ஐரோப்பியப்பயணத்தொடர் (6): மது, மதகு நீர், மாமலர்கள்

– முனைவர் ர.தாரணி அவர்கள் அண்மையில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்குப் பயணித்துத் திரும்பியிருக்கின்றார். தனது ஐரோப்பியப்பயண அனுபவங்களை இலக்கியச்சுவை ததும்பும் நடையில் தொடராகப் ‘பதிவுகள்’ இணைய இதழில் எழுதுகின்றார். அப்பயணத்தொடரின்  ஆறாவது  அத்தியாயம் ‘ மது, மதகு நீர், மாமலர்கள்என்னும் தலைப்பில் இவ்விதழில் வெளியாகியுள்ளது. – பதிவுகள் –


அத்தியாயம் ஆறு: மது, மதகு நீர், மாமலர்கள்

ஏப்ரல் 26, 2017    புதன் கிழமை
முனைவர் ர. தாரணிஐரோப்பியப்பயணத்தொடர்உலகின் தலை சிறந்த ஓவியனின் தூரிகையை இருந்து வெளிப்படும் வர்ணஜாலமும், மனித குலத்தின் அனைத்து கேளிக்கைகளின் வெளிப்பாட்டு நகரமும் ஆன பாரிசில் இருந்து ஏப்ரல் 26 -ம் நாள் அண்டை நாடுகளுக்கு செல்ல அதிகாலையிலேயே ஆயத்தமானோம். சுறுசுறுப்பாகக் காலை உணவை முடித்து மூன்று நாட்களகச் சொந்த வீடு போல் பாவித்துப்புழங்கி வந்த விடுதி அறையை நான்கு முறை மூவரும் சுற்றிச்சுற்றி வலம் வந்து பார்த்துவிட்டு ( ஏதாவது பொருள் விட்டு விட்டோமா என்று சோதிக்கத்தான்) அனைத்து மூட்டை முடிச்சுகளையும் பேருந்தில் ஏற்றி விட்டு, பேருந்தின் உள்ளே என் அப்பா பிடித்து வைத்திருந்த இடத்தில் அமர்ந்து அடுத்த பயணத்திற்கு எங்களை தயார்ப்படுத்திக்கொண்டோம்.

நாங்கள் தங்கி இருந்த விடுதியை சுற்றி அழகான புல்வெளிகள், மரங்கள் மற்றும் குளம் அதில் கீச் கீச் என தங்களின் குரல் வளத்தை வெளிப்படுத்தும் பல்வேறு பறவைகள் என்ற மிக அருமையான அழகான சூழல். மூன்று நாட்களாக தங்கி இருந்தும் அங்கே ஒரு முறை கூட காலாற சுற்றி வந்து இந்த காட்சிகளை சிறிது நேரம் கண்டு ரசித்து அமர முடியவில்லை என்பது ஒரு குறையாகவே எனக்கு மனதில் இருந்தது. போன அத்தியாயத்தில் பாரிஸ் நகரில் மூன்று நாட்களும் மூச்சு முட்டச்சுற்றிய விவரம் கூறப்பட்டு இருந்தது அல்லவா? விடுதியில் இருந்து அதிகாலையில் கிளம்பி சென்றால் இரவு தூங்கும் திரும்ப நேரமே வந்து சேர்வதால் இந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவே இல்லை. நம் ஊரில் ஊட்டி நகரில் இருக்கும் ரோஜா பூங்கா மற்றும் தாவரவியல் பூங்கா போல கொஞ்சம் பரப்பளவு மட்டுமே கொஞ்சம் வித்தியாசப்படும் பூங்காக்கள் அங்கே இருந்தன. பாரிஸ் நகரம் தனது வல்லரசான இடங்களைப் பெருமையுடன் காண்பித்து எங்களை ஒரு அரக்கனைப்போல் விழுங்கி விட்டதால் இந்த அழகிய பூங்கா மகளைக் கண்ணார, காலாற அளக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்காமல் போனதை மனதில் ஏற்பட்ட ஒரு சிறு கரும்புள்ளியாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஜெர்மனி நகரம் அடுத்த இலக்கு என்றாலும், அதற்கு முன்னே நாங்கள் கடந்து செல்ல வேண்டிய அதிமுக்கியமான இடங்கள் சில இருந்தன. அவற்றைக் கடந்து செல்வது என்பது அங்கே தங்கி அவற்றின் அழகை ரசித்து செல்வது என்பதே ஆகும். பயணத்திட்டம் முதலிலேயே கொடுக்கப்பட்டு இருந்ததால் அடுத்து நாங்கள் செல்லும் நகர் என்ன என்பதைப்பற்றி ஒரு முன்னுரை எங்கள் வழிகாட்டி திரு. பாலா பயணம் செய்யும் சமயத்தில் வழங்குவார். ஒவ்வொரு இடத்தின் சிறப்பும் அங்கே நாங்கள் என்ன செய்யவேண்டும், செய்யக்கூடாது எனவும் கிளிப்பிள்ளைக்குப் பாடம் சொல்லுவது போல் கூறுவார். ஆனால், அது நிறைய காதுகளை சேர்ந்ததாக நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது. யாரோ யாருக்கோ சொல்வது போல் நம் குழுவினர் அவரவர் வேலையில் மும்முரமாக இருப்பர்.

நாங்கள் புறப்பட்ட நாளில் காலையில் மழைத்தூறல் பாரிஸ் நகரை நனைத்திருந்தது. அயல்நாடானாலும் அழகிய நாடல்லவா! பிரிந்து செல்ல கொஞ்சம் மனம் மறுத்தது என்னவோ ஒத்துக்கொள்ளவேண்டிய விஷயம்தான். பாரிசில் இருந்து புறப்பட்ட நாம் முதலில் செல்லும் இடம் அன்றைய நாளில் பிரஸ்ஸல்ஸ் (Brussels) என்னும் அழகிய சிறு நகரம். பாரிஸிக்கும் இந்த ஊருக்கும் இடையில் 195 மைல்கல் தூரம் பிரஸ்ஸல்ஸ் நகரம் பெல்ஜியத்தின் (Belgium) தலைநகரம் என்பது மட்டும் அல்லாமல் ஐரோப்பா யூனியனின் தலைமையிடம் என்ற சிறப்பையும் பெற்ற நகரம். பெல்ஜியம் ஐரோப்பா யூனியனில் அடங்கிய அழகிய சிறு நாடு. இந்த நாடு முழுதுமே மிகச்சிறந்த கட்டிடக்கலைகள் வெளிப்படுத்தும் வானளாவிய கிருத்துவ புனிதத்தலங்கள் மற்றும் கட்டிடங்கள் பரவிக்கிடக்கின்றன. வரலாற்றிலும், கட்டிக்கலைகளிலும் மிகுந்த விருப்பம் மிக்கவர்கள் வாழ்வில் ஒரு முறையாவது சென்று பார்க்க வேண்டிய நாடு இது. அந்த நாட்டின் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் நகரும் இந்த பெருமைக்குள் அடங்கும்.

பொதுவாக ஐரோப்பா நாடுகள் என்றால் நாம் வேறு பல நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பெல்ஜியம் போன்ற நாடுகளைக் கண்டு கொள்ளத் தவறிவிடுகிறோம். ஆனால் பெல்ஜியம் நாட்டின் சிறப்பாக நான் கேள்விப்பட்டவை எங்களை மிகவும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கின. அவற்றை இங்கே பகிர்கிறேன். பெல்ஜியம் நாட்டில் ஒவ்வொரு சதுர கிலோமீட்டருக்கும் கண்டிப்பாக ஒரு கோட்டை தென்படும். உலகில் வேறு எந்த நாட்டிலும் இந்தச் சிறப்பு கிடையாது. இந்த நாட்டுக்கு என்று எந்த ஒரு தனி மொழியும் கிடையாது. பல்வேறு மொழிகள் கலந்து இங்கு பேசப்படுவதே இதன் தனித்துவம். எனினும் பிரெஞ்சு மொழி ஆதிக்கம் சிறிது அதிகம் தென்படுகிறது. பெரும்பான்மையான இடங்களில் டச்சு மொழியும் பேசப்படுகிறது இந்த மாதிரி நாட்டில் ஆங்கிலம் என்பது பெரிதாக மதிக்கப்படுவது இல்லை.

பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரஸ்ஸல்ஸ்

– பிரஸ்ஸல்ஸ் நகரின் நடுவில் –

பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் சாக்லேட், பீர் மற்றும் வாபில்ஸ் (Chocolate, Beer and Wafles) போன்ற விஷயங்களுக்குப் பெயர் பெற்றது. உலகப்போர் முடிவு வரை மொத்த ஐரோப்பா யூனியனின் தலைநகராகத் திகழ்ந்த பிரஸ்ஸல்ஸ் தற்போது பெல்ஜியம் நாட்டின் தலைநகர் மட்டுமே. இந்த நகரில் வசிப்பவர்களில் பலர் பெல்ஜியம் நாட்டின் குடிமக்கள் அல்ல. நேட்டோ அமைப்பின் தலைமையிடமாக இந்நகரம் உள்ளதால், அங்கே பணி புரியும் பலதரப்பட்ட, பல்வேறு நாட்டை சார்ந்தவர்களும் இங்கே ஒன்றாக வசிக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் அமைதியாக நிம்மதியாக வசிக்கிறார்கள். உண்மைதான். அங்கே பெரிதாக பயப்படும் அளவிலான குற்றங்கள் நடப்பது இல்லை என்பதே இவ்வாறு பலநாட்டவர்களும் அங்கே குடியேறக்காரணமாகிறது. சாலைகளிலும் விபத்துக்களை அறவே தவிர்க்கும் வண்ணம் விதிமுறைகள் உள்ளதால், விபத்தில் சிக்கும் அபாயமும் பெரிதாக இல்லை.

விந்தை என்னவென்றால் எந்த நாட்டில் பீர் மிகுந்த அளவில் உற்பத்தி செய்து அவற்றை விற்பனை செய்வதிலும் முன் நிற்கும் நகரமாக இருக்கிறது. அங்கே எந்தக் குற்றங்களும், விபத்துக்களும் இல்லை. பிரஸ்ஸல்ஸ் பன்னாட்டு விமான நிலையமே உலகின் மிகப்பெரிய சாக்லேட் விற்பனை மையத்தை கொண்டதாக உள்ளது. அருவியாக ஓடும் மதுவும், வாயில் கரைந்து மதி மயக்கும் சாக்லேட்டும் இறைந்து கிடைக்கும் நகரமாக்க பிரஸ்ஸல்ஸ் காணப்படுகிறது. இது தவிர பிரெஞ்சு பிரைஸ் (French Fries) எனச்சொல்லப்படும் விரல்கள் நீளத்தில் உருளைக்கிழங்கை வெட்டி வறுத்து சாப்பிடும் தயாரிப்பின் பிறப்பிடம் பெயரில் பிரெஞ்சு வைத்திருந்தாலும் உண்மையில் இந்த நகரமே.

பல்வேறு சிறப்புகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம் என்றாலும், நாங்கள் கண்டது அந்த நகரத்தின் சரித்திர சிறப்பு வாய்ந்த மத்திய சதுக்கம் (Central Square) என அழைக்கப்படும் க்ராண்ட் பிளாஸ் (the Grote Markt or Grand Place) ஆகும். யுனெஸ்கோ (UNESCO) அமைப்பினால் உலகின் பழமை வாய்ந்த இடங்களில் ஒன்றாகக்கருதப்படும் மிக முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்றாகும்.

பிரஸ்ஸல்ஸ் நகரின் மையப்பகுதியில் கலைநயம் மிக்க கொதிக் பாணியில் அமைந்த மிக அருமையான கட்டிடடமே இந்த கிராண்ட் பிளாஸ். இது ஒரு சதுரபாணியில் கட்டப்பட்டு, சதுக்கம் ஆகக்காட்சி அளிக்கிறது. அந்த சதுக்கத்தில் மிகப்பெரிய ப வடிவிலான கட்டிடங்கள் இடையே மிகப்பெரிய மைதானம் அமைந்துள்ளது. மிகவும் பிரபலமான இந்த கலைநயம் மிக்க கட்டிடத்தைக்காணவே உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருடம் முழுக்க வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த மைதானத்தில் கூட்டம் குழுமிக்கொண்டேதான் இருக்கிறது. இந்த இடத்தின் வரலாற்றை படித்தால், உண்மையில் இது நம்ம ஊர் சந்தை மைதானமாகத்தான் ஆரம்பித்த காலம் முதல் செயல் பட்டு வருகிறது.

இந்த மைதானத்தில் ஓரங்களில் சிறிய கடைகள் காணப்படுகிறது. இந்த மைதானம் சுற்றி உள்ள கட்டிடத்தில் இடதுபுறம் டவுன்ஹால் அமைந்துள்ளது. மற்ற கட்டிடங்களில் மியூசியம் மற்றும் பீர் விற்பனைக்கடைகள் காணப்படுகிறது. இந்த மைதானத்தில் வருடத்திற்கு இரண்டு முறை ஏழு லட்சம் மலர்களைக்கொண்ட மலர்ப்படுக்கை தயார் செய்யப்பட்டு மக்களின் பார்வைக்கு வைக்கப்படும். இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும் என எங்கள் பயண வழிகாட்டி விவரித்துக்கொண்டு வந்தார். நாம் போன சமயம் அந்தக்காட்சியைப்பார்க்கக் கொடுப்பினை இல்லை.

அந்த மைதானத்தில் இருக்கும் கட்டிடங்களுக்கு இடையே சிறு சிறு வீதிகள் பிரிந்து செல்கின்றன. அந்த வீதிகளின் பெயர்கள் வேடிக்கையாக உள்ளன. வெண்ணை – Butter (Rue au Beurre) ( நம்ம ஊரில் நக்கலா “போடா வெண்ணை” என்பார்கள். அங்கே சொன்னால் நிஜமாகவே வெண்ணை வீதிக்குப் போக வேண்டியதுதான்), மூலிகை – Herbs (Rue du Marché aux Herbes), சீஸ் – Cheese (Rue du Marché aux Fromages) என உணவின் பெயர்களே வீதியின் பெயர்களாக வழங்கப்படுகின்றன. கொஞ்சம் சிரிப்பாக இருந்தாலும், அங்கே உள்ள கடைகளில் அதிக அளவில் உணவு சார்ந்த பண்டங்களே விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வீதிகள் அனைத்தும் கடைசியில் ஊரில் உள்ள வசிக்கும் இருப்பிடங்களுக்கு செல்லும்போல.

