கண்ணீர் அஞ்சலி: விகடன் எஸ். பாலசுப்ரமணியன் அவர்களின் பிரிவுத்துயர் பகிர்வோம்.

கண்ணீர் அஞ்சலி: விகடன் எஸ். பாலசுப்ரமணியன் அவர்களின் பிரிவுத்துயர் பகிர்வோம்.குரு அரவிந்தன் ஆனந்தவிகடன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் வியெஸ்வி அவர்களிடம் இருந்து அன்று எனக்கொரு கடிதம் வந்திருந்தது. நான் சற்றும் அந்தக் கடிதத்தை எதிர்பார்க்கவில்லை. கடிதத்தைப் பார்த்தபோதுதான் விகடனுக்கு நான் அனுப்பிய முதற்கதையின் ஞாபகம் வந்தது. அந்தக் கதை அனுப்பியதைகூட நான் மறந்து போயிருந்தேன். காரணம் அது தற்செயலாக ஏற்பட்ட ஒரு சம்பவமாக இருந்தது. மகாஜனக் கல்லூர் முன்னாள் அதிபர் கனகசபாபதி அவர்கள் தான் எனது ஒரு கதையை வாசித்துவிட்டு இந்தக்கதை விகடனுக்குத்தான் ஏற்றது, அனுப்பிப்பாரும் என்று வாழ்த்தி விகடன் முகவரியையும் தந்திருந்தார். அதற்கும் ஒரு காரணம் இருந்தது, அதாவது அப்பொழுதுதான் கனடா உதயன் பத்திரிகையின் சிறுகதைப் போட்டியில் எனது சிறுகதைக்காக எனக்குத் தங்கப் பதக்கம் பரிசாகக் கிடைத்திருந்தது. அவர் நீண்டகாலமாக விகடன் வாசகராக இருந்ததால் எனக்கும் சின்ன வயதில் இருந்தே விகடன் கதைகளை வாசிக்க நிறையவே சந்தர்ப்பம் கிடைத்தது. எனவே எனது முதற்கதையை கனடாவில் இருந்து அனுப்பிவிட்டு நான் அதில் அதிக அக்கறை செலுத்தவில்லை. விகடனில் இருந்து வந்த, என்னை ஆச்சரியத்திற்குள் ஆளாக்கிய வியெஸ்வியின் முதற் கடிதம் அதுதான்.

‘விகடன் குழுமத்தின் பொறுப்பாளரான திரு. எஸ். பாலசுப்ரமணியன் அவர்கள் அமெரிக்கா சென்றிருந்ததால் தங்கள் சிறுகதைத் தெரிவில் சற்றுத் தாமதமாகிவிட்டது. அவரே வந்து தங்கள் சிறுகதையைத் தெரிவு செய்திருக்கின்றார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று நிர்வாக ஆசிரியராக இருந்த வியெஸ்வி அவர்கள் யூலை மாதம் 1998 ஆம் ஆண்டு எனக்கு எழுதியிருந்தார். ஆனந்தவிகடனில் எனது முதற்கதையான ‘காதல் என்பது.’ ஓவியர் ராமு வரைந்த அழகிய ஓவியத்தோடு வெளிவந்தபோது, எனது கனவையும் தாண்டி உயரப் போய்விட்டதில் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன். அதன் பின் மதிப்பிற்குரிய ‘விகடன் பாலன்’ அவர்களே நேரடியாக பல தடவைகள் தொலைபேசி, மின்னஞ்சல், மற்றும் கடித மூலமும் தொடர்பு கொண்டிருந்தார். குறிப்பாக தீபாவளி, வருடப்பிறப்பு போன்ற விசேட தினங்களில் கடிதமூலம் தானே கையெழுத்திட்டு எனது குடும்பத்தினரை வாழ்த்தி வாழ்த்துச் செய்தி அனுப்ப அவர் மறந்ததில்லை. தொடர்ந்து தீபாவளி மலர், பவளவிழா மலர், காதலர்தின இதழ், மிலேனியம் இதழ் போன்ற விசேட மலர்களில் என்னை எழுத வைத்து மிகப்பெரிய வாசகர் வியாபகத்தை ஏற்படுத்தித் தந்தார். எனது குறுநாவலான ‘நீர்மூழ்கி நீரில் மூழ்கி’ யை விகடனில் வெளியிட்டது மட்டுமல்ல பிரபல ஓவியர்கள் ஐவரைக் கொண்டு அதற்கு ஓவியங்களும் வரைய வைத்துப் பெருமைப்பட வைத்தார். 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தில் இலங்கையில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றை எழுதித் தரும்படி கேட்டு அதை விகடன் தீபாவளி மலரில் ‘நங்கூரி’ என்ற தலைப்பில் வெளியிட்டு உலகறியச் செய்தார். சின்னவயதில் நான் வாசித்த ‘உன்கண்ணில் நீர் வழிந்தால்’, ‘பேசும் பொற்சித்திரமே’ போன்ற கதைகளை இன்றும் என்னால் மறக்கமுடியாது. அதை எழுதிய சேவற்கொடியோன் ஒரு பாரதி பக்தராக இருக்கலாம் என்று நான் நினைத்தேன். ஆனால் பல வருடங்களின் பின்தான் சேவற்கொடியோன் என்ற புனைப்பெயரில் இவர்தான் இக்கதைகளை எழுதி என்னைப் போன்ற பல வாசகர்களைக் கவர்ந்திருந்தார் என்பது தெரியவந்தது. அவரும் இவரும் ஒருவர்தான் என்பதை பின்நாளில் நான் அறிந்து கொண்டபோது அவர் மீது வைத்திருந்த மதிப்பு மேலும் உயர்ந்தது.

