எழுத்தாளர் என்.கே.ரகுநாதன் மறைவு!

என்.கே.ரகுநாதன்‘டொராண்டோ’வில் எழுத்தாளர் என்.கே.ரகுநாதன் மறைந்த தகவலினை எழுத்தாளர்கள் கற்சுறா மற்றும் பா.அ.ஜயகரன் ஆகியோர் பகிர்ந்திருந்தனர். இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் காத்திரமாகத் தன்னை நிலைநிறுத்திய எழுத்தாளர் என்.கே.ரகுநாதன்.  என்.கே.ரகுநாதன் என்றதும் முதலில் ஞாபகத்துக்கு வருவது அவரது புகழ்பெற்ற சிறுகதையான ‘நிலவிலே பேசுவோம்’ சிறுகதைதான். இத்தலைப்பிலேயே அவரது சிறுகதைத்தொகுதி 1962இல் தமிழகத்தில் பாரி பதிப்பகத்தின் விற்பனை உரிமையுடன் வெளியாகியுள்ளது. இலங்கையில் பாரதி புத்தகசாலையில் நூல் கிடைக்குமென்ற அறிவிப்புடன் வெளியான தொகுப்பு அது. எப்பதிப்பகம் வெளியிட்டது என்பதில் தெளிவான விபரமில்லை.

இத்தொகுப்பிலிருந்து என்.கே.ரகுநாதனின் ‘நிலவிலே பேசுவோம்’ சிறுகதை பற்றி மேலதிகத் தகவல்களைப்பெற முடிகின்றது.

அக்கதையை என்.கே.ரகுநாதன் மதுவிலக்குப பிரச்சாரம் செய்யும் இயக்கமொன்றின் பத்திரிகைக்கு அனுப்பியபோது நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுதந்திரனுக்கு அனுப்பியபோது 1951ம் ஆண்டில் அங்கு பணி புரிந்துகொண்டிருந்த எழுத்தாளர் அ.ந.கந்தசாமி அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றது. நூலுக்கான அ.ந.க.வின் முன்னுரை மூலம் இதனை அறிய முடிகின்றது.  மேலும் என்.கே.ரகுநாதனின் ‘சில வார்த்தைகள்’  மூலம் அ.ந.க மேற்படி முன்னுரையினை ஆஸ்பத்திரியில் நோய்ப்படுக்கையிலிருந்துகொண்டு எழுதியுள்ளார் என்பதையும் அறிய முடிகின்றது.

என்.கே.ரகுநாதனின் மறைவுக்காக ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதோடு, அவர் நினைவாக ‘நிலவிலே பேசுவோம்’ தொகுப்புக்கு அ.ந.கந்தசாமி எழுதிய முன்னுரையினையும், ‘நூலகம்’ தளத்திலுள்ள ‘நிலவிலே பேசுவோம்’ தொகுப்புக்கான இணைய இணைப்பினையும் ( http://www.noolaham.net/project/03/252/252.pdf )  இங்கு பகிர்ந்துகொள்கின்றோம்.


என்.கே.ரகுநாதனின் ‘நிலவிலே பேசுவோம்’ நூல் முன்னுரை! – அ. ந. கந்தசாமி –

‘நிலவிலே பேசுவோம்”-என்ற அழகிய தலைப்புடன் கூடிய இச்சிறுகதைத் தொகுதியைத் தரும் என். கே. ரகு நாதன், ஈழத்தின் சிறந்த சிறுகதை ஆசிரியர்களில் ஒருவர்.

முதன்முதலில் இவருடைய சிறுகதையொன்றினை நான், 1951ம் ஆண்டில் வாசித்தேன். “சுதந்திரன்” பத்திரிகையில் நான் கடமையாற்றி வந்த காலம் அது. வாரந்தோறும் பிரசுரத்துக்கேற்ற கதைகளை நானே வாசித்துத் தெரிந்தெடுப்பது வழக்கம். இது அவ்வளவு இன்பமான பொழுதுபோக்கல்ல. நல்லது, கெட்டது, இரண்டும் கெட்டான் என்ற நிலையிலுள்ள சகல கதைகளையும் வாசிக்க வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஒரு மூடை பதரை நாள் முழுவதும் துழாவி ஒரு நெல்லைப் பொறுக்கி எடுப்பது போன்ற வேலை. சில சமயம் ஒரு முழுநாள் வேலைகூட வியர்த்தமாகிவிடலாம். இப்படி, நான், ஒரு நாள் குப்பையைக் கிளறிக் கொண்டிருந்தபோது ஒரு  குண்டுமணி கிடைத்தது. அதுதான் “நிலவிலே பேசுவாம்” என்ற இப்புத்தகத்தின் தலைப்புக்குரிய சிறுகதையாகும்.