அப்படிச் செல்லும் ஒரு வீதியில் நாங்கள் நடந்து சென்று பிரஸ்ஸல்ஸ் நகரின் அடுத்த முக்கிய நினைவுச்சின்னமான மனேக்கண் பிஸ் (Manneken Pis) என்ற சிறிய சிலையைக்காணச்சென்றோம். ஒரு இரண்டு வயதே நிரம்பிய சிறு ஆண்குழந்தை நின்றுகொண்டே சிறுநீர் கழிப்பதுதான் (“Little man Pee”) இந்த நினைவுச்சின்னம். நமது ஊரில் ஜெமினி சினிமாவுக்கு குறியீடாக இரண்டு குழந்தைகள் வாயில் குழல் ஊதுவது போல் காட்டுவார்களே, அதே போன்ற ஒரு குழந்தை. அந்த குழந்தையின் சிலை ஆடையில்லாமல் காணப்படுகிறது. ஆனால் பல்வேறு சமயங்களில் பல்வேறு விதமான ஆடைகள் அந்தக்குழந்தையின் சிலைக்கு இடப்படும் என்றும் கூறினார்கள். மிகவும் அதிக அளவில் கூறப்படும் கதையில் இந்த சிறிய குழந்தையே பிரஸ்ஸல்ஸ் நகருக்கு ஒரு கட்டத்தில் நேரவிருந்த மாபெரும் அபாயத்தை தடுத்து நிறுத்தியதாக போற்றப்படுகிறது.

இந்தச் சிறுகுழந்தையின் வித்தியாசமான செய்கையை எதற்கு இவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்பது நமக்கு கொஞ்சம் சிரிப்பு கொடுக்கும் விஷயமாக இருந்தாலும், பல கதைகள் இந்த நினைவுச்சின்னத்தைப்பற்றி உலா வருகின்றன. மிக முக்கியமான ஒன்று இரண்டு பார்ப்போம்.

மிகவும் அதிக அளவில் கூறப்படும் கதையில் இந்த சிறிய குழந்தையே பிரஸ்ஸல்ஸ் நகருக்கு ஒரு கட்டத்தில் நேரவிருந்த மாபெரும் அபாயத்தை தடுத்து நிறுத்தியதாக போற்றப்படுகிறது. அந்தக்கதைப்படி ஒரு முறை இந்த நகரை எதிரிகள் ஆக்கிரமிப்பு செய்து கடுமையாக மக்களைத்தாக்கினார்கள். மக்களும் வீரத்துடன் போரிட்டு அவர்களைத் தோற்கடித்து இந்த ஊரை விட்டு வெளியேற்றினார்கள். பதுங்கிப் பின்வாங்குவது போல் எதிரிகள் போக்குக்காட்டியபோதும், உண்மையில் இந்த நகர் முழுவதும் வெடித்துச் சிதறுவதற்கான வெடி மருந்துப்பொருட்களை நகர் முழுதும் நிலத்தின் அடியில் புதைத்து வைத்து அதன் ஒரு முனையை ஊருக்கு வெளியே இருந்து பற்ற வைப்பது போல் ஏற்பாடு செய்து இருந்தது மக்கள் அறியாத விஷயமாக இருந்தது. இந்த ஏற்பாட்டின் படி இரவு நேரம் அவர்கள் வெடி மருந்து திரியைப்பற்றவைக்க அது வேகமாக சரசரவென ஊருக்குள் சிறு பொறியுடன் வேகமாக வர, அந்த சமயம் ஜூலியன் என்ற பெயருடைய சிறு பையன் அந்த இடத்தில் வர, என்ன செய்வது என்றறியாத அந்த இளம் பாலகன் அந்த தீப்பொறியின்மீது சிறுநீர் கழித்து அந்த தீயை அனைத்ததாகக்கூறுகிறார்கள்.

இன்னும் ஒரு பிரபலமான மற்றும் பெரிதாக நம்பப்படுகிற கதையில் ஒரு பணக்கார வியாபாரி நகரில் நடந்த உற்சவத்தில் கலந்துகொள்ளத் தன் குடும்பத்துடன் வந்து சந்தோஷமாக பொழுது போக்கிக்கொண்டிருக்கும்வேளை அவரது இளம் பாலகன் திடீரென காணாமல் போனதை அறிந்து, மனக்கலக்கத்துடன் நகர் முழுதும் தேட ஆட்கள் ஏற்பாடு செய்கிறார். பல நாட்கள் தேடும் வேட்டை நடந்து இந்தக் குழந்தை கிடைக்காது என்று மனம் தளர்ந்து கடும் வருத்தத்துடன் தங்குமிடம் திரும்புகையில் ஒரு வீதியின் ஓரத்தில் ஒரு சிறு குழந்தை சிறுநீர் கழிப்பதைக்கண்டு ஓடிச்சென்று அவனை பார்க்கையில் அது அவர்கள் தேடிய குழந்தையாகவே அமைகிறது. மிகுந்த மகிழ்ச்சி கொள்ளும் அந்தப் பெரும் செல்வந்தர் தன் குழந்தையின் செய்கையை ஒரு சிலையாக வடித்து நகரின் மத்தியில் நிறுவியதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு ஒவ்வொரு காலகட்டத்துக்கும் தகுந்தாற்போல், அந்நகரில் கிடைக்கும் சுவைமிக்க இனிப்புகளைப்போலவே சுவாரசியம் மிக்க பல கதைகள் உலவுகின்றன. ஒவ்வொரு கதையிலும் கதைமாந்தர்கள் யார் மாறினாலும், இந்த இளம் கதாநாயகன் சிறுநீர் கழிப்பது சுற்றியே அந்தக்கதைகள் அமைந்திருப்பது கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கிறது. எனவே இந்த இளம் குழந்தையின் இந்த விந்தைச்செயலில் ஏதோ ஒரு மர்மம் உள்ளது என்றவரை எனக்குப்புரிந்தது. இளம் பாலகனின் கதையைக்கூறுவது மூலம் அனைத்து இளைய தலைமுறையினருக்கும் நல்ல வீரச்செய்தி கூற முனைந்திருக்கிறார்கள் என்பதும் தெள்ளத்தெளிவாகப்புரிந்தது.

அந்த சிலை இருக்கும் இடத்தில் அனைத்துச் சுற்றுலாப் பயணிகளும் நின்று பெருமையாகத் தன்னை புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். எங்கள் குழுவினரும் வேகமாக ஓடி அங்கே புகைப்படம் எடுத்துக்கொள்ள முனைகையில், இந்தியப்பெண்கள் அங்கே புகைப்படம் எடுத்துக்கொள்ளத் தயங்குவதை நான் ஓரக்கண்ணால் கவனித்தேன். வயது அறுபது ஆன ஒரு வங்காளப்பெண்மணி தன் கணவர் அங்கே சிலை முன் நிற்க சொல்லிக் கூறியபோது, முகத்தை சுளித்தபடி, “இந்த சிலைகூட போட்டோ எடுத்து எப்படி வெளியே மத்தவங்களுக்கு காட்டறது” என்று வங்காள மொழியில் கூறியது மொழிப் பிரச்சினையையும் தாண்டி எனக்கு நன்கு புரிந்தது. உடனடியாக எனக்குச் சிரிப்பு வந்தது. நான் சிரிப்பது பார்த்தது உடன் சேர்ந்து அந்தப் பெண்மணியும் அவர் கணவரும் சிரித்தார்கள்.

மற்ற நாட்டுப்பயணிகளின் ஆர்வம் எங்களுக்கு அங்கே பெரிதாக வரவில்லை. என் அப்பாவும் பெரிதாக இதைப்பற்றி எடுத்துக்கொள்ளவில்லை. சிறு குழந்தையாக இருந்தாலும் உடல் உறுப்பு வெளிப்படையாகக் காட்டும் எநக்ச் சிலையின் முன்னும் நமக்கு இந்தத் தயக்கம் இருப்பது நிஜம்தான். நம்ம ஊரில்கூட கர்நாடகாவில் உள்ள சிராவணபெலகுலாவில் பாஹுபலி என்னும் கோமதீஸ்வரர் சிலை முன் நின்று புகைப்படம் எடுக்க எனக்கு மிகவும் யோசனையாகத்தான் இருந்தது. அப்படி எடுத்த புகைப்படங்களையும் மற்றவர்களிடம் காட்ட மனம் வரவில்லை. உடல் நிர்வாணம் என்பது இந்திய கலாச்சாரத்தில் இன்னமும் கொஞ்சம் ஜீரணம் செய்து கொள்ளமுடியாத ஒரு விஷயமாகவே இருக்கிறது.

உடல் உறுப்புகளை அதுவும் வெளிக்காட்டமுடியாத உள்ளுறுப்புகளைப்பற்றி பேசவோ அல்லது மருத்துவரிடம் காட்டவோ தயங்கும் இந்தியப்பெண்களின் கூச்ச சுபாவமே பல நேரங்களில் அவர்கள் வாழ்க்கை முடிவதற்கும் காரணமாக அமைகிறது. மார்பகப்புற்றுநோய் நமது இந்தியப்பெண்களைப் பெரிய அளவில் கொடூரக்கொலை நிகழ்த்த இந்த கூச்சமே காரணம். எனக்கு தெரிந்து நிறையப் பெண்கள் அவர்கள் வயது முதிர்ந்தவர்களாக இருந்தபோதும் இவ்வாறு மார்பகம் மற்றும் கர்ப்பப்பையில் இருக்கும் கஷ்டங்களை யாரிடமும் கூறாமல், கூறமுடியாமல் தன்னுடனே வைத்து மறைத்துக்கொண்டு சடாரென உயிர் இழந்த சம்பவங்கள் எனக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளன. இதை என்னவென்று சொல்லுவது என்று மூடி மூடி வைத்துக் கடைசியில் நோய் முற்றிய அளவிலேயே அது வெளியே தெரிய வரும் வேளை, விஷயம் அத்துமீறிப்போகிறது. நமது உடல் உறுப்புகளைப்பற்றிய நமது பார்வை கலாசார ரீதியிலேயே அமைகிறது. வெளிநாட்டவர்களுக்குத் தங்கள் உடல் உறுப்புக்களை வெளிக்காட்டுவதில் எந்தத் தயக்கமும் இல்லை. அதைப்பார்க்கும் யாருக்கும் பெரிதாக அதை நோட்டமிடும் எண்ணமும் இல்லை. நம்மூரில் சுற்றி மறைத்துச் சேலையில் இருந்தாலும், கதிர்வீச்சுக்கண்களுடன் அலையும் சிலர் பார்வையில் சிக்கும்போது கூனிக்குறுகத்தான் வேண்டியுள்ளது. உடல் உறுப்புகளைப்பற்றிய நமது பார்வை இன்னும் மாறவேண்டும் என்று எனக்குத்தோன்றியது

இந்தச் சிலை அவ்வளவு பெரிதாக எங்கள் குழுவைக் கவராததால் அடுத்த படையெடுப்பாக சாக்லேட் விற்பனை கடைகளுக்குள் அனைவரும் நுழைய ஆரம்பித்தார்கள். எங்கள் பயண வழிகாட்டி திரு. பாலா முதலே கூறியபடி ஒரு குறிப்பிட்ட கடையில் முதலில் சாப்பிட சாம்பிள் கொடுப்பார்கள் என்ற ஒரு இடத்தில் எங்கள் குழுவினர் பலாப்பழத்தில் ஈ மொய்ப்பதுபோல் குழுமினார்கள். முதலிலேயே அந்தக் கடையில் இருந்த கூட்டம் தவிர, எங்கள் குழு கும்பலாக பைரேட்ஸ் அப் தி கரீபியன் படத்தில் வரும் கடல் கொள்ளையர்கள் போல உள்ளே வட்டமிட்டார்கள். நாங்கள் எவ்வளவோ முயன்றும் உள்ளே எங்களின் பாதம் ஓர் அடி கூட நுழைய இடம் இல்லை.  அப்பாவிற்கு இந்தக் கும்பலே அலர்ஜி. எனவே நாங்கள் அடுத்த சில கடைகளை நோக்கி நகர ஆரம்பித்தோம்.

சாக்லெட் பற்றி இங்கே ஒரு விஷயம் குறிப்பிட வேண்டியது அவசியம். இந்த மாதிரிக் குளிர் பிரதேசங்களில் நாம் வாங்கும் சாக்லெட் வகைகள் நம் நாடு வந்து நாம் யாருக்காவது கொடுக்க நினைத்து எடுத்தால், அப்போது தெரியும் அதன் சுயரூபம். பாயசம் மாதிரி கையோடு வழிந்து ஓடிக்கொண்டிருக்கும். நமது ஊரில் ஊட்டியில் வாங்கும் ஹோம் மாட் இனிப்புக்கே இந்த கதிதான். பிறகு இங்கே வாங்கும் சாக்லெட் எப்படி என்பது நாம் கற்பனையில் கண்டுகொள்ளலாம். அதிக அளவில் கொழுப்புசத்து நிறைந்த பால் பொருட்களைப் பயன்படுத்தி சுவையூட்டி அவர்கள் வைத்திருக்கும் சாக்லெட் நம்மூரில் உள்ளே நுழைந்தவுடன் அந்த கடும் வெப்பத்திற்கு உருகி சுவை கெட ஆரம்பிக்கும். இதை நாங்கள் பலமுறை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறோம். எனது சகோதரன் அமெரிக்காவில் இருந்து கொண்டு அந்த சாக்லெட் உடனடியாக குளிர்சாதனப்பெட்டிக்குள் வைத்துதான் உபயோகிக்க வேண்டி இருக்கும். இந்த விஷயம் எங்களுக்கு நன்கு பரிச்சயம் என்பதால் இந்தச் சாக்லெட் வாங்கும் விஷயத்தில் எங்களுக்கு ஆர்வம் அதிகம் இல்லை. மேலும், சாக்லெட் விரும்பி சாப்பிடும் ஆட்கள் எங்கள் குடும்பத்தில் அதிகம் இல்லை. நம்ம ஊர் கடலை மிட்டாய், தேன் மிட்டாய் கூட இந்த சாக்லெட் போட்டி போடா முடியுமா என்ன?

எனவே, மெதுவாகத் திரும்பவும் அந்த சதுக்கம் செல்லும் பாதையில் வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்தோம். வழியின் இருமருங்கும் கண்கவரும் வண்ணம் பல கடைகள். அதில் தலையாயதானது சாக்லேட் மற்றும் தின்பண்டங்கள் உள்ள கடைகள். எல்லா கடைகளிலும் ஆட்கள் அமர்ந்த வண்ணம் எதையாவது சாப்பிட்டவாறே இருக்கிறார்கள். கடைகளின் வெளிப்புறமாக உள்ள கண்ணாடி ஷோ கேஸ்களில் பலவிதமான தின்பண்டங்கள் நம் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றில் பெரும்பான்மையாகத் தென்படுவது இந்த கிரீம் மற்றும் சீஸ் மிகுந்த உணவுகளே. அவற்றை கண்களால் பாத்தாலே திகட்டுவது போன்ற  ஓர் உணர்வு.

