எழுத்தாளர் தமயந்தியின் (தமயந்தி சைமன்) புகைப்படமொன்று..

எழுத்தாளர்  தமயந்தி (தமயந்தி சைமன்) எழுத்தாளர் தமயந்தி (தமயந்தி சைமன்) பல்கலை வித்தகர். எழுத்து, நடிப்பு, புகைப்படம் & காணொளி என இவரது ஆற்றல் பன்முகப்பட்டது, இவர் முகநூலில் பகிர்ந்துகொண்ட காணொளிகள், ஓவியங்கள் பலவற்றை மறக்கவே முடியாது, அவற்றுக்காக அவர் பல சமயங்களில் மணிக்கணக்காகக் காத்துக்கிடப்பதுமுண்டு.

ஒருமுறை இரவு முழுக்கக் காத்திருந்து தவளைகளின் சங்கீதக் கச்சேரியைக் கேட்பதற்காக எடுத்துப் பதிவு செய்திருந்த காணொளியை என்னால் மறக்கவே முடியாது. ஒரு காலத்தில் மழைக்கால இரவுகளில் , ஓட்டுக்கூரைகளில் பட்டுச் சடசடக்கும் மழையொலிகளூடே வயற்புறங்களிலிருந்து ஒலிக்கும் தவளைக்கச்சேரிகளை இரசிப்பதில் பெரு விருப்புடைய எனக்கு பல வருடங்களுக்குப் பின்னர் அவ்விதம் தவளைகளின் கச்சேரியினை இரசிக்கும் சந்தர்ப்பத்தையேற்படுத்தித்தந்த காணொளி அது.

இங்குள்ள புகைப்படத்தைப்பாருங்கள். எவ்வளவு அற்புதமாகக் காட்சியைக் கமராவுக்குள் கலைத்துவத்துடன் கொண்டு வந்திருக்கின்றார். நம்மத்தியில் இவ்விதமான கலைஞரொருவர் வாழ்கின்றாரென்பதையிட்டு நாம் நிச்சயம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

அழகாகக் காட்சிதரும் இப்புகைப்படத்தின் பின்னால் இலங்கைத்தமிழர்களின் அண்மைக்காலச் சரித்திரத்தின் கறைபடிந்த அத்தியாயமொன்றுள்ளது. இக்காட்சியைப்பற்றிய தமயந்தியின் விபரிப்பு இதோ:

தமயந்தியின் கைவண்ணம்

” இது குருசடித்தீவு. அதாவது தீவகத்திலிருந்து யாழ் நோக்கி வரும்போது, மண்டைதீவுச் சந்திக்கு முன், அதாவது இன்பம் செல்வம் என்ற போராளிகளைக் கொலை செய்து போட்ட இலந்தை மரத்தடியின் மேற்குக் கடல். இந்தப் படத்தில் தெரியும் காட்சி என்பதற்கப்பால் இந்த இடம் முக்கியமானது. ‘காத்திருத்தல்’ என்ற தலைப்புக்காகக் காத்திருந்து எடுத்த படம்.”

இப்புகைப்படம் என் கவனத்தை ஈர்த்ததுக்குக் காரணமான எழுத்தாளர் ராஜாஜி ராஜகோபாலனுக்கும் நன்றி. அவரது முகநூற் பதிவொன்றின் மூலமே இப்புகைப்படம் என் கவனத்துக்கு வந்தது அதற்காக.

இப்புகைப்படத்தினை முகநூலில் பதிவு செய்திருந்தேன்.அது பற்றி தமயந்திக்கும் அறியத்தந்திருந்தேன். அது பற்றி அவர் அளித்திருந்த பதிலையும் இங்கு பதிவு செய்வது பொருத்தமானது. அது வருமாறு:

நன்றி கிரி. இயற்கையின் ஒருசிறுதுளி அதிசயங்களையும், அற்புதங்களையும் நாம் கண்டடையவே பலநூறு ஆயுள்கள் தேவை. இந்த ரம்யத்தின் இடுக்குகளில் சற்று நாம் சென்று அமர்ந்தாலே ஆயுள்பரியந்த சுகங்களை அடைந்து விடுவோம். நமக்குக் கிடைத்திருக்கும் இந்த இருத்தல் மிகச் சொற்ப காலம்தானே. இந்தக் கொஞ்சக் காலத்துக்குள்ளேயே எல்லாவித சண்டைகளையும் ஆளையாள் போட்டுக் கொள்வதில் தொலைத்து விடுகிறோம். இயற்கையின் வதனங்களை சற்று ரசிக்கத் தொடங்குவோமானாலே பல அகக் காயங்கள் அகன்றுபோம். அதற்கு நாம் நேரம் ஒதுக்குவதில்லை. நேரம் ஒதுக்க நமக்கு நேரமில்லை. ஒளியையும், சத்தங்களையும் சாப்பிடும் வல்லமை கொண்டவர் நாம். ஆனால் அதை நாம் செய்வதில்லை. இதனால் இழப்பு நமக்குத்தானே.

