கண்ணாடி வார்ப்புக்கள்-நாடக நூல் அறிமுக விழா-கண்ணோட்டம்!

கண்ணாடி வார்ப்புக்கள்-நாடக நூல் அறிமுக விழா-கண்ணோட்டம்!நேற்று  ஹரோ சிவிக்  மண்டபத்தில் (12/10/13) அவைக் காற்றுக் கலைக்  கழகத்தினரின் ‘கண்ணாடி வார்ப்புக்கள்’    நாடக நூல்  அறிமுகவிழா  சிறப்பாக  நடைபெற்றது.  சில  நூல்  அறிமுக விழாக்களுக்கு  செல்வதில் நாட்டம் கொள்வதில்லை.அங்கு விழா ஒரு பக்கம் நடக்க சபையோர் இரைச்சலுடன் கதைத்துக் கொண்டிருப்பர்.சிலர் நூலை விமர்சிக்காது ஏதோவெல்லாம் பேசிக்கொள்ள எழுத்தாளர் பாவமாய் உட்கார்ந்திருப்பார்.சில இடங்களில் நூலை விற்றுவிடுவதிலுள்ள ஆரவம்/அவசரம் மற்றவற்றில் கோட்டை விட்டிருப்பர். மாறாக, நூலுக்குள் நின்றபடியே நாடகம்,நடிப்பு,அரங்கியல் சார்ந்த விமர்சனக்களை நேர்த்தியாக திருமதி மாதவி.சிவலீலனும்,திரு.சாம் பிரதீபனும் செய்தனர். தமிழன்,மனம்பேசுது,ஈழகேசரி,புதினம் பத்திரிகைகளின் ஆசிரியர் திரு.ஈ.கே.ராஜகோபால் அவர்களின் வாழ்த்துரை நல்ல செய்திகளைச் சொன்னது.

அரங்கியல் சார்ந்த அனுபவமும்,பட்டப்படிப்பும் கொண்டவர் சாம் பிரதீபன். திருமறைக்கலா மன்றம் மூலமும்,பின்னர் தீபம் தொலைக்காட்சி ‘பிடிக்கல..பிடிக்கல மூலமும் நாடகங்களை ரசிகர்களுக்கென தந்து அசத்தியவர்.அவரின் நீதியின் இருக்கைகள் நாடக நூல் அவரின் நாடக அனுபவதிற்கு சான்றானது. எனவே அவரின் விமர்சனம்  நம் போன்றோரின் தேடலுக்குத்  தீனி  போட்டன எனலாம். நாடகம், கவிதை, அரங்கியல் சார் நூல்களின் மூலம் அறிமுகமான/பரிச்சயமான அமரர். காரை.சுந்தரம்பிள்ளை அவர்களின் மகளான திருமதி.மாதவி சிவலீலனின் விமர்சனம் நூலைப் பல தடவை படித்து உள்வாங்கியது தெரிகிறது.அவரின் தந்தையின் நாடக அனுபவம் இவரின் இலக்கிய முயற்சிகளுக்கு பெரிதும் உதவுக்கின்றன.புலிக்குப் பிறந்தது பூனையாகாது.

பலரிடம்  பார்த்திருக்கிறேன். மேடைக்கு  வந்த பின்பே  நூலைப் பற்றி என்ன பேசலாம் என்று சிந்தித்து  பின் வாய்ச்சவடால் மூலம் ஏதோ ஒன்றை சொல்லிவிட்டு இறங்கிவிடுவர்.நூலை வாசிக்கவே நேரம் இல்லையெனில் நூலை வாங்காமலேயே விடலாம்.நூலை விமர்சனதிற்கென  பெற்றால்  வாசிக்கவேண்டும். மேடையின் முன்னால் காத்திருக்கும் ஆர்வலர்களைக் கவரும் வகையில் பேசவாவது  வேண்டும். அவர்களின் பேச்சில் தான் நூலை வாசிக்கின்ற/வாங்குகின்ற ஆர்வத்தைத் தூண்டமுடியும்.