எங்களுக்குத் தேவைப்பட்டது ஒரு வாய் சூடான காப்பிதான். ஆனால் அது அங்கே கிடைப்பதற்கான நாமதேயமே காணப்படவில்லை. சரி ஒரு கேக் வாங்கலாம் என்று ஒரு கடைக்குள் சென்றால், அங்கே கேக் மாதிரி ரூபத்தில் நிறைய கிரீம் போட்ட சாக்லேட். அந்தக் கடையில் இருப்பவர்கள் அங்கேயே நம் கண் முன்னே எவ்வளவு க்ரீம் வேண்டுமானாலும் போட்டு எவ்வளவு தேவையோ அந்த அளவு பெரிய சாக்லெட் செய்து தருகிறார்கள். இப்படி எல்லாம் க்ரீமுடன் சாப்பிட்டு நமக்கு பழக்கமே இல்லை. வேண்டாம்டா சாமி என்று கூறிவிட்டு வெளியே வந்து விட்டோம்.

இதற்கிடையே எங்கள் மூவருக்கிடையே ஒரு பனிப்போர் நிகழ்ந்து கொண்டிருந்தது பற்றி குறிப்பிட வேண்டியது அவசியம். அதாகப்பட்டது அடுத்தவர்கள் ராஜ்யத்தை பறித்துக்கொள்வது போல், அடுத்தவர் போட்டிருக்கும் ஸ்வட்டர் எனக்கு வேணும் என்று பறிக்கும் செயல்தான். லண்டனில் இருந்து பாரிஸ் வந்தபோதே குளிரின் தாக்கத்தை நன்கு அனுபவித்தோம் அல்லவா? இன்னும் ஐரோப்பிய நாடுகளின் உள்ளே செல்லச் செல்ல குளிர் அதிகரிக்கத்தான் செய்யும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த விஷயம் எங்கள் சிறிய அறிவில் கொஞ்சம் எடுபடாமல் போனதுதான் எங்கள் பிரச்சினை ஆகிற்று. என் அப்பா அவர் போட்டு வந்த குளிர்கால உடை பத்தாது என என் மகனின் கெட்டியான, தலைக்கும் கவசம் வைத்தாற்போன்ற உடையை எனக்கு வேண்டும் என வாங்கி விட்டார். அவன் இரண்டு நாட்களாக குளிர் மற்றும் சுரம் போன்ற கஷ்டத்தில் அவதிப்படுவது சகியாமல் நான் அணிந்திருந்த கனமான குளிர் தாங்கும் ஸ்வட்டரை அவனுக்குக்கொடுத்து விட்டேன். இப்போது ஒரு சால்வை மட்டுமே வைத்துக்கொண்டு சமாளிக்க முயற்சி செய்து தோல்வியுற்று, கடைசியாக ஒரு கனத்த ஆடை வாங்குவது என முடிவு எடுத்து விட்டேன்.

இந்த முடிவின் காரணத்தால் அங்கே இருந்த ஒரு ஷாப்பிங் சென்டர் உள்ளே நுழைந்து விரைவாக அங்கே இருந்த குளிர்கால ஆடைகளை ஆராய்ந்து ( மிகுந்த குழப்பத்துடன்தான்) ஒரு ஸ்வட்டர் வாங்கிக்கொண்டேன். மேலும் கையுறைகள் தேவைப்படும் என்ற காரணத்தால் அவை ஒரு ஜோடியும் வாங்கிக்கொண்டேன். அவற்றை வாங்கிக்கொண்டு சதுக்கத்தின் ஒரு பகுதியில் நின்று கொண்டிருந்த திரு. பாலா அவர்களை நோக்கிச் சென்றேன். அவர் அந்த இடத்தில உள்ள பீர் மியூசியம் மற்றும்உள்ள பல கடைகளைப்பற்றி விளக்கிக்கொண்டிருந்தார். எங்கள் குழுவினரின் கொஞ்சம் நபர்களே அங்கே தென்பட்டனர். மீதியுள்ளோர் அங்கே இன்னும் சாக்லெட் புதையல் எடுத்துக்கொண்டிருந்தனர் போலும். அந்த சதுக்கத்தில் இரு குதிரைகள் பூட்டிய இரண்டு ரதங்கள் நடுவில் நிறுத்தப்பட்டு இருந்தன. அவற்றின் மீது அதன் ஓட்டுனர்கள் (ஒருவர் ஆண், இன்னொருவர் பெண்) அமர்ந்து இருந்தனர். அதன் அருகே ஒரு பலகையில் இந்த ரதத்தில் ஏறி பிரஸ்ஸல்ஸ் நகர் வலம் வர மணிக்கணக்கில் அதற்கான தொகை குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கும் மக்கள் போட்டி போட்டுகொண்டு சென்று கொண்டிருந்தார்கள்.

ஒரு வழியாக வரச்சொன்ன நேரத்திற்கு அரைமணி நேரம் தாமதமாக எங்கள் குழுவினர் வந்து சேர்ந்தனர். அவர்கள் அனைவர் கையிலும் மூட்டை மூட்டையாக சாக்லேட்டுகள். எல்லாவற்றையும் எங்கள் பேருந்தின் இருக்கைகளின் மேல் உள்ள தட்டில் வைத்து திணித்து புறப்படும் போது ஒரு மணி நேரம் தாமதமாகி விட்டது. அடுத்து மதிய உணவுக்கடையை (இந்திய உணவகம்தான்) கண்டுபிடிக்க கொஞ்சம் தேடிப் பின் எப்போதும் போல் போட்டி போட்டுக்கொண்டு உணவு அருந்திய பின் பேருந்தில் அமர்ந்த போது மழைச்சாரல் மெல்லிய கோடுகளாக பேருந்தின் மேல் கோலமிட ஆரம்பித்தது. அடுத்து நாங்கள் அன்று மாலை ஆம்ஸ்டெர்டாம் நகரின் படகு சவாரிக்கு செல்ல வேண்டியிருந்ததால் பேருந்து கொஞ்சம் விரைவாகவே சென்றது.

எங்கள் பயணத்திட்டத்தின்படி அடுத்து நாங்கள் நிறுத்த வேண்டிய இடம் பிரஸ்ஸல்ஸ் நகரின் பிரபல நினைவுச்சின்னமான அடோமியம் (Atomium) என்னும் ஓர் அமைப்பு ஆகும். அங்கே போட்டோ எடுத்துக்கொள்ள இறங்கலாம் என்று எங்கள் பயணத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. நகரின் வடமேற்குப்பகுதியில் அடோமியம் என்னும் ஒரு மிகப்பெரிய கட்டிட வடிவமைப்பு உருக்கு இரும்பு (Stainless Steel) பயன்படுத்தி ஒரு அணுக்களின் (Atom) அமைப்பு போன்றதொரு தோற்றத்தில் மிகப்பெரிய அளவில் 1958 -ம் வருடம் இந்த நகரில் நடந்த உலக சந்தை – எக்ஸ்போ 58 – Expo 58 என்ற முதலாம் உலக வணிகக்கூட்டத்தின் (World Trade Fair) நினைவாக எழுப்பப்பட்டு உயர்ந்து கம்பீரமாக நிற்கிறது.

தற்போது  ஓர் அருங்காட்சியகமாகச் செயற்பட்டு வரும் இந்த அடோமியம்

– தற்போது  ஓர் அருங்காட்சியகமாகச் செயற்பட்டு வரும் இந்த அடோமியம்-

தற்போது  ஓர் அருங்காட்சியகமாகச் செயற்பட்டு வரும் இந்த அடோமியம் இந்த வித்தியாசமான கட்டுமான அமைப்பினால். இந்த நகருக்கு வரும் பயணிகளின் கவனத்தை மிகவும் ஈர்க்கிறது என்றே கூறலாம். மிகப்பெரிய இரும்பு உருண்டைகளால் ஆன அணுக்கள் போன்ற தோற்றத்தில் உள்ள இரும்புக்கண்ணாடி குண்டுகள் ஒன்றோடொன்று சிறு குழாய்கள் மூலம் இணைக்கப்பட்டு அறிவியல் புத்தகத்தில் நாம் கண்டிருந்த அணுக்களின் அமைப்பு (Atomic Structure) போன்றதொரு வடிவத்தில் மனதைக் கவரும் வண்ணம் எடுப்பாக இருப்பதே இதன் முக்கியத்துவம். இதுவரை உலகம் முழுதும் இருந்து சுமார் 41 மில்லியன் மக்கள் வந்து பார்த்து சென்று உள்ளனர் என்று இதன் வருகைப்பதிவாளர் ஏடு குறிப்பிடுகிறது.

எங்கள் பயணத்திட்டத்தில் அங்கே இறங்கிப்பார்க்கலாம் என்று முதலிலேயே கூறி இருந்தாலும், அன்றைய நாள் எங்கள் குழுவினர் சாக்லெட் வாங்குவதிலும், மதிய உணவு அருந்துவதிலும் அதிக நேரம் வீணடித்து விட்டதால், அந்த இடத்தில் பேருந்து நிறுத்தி இறங்கி புகைப்படம் எடுக்க போதிய அவகாசம் இல்லை என எங்கள் பிரயாண வழிகாட்டி திரு. பாலா கண்டிப்பாகக்கூறிவிட்டார். எங்கே இறங்கினாலும் சொன்ன நேரத்திற்கு திரும்பாததற்கு ஒரு தண்டனை போல் இந்த இடத்தை நாங்கள் இறங்கி கண்டு களிக்க முடியாமல் போனது எங்கள் துரதிஷ்டம் என்றே கூறவேண்டும். எங்கள் குழுவினருக்கு, அனைவரும் இந்தியர்களாக இருப்பதினால்தானோ என்னவோ, நேரம் கடைப்பிடித்தல் என்ற ஒரு பழக்கம் மிகவும் குறைவாகவே இருந்தது. திரு. பாலா அவர்கள் பலமுறை இந்த தவறைச் சுட்டிக்காட்டியும், குறிப்பிட்ட சிலர் அதை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை, என் அப்பாவுக்கு நேரம் தவறாமை மிகவும் முக்கியம் ஆதலால் திரு. பாலா குறிப்பிட்ட நேரத்திற்கு பத்துநிமிடம் முன்னதாகவே வரும்படி எங்களையும் இழுத்து வந்து விடுவார்.

தனிப்பட்ட முறையில் செல்லும் போது, அவரவர் விருப்பம் போல் எப்படி வேண்டுமானாலும் நேரம் செலவழிக்கலாம். ஆனால், அதுவே ஒரு குழுவினருடன் செல்லும்போது சரியான நேரம் பின்பற்றுவது மிகவும் அவசியம் என்பதை நம் இந்திய நாட்டினர் உணர்தல் அவசியம். குறிப்பாக நான் இந்தியர்கள் எனக்கூறக்காரணம், கடந்த முறை 2015 -ம் ஆண்டு யுனைடெட் கிங்டம் பயணத்தில் சுமார் 50 பேர் கொண்ட குழுவில் எங்கள் குடும்பத்தைத் தவிர வேறு யாரும் இந்தியர்கள் இல்லை. கனடா, ஆப்ரிக்கா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற உலகின் பல பகுதிகளில் இருந்த மக்களே எங்களுடன் பயணம் செய்தனர். அவர்கள் அனைவருமே நேரம் தவறாமை என்ற விஷயம் மற்றும் வரிசையில் நின்று உணவருந்துவது என்ற விஷயங்களில் மிகுந்த ஒழுங்குடன் இருந்தனர். எங்கள் குடும்பமும் இந்தியாவின் மானம் காப்பது நம் கடமை என்ற பொறுப்புணர்வுடன் சரியாக குறிப்பிட்ட நேரத்திற்கு ஓடி வந்து சேர்ந்து விடுவோம். எனவே அந்தப்பயணத்தில் இவ்வாறு நேரமின்மை என்ற பிரச்னை எழவே இல்லை. இந்தப்பயணத்தில் எங்களுக்கு எங்கள் குழுவால் இந்த வித்தியாசம் நன்கு புலப்பட்டது. இந்தியர்களின் பல்வேறு நல்ல தன்மைகளுக்கு நடுவே இவ்வாறான சிறுசிறு மோசமான குணங்கள் கரும்புள்ளிகளாகத்தாம் தெரிகிறது என்பது எனது தாழ்மையான கருத்து.

மேலும், இவ்வாறான பயணங்கள் கோடை விடுமுறைகளில் செல்லும்போது கூட்டம் உள்ளதும் ஒரு பிரச்சினை எனக்கூறலாம். எங்கே சென்றாலும் உலகம் முழுக்க இருந்து மக்கள் வந்து பார்வையிட வந்துள்ளதால், மிக நீண்ட வரிசையில் காத்திருந்தே நாம் செல்ல வேண்டியுள்ளது. உணவு அருந்தும் இடங்களிலும், குறிப்பாக இந்திய உணவகங்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பல குழுவினருக்கு நேரம் ஓதுக்கீடு செய்து உணவு வழங்குகிறார்கள். அதுவும் நேரம் தவறுவதால் சாப்பிடும் இடங்களிலும் நேரம் சிறிது வீணடிக்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் முதலில் சாப்பிடும் குழுவினர் வெளியேறும் வரை நாங்கள் வெளியே நின்று காத்துக்கொண்டு இருக்கவேண்டியது இருந்தது. இந்த மாதிரி உணவகங்கள் அளவில் மிகவும் சிறியதாகத்தான் உள்ளன. இவ்வாறு விடுமுறைக்காலங்களில் மட்டுமே இவை மிகவும் பரபரப்பாக இயங்கும்.

இவ்வாறான காரணங்களால் அந்த அடோமியம் இறங்கமுடியாமல் பேருந்து உள்ளே இருந்து அந்த அமைப்பு மட்டும் புகைப்படம் எடுத்துக்கொள்ள நேர்ந்தது. எந்த இடம் சென்றாலும் அந்த இடத்தின் பின்னணியில் தங்களையும் சேர்த்து இணைத்து எடுத்துக்கொள்ள விழையும் செலஃபீ பிரியர்கள் மட்டும் கொஞ்சம் மனமுடைந்துதான் போனார்கள். என் மகனையும் சேர்த்துதான். கொஞ்ச நேரம் பேருந்தில் கசமுசவென பேச்சு இருந்தது. திரு. பாலா அவர்கள் ” உங்கள் நேரம் தவறும் குணத்தினால் இந்த இடம் தவறியது. மேலும், இங்கே இறங்கினால் ஆம்ஸ்டர்டாம் நகரின் ஐந்து மணி படகு சவாரிக்கு சென்று சேர முடியாது” என சமாதானம் கூறி அனைவரையும் அமைதிப்படுத்தினார். மேலும், அந்த இடத்தில் மழைத்தூறல் கொஞ்சம் கடுமையாகவே இருந்ததும் ஒரு காரணம்.

அதன்பிறகு அனைவரும் (எங்களையும் சேர்த்துதான்) நன்கு உறங்க ஆரம்பித்துவிட்டனர். இதுவும் நம் இந்தியர்களின் மிகச்சிறந்த ஒரு குணம் என்றே குறிப்பிடவேண்டும். அடோமியம் பார்க்க இறங்க முடியவில்லை என்று கொஞ்ச நேரம் மட்டுமே குறைப்பட்டுவிட்டு, அடுத்த சில மணித்துளிகளிலேயே அதை மறந்து விட்டு நிம்மதியாக உறங்க இந்தியர்களைத்தவிர வேறு யாரால் முடியம்? தூக்கம் என்பது நமக்கு பல தருணங்களில் வரப்பிரசாதமாகத்தான் அமைகிறது. வாழ்வின் பல குறைகளை நிறைவு செய்து அமைதியாகும் தூக்கம் நமது நெருங்கிய தோழமைதானே என்றுமே!

பேருந்தின் வேகம் எங்களைத்தாலாட்டுவது போல் இருக்க, களைப்பு கண்ணை அயரவைக்க நல்ல உறக்கம் என்னையும் ஆட்கொண்டது. பிரஸ்ஸல்ஸ் நகரில் இருந்தே நான் மிகவும் விருப்பப்பட்டு கண்டு ரசித்து வந்த ஒன்று சாலையின் இருபுறமும் மலர்ந்து காணப்பட்ட பல்வேறு அழகிய மலர்க்குவியல்கள். ரோஜா மலர்கள் அவற்றில் இல்லையென்றாலும், அதிகம் காணப்பட்டது டூலிப் மலர்கள்தான். மேலும், பெயர் கூறவோ, அடையாளம் காணவோ முடியாத பல்வகை மலர்கள் சாலையெங்கும் இறைந்து கிடக்கின்றன. அங்குள்ளவர்களுக்கு இது பெரிய விஷயம் இல்லை என்பது போல் வேக நடை போட்டு குளிரில் நடந்து கொண்டிருக்கிறார்கள். பேருந்தில் இருக்கும் எனக்கு மனம் பதைக்கிறது. கீழே ஓடிச்சென்று அவற்றை காணவேண்டும் போன்ற துடிப்பு. அது கண்டிப்பாக நடக்காது என்ற காரணத்தினால் பேருந்தில் இருந்தே ஜன்னல் வழியாக எவ்வளவு ரசிக்க முடியுமோ அவ்வளவு ரசிக்க வேண்டும் என்று தீர்மானித்து கண் அயராமல் பார்த்து வந்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் என்னையும் அறியாமல் உறங்கிவிட்டேன்.

இவ்வாறாக ஒரு மூன்று மணி நேரம் பயணம் செய்து ஆம்ஸ்டர்டாம் என்னும் நீர்சூழ் நகரை அடைந்தோம்.மேற்கு ஐரோப்பாவில் அமைந்திருக்கும் நெருக்கமாக மக்கள் வசிக்கும் ஒரு .சிறு நாடு நெதர்லாந்து (Netherlands) அல்லது ஹாலந்து (Holland) என இரு பெயரிலும் வழங்கப்படும் அழகிய ஒரு நிலப்பரப்பு. ஆம்ஸ்டெர்டாம். அதன் தலை நகர் ஆகும். கடல் மட்டத்தின் கீழ் இருப்பதால் நெதர்லாந்து (நெதர் – கீழை, லேண்ட் – நாடு) என்ற பெயர் வழங்கப்படுகிறது. ஹாலந்து என்ற பெயர் ஹாலோ லேண்ட் (Hollow Land) என்ற அர்த்தத்தால் வழங்கப்படுகிறது. வடக்கு ஹாலந்து நாட்டின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள ஜில் என்ற நகரமே ஆம்ஸ்டெர்டாம்.

எங்கள் பயணத்தில் நான் சந்தித்த அடுத்த நதி ஆம்ஸ்டெல். இந்த நதியின் ஓட்டத்தை முன்னிறுத்தியே நகரம் அமைந்திருக்கிறது. ஆம்ஸ்டெல் என்ற பெயரே டச்சு மொழியில் நீர் சூழ் பகுதி என்ற அர்த்தத்தில் உள்ளது. ஆம்ஸ்டெர்டாம் என்ற பெயர் வரக்காரணம் ஒருமுறை பெரும்வெள்ளம் இந்த நதியில் வந்த போது அதைத்தடுக்க இந்த நதியின் குறுக்கே அணை கட்டப்பட்டது. எனவே ஆம்ஸ்டெல் – டாம் என்பதே காலப்போக்கில் மருவி ஆம்ஸ்டெர்டாம் என மாறியது என்று கூறப்படுகிறது.

மாலை சுமார் ஐந்து மணியளவில் நகரை அடைந்த போது லவ்வர்ஸ் கேனால் க்ரூயிஸ் (Lovers Canal Cruise) என்ற படகுச்சவாரிக்கு செல்ல உடனடியாக வரிசையில் நிற்கவைக்கப்பட்டோம். இந்த நகரின் தனித்தன்மை என்பதே மதகு நீராகாக அலைந்து ஓடும் நதியில், மிதக்கும் படகுகளில் சவாரி செய்யும் ஆனந்தமே. இந்த நகர் பார்க்க கிட்டத்தட்ட வெனிஸ் எனும் மிதவை நகரம் போலவே தென்படுகிறது. வெனிஸ் நகரத்தின் மாதிரி என்ற வழக்கும் இந்த நகரைப்பற்றி உள்ளது.

எங்களுக்காக ஒதுக்கப்பட்ட படகில் எங்கள் குழுவினருடன் மற்றும் பல சுற்றுலா பயணிகளையும் சேர்த்து மொத்தம் நூற்றி இருபது பயணிகள் பிரயாணிக்கக்கூடிய அளவில் வரிசையில் நிறுத்தி வைத்திருந்தார்கள். இந்த மாதிரிப் படகுகளில் பயணம் செய்ய ஆன்லைன் மூலமாக எங்கள் குழுவிற்காக முதலிலேயே பதிவு செய்யப்பட்டுஇருந்தது. அங்கேயே சீட்டு வாங்கினாலும் சிறிது காத்திருந்து படகு சவாரி போகலாம். சுமார் ஒரு மணி நேரம் வரும் இந்த சவாரியில் நமக்கு ஒரு காதில் மாட்டக்கூடிய ஹியர் போனும் அதன் மறுபுறம் ரேடியோ மாதிரி உள்ள, படகிலேயே நம் முன் இருக்கையின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள கருவியில் பொருத்தும் விதமானதாக உள்ள ஒரு நீண்ட ஒயர் தரப்படுகிறது. இருக்கையில் அமர்ந்து அந்த கருவியில் ஒயரை பொருத்தி காதில் ஹியர் போனைப்பொருத்தி அந்த ரேடியோ போன்ற கருவியில் இருக்கும் மொழியை தேர்ந்தெடுத்து (ஆங்கிலம், ஜேர்மன், பிரெஞ்சு, டச்சு போன்ற ஐரோப்பிய மொழிகளுடன், ஹிந்தியும் உள்ளது. தமிழ் கிடையாது) நன்கு சாய்ந்து அமர்ந்து கொண்டால், அழகாக ஆடியோ நமக்கு ஒவ்வொரு இடத்தையும் விளக்கிக்கூறுகிறது. ஆடியோ கூறும் விஷயங்களுக்கு தொடர்புடைய இடம் படகுச்சவாரியில் நமக்கு கண்முன்னே காட்சி அளிக்கிறது.

மிகவும் அமைதியான மதகு நீர். கரையின் இருமருங்கும் பல்வேறு விதமான கட்டிடங்கள், சாலைகள், சாலையில் பயணிக்கும் வாகனங்கள் அதில் பெரும்பாலும் இரண்டு சக்கர சைக்கிள்கள், மோட்டார் பைக்குகள், அதி வேகமாக நடை போடும் மக்கள் என அனைத்து காட்சிகளும் கண் முன்னே சினிமா படம் போல் புலப்படுகின்றன. நாம் பயணம் செய்யும் படகு பல பாலங்களைக்கடந்து சீரான வேகத்தில் செல்லுகிறது. இந்த மாதிரியான மதகுகள் சுமாராக 165 எண்ணிக்கையில் அந்த நகரில் உள்ளன. மேலும் இந்த மாதிரியான படகு சவாரியில் சுமாராக 60 மைல்கல் தொலைவு பயணிக்கலாம் என்ற தகவல் தெரிகிறது. தோராயமாக 1200 சிறு சிறு பாலங்கள் இந்த மதகு நீரின் பாதையில் உள்ளது என்றாலும், இந்த நகரின் மையப்பகுதியில் சுமார் 100 பாலங்கள் மட்டுமே உள்ளது.

அதிலும் Reguliersgracht என்னும் மதகும் Herengracht என்னும் மதகும் சேரும் வியூ பாயிண்ட் புகைப்பட நிபுணர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தவல்லது. இந்த இடத்தின் சிறப்பு யாதெனில், அங்கே உள்ள ஒரு பாலத்தின் கீழ் இருந்து நோக்கினால் தொடர்ச்சியாக 07 பாலங்களைக்காணலாம் என்பதும், இன்னொரு பகுதியில் இருந்து நோக்கினால் வெவ்வேறு திசையில் உள்ள 15 பாலங்களையும்காணமுடியும் என்பதே. இது மிகவும் ரசிக்க வேண்டிய, காணக்கிடைக்காத அரிய காட்சி என்பதில் ஐயம் சிறிதும் இல்லை.

நாம் பயணம் செய்யும் படகு பல பாலங்களைக்கடந்து சீரான வேகத்தில் செல்லுகிறது.

– பாலத்தினூடு படகுப் பயணத்தின்போது –

கரையின் இருமருங்கும் காணப்படும் கட்டிடங்களில் சிலது அருங்காட்சியகமாக தென்படுகிறது. அவற்றை இறங்கி ரசித்து பின் படகில் ஏறி சவாரி செய்யும் உள்ள வசதிகளும் உள்ளது. ஆனால் எங்கள் பிரயாணத்திட்டத்தில் வெறும் படகு சவாரியில் போவது மட்டுமே உள்ளது என்பதால் நீரில் மிதந்து கொண்டே அந்த அருங்காட்சியகத்தின் வெளிப்புற தோற்றத்தை கண்டு ரசித்தோம். அந்த நகரின் முக்கிய வீதியாக சிவப்பு விளக்கு வீதியையும் நாம் கடந்து செல்கிறோம். ஆம்! நீங்கள் நினைப்பது சரிதான். அது பதினான்காம் நூற்றாண்டில் கப்பலில் பயணித்து வரும் மாலுமிகள் மற்றும் கடல் பயணிகள் தங்கள் பெண் துணையை தற்காலிகமாகத்தேடும் இடம்தான் அது. அந்த பெயருக்குக்காரணம் சிவப்பு நிற விளக்குகள் அந்த பெண்கள் வசிக்கும் இருப்பிடங்களை அலங்கரிப்பதே ஆகும். இன்றும் அந்த வீதி அதே நிறத்துடன் கூடிய நியான் விளக்குகளால் இருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால் இப்போது அந்த மாதிரி இல்லாமல் தங்கும் அறைகள் கொண்ட ஹோட்டல்கள் மற்றும் காபி ஷாப்புகள் என்று மாறியுள்ளது. எனினும் சட்டப்படி அனுமதிபெற்ற சிவப்பு விளக்குத்தொழிலும் அங்கே நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளது.

படகில் பயணம் செய்யும் போதே நீரின் நடுவே மிகப்பெரிய டைட்டானிக் படகு போன்ற தோற்றத்துடன் கூடிய ஒரு கட்டிடம் காணப்படுகிறது. அது ஆம்ஸ்டெர்டாம் நகரின் பொது நூலகம் எனக்குறிப்பிடப்படுகிறது. மேலும், அந்த நகரின் கதீட்ரல் என்னும் கிறித்துவ புனிதத்தலங்களும் கம்பீரமாக காணப்படுகின்றன.

டச்சு இனத்தவரே இங்கு அதிகம் உள்ளதால் டச்சு மொழியே இந்நகரின் பிரதான மொழியாகும். எனினும், ஆங்கிலம் பயன்படுத்தினாலும் இங்கே பிழைத்துக்கொள்ள முடியும். பெரும்பான்மையோர் ஆங்கிலம் சரளமாகவே பேசுகின்றனர்.

இந்த ஊரில் நாங்கள் மிகவும் பார்த்து வியந்த இன்னொரு விஷயம் சைக்கிள் அதிகம் பயன்படுத்தும் மக்கள். நம்மூரில் நாம் அதிகம் பார்க்கும் கார்கள், பேருந்துகள் போல இங்கே சாலையில் நாம் பயணிக்கும்போது நாம் அதிகம் பார்ப்பது சைக்கிள் ஓட்டிகளே. தலையில் ஒரு இரும்பு சட்டி போன்ற ஒரு சிறிய தலைக்கவசம் அணிந்துகொண்டு, சைக்கிள் மீது குப்புறப்படுப்பது போன்ற தோற்றத்துடன் கவனத்தை சாலையின் மீது மட்டுமே குவித்து அதிவிரைவாக பயணம் செய்யும்

எல்லா வயதிலும் தென்பட்ட மிதிவண்டியாளர்கள் நம்மை ஆவெனக் கவனிக்கவைத்தால், அதைவிட அதிகமாக சாலையின் இருமருங்கும் மிதிவண்டியாளர்களுக்கு மட்டும் என மிளிரும் அழகுடன் கூடிய நன்கு செப்பனிடப்பட்ட ஒரு பாதை, அதன் இருபுறமும் கொஞ்சம் அகலமான நடைபாதைகளுடன், அந்த பாதைக்கென்றே தனியாக ஒரு சிக்னல் அந்த பாதை மற்றும் நடைபாதையை வேறு யாரும் ஆக்கிரமிக்காவண்ணம் பாதுகாப்பு என அசத்தும் அந்த நாட்டின் மேம்பாடு எங்கள் மூக்கில் விரல் வைத்து வியக்கச்செய்தது என்றால் மிகையாகாது. இரு சக்கர வாகனங்களே அந்த சாலைகளை அதிகம் ஆக்கிரமித்தாலும் நம்மூரில் நடக்கும் கொடுமையான இருசக்கர வாகன விபத்துக்கள் இங்கே அறவே கிடையாது என்பது கேட்கவே மகிழ்ச்சியான விஷயம்

அந்த அகல நடைபாதைகளின் விளிம்பில் உள்ள இரும்பு தண்டவாளம் போன்ற ஒரு நீண்ட கம்பியின் அருகில் மிதிவண்டிகள் நிறுத்தி அந்த கம்பிகளுடன் மிதிவண்டியை ஒரு இரும்பு சங்கிலி கட்டி இணைத்து விட்டால் பார்க்கிங் பிரச்சினை முடிந்தது. நிறைய மிதிவண்டிகள் அவ்வாறு நிறுத்தப்பட்டு இருந்ததும் நாங்கள் கண்டோம். டிராபிக் பிரச்சினை என்று அழுது புலம்பும் விஷயம் அங்கே அறவே இல்லை என்பது நமக்கு ஆச்சர்யம் ஊட்டுகிறது. இத்தனைக்கும் அங்கே உள்ள சாலைகள் நம்ம ஊர் சாலைகள் மாதிரிதான் இருக்கிறது. ரொம்ப பெரிய அகலம் எல்லாம் இல்லை.

மேலும் நம்ம ஊர் தேசிய நெடுஞ்சாலை நாட்டின் முக்கிய நகரங்களை இணைப்பது போல், மிதிவண்டிக்கான இந்தத் தனிப்பாதை இந்த நாட்டில் ஒரு பெரிய நெட்ஒர்க் ஆகவே திகழ்கிறது. இந்த நாட்டின் நல்ல குளுமையான தட்பவெப்பநிலை எத்தனை தூரம் மிதிவண்டியை மிதித்தாலும் பெரிய அளவில் வேர்வை வடிந்து ஓட்டுபவர்களை கஷ்டப்படுத்தாமல் இருப்பதும் இயற்கையின் வரப்பிரசாதமே உடல் நலத்திற்கும், சுற்றுசூழலின் தன்மைக்கும் நன்மை பயக்கும் மிதிவண்டி சாலையின் போக்குவரத்து நெரிசல் மற்றும் பார்க்கிங் பிரச்சினையையும் தவிர்க்க வல்லது என உணர்ந்து அதை சரியான முறையில் ஊக்குவித்து சாலையிலும் சரியான கட்டமைப்பு செய்து கொடுத்து நம் வாயை பிளக்க வைத்து பெரும் வியப்பில் ஆழ்த்திய நெதர்லாண்ட்ஸ் நாட்டுக்கு ஒரு ராயல் சல்யூட்.

அவர்கள் நாட்டுக்கலாச்சாரமும் மிகவும் வியப்பான விஷயம். இந்த நாட்டு டச்சுக்காரர்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பதில் வல்லவர்கள் போலும். மனித நேயம் அதிகம் மிக்கவர்கள் இந்த நாட்டுக்காரர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது மூன்று முறை கன்னத்தில் முத்தமிட்டுக்கொள்வது நமது வணக்கும் சொல்லுவதற்கு ஈடாகுமாம். நல்லவேளை! நாங்கள் அந்த நாட்டு மனிதர்களை நேருக்கு நேர் சந்திக்கும் அவசியம் ஏற்படவில்லை. ஒரு மணி நேரத்திற்கும் மேலான படகு சவாரியில் இந்த மதகு நீரின் மகத்துவத்தை கண்டு கழித்து விட்டு, கரை இறங்கி, இயற்கை உபாதைகளை முடித்துக்கொண்டு நேராக இரவு உணவு மற்றும் தங்கும் இடம் சேரப்புறப்பட்டோம். அன்றைய நாள் நாங்கள் தங்கியது ஜெல்ட்ராப் என்னும் பெயர் கொண்ட விடுதியாகும். ஆம்ஸ்டெர்டாம் நகரில் இருந்து சுமார் 68 மைல்கல் தொலைவில் அமைந்த ஒரு அழகிய விடுதி அது. இரவு உணவு அந்த விடுதியின் உணவுக்கூடத்திலேயே வெளியே இருந்து வரவழைக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. எங்கள் குழுவினர் அனைவரும் மூட்டை முடிச்சுக்களை அவரவருக்குக்கொடுத்த அறைகளில் கொண்டு சேர்த்தி விட்டு, பிறகு கீழ்தளத்தில் அமைந்த உணவுக்கூடத்தில் இரவு உணவுக்கு வந்தனர்.

இதில் ஒரு விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு ஊரிலும் உள்ள தங்கும் விடுதிகளில் கதவுகள் திறக்க வேறு வேறு மாதிரி சாவிகள். நமது ஊர் திண்டுக்கல் பூட்டு சாவி மாதிரி அல்லாமல், சிறிய அட்டை அதில் உள்ள பார் கோடு எனப்படும் ஒரு வித பாஸ்வோர்ட். அதை சரியான முறையில் கதவு கைப்பிடியில் உள்ள சிறிய துவாரத்தில் நுழைத்தால் உடனே ஒரு இளம் மஞ்சள் நிற விளக்கு பளீரிடும். உடனே நாம் கதவின் கைப்பிடியை கீழ் அழுத்தித் திறக்க வேண்டும். சிறிது காலம் தாழ்த்தினாலும் திரும்பவும் லாக் ஆகிவிடும். சரியான முறையில் அந்த அட்டையை துவாரத்தில் நுழைக்கவில்லையென்றால் சிறு சிவப்பு விளக்கு மின்னி கதவு திறக்காது என்று காண்பிக்கும்.

இதைக் கற்றுக்கொள்வதே மிகப்பெரிய கலை. என் மகன் இருப்பதால் (அவன் ஒரு புலி இந்த மாதிரி விஷயங்களில் – எந்த இடத்திலாவது பிரீ wifi கிடைக்குமா அல்லது பாஸ்வோர்ட் இருந்தால் அதை எப்படி உடைத்து இன்டர்நெட் பயன்படுத்துவது எனப் பல விஷயங்களில் கில்லாடி) எங்களுக்கு அவன் அதை சரியாகச்செய்து விடுவான். ஆனால் எங்கள் குழுவினரில் பலர் இதைக் கண்டுபிடிக்கத் திண்டாடி அலைவார்கள், இதைத்தவிர சில இடங்களில் கதவில் அந்த துவாரமும் இருக்காது. அட்டையை எங்கெங்கோ நுழைத்துப்பார்ப்பார்கள். எங்களுக்கும் தெரியாமல் போய் இருக்கும், என் மகன் அதை கண்டுபிடிக்காவிட்டால். அதில் அந்த அட்டையின் பார் கோடை கதவின் ஒரு பகுதியில் காட்டினால் கிளிக் என்ற சத்தத்துடன் கதவு திறக்க தயாராகி விடும். இவ்வாறாகக் கதவுடன் போராடி உள்ளே நுழைந்து போனால் எங்கே என்ன இருக்கிறது என்று பார்க்க சில மணித்துளிகள் செலவழிந்துவிடும். நிறைய இடங்களில் கண்ணாடிக்கதவுகள்தான் என்பதால், கழிவறை எங்கே என்றே கண்டுபிடிக்க ‘துப்பறியும் சாம்பு’ போல் துழாவ வேண்டும். இதெல்லாம் தனிக்கதை.

அன்றைய இரவு உணவு அருந்தி விட்டு அடுத்த நாளுக்கான உடைகளை தயார் செய்து விட்டு குளிரில் நடுங்கிக்கொண்டே படுக்கையின் மீதுள்ள கனமான போர்வையை இழுத்துபோர்த்திக்கொண்டு அன்றைய நாளுக்கான நன்றியை கடவுளிடம் மனதில் கூறிவிட்டு உறங்கச்செல்லும் முன் மனம் கூறியது என்னிடம் “நாளை உன் வாழ்வின் மிக இனிமையான வண்ணத்தருணங்கள் நிறைந்த நாள்” என்று. காரணம் தெரியாத சந்தோஷத்தில் மனம் திளைத்துக்களைத்தது. பின் அமைதி கொண்டது உறக்கத்தில். ஏனெனில் அடுத்த நாள் நாங்கள் செல்லவேண்டிய இடம் நெதர்லாண்ட்ஸ் நாட்டில் அமைந்துள்ள உலகின் தலைசிறந்த பூந்தோட்டமான, என் மனக்கனவுகளில் என்னை வட்டமிடும் Keukenhof என்ற பெயருடன் கூடிய டூலிப் தோட்டம்.

ஏப்ரல் 27, 2017    வியாழக்கிழமை

பூக்களை சந்திக்கும்போது புதிதாய் நாம் பிறக்கிறோம், மலர்கிறோம்

இன்றைய தினம் விடியும் போதே மனம் சிரித்துக்கொண்டே விழித்தது. இன்று உனக்கு பள்ளி விடுமுறை நீ செல்ல வேண்டியதில்லை எனக்கூறினால் எவ்வாறு குழந்தை கும்மாளமிடுமோ அதுபோல் மனம் ஒரு சந்தோஷத்தில் திளைத்தது. காரணம் நான் மீண்டும் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது என நினைக்கிறேன். என் வாழ்வின், என் கனவுகளின் பிரதானமான ஒரு சொர்க்கத்திற்கு நான் உயிர் இருக்கும் போதே செல்லப்போகிறேன் என்ற ஒரு மிதமிஞ்சிய சந்தோஷமே அது. வேக வேகமாக புறப்பட்டு கீழே உள்ள உணவகம் சென்று இலை தழை மற்றும் குதறி வைத்துள்ள முட்டை (Scarambled Egg- குதறி வைத்த தோற்றத்தில்தான் இருக்கும்) என எதையோ ஒன்றை அள்ளி வாயில் திணித்துக்கொண்டு, பெட்டி படுக்கைகளை பேருந்தில் ஏற்றி இருக்கையில் அமர்ந்தாலும் மனம் அமைதி கொள்ளவில்லை. எப்போதடா அந்த மலர்களை சந்திப்போம் என்ற பரபரப்பு என்னில் அதிகம் ஆகிக்கொண்டிருந்தது.

எங்கள் குழுவினரோ எப்போதும் போல் நீட்டி நெளித்துக்கொண்டிருந்தார்கள். திரு. பாலா பலமுறை பேருந்துக்கு வரச்சொல்லியும் என் அப்பா சொல்வது போல ஆடி அசைந்து கொண்டிருந்தார்கள். எப்போதுமே காலை எட்டுமணிக்கு பேருந்தில் ஆஜராக வேண்டும் என்றால், குறைந்தது எட்டே முக்கால் மணிக்குத்தான் வந்து சேர்வார்கள். ஆனால் பேருந்தின் உள்ளே வந்து தங்கள் பைகளை இருக்கைகளில் வைத்து இடம் பிடித்துவிடுவார்கள். நாங்கள் ஏறி பார்த்தால் எல்லா இருக்கைகளிலும் ஏதாவது ஒரு பை வைத்து பதிவு செய்யப்பட்டு இருக்கும். ஆட்கள் மட்டும் உள்ளே வரமாட்டார்கள். திரும்பவும் உணவருந்தும் அறைக்கு சென்று ஜூஸ் அல்லது காப்பி குடித்துக்கொண்டு அமர்ந்திருப்பார்கள்.

இந்தியாவில் நாம் கண்டு எரிச்சலாகும் அத்தனை வித்தைகளையும் அங்கே நாங்கள் காண முடியும். சில நாட்கள் நாங்கள் பேருந்தின் உள்ளே உக்கார முடியாமல் நின்று கொண்டே காத்திருக்க நேரிடும். கைப்பை வைத்து போன ஆட்கள் வந்து அவர்கள் பதிவு செய்த இடத்தில் (ஒரே ஆள் இரண்டு மூன்று இருக்கைகள் பதிவு செய்து வைத்திருப்பார்) நல்ல இடம் அவர்கள் தேர்வு செய்துவிட்டு போனால் போகுது என்பது போல் எங்களுக்கு இடம் கொடுப்பார்கள். பல சமயங்களில் எனக்கு கடும் கோபம் மூண்டது உண்மை. ஆனால் ஒரு நல்ல சுற்றுலாவை நாம் கெடுக்கக்கூடாது என்ற காரணமும், என் அப்பா எப்போதுமே இந்த மாதிரி பிரச்னை செய்வதை விரும்ப மாட்டார் என்பதாலும் அமைதி காத்து இருந்தேன்.

இவற்றை தவிர்க்க என் அப்பா  ஓர் உபாயம் செய்தார். நாங்கள் கிளம்பி வந்து உணவருந்தும் முன்னமே என் அப்பா வந்து தன் காலை உணவை முடித்துக்கொண்டு பேருந்து கதவு திறந்ததுமே உள்ளே சென்று இரு இருக்கைகள் இடம் பிடித்து அமர்ந்து விடுவார். அதில் கூட முதல் இருக்கைகள் ஒரு குறிப்பிட்ட தம்பதியினர் தினமும் பிடித்து அமர்ந்து விடுவர். என் அப்பா ஒரு மத்திய பகுதியாக இரு வரிசை (ஒவ்வொரு வரிசையிலும் இரு இருக்கைகள் மட்டும்) போட்டு வைப்பார். இவ்வாறு எங்கள் இருக்கைகள் உறுதி செய்வது அன்றாடம் ஒர் எரிச்சலான வேலையானது.

இன்று அந்த எரிச்சல் மனதில் தோன்றவே இல்லை. எப்படியாவது இந்தக் கும்பல் சீக்கிரம் பேருந்து வந்தால் போதும் என்று தோன்றியது. எனக்கு மட்டும் பறக்கும் சக்தி இருந்தால் இப்போது இப்படியா பரபப்புடன் அமர்ந்திருப்பேன்? நொடிக்கணத்தில் பறந்து போய் என் இனிய மலர்களை இந்நேரம் தரிசித்து இருக்க மாட்டேனா? காத்திருத்தல் மிகுந்த அவஸ்தை என்பதை மனம் உணரும் சந்தர்ப்பங்கள் இவை. என் அப்பாவுக்கும், என் மகனுக்கும் பெரிதாக எந்த ஆர்வமும் இல்லை. எப்போதும் புது இடம் பார்க்கப்போகிறோம் என்ற உணர்வுடன் புறப்படுவது போல்தான் அன்றும் இருந்தார்கள். என் அப்பா என்னிடம் “என்ன, நம்ம ஊட்டி பிளவர் ஷோ மாதிரி இந்த கார்டன் இருக்குமா?” என்று கேட்டார். “பார்க்கலாம் அப்பா” என்று மட்டும் பதில் உரைத்தேன். என் மகன் பெரிதாக பூக்களை ரசிப்பவன் அல்ல. அவன் எப்போதும் போல் காதில் ஹியர் போன் மாட்டிக்கொண்டு பாடல்கள் கேட்க ஆரம்பித்தான். கடைசியாக எங்கள் குழுவினர் அனைவரும் பேருந்தில் ஏறியவுடன் பேருந்து அந்த பூந்தோட்டத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தது.   

பேருந்து கிளம்பி சுமார் ஒன்றரை மணி நேரம் பயணித்து ஐரோப்பாவின் பூந்தோட்டம் என்று அழைக்கப்படும் Keukenhof என்ற பூங்காவின் பிரதான நுழைவாயிலுக்குள் நுழைந்தது. இந்த ஒன்றரை மணி நேரப்பயணத்திலேயே வழி நெடுகிலும்    சிறிய வகை பாத்திகளில் இருந்து நீண்ட மலர்க்குவியல் வரை சாலையெங்கும் நமக்கு காட்சி அளித்து நம்மை மாபெரும் விருந்துக்கு தயார்படுத்துகின்றன. கண் இமைத்தால் காட்சி மறையுமோ என்ற அச்சத்தில் கண் இமையாமல் சாலையின் ஓரங்களில் திடீர் தீடீர் என்று தென்படும் மலர்க்காட்சிகளை கண்டு மனதில் பதியவைத்துக்கொண்டே பயணித்தேன். “இங்கே பாரு, ஐயோ இங்கே பாரு! ” என்று கூவியபடியே பாட்டு கேட்கும் என் மகனை இழுத்து இழுத்து இந்தக் காட்சிகளை காட்ட முற்பட்டேன். என் மகனோ “இந்த பூவெல்லாம் கார்டனில் போய்தான் பார்க்கப்போறோமே, அப்புறம் எதுக்கு இப்படி இதுக்கு போய் இவ்வளவு குதிக்கீறீங்க?” என்று சலித்துக்கொண்டான். எனினும் எனக்கு என் சந்தோசத்தை கட்டுப்படுத்தவே இயலவில்லை.

அந்த பூந்தோட்ட பிரதான வாயிலில் இருந்து இன்னும் ஐந்து மைல்கல் சென்றால்தான் டிக்கெட் வழங்கும் முன் வாயிலை அடைய முடியும். போகும் வழியெங்கும் தனிப்பட்ட தோட்டங்கள் நீண்ட நீண்ட பாத்திகளில் பல நிறங்களில் இந்த துலிப் மலர்கள் பயிர் செய்து வைத்திருக்கிறார்கள். அந்த மாதிரி ஒரு தோட்டத்தில்தான் தமிழ் சினிமாவில் திரு.விக்ரம் நடித்த ‘அந்நியன்’ திரைப்படத்தில் இடம் பெறும் “குமாரி” என்ற பாடலில் திரு.விவேக் போன்றோர் ஆர்மோனியம் இசைக்க கதாநாயகன் கதாநாயகி பின்னே பாடிக்கொண்டே செல்லும் பாடல் காட்சிகளை படமாக்கி உள்ளனர்.

தோட்டத்தின் முன் வாயிலுக்கு ஒரு மைல் தொலைவிலேயே பேருந்து மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடம். பலவிதமான பேருந்துகள் மற்றும் வாகனங்கள் நாங்கள் செல்லும் முன்பே அந்த நிறுத்தும் இடம்தனில் குவிந்து கிடந்தன. எங்கள் பேருந்து நிறுத்த இடம் தேடி மூன்று நான்கு வரிசை உள்ளே சென்று சரியான இடம் தேடிக்கொண்டிருந்தார் எங்களை வாகன ஓட்டுநர். அதற்குள்ளே திரு. பாலா அவர்கள் எங்களுக்கு அந்த தோட்டத்தைப்பற்றி சில விளக்கங்களும் அங்கே உள்ளே எப்படி செல்ல வேண்டும் என்பற்கான விளக்கமும் கொடுத்துக்கொண்டிருந்தார். அனைவருக்கும் உள்ளே நுழைய நுழைவுச்சீட்டு வாங்கி தரும்வரை யாரும் எங்கும் கலைந்து செல்ல வேண்டாம் எனவும், உள்ளே நுழைந்து குறிப்பிட்ட இடம்வரை தான் கூட வந்து வழிகாட்டுவதாகவும் கூறினார். தோட்டத்தின் உள்ளேயே இயற்கை உபாதைகளை கழிக்க கழிவறை வசதி உள்ளதால் உள்ளே சென்று பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் கூறினார்.

பின் அனைவரும் இறங்கி தோட்ட நுழைவுவாயிலின் ஒரு 300 அடி தூரத்தில் கும்பலாக ஒரு ஓரத்தில் நின்று திரு.பாலா அவர்களின் வரவுக்காக நுழைவுச்சீட்டுக்காக காத்திருந்தோம். என் மனமோ தூரத்தில் தெரிந்த தோட்டத்தின் வாயிலிலேயே தெரிந்த மலர்க்குவியலை நோக்கி என்னைத்தாண்டி விரைவாக ஓடியது. அங்கே மிகப்பெரிய கூட்டமாக பலவித மலர்கள் அவற்றை வலம் வந்து வந்து புகைப்படம் எடுக்கும் பலநாட்டு சுற்றுலா பயணிகள் என கூட்டம் மொய்த்துக்கொண்டிருந்தது இங்கிருந்தே காண முடிந்தது

திரு. பாலா வந்தவுடன்தான் தெரிந்தது எங்கள் குழுவினர் சிலர் அங்கே இல்லை என்று. காலையில் இருந்தே இவ்வாறு தாமதம் செய்யும் சிலரின் மேல் சிறிது கோபத்தில் இருந்த திரு.பாலா அவர்கள், தற்போது கடுமையாக “51 நபர்களுக்கு சீட்டு வாங்கியுள்ளேன். அந்த ஆட்கள் அனைத்து பேரும் இங்கே இருந்தால்தான் இந்த சீட்டு கையில் கொடுக்க முடியும்” என கூறிவிட்டார். மற்றவர்கள் எங்களுக்கு கொடுங்கள் என்று கேட்டபோது, காணாமல் போன அவர்கள் வந்தால்தான் முடியும் எனக்கூறிவிட்டார், அதற்கிடையில் ஆடி அசைந்து காணாமல் போனவர்கள் (இயற்கை உபாதைக்கு சென்று விட்டனர் என காரணம் கூறினர்) வந்து சேர சண்டை இன்னும் பலம் ஆகியது. அவர்கள் அவர்களுக்கு உள்ளேயே ஒருவர் மற்றொருவரை தாக்கி அவர்கள் மொழியான பெங்காலியில் காரசாரமாகப்பேசிக்கொண்டனர். திரு. பாலா அமைதியாக தள்ளி நின்று கொண்டு “முதலில் உங்கள் சண்டையை முடியுங்கள். பிறகு உள்ளே செல்லலாம்” என்று கூறிவிட்டு, எங்களிடம் இவர்கள் முதலில் ஒரு முடிவுக்கு வரட்டும் என்றும் கூறிவிட்டார். எனக்கோ பைத்தியம் பிடிப்பது போன்ற நிலை. கைக்கெட்டிய மனம் விரும்பும் தின்பண்டம் வாய்க்கெட்டாமல் போனது போல் ஒரு வருத்தம். மிக அழகிய மலர்க்கூட்டம் மலர்ந்து நடனம் ஆடிக்கொண்டிருக்கையில், அவற்றின் காட்சியை கண்டு ரசிக்க இயலாமல், இந்த மனிதர்களைச் சகிக்க வேண்டியுள்ளதே என்ற வெறுப்பு மேலோங்கியது.

கடைசியாக பத்து நிமிடம் வீணடித்து சண்டை பிடித்துவிட்டு, இடையில் நுழைந்த சில ரெப்ரீ( எங்களுக்கு அவர்கள் மொழி தெரியாததால் இந்த சமாதானப்படுத்தும் தொழிலுக்கு போகவில்லை) தயவால் சண்டை முடிவுக்கு வந்து சமாதானம் ஆகி ஒருவழியாக தோட்ட நுழைவாயிற்கு செல்ல ஆரம்பித்தோம். நான் முதலில் குதித்து (நிஜமாகவே குதித்துதான் ஓடினேன்) ஓடி நுழைவாயிலின் முன்னே எங்களை வரவேற்க காத்திருந்த மலர்க்கூட்டத்தை கண்களால் பருக மிக அருகில் சென்றேன். அதற்குள் திரு.பாலா அவர்கள் “மேடம்! இதெல்லாம் ஜுஜுபி. உள்ளே போலாம் வாருங்கள்’ என்று கூறி உள்ளே செல்லும் கூட்டத்தின் வரிசையில் நிறுத்தி வைத்து விட்டார். குழந்தைக்கு விருப்பமான பொம்மையை கண்ணில் காட்டி காட்டி பிடுங்குவது போன்றேதான் நடந்து கொண்டிருந்தது.


– தோட்ட முகப்பில் உள்ள மலர்க்குவியலுடன் பேரானந்தத்தில் நான் –

வரிசையில் நின்று உள்ளே நுழையும்போது புது மணமகள் திருமணம் ஆகி புகுந்த வீட்டில் அடி எடுத்து வைக்கும் போது என்ன விதமான மனநிலையில் இருப்பாளோ அதைவிட பலமடங்கு சந்தோசம் கலந்த இனம் புரியாத ஆச்சர்யம் என்னை ஆட்கொண்டது. உள்ளே முதல் அடி எடுத்து வைத்ததும், நம்மைச்சுற்றி எல்லா திசைகளிலும் எல்லா வழிகளிலும், எங்கெங்கு நோக்கினும் மலர்களே. என் வாழ்வில் என்றோ நான் கண்ட என் கனவுகளில் என்னை வலம் வந்த மலர்கள் இப்போது நான் நிஜத்தில் வலம் வரக்காத்திருக்கின்றன , எனக்காக. ஆம்! இது மிகையல்ல. உலகெங்கும் இருந்தும் பலவேறு தரப்பட்ட பயணிகள் ஈக்களை போல் பூக்களை மொய்த்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு அவை வெறும் வண்ண மலர்கள் மட்டுமே. ஆனால் மலர்கள் எனக்கு சுவாசம் அல்லவா! என் மூச்சுக்காற்றை நிரப்ப, வழங்க, ஏன் நிறுத்தவும் சக்தி வாய்ந்த கடவுளின் படைப்பில் கடவுளுக்கே நிகரானவை அல்லவா? ஒரு பூந்தோட்டத்தைப் பார்த்து எதுக்கு இவ்வளவு அலம்பல் என்று இதைப்படிப்பவர்கள் யோசிக்கலாம். நம் மனிதர்களுக்கு சலவை செய்த உயிரற்ற பணம் என்னும் காகித நோட்டுக்கள் கொடுக்கும் இன்பம், உயிருள்ள, நம்மை நோக்கி இதழ் விரித்து சிரித்து, தலையாட்டி நம்மை அழைத்து அன்பைச் சொரியும் பூக்கள் தரமுடியாமல் போனது மனிதனின் மாபெரும் துரதிஷ்டம் என்றுதான் இங்கே நான் பரிதாபப்பட வேண்டியுள்ளது. வேறு என்ன சொல்ல?

பணம் படைக்க முடிந்த மனிதனால் மனம், மணம் நிறைந்த மலர்களைப் படைக்க முடியுமா? கடவுளுக்கு நாம் அர்ப்பணித்து அலங்காரம் செய்தப இரசிப்பது மலர்களால் மட்டுமே. சில கோவில்களில் சில விசேஷ நாட்களில் பணத்தில் மாலை செய்து கடவுளுக்கு போட்டு அதை பெருமையாகப் படம் எடுத்து பத்திரிக்கைகளில் இன்று இந்தக்கடவுளுக்கு ஆயிரம் ரூபாய் நோட்டு அலங்காரம் என்று தம்பட்டம் அடித்து இருப்பதைப்பார்க்கும் போது பக்தியை விட இந்த பைத்தியக்காரத்தனத்தை நினைத்து சிரிப்பு பொத்துக்கொண்டு வரும். அற்ப மனிதப்பதர்கள் சாற்றிய ஆயிரம் ரூபாய் நோட்டு ஒரு நாள் செல்லா நோட்டாகி மனிதனுக்கே பித்து பிடிக்க வைத்தது. ஆனால் கடவுளின் படைப்பில் வாரி இறைத்த வண்ணங்களில் சின்னஞ்சிறு உயிர்க்குழைந்தைகளாக தோட்டத்தில் மலர்ந்த மலர்கள் வாடிப்போகுமே தவிர செல்லாமல் சென்றதாய் சரித்திரம் இல்லை.

இந்தப்பூந்தோட்டம் புகுந்து தன் நிலை இழந்து பூக்களின் உலகில் ஐக்கியம் ஆகுமுன் , இந்த இடத்தைப்பற்றி சில குறிப்புகள் நம் நண்பர்கள் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம் என்று கருதி வழங்குகிறேன்.

தெற்கு ஹாலந்தில் Lisse என்ற பகுதியில் அமைந்துள்ள Keukenhof என்னும் இந்த ஐரோப்பாவின் பூந்தோட்டம் உலகிலேயே மிகப்பெருமை வாய்ந்த முதல் இடத்தை பிடிக்கக்கூடிய இடம் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. Keukenhof என்பது டச்சு மொழியில் கிச்சன் கார்டன் (Kitchen Garden) என்ற பொருளில் வழங்கப்படுவதாகும். உண்மையில் இந்த இடம் பழம்காலத்தில் இருந்த கோட்டையின் சமையலறைக்கூடம் மட்டும் அல்லாது, மூலிகைச்செடிகள் வளர்க்கப்பட்ட பெருமையும் கொண்டிருந்தது. சுருங்கச்சொன்னால், நமது ஊரில் கூறுவது போல் மூலிகைத்தோட்டம் என்ற வகையாகவே இருந்தது. தற்போது இந்த இடம் இந்த பூந்தோட்டத்திற்காக பெயர் பெற்றது மட்டும் அல்லாது உலக அளவில் பூக்கள் விற்பனை செய்யும் சந்தையிலும் முதல் இடம் வகிக்கிறது.

