கனடாத் தமிழ் இலக்கியத்தில் ‘தாயகம் (கனடா)வின் பங்களிப்புப் பற்றியதொரு சுருக்கமான அறிமுகம்!

'தாயகம்' (கனடா) – எழுத்தாளர் தேவகாந்தனை ஆசிரியராகக் கொண்டு , ஆண்டுதோறும் வெளியாகும் இலக்கிய இதழான ‘கூர் 2018’ இதழில் வெளியான கட்டுரை இது. ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரமாகின்றது. – பதிவுகள் –


கனடாத்தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகவும் தவிர்க்க முடியாத , காத்திரமாகத்தடம் பதித்த, ஜோர்ஜ் இ.குருஷேவ்வை ஆசிரியராக கொண்டு வெளியான  சஞ்சிகை, பத்திரிகை ‘தாயகம்’ (கனடா).  புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த தமிழர்களால் நடத்தப்பட்ட பத்திரிகை / சஞ்சிகைகளில் தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகைக்கு முக்கியமானதோரிடமுண்டு. இருந்தும் கனடியத் தமிழ் இலக்கிய வரலாறு பற்றிக் கட்டுரைகள் எழுதுவோர் தம் கட்டுரைகளில் மிகவும் இலகுவாக மறந்து விடும் பத்திரிகை, சஞ்சிகையும் ‘தாயகம்’ தான். மிகவும் வேடிகையான விடயமென்னவென்றால் ‘தாயகம்’ வெளிவந்தபோது, ‘தாயகம்’ களம் அமைத்துக்கொடுத்துத் ‘தாயக’த்தில் எழுதிய எழுத்தாளர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களில் பலர்  கூட இவ்விதம் மறப்பதை எண்ணவென்பது. இந்நிலையில் ‘தாயகம்’ பற்றிய முறையான ஆய்வு நடத்தப்பட வேண்டிய தேவை இருப்பதால், அது பற்றிய ஆர்வத்தினை ஏற்படுத்த வேண்டிய தேவை இருப்பதால், ‘தாயகம்’ பற்றிய சிறியதோர் அறிமுகம் தேவை என்பதால் உருவான கட்டுரையே இக்கட்டுரை. இக்கட்டுரையின் முக்கிய நோக்கங்களிலொன்று ‘தாயகம்’ பத்திரிகை/ சஞ்சிகை பற்றிய விரிவான ஆய்வுக்கு எதிர்காலத்தில் மேலும் பலரைத் தூண்டுவதாகும்.

‘தாயகம்’ பத்திரிகை /சஞ்சிகைக்கு இன்னுமொரு முக்கியமான சிறப்புண்டு. கனடாவில் இலக்கியச்சேவை செய்வதாகச் சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளும் பல பத்திரிகைகளின் முக்கிய நோக்கம் பணமீட்டுவதே. விளம்பரங்களால் பக்கங்களை நினைத்து,  இலவசமாக விநியோகிக்கப்பட்டுவரும் கனடியத்தமிழ்ப் பத்திரிகைகளுக்கு மத்தியில் , காசு கொடுத்து வாங்கிக் கனடியத்தமிழ் மக்கள் படித்த ஒரேயொரு பத்திரிகை ‘தாயகம்’ (கனடா). இதற்காகத் ‘தாயகம்’ ஆசிரியர் ஜோர்ஜ் இ.குருஷேவ்வைப்பாராட்டலாம். அதுவும் சுமார் ஆறுவருடங்கள் வரையில் ‘தாயகம்’ இவ்விதம் விற்பனையில் இருந்ததே குறிப்பிடத்தக்க சாதனைதான்.

‘தாயகம்’ பத்திரிகை, சஞ்சிகை பல விதங்களிலும் தனித்துவம் மிக்கதாக , ‘உண்மையைத் தேடி’ என்னும் தாரக மந்திரத்துடன் வெளிவந்தது. அதற்கென்று உறுதியான கொள்கையொன்றிருந்தது. அரசியல் ஆதிக்கம் மிக்க சக்திகளால் மறைக்கப்பட்ட விடயங்களை அது வெளிக்கொணர்ந்தது. அதே சமயம் அது விடுதலைப்புலிகளை விமர்சித்த பத்திரிகை, சஞ்சிகை. அதற்காக அதனைத் தமிழ் மக்களின் விடுதலைக்கு எதிரான பத்திரிகை என்று யாரும் தவறாக எண்ணி விடவேண்டாம். அது தமிழ் விடுதலை அமைப்புகளில் நிலவிய மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பதையே முக்கியமான நோக்கங்களிலொன்றாகக்கொண்டிருந்தபோதும், அனைத்துப்பிரிவினருக்கும் இடமளித்தது என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். பல்வேறு அரசியல் கொள்கை கொண்டவர்களும் ‘தாயக’த்தில் எழுதினார்கள்.

இன்று யுத்தம் மெளனிக்கப்பட்டு முடிவுற்ற நிலையில், தாயகத்தின் பங்களிப்பை அதன் பனித உரிமை மீறல்களுக்கு எதிரான போக்கின் அடிப்படையில் வைத்துப்பார்த்தால், இந்த விடயத்தில் அது ஆற்றிய வரலாற்றுப்பங்களிப்பை இனங்கண்டிட முடியும். அதே நேரத்தில் கனடியத்தமிழ் இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு, நாடகம் என முக்கியமான பங்களிப்பை வழங்கிய பத்திரிகை / சஞ்சிகை.  அத்துடன் சமகால அரசியல், சமூகச் செய்திகளுக்கும் (குறிப்பாக ஈழத்தமிழர்களின்) அது முக்கியத்துவம் கொடுத்தது. சமூக, அரசியல் நிகழ்வுகள் பற்றிய விடயங்களை மனத்திலுறைக்கும் வகையில் ஆசிரியர் ஜோர்ஜ் இ.குருஷேவ் ஆசிரியத் தலையங்களை ‘ஏடிட்டோரியல்’ என்னும் தலைப்பில் எழுதி வந்தார். அத்துடன் சமூக, அரசியல், மற்றும் கலை, இலக்கிய விடயங்கள் பற்றிய தனது எண்ணங்களைத் ‘தாயகம்’ சஞ்சிகையின் கடைசிப்பக்கமாக வெளிவந்த ