழாவைச் சிறப்பிக்கும்
இரவெல்லாம் கோவிலிலே
எத்தனையே கலைநிகழ்ச்சி
எங்களுக்கு சொர்க்கமாய்
இருந்ததைநாம் நினைக்கின்றோம் !

மல்கோவா மாங்காயை
மரமேறிப் பிடிங்கிநின்று
மரத்தடியில் சுவைப்பதிலே
மட்டற்ற சுவையெமக்கு
மரமேறிப் பறிக்கையிலே
மரக்காரன் வந்துவிட்டால்
மாட்டிவிட்டு முழிப்பதனை
மனமிப்போ நினைக்கிறது !

கவலைபற்றிக் கவலையில்லை
காசுபற்றிக் கவலையில்லை
கல்விபற்றிக் கவலையில்லை
கஞ்சத்தனம் எமக்குமில்லை
கிடைக்கின்ற அத்தனையும்
பெருமகிழ்ச்சி எனநினைத்தோம்
நினைக்கின்ற போதுவிப்போ
நெஞ்சமே ஏங்கிறது !

5. அடியோடு புகை ஒழிப்போம் !

வண்டி இழுப்பாரும் வயல்வேலை செய்வாரும்
வாயிலே சுருட்டுவைத்து வகைவகையாய் புகைவிடுவார்
சண்டித்தனம் செய்வாரும் சமையல்வேலை செய்வாரும்
சளைக்காமல் சுருட்டதனை தம்பாட்டில் சுவைத்துநிற்பர் ! 

வங்கிகளைப் பார்த்தாலும் வைத்தியரைப் பார்த்தாலும்
அங்குமே சுருட்டுவகை அமோகமாய் இடம்பிடிக்கும்
தங்கிநிற்போம் எனவெண்ணி தனியாக மரமொதிங்கின்      
அங்கிருந்து பலபேரும் அமர்ந்திருந்து புகைத்துநிற்பர் !      

பாக்கிலும் புகைத்துநிற்பர் பஸ்ராப்பிலும் புகைத்துநிற்பர்      
போக்குவரத்தில் எல்லாம் புகைவிட்டே கொன்றொழிப்பர்     
நீக்கமற புகைப்பதிலே நீள்சுகத்தைக் கண்டதனால்     
பார்க்குமிடம் எல்லாம் பயமின்றிப் புகைத்துநிற்பர் ! 

பேருந்தில் எறியதும் பெரும்சிரிப்பை தந்தபடி
பெரியதொரு பைக்கற்றை பிரித்துமே எடுத்திடுவார்         
வெள்ளையாய் தலைநீட்டும் வெண்சுருட்டை அணைத்தெடுத்து       
விதம்விதமாய் வாயில்வைத்து விட்டிடுவார் புகையனைத்தும் !

ஊதிவிடும் புகையனைத்தும் உட்கார்ந்து இருப்போரின்
மூக்காலே உட்புகுந்து மூச்சுக்குழல் வரைசெல்லும்
உட்புகுந்த புகையாலே உபாதைகொண்டு நிற்போரை
ஓரக்கண்ணால் பார்த்தபடி உறிஞ்சிநிற்பார் புகைவிட்டோர் ! 

பணிமனைக்குச் சென்றாலும் பலபேரும் புகைத்துநிற்பார்      
பணிபார்க்க வருவோர்கள் தலைசுற்றி அங்குநிற்பார்       
துணிவாக எடுத்துரைக்க யாருமே வரமாட்டார்     
துணிவாகப் புகைவிடுவோர் பணிமனையை நிரப்பிடுவார் !    

புகைகக்கும் வண்டியிப்போது போயுமே நாளாச்சு      
புகைவிடுவோர் கூட்டத்தால் வண்டியிப்போ புகையாச்சு       
ஏறிவிடும் கூட்டமதை எவருமே பார்ப்பதில்லை     
தாறுமாறாய்ப் புகைவிட்டு தத்தளிக்கச் செய்துநிற்பார் !   

படித்தவரின் கைகளிலும் பாமரரின் கைகளிலும்
அடுக்கடுக்காய் சுருட்டுவகை அமர்ந்துமே இருக்கிறது
நடிக்கின்றார் கைகளிலும் படம்பிடிக்கின்றார் கைகளிலும்
நாகரிகச் சுருட்டுவகை நளினமுடன் அமர்கிறது !     

