எழுத்தாளர் பிரபஞ்சனின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் பெரும் இழப்பு

எழுத்தாளர் பிரபஞ்சன்எங்கள் காலத்தில் வாசிப்பு முக்கியமானதொன்றாக இருந்தது. ஒருவரோடு உரையாடும் போது அவரிடம் இலக்கியத்தேடல் இருக்கிறதா இல்லையா என்பதை அவருடைய வாசிப்பு அனுபவத்தில் இருந்துதான் பெறமுடிந்தது. இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் நிறைய வாசித்துக் கொண்டே இருந்தார்கள். இதனால் அவர்களின் கல்வி அறிவை மட்டுமல்ல, அவர்களின் பொது அறிவையும் இனம் காண முடிந்தது. சிறுகதை, நாவல் போன்றவற்றில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக எனக்குப் பிடித்தமான எழுத்தாளர்களின் ஆக்கங்களை வாசிக்கத் தொடங்கினேன். அந்த வரிசையில்தான் பிரபஞ்சனின் ஆக்கங்களையும் வாசிக்கத் தொடங்கினேன். சுருங்கச் சொன்னால், முகம் தெரியாத பிரபஞ்சனின் வாசகர்களில் ஒருவனாக இருந்த எனக்கு, அவர் 2011 ஆம் ஆண்டு கனடாவிற்கு வந்த போது, அவரை நேரிலே சந்தித்து உரையாடச் சில சந்தர்ப்பங்கள் கிடைத்தன.

எழுத்தாளர் பிரபஞ்சனை நான் சந்தித்ததற்கு இன்னும் ஒரு காரணம் இருந்தது. சமீபத்தில் அமரரான சித்தன் அவர்களை ஆசிரியராகக் கொண்ட ‘யுகமாயினி’ குறுநாவல் போட்டியில், ‘அம்மாவின் பிள்ளைகள்’ என்ற எனது குறுநாவல் பரிசு பெற்ற போது, அந்தக் குறுநாவல் போட்டிக்கு பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் தான் நடுவர் குழுவுக்குப் பொறுப்பாக இருந்தாகவும் தெரிவித்திருந்தார். அதனால்தான் கனடாவுக்கு எழுத்தாளர் பிரபஞ்சன் வந்திருந்த சமயம், அவரைச் சந்தித்து உரையாடினேன். அப்போது அந்த ‘அம்மாவின் பிள்ளைகள்’ குறுநாவலின் சிறப்பம்சங்களைக் குறிப்பிட்டு என்னைப் பாராட்டியிருந்தார். போர்க்காலச் சூழலில் எழுந்த அந்த நாவலின் கருப்பொருளையும், சிறப்பு அம்சங்களையும் சொன்ன போது, அவருடைய ஞாபக சக்தியையும், முழுமையாக வாசித்துத்தான் அதைத் தெரிவு செய்திருந்தார் என்பதையும் நினைத்து பெருமைப்பட்டேன். தமிழ் ஆசிரியரும், எழுத்தாளரும், சாகித்ய அக்கடமி விருது பெற்றவருமான பிரபஞ்சன் அவர்கள் 21-12-2018 அன்று காலமானார் என்ற செய்தி இலக்கிய உலகிற்கு அதிர்ச்சி தருவதாகவே இருக்கின்றது. 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதுச்சேரியில் பிறந்த பிரபஞ்சனின் இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம் என்பதாகும். இவரது வானம் வசப்படும் என்ற புத்தகத்திற்குத்தான் 1995 ஆம் ஆண்டு சாகித்ய அக்கடமி விருது கிடைத்தது. இதைவிட மானுடம் வெல்லும், இன்பக்கேணி, நேசம் மறப்பதில்லை போன்ற புதினங்களையும் எழுதி உள்ள இவரது ஆக்கங்கள் சில வேறு மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இவருக்குச் சாரல் விருதும் கிடைத்திருப்பதாகத் தெரிகின்றது. அவரது ஆத்மா சாந்தியடைய அவரது குடும்பத்தின் சார்பாக வாசகர்களாக நாங்களும் பிரார்த்திப்போம்.

kuruaravinthan@hotmail.com