– மலர்களும் , மங்கை நானும் –

மூலிகை தோட்டமாக இருந்து பூந்தோட்டமாக கொஞ்சம் கொஞ்சமாக மாறிய இந்த இடம் 1949 -ம் வருடம் முதல் கண்காட்சிக்காக திறந்து விடப்பட்டு உள்ளது. சுமாராக 80 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த பூந்தோட்டம் வருடம் முழுதும் அல்லாமல், எட்டு வாரங்கள் அதாவது சுமாராக 56 நாட்கள், அதாவது, மார்ச் மாத மத்தியில் தொடங்கி மே மாதம் 10 -ம் தேதிக்குள் மட்டுமே பார்வையாளர்களுக்கு திறந்து விடப்படும். எனவே அந்த சமயத்தில் மட்டும் உலகெங்கிலும் 100 நாடுகளில் இருந்து தோராயமாக எட்டு லட்சம் மக்கள் இந்த தேவதரிசனம் காண ஓடிவருகிறார்கள் என்பதும் அங்குள்ள கையேட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது. நான் பயணத்திட்டம் வகுக்கும் போதே மே மாத நாட்களை தவிர்க்க இந்த விஷயமே காரணம். மே பத்தாம் தேதியில் இந்த பூங்கா மூடப்பட்டுவிடும் என்று எனக்கு கூறியதால் ஏப்ரல் மாதத்திலேயே சென்று விடவேண்டும் என்று தீர்மானித்தேன். இந்த விஷயம் என் அப்பாவுக்கோ மகனுக்கோ முதலில் தெரியவில்லை. கையேட்டை பார்த்தபிறகு கூறினார்கள் “நல்லவேளை! நாம் இந்தப்பூங்காவை மிஸ் பண்ணவில்லை என்று”

இந்த பூங்காவில் பயிரிடுவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட பூந்தோட்ட பண்ணையாளர்கள் (அந்தப்பகுதியில் வசிப்பவர்கள்) ஏழு மில்லியன் பல்ப் (Bulb) எனப்படும் கிழங்குகளை இலவசமாக ஒவ்வொரு வருடமும் வழங்குகிறார்கள். அவற்றை வைத்து வளர்த்தி பராமரிப்பது மட்டுமே இந்த தோட்டக்கலைத்துறையின் வேலை. இவ்வாறு வளர்ந்து பூத்துக்குலுங்கி, தன்னைக்காண வரும் மக்களை மயக்கத்தில் ஆழ்த்தி பின் எட்டு வாரங்களுக்குப்பிறகு தன் வாழ்நாளின் கடைசி நிமிடங்களுக்கு வரும் மலர்ச்செடிகளை, அதே பூந்தோட்டப்பண்ணையாளர்கள் வந்து கையால் தோண்டி எடுத்து தன் பண்ணைகளில் உள்ள கால்நடைகளுக்கு தீவனமாக எடுத்து செல்வார்களாம்.

இந்தப்பூந்தோட்டத்தில் துலிப் மலர்களைத்தவிர லில்லி மற்றும் ஐரோப்பாவின் இதர மலர்வகைகள் பலவும் பயிரிடப்பட்டுள்ளன. இந்தப் பூந்தோட்ட பண்ணையாளர்கள் வந்து அவர்களே நேரடியாக பயிர் செய்வதால் அவர்களுக்குப் போட்டியும் வருடாவருடம் நடத்தப்பட்டு லில்லி அவார்ட், ரோஸ் அவார்ட் என்ற விருதுகளும் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் புதுப்புது கருப்பொருளை வைத்து புதுப்புது வடிவம் கொடுக்க இந்த பண்ணையாளர்களிடையே கடும் போட்டி நிலவுமாம். இந்த 2017 -ம் வருடத்திற்கான கருப்பொருள் டச்சு டிசைன் என்னும் கம்பளம் விரித்தாற்போன்ற ஒரு அமைப்பு. பல்வேறு கலைஞர்களைக்கொண்டு நிலத்தில் முதலில் வடிவமைக்கப்பட்டு, பின் மலர்கள் பயிரிடப்படுகிறது.

இதில் ஆச்சர்யம் ஊட்டும் விஷயம் யாதெனில், துலிப் மலர்களின் தாயகம் இமயமலைப்பகுதியைச்சேர்ந்த தியான் ஷான் (Tian Shan) என்ற மலைப்பகுதியே ஆகுமாம். துருக்கி வழியாகச் சுல்தான்களால் பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பா எடுத்து செல்லப்பட்ட மலரே இந்த துலிப் வகை. இப்போது அது ஐரோப்பா வகை மலராகிப்போய்விட்டது. மேற்கூறிய இந்த விவரங்கள் அனைத்தும் இந்த தோட்டத்தை பற்றிய ஒரு விரிவான விளக்கம் அளித்திருக்கும் என்பது திண்ணம்.

எங்களுடன் உள்ளே வந்த திரு. பாலா அங்கே எங்களுக்கு இலவசமாக கிடைத்த கையேடு மற்றும் அந்த பூந்தோட்டத்தின் வரைபடம் போன்றவற்றைக் கையில் தனித்தனியாக கொடுத்து, ஒரு குறிப்பிட்ட இடம் வரை வந்து எங்களுக்கு வழிகாட்டிவிட்டு, இரண்டு மணி நேர அவகாசம் எங்களுக்கு கொடுத்துவிட்டு, இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் பிரதான நுழைவு வாயில் வந்து சேரும்படி அறிவுறுத்தி விட்டு திரு. பாலா எங்களை கடைசியாக கழற்றி விட்டார். அந்த தருணத்திற்காகவே காத்திருந்த நான் விடுதலை பெற்ற கிளி போல் சிறகடிக்க ஆரம்பித்தேன். என் கனவுப்பூக்கள் தேசத்தில் எனக்கு இரண்டு மணிநேர விசா. கொஞ்சம் குறைச்சல்தான் என்றாலும் மின்மினிப்பூச்சியின் சிறிய வாழ்வில் அதன் மினுமினுப்பு அதிகம் ஜொலிப்பது போல, இரண்டு மணி நேரத்தின் ஒவ்வொரு நொடியும் துளித்துளியாய் அனுபவிக்க வேண்டும் என்ற தவிப்பு என்னுள் மிகுந்தது.

எங்கே பார்ப்பது எங்கே விடுவது என்று தெரியாத குழப்பம். மலர்களில் எத்தனை வண்ணங்கள் நாம் கண்டிருப்போம் நம் ஊரில்? மீறிப்போனால் ஒரு ஆறு அல்லது ஏழு வகைதான். நம் நாட்டின் பிரதான பூக்கள் மல்லிகை, முல்லை, ஜாதி மல்லி என பொதுவாக வெண்மை நிறத்திலேயும், கனகாம்பரம், ரோஜா மலர்கள் என சில நிறங்களிலும் மட்டுமே நாம் கண்டிருக்கிறோம். ஆனால் இந்த பரந்த தோட்டத்தில் தான் எத்தனை நிறங்கள், எத்தனை காம்பினேஷன், என்ன வர்ண ஜாலங்கள். அடேங்கப்பா! வர்ணிக்க கடவுளே கவியாய் பிறந்து தான் வர வேண்டும்.

ஒரு புறம் மஞ்சள் மலர்க்குவியல். இன்னொரு புறம் ஊதா நிறக்கலவை. இன்னொரு புறம் வெளிர் சிவப்பு, மற்றுமொரு புறமோ அடர் சிவப்பு. அதனிடையே அடர் நீலம், வெளிர் நீலம் கலந்த கலவை ( அட! ஆமாங்க! நீலக்கலர் பூ எல்லாம் இருக்கு), பட்டாம்பூச்சியின் இறகின் மேல் உள்ள கண்போன்ற வடிவமைப்பில் ஒரு டிசைன் உள்ள பூக்குவியல். ஒவ்வொன்றாக பார்த்துப்பார்த்து ஓடி ஓடி என்ன செய்வது என்று அறியாது திகைத்து நின்றேன். ஒவ்வொரு நிற மலரையும் மெதுவாக வருடி என் அன்பைத்தெரிவித்தேன். தலையை ஆட்டி அவைகளும் என் மனவிருப்பதை உணர்ந்ததாக சமிக்சை செய்தன. ஒரு மலர் அருகே குனிந்து மெதுவாக, யாரும் அறியா வண்ணம் வினவினேன் ” உங்களை நான் எப்படி என் ஊருக்கு கூட்டிச்செல்வது?” . என்று.

அந்த மலரும் பதில் கூறத்தெரியாமல் என் முகத்தில் மோதியது. அதனுடனே தோழிக்கூட்டங்களாக கூட இருந்த மலர்கள் எங்கள் மௌன சம்பாஷணையில் தாமாகவே முன் வந்து கலந்து கொண்டன. அவற்றில் ஒன்று வயது முதிர்ந்த காரணத்தினால் முற்றிலும் மிகவும் விரிந்து, அனுபவம் மிகுந்த தோரணையில் என்னிடம் கூறியது “உங்கள் ஊருக்கு நாங்கள் வர முடியாது. எங்கள் சகோதரிகளான ரோஜா மலர்கள் உங்களுக்கு அங்கே உள்ளனர். உன் மனதில் கொண்ட நினைப்பில் எங்களை எவ்வளவு சுமக்க முடியுமோ அவ்வளவு எடுத்துக்கொள். எங்கள் இருப்பிடம் தாண்டி வசிப்பது இயலாத ஒன்று. உன் போல் எங்களை விரும்பும் பல்லாயிரக்கான பார்வையாளர்களுக்காக நாங்கள் இங்கே தினமும் பூத்தது காத்து நிற்பதே கடவுள் எங்களுக்கு கொடுத்த முழுநேர வேலை ” என்று. மனம் கனிந்து இந்த பதிலை ஏற்றுக்கொண்ட நான் வேண்டியமட்டும் அவற்றை என் கண்கள் வாயிலாக மனதில் நிரப்பிக்கொண்டு, பின் அந்த மாமலர்களுடன் சேர்ந்து கொள்ளை கொள்ளையாக புகைப்படமும் எடுத்துக்கொண்டேன்.

இதுவரை எங்கள் பயணத்தை சாதாரணமாக விவரித்து வந்த நான் இந்த இடத்தில் ஒரு அரை வேக்காட்டுக் கவியாகி கற்பனை சம்பாஷணைகளை எல்லாம் கூறியது வாசிக்கும் நண்பர்களுக்கு கொஞ்சம் குழப்பத்தை உண்டாக்கி இருக்கும் என்பதை உணர முடிகிறது. போதையில் ஆங்கிலக்கவிஞர் பைரன் கனாக்கண்டு பாதியில் எழுந்து வடித்த கூப்லா கான் (Kubla Khan) என்ற கவிதையில் அவர் பாதி உளறும் (மன்னிக்கவும்! நம் அறிவுக்கு எட்டாத விஷயம் கவிஞர் கூறும்போது அது கொஞ்சம் செல்ல உளறலாகத்தான் நமக்குப்புலப்படும்) பாவனையில் தன் கனவை வெளிப்படுத்துவது போல, மாமலர்கள் மயக்கம் கொடுத்த போதை என்னை இப்படி உளறத்தான் வைக்கிறது.

அங்கே ஒரு அற்புதம் நிகழ்ந்த விஷயமும் இங்கே உரைக்க வேண்டியதாகிறது. வேறு ஒன்றுமல்ல. மலர்கள் மீது கடுகளவு கூட ஈடுபாடு இல்லாத என் அப்பாவும் என் மகனும் அந்த மாமலர்களின் தாசானுதாசன்களாக மாறிப்போன அற்புத நிகழ்வுதான் இங்கே நான் குறிப்பிட விழைவது. உள்ளே நுழையும்வரை பெரிதாக எந்த ஆர்வமும் காட்டாத இருவரும், இப்போதோ ஓடி ஓடி ஒவ்வொரு மலர்க்கூட்டத்துடனும் நின்று செலஃபீ எடுத்துக்கொண்டதுடன் நான் பேசுவதுபோலவே குனிந்து நின்று நெருக்கமாக மலர்களின் காதுகளில் ஏதோ ஓதுவது போல் எனக்கு தோன்றியது. என் அப்பாவின் சோனி கேமரா சரமாரியாக AK 47 துப்பாக்கி மாதிரி இயங்க ஆரம்பித்தது. அவருக்கு வழிகாட்டியாய் என் மகன்.”தாத்தா! இது மிஸ் பண்ணாதீங்க, இது அதைவிட சூப்பர். ஐயோ இது மாதிரி நான் பார்த்ததே இல்லையே” என்றெல்லாம் டயலாக் எனக்கு காதில் விழுந்துகொண்டே இருந்தது. என் அப்பாவை ஒரு இடத்தில் அவர் விருப்பப்படி புகைப்படம் எடுக்க என் மகன் விடவில்லை. அவர் காமெராவை சரி செய்து இலக்கு நிர்ணயிப்பதற்குள் வேறு இடத்தை நோக்கி கை காட்டி விடுவான். அவரும் சலித்துப்போய் எதை விடுறது எதை எடுக்குறது என்று புலம்ப ஆரம்பித்துவிடுவார்.

– மலர்களில் மனதைப் பறிகொடுத்த மகன் –

ஒரு சில இடங்களில் மரங்கள் முழுதும் இலைகளே பூக்களாய் பல்வேறு வண்ணங்களில். ஐயகோ! எவ்வாறு அதை வர்ணிப்பது? ஒரு மரத்தில் முழுதும் வெள்ளை வெளேரென்று இலைப்பூக்கள். வெறும் வெள்ளை வண்ணமே அந்த மரம் முழுதும். கண் கொள்ளாகாட்சி. என் மகன் என் அப்பாவிடம் “இதற்க்கு பேர் என்ன தாத்தா?” என்று வினவினான், ஏதோ என் அப்பாவிற்கு எல்லா பெயரும் நன்கு தெரிந்தாற்போல். அவரும் சளைக்கவில்லை. ” என்ன பேரா இருந்தா என்ன? பார்த்தா நம்ம ஊர் மல்லிகைப்பூ மரத்தில் காச்சமாதிரி இருக்கு. மல்லிகை மரம் அப்படின்னே கூப்பிடுவமே இதை” என்று பதிலிறுத்தார். என் மகனும், நானும் உண்மைதான் என்று ஆமோதித்து குதூகலித்தோம். அந்த மரத்தின் பெயர் அந்த மரத்தின் தடித்த பாகத்தில் ஒரு இரும்புப்பலகையால் எழுதப்பட்டு .வைக்கப்பட்டு இருந்தாலும் வாயிலும் மனதிலும் நுழையாத வார்த்தைகள். மனம் நிறைந்த பெயர் அல்லவோ மல்லிகை!