யாழ்ப்பாணத்தில் நிலவும் சாதிக்கொடுமை, எப்பொழுதுமே என் மனதை வருத்திவரும் ஒரு விஷயமாகும். அக்கொடுமையைப் புத்தம் புதிய கண்ணோட்டத்துடன், கலையழகோடு, சோகம் ததும்பும் ஒரு நையாண்டி நடையில் சிறுகதையாகச் சித்திரித்திருந்தார் ஆசிரியர். தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லப்படும் மக்களுக்கு, நன்மை செய்வதாகப் பசப்பிக்கொண்டு வரும் “பெரிய ஜாதித் தலைவர்கள் சிலரின் உள்ளத்தின் இருண்ட மூலைகளில், சாதியுணர்ச்சி என்ற விரியன் பாம்பு இன்னும் சுருண்டு கிடக்கிறதென்பதை, ஏளனத்தோடு அவர் சுட்டிக்காட்டியிருந்த முறை எனது மனதைக் கவர்ந்தது. “மதுவிலுக்கு என்ற உயர்ந்த இலட்சியத்தைக் கூட, தம் சாதிவெறிக்குச் சாதகமாக உபயோகிக்கலாம்” என்ற அவரது கருத்து என் சிந்தனையைத் தூண்டியது. முடிவில், ‘வெள்ளி நிலவில், பால் மணலில் பேசுவோம்” என்று கதையில் வரும் பெரியவர் சொல்லும்போது, “என் வீட்டுக்குள் நீங்கள் புகமுடியாது” என்ற அவரது சாதித்திமிரின் தடிப்பு அப்படியே பளிச்சிடுகிறது. நல்ல கருத்து அதை அவர் சிறுகதைக்குரிய அமைதியுடன் கையாண்டிருந்த முறையும் சிறப்பாய் இருந்தது .

என்.கே.ரகுநாதனின் 'நிலவிலே பேசுவோம்'ரகுநாதன், இலக்கிய யாத்திரையில் இன்று அதிக தூரம் முன்னேறி விட்டாலும், நான் படித்த அவரது முதலாவது கதை, என் மனதில் மிகவும் அழுத்தமாகப் பதிந்து கிடக்கிறது. என் முன்னே விரிந்து கிடக்கும் அவரது சிறுகதைத் தொகுதியில் அவரால் எழுதப்பட்ட பதினொரு கதைகள் காணப்படுகின்றன. அவற்றை இங்கு விரிவாகத் தனித்தனியாக விமர்சிப்பது எனது நோக்கமல்ல. அது இங்கு அவசியமுமல்ல. ஆனால், அவரது கதைகளின் பொதுவான சிறப் பியல்புகள் இவைதான் என்றுமட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

முதலாவதாக, அவரது கதைகளில் நாம் காண்பது அவரது சமுதாயப் பிரக்ஞையாகும். எந்த மனிதனும் சமுதாயத்தின் ஒரு அங்கமாகத்தான் விளங்குகிறான், எழுத்தாளனும் விதிவிலக்கல்வ. அவனும், தான் அங்கமாயிருக்கும் சமு தாயத்திற்குத் தனது கடமையைச் செய்யவேண்டியவனே! ரகுநாதனின் பல கதைகள்-ஏன்? அனேகமாக எல்லாமே என்று கூடச் சொல்லிவிடலாம்-சமுதாயப் பிரக்ஞையுடன் எழுதப்பட்ட முற்போக்குத் கதைகளாகவே இருக்கின்றன. தீண்டாமை ஒழிப்பு, வகுப்பொற்றுமை, வேலையில்லாத் திண்டாட்டத்தால் ஏற்படும் இன்னல்கள், கூட்டுறவியக்க ஊழல்கள், பிரஜா உரிமைச் சிக்கல்கள் போன்ற சமுதாய விஷயங்களை  பிரசாரத் தொனியற்ற, உருவத்திலும் உள்ளடக்கத்திலும் சிறந்த சிறுகதைகளாகப் படைத்து இந்நூலில் தந்துள்ளார்.