அந்த வகையில் குறிப்பறிந்து பேசுவதில் வல்லவராக திரு.இளையதம்பி தயானந்தா தெரிகிறார்.நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கியவர் அவ்வப்போது நூல் பற்றி/நாடகம் பற்றி சொல்கையில் விழாவின் நகர்வு சரியான நேர்கோட்டில் செல்கிறதை உணர்ந்தோம்.
இடையில் ஆனந்தராணி குழுவினரின் கண்ணாடி வார்ப்புக்கள் நாடகக் காட்சிகள் உண்மையில் நேரடியாகவே பாத்திரங்களுடன் ஒன்றிப்போன உணர்வை பார்வையாளர்கள் உணர்ந்தனர்.எப்படிப் பாராட்டுவதென்பது புரியவில்லை.மேலும் மெருகு சேர்ப்பது போல அவைக் காற்றுக் கழக நாடகப் பாடல்களை திரு.சத்தியமூர்த்தி,ஆனந்தராணி குழுவினர் பாடி அவையினரின் உற்சாகமான கரகோசத்தைப் பெற்றனர்.

ஈழத்து நாடக உலகம் பலரைச் சந்தித்துள்ளது. ஆங்காங்கே நாடகமன்றங்கள், பாடசாலைகள், கலைஞர் வட்டங்கள், வானொலி/ தொலைக்காட்சிகள் பல நாடகங்களை, நடிகர்களைத் தந்து கொண்டுதான் இருக்கின்றன. இவற்றுள் பலர் மிளிர்கிறார்கள்.பலர் மறக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.பலரை பலருக்குத் தெரிவதில்லை.அங்கும் அரசியல்/இருட்டடிப்பு இல்லாமல் இல்லை. அவற்றுடனும் போட்டி போட்டபடி முன்னேறுபவன் பாக்கியசாலி.அந்த வகையில் அவைக் காற்றுக் கலைக் கழகம் பாராட்டப்படவேண்டும். இன்று பல்கலைக்கழக  மட்டத்தில் நாடகமும் அரங்கியலும் பாடத்திட்டத்தில் இருப்பதும்,பல கலைஞர்கள் விரும்பிப் பங்கேற்பதும் வியக்கவைக்கின்றன.அண்மையில் இலங்கை சென்று மண்டபம் நிறைந்த காட்சிகளுடன் தங்களின் அரங்க நிகழ்வை/பட்டறைகள் நிகழ்த்திய அவைக்காற்றுக்கழகத்தின் முப்பத்தைந்து வருட உழைப்பு தெரிந்தது.

நாடக அரங்கக் கல்லூரியின் ஸ்தாபிதமும்,அவைக் காற்றுக் கலைக் கழக்த்தின் உதயமும் அந் நாட்களில் நட்சத்திரங்களாக அமைந்தன.கிராமிய அளவிலான நாடக முயற்சிகள் ஆங்காங்கே நடைபெற்றாலும் பிற மொழி நாடகங்களை நமது ஈழத்து அரங்கிற்கு கொண்டு வந்தவர்களில் குறிப்பிடத்தகவர் திரு.க.பாலேந்திரா என்றால் மிகையாகாது. நட்சத்திரவாசி,யுகதர்மம்,கண்ணாடி வார்ப்புக்கள்,மழை போன்ற பல நாடாகங்களை மேடையேற்றினாலும் கண்ணாடிவார்ப்புக்கள் அதிக சிறப்பிடம் பெறுகின்றன.அமெரிக்கா ஆசிரியரால் எழுதப்படிருந்தாலும் பாலேந்திராவின் கண்ணில் பட்டு அதை முதலில் தமிழுக்குக் கொண்டு வந்தமை நன்றியுடன் பார்க்கவேண்டியிருக்கிறது.

பல்கலைக் கழக பாட நூலாக்கவும்,பாலேந்திராவின் நாடகங்கள் பற்றிய ஆய்வை மேற்கொள்ள மாணவர்கள் முன்வந்தமையும் ஈழத்து நாடக உலகதிற்கு பெருமை சேர்ப்பனவகும். கொழும்பு குமரன் பதிப்பகம் மூலம் கண்னாடி வார்ப்புக்கள் நாடக நூலை வெளியிட்டதன் மூலம் இன்னும் ஒருபடி மேலே சென்று இன்னும் அறியாத ரசிகர்களை,நாடக ஆர்வலர்களை சென்றடையும் என்கிற நினைப்பின் துணிச்சலை பாராட்டாமல் இருக்கமுடியாது.மண்டபம் நிறைந்த மக்களுடன் நிறைவான விழாவை திரு.சுதாகரின் நன்றியுரையுடனும்,திரு.க.பாலேந்திராவின் ஏற்புரையுடனும் நிறைவு செய்தனர். இது போன்ற நாடக நூல்கள் வரவேன்டும் என்கிற ஆதங்கம் பலரிடமும் தென்பட்டன. அதுவரை அவர்களுடன் நாமும் உழைப்போம்

13/10/2013
mullaiamuthan_03@hotmail.co.uk