நமது சமூகத்திலிருந்து புகைப்படக் கலைஞர்கள் இன்னும் நிறைய வரவேண்டும். முன்னைய காலங்களில்தான் அதிக செலவீனமான கலைத்துறை இது. ஆனால் இப்போ அப்படியல்ல. ஒவ்வொருவரின் உள்ளங்கைக்க்குள்லேயே வந்து விட்டது. இந்தக் கலையின்பால் படைப்பாற்றல் மிக்க கலைஞர்கள் மிகமிகச் சிலரே வெளிப் படுகின்றனர். அண்மைக் காலங்களில் ஈழத்தில் அவதானிக்கக்கூடிய கலைச் செயற்பாடுகள் ஓரளவு நம்பிக்கை தருகிறது. பல இளைய தலைமுறையினர் இந்தக் கலையைக் கையில் எடுத்திருக்கின்றனர். சாதகமான சமிக்ஞை.

தமயந்தி கமராக்களுடன்

இது பற்றி அவரிடம் ” இலங்கையின் பல்வேறு பகுதிகளையும் பதிவு செய்யும் வகையில் குறிப்பாக நாமறிந்த வட,கிழக்கும் பகுதிகள் அடங்கிய பகுதிகளை வெளிப்படுத்தும் வகையில் இதுவரை எடுத்த புகைப்படங்களை ஒரு தொகுப்பாகக் கொண்டு வரலாமே” என்று கேட்டிருந்தேன் ( முகநூல் உரையாடல் வழியாக).அதற்கவர் பின்வருமாறு பதிலளித்திருந்தார்:

ஜூலையில் நாட்டுக்குப் பயணிப்பதாக இருந்தேன். அதற்காக கடந்த இரண்டு வருடங்களாக சிறுகச் சிறுகச் சேகரித்த கமெராக்கள் சிலவற்றை கைவசம் வைத்திருந்தேன். புகைப்படக் கலைத்துறையில் ஆர்வமுள்ள இளைய நண்பர்களுக்குக் கொடுத்து ஊக்கப் படுத்தலாம் என்ற எண்ணத்தில். அதற்குள் கொரோணாக் கொண்டாட்டம் வந்து விட்டது. பார்ப்போம். நம்பிக்கையோடு பயணிப்போம்.

ஆமாம், நமது தேசத்தின் இயற்கை எழில், மனித உழைப்பும், முகங்களும் என ஒரு தொகுப்பாக்கும் எண்ணம் உண்டு. அடுத்த பயணத்தில் நிச்சயம் செயற்படுத்த முயற்சிக்கிறேன். நமக்கு இனி இங்கே இருக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது? நகர்வோம் தேசம் நோக்கி மீண்டும்.

இதுபற்றிய முகநூல் பதிவொன்றுக்குப் பதிலளித்திருந்த நண்பர் சத்தியதாஸ் தவராசா பின்வருமாறு கூறியிருந்தார்:

“தமயந்தியின் கமராக்கள் ஒரு பொருளை காட்சிப்படுத்தும்போது கமராவுக்கும் பொருளுக்குமான தூரத்தினை கச்சிதமாகவே கணக்கீடு செய்கிறது. அதுவுமன்றி காட்சிப்படுத்தலின் பின்னணி எப்பொழுதும் குழப்பத்தையோ வேறொரு கருத்தாடலையோ கொடுக்காமலும் குறித்த பொருளை துல்லியப்படுத்திக் காட்டுவதும் தமயந்தியின் தனித்துவமாக எனக்குப்படுகிறது.”

தற்போதுள்ள சூழல் நீங்கி , தமயந்தியின் எண்ணம் கைகூட நாமும் வாழ்த்துகின்றோம். கலையுலகை மேலும் வளமாக்கும் படைப்புகள் அவரிடமிருந்து மேலும் மேலும் கிடைக்கட்டும்.