நாங்கள் தோட்டத்தை வலம் வரும் சமயம் மனம் கவரும் காட்சி ஒன்று கண்டோம். அழகான ஆறு மாதமே ஆன ஒருஅழகுக்குட்டிக்குழந்தையை அதன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் துலிப் மலர்க்கூட்டத்தின் முன் வைத்து புகைப்படம் எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர். அந்த குழந்தை காமெராவைப்பார்ப்பதற்கு பதில் தன் பக்கம் மலர்ந்து நிற்கும் பூக்களையே வாயில் கைவைத்து பார்த்து வியந்து கொண்டிருந்தது. அவர்களோ “லூசி லூசி” என்று கூப்பிட்டு தன் பக்கம் கவனத்தை திருப்ப முயற்சி செய்து கொண்டிருந்தனர். அவர்கள் பேர் கூப்பிடும் போது லேசாக திரும்பும் குழந்தை சடாரென மலர்களிடமே திரும்பி விடும் காட்சி மிகப்பெரிய துலிப் மலர் அழிச்சாட்டியம் செய்வது போல் பார்வைக்கு இனிமை தரவல்லதாக இருந்தது. இந்தக்காட்சியை நான் என் வீடியோ முறையில் தவறவிடாது பதிவும் செய்தேன்.

இவ்வாறாக பூக்களின் பேரணியில் நீந்தி இடையில் இருந்த வீட்டுவிலங்குகள் காட்சிக்கு வைத்திருந்த பகுதியில் வண்ணத் தோகை விரித்தாடிய மாமயிலின் பின்னணியில் என் அப்பாவை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு, அப்படியே மீண்டும் சென்று அந்த தோட்டத்தின் கடைசியில் அமைந்த விண்ட் மில் எனப்படும் பிரம்மாண்ட காற்றாடி இயந்திரத்தை அதன் படிக்கட்டுகளில் ஏறி மேலிருந்து அந்த தோட்டத்தின் அற்புத வண்ணங்களை மீண்டும் ஒருமுறை கண்களாலும், மனதாலும் பருகிவிட்டு கீழே வந்து வேறு ஒரு வழியாக வரும் சமயம் கண்ணாடி மாளிகை ஒன்று அமைந்துள்ளது.

அங்கே மலர்களின் பல வித வளர்ப்பு நிலைகளை விளக்கும் காட்சியும், பின் அது வளர்ப்பதற்கு தேவையான முறைகள், உரங்கள் என எல்லாவற்றைப்பற்றியும் அந்த தோட்டத்தின் வரலாறு மற்றும் அதன் சிறப்பு பற்றியும் மிகப்பெரிய கண்காட்சி வைக்கப்பட்டு உள்ளது. அவற்றையும் பார்த்துவிட்டு, அங்கிருந்து போகும் வழியில் டச்சு டிசைன் (Dutch Design) என்ற பெயரின் ஒரு பிரம்மாண்டமான வடிவத்தில் கொடியின் வடிவம் போன்ற வகையில் பூக்கள் வளர்க்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஒரு உயரமான இடத்தில் இருந்துபார்க்கும் வண்ணம் அந்த இடம் அமைந்துள்ளது. நமது வாசலில் விசேஷங்களில் கலர் கோலப்பொடிகளில் நாம் போடும் நேர்த்தியான ரங்கோலிகளைப்போல் நம்மை வியப்பிலாழ்த்தும் வண்ணம் அந்த வடிவம் பலவண்ண மலர்களைக்கொண்டு பயிர்செய்யப்பட்டு பார்வைக்கு மிகவும் சிங்காரமாக தெரிகிறது.

ஒரு புறம் மஞ்சள் மலர்க்குவியல். இன்னொரு புறம் ஊதா நிறக்கலவை. இன்னொரு புறம் வெளிர் சிவப்பு, மற்றுமொரு புறமோ அடர் சிவப்பு. அதனிடையே அடர் நீலம், வெளிர் நீலம் கலந்த கலவை ( அட! ஆமாங்க! நீலக்கலர் பூ எல்லாம் இருக்கு), பட்டாம்பூச்சியின் இறகின் மேல் உள்ள கண்போன்ற வடிவமைப்பில் ஒரு டிசைன் உள்ள பூக்குவியல். ஒவ்வொன்றாக பார்த்துப்பார்த்து ஓடி ஓடி என்ன செய்வது என்று அறியாது திகைத்து நின்றேன். ஒவ்வொரு நிற மலரையும் மெதுவாக வருடி என் அன்பைத்தெரிவித்தேன். தலையை ஆட்டி அவைகளும் என் மனவிருப்பதை உணர்ந்ததாக சமிக்சை செய்தன. ஒரு மலர் அருகே குனிந்து மெதுவாக, யாரும் அறியா வண்ணம் வினவினேன் " உங்களை நான் எப்படி என் ஊருக்கு கூட்டிச்செல்வது?" . என்று.

அடுத்ததாக, மிக முக்கியமான ஒன்றான (குளிரின் காரணம்) இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக கையேட்டில் உள்ள வரைபடத்தில் தேடி கண்டுபிடித்து அங்கே சென்றோம். மிகவும் சுத்தமாக இருக்கும் கழிவறைகள் ஐரோப்பிய நாடுகளின் எநக்ச் சுற்றுலா தலத்திலும் முக்கியமான இடங்களில் வைக்கப்பட்டு, நன்கு பராமரிக்கப்பட்டு, அதன் இருப்பிடம் நம் கையில் உள்ள வரைபடத்தில் குறிக்கப்பட்டு இருக்கும்.இவ்வளவு பெரிய பூந்தோட்டத்தில் யாருமே எந்த இடத்திலும் பொது வெளியை அசிங்கம் செய்வதில்லை, குழந்தைகள் உட்பட. சரியான முறையில் கழிவறையை பயன்படுத்துகிறார்கள். இந்த விஷயம் இங்கே சொல்வது அவசியமா என்று நீங்கள் உரக்கச்சிந்திப்பது என் காதுகளில் விழத்தான் செய்கிறது. பின் எங்கே சொல்வது? நம் நாட்டில் இது பற்றின பிரக்ஞை சரியாக இல்லாதகாரணத்தினால்தான் எத்தனையோ அவலங்கள். இந்த விஷயம் கண்டிப்பாக நாம் வெளிநாடுகளில் இருந்து கற்றுக்கொள்ளவேண்டிய சரியான ஒன்று என்றே நான் கருதுகிறேன்

முன் வாயிலை அடையும் தருணம்தான் என் கவனத்தில் தெரிந்தது என் ஆங்கில இலக்கிய பாடத்தில் நான் விரும்பி நடத்தும் டாபோடில்ஸ் (Daffodils) என்ற கவிதையின் நாயகியான அந்த மஞ்சள் மாமலராள். என் மனவானில் என்றும் வாடாமலர். இயற்கைக்கவிஞன் வொர்ட்ஸ்வொர்த் (Wordsworth) இவற்றின் அழகில் லயித்து மெய் மறந்ததால்தானோ என்னவோ எனக்கும் அவற்றின் அழகை ரசிக்க காலம்காலமாய் தீராத ஆசை.

கடந்த முறை லண்டன் மற்றும் UK பயணம் மேற்கொண்டபோதும் கூட என்னால் இவற்றை காண இயலவில்லை. அவற்றைக்காணவேண்டிய பாக்கியம் எனக்கு கடவுள் அருளியுள்ளார் போலும். கண்டேன் என் மனவானின் மையத்தில் மாயம் கொண்ட பொன்வண்ண மாமலராம் டாபோடில்ஸ் என்னும் மயக்கு மலராளை! மஞ்சள் நிலவில் மலர்ந்த மலர்க்குவியல்கள்! அதுவும் பொற்குவியலைப்போன்ற கூட்டமாய்!. மயங்கினேன், அவற்றின் மடியில் வீழ்ந்தேன். புதுவேகம் கொண்டு எழுச்சியுற்றேன்.. வணங்கினேன் என் இஷ்டதெய்வத்தை! வாழ்த்தினேன் இயற்கைத்தாயை! ஊர் விட்டு ஊர் வந்து மகாமலர்களிடம் சரணடைந்ததில் பெருமிதம் கொண்டேன். அந்த நொடியில் உலகின் மிகப்பெரும் செல்வந்தராக என்னை உணர்ந்தேன். “குழல் இனிது, யாழ் இனிது தன்மக்கள் மழலை கேளாதோர்” என்ற பழமொழி போலவே “பணம் இனிது பதவி இனிது என்போர் பேரழகு மிளிரும் இந்த சொர்க்கத்தை காணோதோர்” என்ற புதியமொழி நான் அங்கே படைத்தேன். மெய் சிலிர்த்தேன்.

சுமார் இரண்டு மணி நேரம் இரண்டு நொடிகளைப்போல் பறந்து போனதைப்போன்றதொரு பிரமை. பிரதான வாயிலுக்கு திரு. பாலா நிற்கும் இடத்தை நோக்கி வந்தவுடன் என் அப்பா அவர் கையைப்பிடித்துக்கொண்டு என் வாழ்வில் நான் இப்படி ஓர் இடம் இதுவரை பார்த்ததில்லை. நல்ல இடம் கூட்டி வந்துள்ளீர்கள். பார்க்காவிட்டால் கண்டிப்பாக இந்த தருணத்தை இழந்திருப்பேன்” என்று. திரு. பாலா சிரித்துக்கொண்டார். அங்கே வெளியே உள்ள கடையில் காபி மட்டும் ஒரு டீ சூடாக ஆளுக்கு கொஞ்சம் குடித்துவிட்டு குழுவினர் அனைவரும் வரக்காத்திருந்தோம். அப்போது என் அப்பா வியந்த விஷமானது “பூக்கள் இவ்வளவு சந்தோசம் அளிக்குமா?” என்று. என் மனம் இதைப்பற்றித்தான் சிந்தித்துக்கொண்டிருந்தது. வெறும் மலர்கள், மலர்க்கூட்டங்கள் மட்டுமே மனிதனுக்கு இத்துணை ஆனந்தம் அளிக்கமுடியுமா? நடந்திருக்கிறதே!

உள்ளே சாதாரணமாகச்சென்ற என் அப்பாவும் மகனும் போதிமரத்தடி புத்தர்களாக ஞானம் பெற்று வர இந்த மலர்கள் மட்டும்தானே காரணம். என் வாழ்வில் எனக்கு தெரிந்து என் அப்பா பெரிதாக பூந்தோட்டங்களை ரசிப்பவர் அல்லர். அதில் பெரிதாக என்ன இருக்கிறது என்று நினைப்பவர். என் மகனுக்கும் பெரிய அளவில் பூக்கள் விஷயம் ஈர்ப்பு கொடுத்தது இல்லை. ஆனால் இருவருமே இப்போது மலர்களின் வண்ணங்களை கண்ணில் காட்டி வியப்பது எனக்கு பெரும் வியப்பாக இருந்தது.. மலர்கள் மனிதர்களை இன்னும் அதிகம் நேயமிக்கவர்களாக மாற்ற ஆற்றல் படைத்தவை. உடலின் செயல்களுக்கு புத்துயிர் ஊட்டும் இளம் சூரியக்கதிரொளி, உணவு, நிலவின் தண்ணொளி போல ஆத்மாவின் ஆழத்தை தீண்டும் சக்தி படைத்தவை இயற்கையின் இனிய படைப்பான உன்னத மலர்கள். அவை பூமித்தாயின் மலர்ந்த சிரிப்பு எனவும் கொள்ளலாம். மலர்கள் யாருக்காகவும் மலர்வது இல்லை. தனக்காக மட்டுமே மலரும் தன்மை படைத்தவை. மனித மனம் என்னும் மலரும் அவ்வாறு மலர்ந்தால் பூமி எவ்வளவு சுகமாக இருக்கும். நம் கண்களுக்கு விருந்தாக்கி காட்சி தரும் இந்த மலர்களின் வாயிலாக காணாத தூரத்தில் உறைந்திருக்கும் கடவுளைக்கண்டேன் என்பது மிகைப்படுத்தப்பட்ட கற்பனை அல்ல. மனம் நிறைந்த உண்மை.

உள்ளே சாதாரணமாகச்சென்ற என் அப்பாவும் மகனும் போதிமரத்தடி புத்தர்களாக ஞானம் பெற்று வர இந்த மலர்கள் மட்டும்தானே காரணம். என் வாழ்வில் எனக்கு தெரிந்து என் அப்பா பெரிதாக பூந்தோட்டங்களை ரசிப்பவர் அல்லர். அதில் பெரிதாக என்ன இருக்கிறது என்று நினைப்பவர். என் மகனுக்கும் பெரிய அளவில் பூக்கள் விஷயம் ஈர்ப்பு கொடுத்தது இல்லை. ஆனால் இருவருமே இப்போது மலர்களின் வண்ணங்களை கண்ணில் காட்டி வியப்பது எனக்கு பெரும் வியப்பாக இருந்தது

– அப்பாவும், மகனும் மலர்களில் மனதைப் பறிகொடுத்த நிலையில் –

பணம், பதவி, சுயநலம், நடிப்பு, நாடகம், வேஷம், கபடம், தோஷம் எல்லாவற்றையும் தாண்டி, மலர்வனம் கொடுத்த தருணங்கள் இறைவனின் சொர்க்கத்திற்கு உள்ளே உயிருடன் நுழையக் கிடைத்த நியமனம் என்பதே நிதர்சனம். வண்ணங்களை அள்ளி இறைத்து அழகிய குழந்தையின் களங்கமில்லா சிரிப்புடன், ஒயிலாக காற்றில் அசைந்து எங்களின் மனதில் நீங்க இடம் பிடித்த அந்த மாமலர்களை பிரிய மனமில்லாமல் பிரிந்தோம். ருந்தில் அமர்ந்தும் மனம் அந்த இடத்தை விட்டு நகர மறுத்தது. மீண்டும் வழி நெடுகிலும் பூவரிசைகள். இப்போது என் மகனும் என்னுடன் சேர்ந்து “அந்த நிறம் பாரும்மா! இந்த வரிசை பாரு” என பூக்களை ரசிக்க ஆரம்பித்துவிட்டான். மதிய உணவை முடிக்க அங்கே அருகில் உள்ள இந்திய உணவகம் ஒன்றில் உணவு அருந்திவிட்டு ஜெர்மனி நாட்டை நோக்கி பயணிக்க ஆரம்பித்தோம். என் வாழ்வின் மிகச்சிறந்த நாட்களில் இந்த நாளும் ஒன்று என்பதை என் மனக்கல்வெட்டில் ஆழமாக செதுக்கிக்கொண்டேன். பூக்களின் நினைவுகளை அடிமனதில் பதுக்கிக்கொண்டேன்.

akil dharani : akilmohanrs@yahoo.co.in