இரண்டாவதாக, இவர் கதைகளில் நான் காணும் பண்பு, அவர் தாம் வாழும் சமுதாயத்தில் அன்றாடம் காணும் பாத்திரங்களை வைத்துத் தமது கதைகளைப் புனைந்திருப்பதாகும். இந்த இடத்தில் ஈழநாட்டில் சமீபகாலமாகக் கிளம்பியுள்ள தேசிய இலக்கியம் என்ற கோஷத்தைப்பற்றியும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இலங்கைத் தமிழ் எழுத்தாளர் தமது நாட்டின் சூழலைப் பிரதிபலிக்கும் கதைகளை எழுத வேண்டும் என்பது, இவ்வியக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும். கடந்த இரண்டு மூன்று வருடங்களாகத்தான் இக் கோஷம், வலுவுள்ள இலக்கிய இயக்கமாக மலர்ந்துள்ளதென்றாலும், இக்கோஷம் எழும்புவதற்கு முன்னரே, விரல் விட்டு எண்ணக்கூடிய சில எழுத்தாளர், இந்தத் துறையில் தாமாகவே முயன்று வந்தனர். ரகுநாதன் கதைகளில் அன்று தெர்ட்டு இன்று வரை இவ்வம்சம் தலை தூக்கி
நிற்கிறது என்பதை இக்கதைத்தொகுதியை வாசிப்பவர்கள் நன்கு தெரிந்து கொள்ளலாம்.

நான் இங்கு கூறிய இந்த இரு அம்சங்களையும் ஒரு சேர எடுத்து ரகுநாதன் கதைகளைப்ப்ற்றிக் கூறுவதானால், அவர் சமுகப் பிரக்ஞை கொண்ட தேசிய இலக்கியத்தைப் படைத்திருக்கிறார் என்று கூறலாம்.

ரகுநாதன் கதைகளிலே ஒரு கனவு ஊடுருவிக் கிடக்கிறது. இனபேதம், சாதிபேதம், மதபேதம், வர்க்கபேதமற்ற ஒரு “உலகத்தைப் பற்றிய கனவுதான் அது. உலகத்தின் சிறந்த சிந்னையாளர் சகலரும் கண்ட அந்தப் பூங்கனவு இவ்எழுத்தாளர் உள்ளத்திலும் வியாபித்துக் கிடப்பதை நாம் காண்கிறோம். . அந்தக் கனவுக்கே தம் கலையை அர்ப்பணித்திருக்கிறார் அவர். அவரது அழகிய தமிழ்நடை, இக்கனவுகளை நன்கு படம் பிடித்துக் காட்டுகிறது.

கனவு என்றதும், நடவாதது என்று அர்த்தம் கொள்வார்கள் சிலர். ஆனால்  “கனவுகளைவிட யதார்த்தமானது வேறொன்றுமில்லை” என்று மனோதத்துவ அறிஞர்கள் கூறுவார்கள். “ஒரு மனிதனின் உண்மையான உருவத்தை, அவன் காணும் கனவுகளேப் போல வேறொன்றும் காட்ட மாட்டாது” என்பது, நவீன மனஇயலின் முடிவு. தினம் தினம் நனவாகிக்கொண்டுவரும் மனிதகுலத்தின் இப்பெருங்கனவுதான் ரகுநாதனின் கனவும்.

முன்னுரையை நீட்டி முழக்குதல் அவர் கதைக்கும் வாசகர்களுக்குமிடையே சுவர் எழுப்புவதாகும். முன்னுரை எழு துபவர், வாசகர்களை வாசலிலே காக்கவைத்து விடக்கூடாது என்ற கருத்துடையவன் நான். முன்னுரையால் சலிப்படைந்த வாசகர், மாளிகையுள் புகாமலே திரும்பிவிடலாம் என்ற அச்சமல்ல. புத்தக முன்னுரையைப் பொறுத்தவரையில், இந்த ஆபத்துக்கு இடமில்லே, சலிப்படைந்த வாசகர் இரண்டு பக்கங்களேத் தட்டிவிட்டு உள்ளே புகுந்துவிடலாம்.

அனேகமாக எனது வாசகரும், அப்படியே ஏற்கனவே புத்தகத்துள் புகுந்திருக்கக்கூடும். அப்படிப் புகுந்த வாசகருக்கு, அங்கே சிந்தனேயைத் தூண்டும் சிறந்த சிறுகதை விருந்து காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லே.

கொழும்பு, 10-8-62,