இலக்கிய உலகில் மட்டுமல்ல தந்தை எஸ்.எஸ்.வாசனின் வழியைப் பின்பற்றி திரைத்துறையிலும் முத்திரை பதித்தவர் திரு. பாலசுப்ரமணியன் அவர்கள்.. ‘சிரித்து வாழ வேண்டும்’, ‘எல்லோரும் நல்லவரே’ போன்ற தமிழ் படங்களை மட்டுமல்ல, பல மொழிகளிலும் இவர் திரைப்படங்களை இயக்கி உள்ளார் இயற்கையை நேசித்த இவர், விவசாயத்தின் மீதும், பறவைகள், மிருகங்கள் மீதும் பற்றுக் கொண்டதால், அதற்காகத் தனது நேரத்தை அதிகம் செலவிட்டார். விகடன் குழுமங்களின் தலைவரான எஸ்.பாலசுப்ரமணியன் அவர்கள் தனது இருபத்தி ஓராவது வயதில் விகடன் இணை நிர்வாக இயக்குனராகப் பொறுப்பேற்று பத்திரிகையில் பல புதுமைகளைப் புகுத்தினார். திறமைக்கு மட்டுமே மதிப்புக் கொடுத்து, திறமையாளர்கள் எங்கிருந்தாலும் அவர்களைத் தேடிக் கண்டறிந்து ஊக்குவித்த திரு பாலசுப்ரமணியன் அவர்கள் ஜெயகாந்தன், சுஜாதா போன்ற பிரபலமான எழுத்தாளர்களுக்கு களம் அமைத்துத் கொடுப்பதில் முன்னின்றார். அந்த வகையில் அவரது மோதிரக் கையால் குட்டு வாங்கிய பெருமை எனக்கும் உண்டு. சமீபத்தில் அவரது நேர்காணல் ஒன்றின்போது தனக்குப் பிடித்த பத்திரிகை குமுதமாக இருந்தது என்று மனம் திறந்து கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மருத்துவம் கற்கும் மாணவர்களின் ஆராய்ச்சிக்காக தனது உடலைத் தானம் கொடுக்கவேண்டும் என்ற அவரின் விருப்பத்தின்படி, மாரடைப்பினால் மரணமான அவரது உடல் மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக கொடுக்கப்பட்டது. எனது எழுத்துக்களுக்கு விகடன் மூலம் சர்வதேசப் புகழைத் தேடிக் கொடுத்த அவரது இழப்பு எனக்கு மட்டுமல்ல, இலக்கிய உலகிற்கும் பெரும் இழப்பாகும். அவரது ஆத்மா சாந்தியடைய எனது குடும்பத்தின் சார்பில் ஆண்டவனை வேண்டி, சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.

kuruaravinthan@hotmail.com