தமயந்தியின் தவளைக்காணொளி பற்றி மேலுள்ள பதிவில் குறிப்பிட்டிருக்கின்றேன். அக்காணொளி பற்றி முன்பு முகநூலில் பதிவொன்றுமிட்டிருந்தேன். அப்பதிவும் , அக்காணொளியும் இவைதாம்:

எனக்கு மிகவும் பிடித்த இயற்கை நிகழ்வு மழை பெய்தல். அதுவும் ஓயாது பொத்துக்கொண்டு பெய்யும் அடைமழையென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். இரவுகளில் ஓட்டுக்கூரை சடச்சடக்கப் பெய்யும் மழையைப் படுக்கையில் படுத்திருந்தவாறே இரசிப்பதிலுள்ள சுகமே தனி. அச்சமயங்களில் என்னைக் கவர்ந்த இன்னுமொரு விடயம்: வயற்புறங்களிலிருந்து ஒலிக்கத்தொடங்கும் தவளைக் கச்சேரிகளின் இன்னொலிகள். இரவு முழுவதும் பெய்யும் மழையினூடு அவற்றின் குரல்களும் ஒலித்துக்கொண்டேயிருக்கும்.

பல வருடங்களுக்குப் பின்னர் தவளைக் கச்சேரியினைக் கேட்கும் வாய்ப்பினைத் தந்திருக்கின்றார் நண்பர் காட்டுப்பகுதியில் இரவு முழுவதும் விழித்திருந்து தவளைக்கச்சேரியினைக் காணொலியில் கைப்பற்றித் தனது முகநூற் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மிகவும் சிறப்பாக அப்பகுதியின் இரவொலியினை வெளிப்படுத்தும் காணொளி. கேட்டுப்பாருங்கள். நீங்கள் நிச்சயம் மெய்ம்மறந்து விடுவீர்கள்.

இப்பதிவு தவளைக்கச்சேரி பற்றியது மட்டுமல்ல. மானுடரின் இயற்கைச் சீரழிப்பினால் அருகிக்கொண்டுபோகும் தவளைகளைப்பற்றியதும் கூட. அபிவிருத்தி என்னும் பெயரில் மனிதர் சீரழிக்கும் இயற்கையைப்பற்றியதும் கூட. ஆனால் அருமையான காணொளிப்பதிவு.

இக்காணொளி (ஜூன் 3, 2019) பற்றிய தனது முகநூற் பதிவில் தமயந்தி பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்:

முந்தியெல்லாம் மாரிகாலத்தில் எங்கும் தவளைகளின் பல்குரல் பாடல்கள். இரவுகளில் அச்சம் கலந்த இதமான சுகானுபவங்கள் அவை. அந்த சத்தங்களுக்கும், அவற்றின் நினைவுகளுக்கும் வாசங்கள் உண்டு என்பதை நாம் உணர முடியும் அல்லவா? கடந்த இரண்டு மாரிகாலங்களை நாட்டில் நின்று அவதானித்தேன். கிடைக்கவில்லை. அந்தச் சத்தங்கள் ஆங்காங்கே சிறு சிறு அனுங்குதல்களாக மட்டுமே கேட்டன. ஆமாம், இப்போ மாரிகாலங்களில் கூட அந்தத் தவளைச் சத்தங்கள் வடக்கில் அவ்வளவாக இல்லை. அல்லது காணமற் போய்விட்டன. ஏன்? ஏன் என்று யாருக்கேனும் தெரியுமா?

இது 2017 கோடை. தவளைச் சத்தங்களைப் பதிவதற்காக நான் பயணம் செய்தது முத்தையன் கட்டு. முத்தையன்கட்டு குளக்கரையில் ஓரிரவு விழித்துக் காத்திருந்து சுவாசித்த தவளைச் சத்தங்கள் இது. கூட வந்த நண்பர்கள் ஜீப்புக்குள் தூங்கி விட்டார்கள். அவர்கள் சும்மா தூங்கவில்லை. “அந்தப்பக்கம் காட்டுக்குள்ளிருந்து யானை வரும், இந்தப் பக்கம் குளத்துக்குள் இருந்து முதலை வரும்” என்று சொல்லி மிரட்டிவிட்டுத் தூங்கி விட்டார்கள். எப்படி இருக்கும் எனக்கு. வடக்கில் தவளைகள் காணாமற் போனதற்கு பிரத்தியேக காரணங்கள் ஏதாவது இருக்கக் கூடுமா நண்பர்களே? இருக்கு. நிச்சயம் இருக்கு. நீருக்கும் நிலத்துக்கும் இடையிலான உயிரியல் பரிணாம வளர்ச்சிக்கு இன்னமும் பூமியில் சாட்சியாயுள்ளவை தவளைகள். சுற்றுப்புறச் சூழலைப் பற்றி கிஞ்சித்தும் அக்கறைப் படாத சமூகமாக நாம் இருக்கிறோம் என்ற கசப்பான உண்மைக்குப் பின்னால் தவளைகள் செத்துக் கிடக்கின்றன.”

தவளைக்கச்சேரிக் காணொளி: https://www.facebook.com/thamayanthi.thamayanthi/videos/10214877415311797/?t=110

ngiri2704@rogers.com