காலமாலை பார்க்காமல் கணக்கின்றி புகைபிடிக்கும்
காளையரின் மத்தியிலே கன்னியரும் சேர்ந்துகொண்டார்
நாலுவேளை குடிப்பதற்கு கஞ்சியின்றி இருப்பாரும்
நரகமாம் சுருட்டதனை நாளுமே குடித்துநிற்பார் !  

பாடசாலை செல்வோரும் படிப்பிக்கும் ஆசானும்
பாங்காக சுருட்டையெலாம் பைகளிலே வைக்கின்றார்
கிடைக்கின்ற நேரமெலாம் எடுத்ததனை கையில்வைத்து
துடுக்கெனவே வாயில்வைத்துத் துள்ளுநடை போடுகிறார் !      

மங்கலமாம் நிகழ்ச்சிகளில் வந்திருக்கும் பலபேர்கள்        
வாயிலே சுருட்டைவைத்து வட்டமாய்ப் புகைவிடுவார்        
அங்கிருக்கும் குழந்தைகளை அன்பான தாய்மாரை        
வந்திருக்கும் யாரையுமே மனத்திலவர் கொள்வதில்லை !        

நோயிலே தாய்படுத்து நூறுமுறை இருமிநிற்பார்
பாயிலே தாயோடு பால்குடித்து தூங்கும்பிள்ளை
யாரையுமே பொருட்டெனவே தன்மனதில் நினையாது
வாயிலே சுருட்டோடு வலம்வருவார் அவ்வீட்டார்.  !     

இருமுகின்ற நோயாளி இருதயத்தை சோதிக்கும்        
எங்களது வைத்தியரும் இருமலுடன் சோதிப்பார்        
சோதித்த பின்னாலே துண்டெடுத்து மருந்தெழுதி       
சுவைத்திடுவார் சுருட்டதனை சுருண்டுநிற்பான் நோயாளி !   

நம்வாயில் சுருட்டிருப்பின் நாகரிகம் எனநினைப்பார்
நலன்கெட்டுப் போகையிலே நாகரிகம் என்னசெய்யும்      
நலன்வருமே எனவெண்ணி நாம்செய்யும் வேலையெலாம்      
நாளடைவில் நம்சுகத்தை நசுக்கியே விட்டுவிடும். !    

பலபோதைச் சரக்குகளை பதப்படுத்தி கலந்தெடுத்து     
பற்பல உத்திகொண்டு பாங்காக உட்செலுத்தி     
விதம்விதமாய் சுருட்டையெல்லாம் விளம்பரத்தின் ஊடாக     
விற்கின்றார் சந்தைகளில் விறுவிறுப்பு வெளிப்படவே !    

அதைவாங்கிக் குடிப்பவர்கள் அடிமை நிலைக்காளாகி    
வதைபட்டு வதைபட்டு வாழ்க்கையினை இழக்கின்றார்     
இதையாரும் உணராமல் இன்னுமே வாங்கிவாங்கி     
சிதையிலே போகும்படி சீரழந்தே நிற்கின்றார்   ! 

காலையிலை சுருட்டடித்தால் களைப்பெல்லாம் நீங்குமென்றும்    
வேலையிலே புகைவிட்டால் விறுவிறுப்பாய் இருக்குமென்றும்    
நாளதுமே எண்ணியெண்ணி நன்றாகப் புகைத்துவிடின்    
நாளாக நாளாக நம்முடம்பு படுத்துவிடும் !   

புகைபிடிக்கும் யாவருக்கும் பலநோய்கள் வருமென்று    
பொழுதெல்லாம் பிரசாரம் நடக்குதிப்போ நாடெல்லாம்     
புகைபிடித்தால் கேடென்னும் விளம்பரத்தை ஒட்டுபவர்
புகைபிடித்தே ஒட்டுவதால் போதனையால் என்ன பலன் !

குடியோடு புகையும்சேர்ந்து குடிகளை அழிக்குதென்று      
குடிகளே உணரும்போதே குடியோடு புகையும்போகும்      
துணிவுடன் எழுந்துவாரீர் தூயதைச் சமைப்போம்நாங்கள்       
அணியென ஒன்றுசேர்ந்து அகற்றுவோம் புகைத்தல்தன்னை !  

குடியோடு புகைசேர்ந்து குடியனைத்தும் குலைக்கிறது      
அடியோடு அதையொழித்து ஆனந்தம் பெற்றுநிற்போம்     
படுகுழியில் வீழ்த்துகின்ற பாதைகளைக் களைந்தெறிந்தால்      
விடிவெள்ளி எம்வாழ்வில் விரைவெனவே தோன்றிவிடும் !

jeyaramiyer@yahoo.com.au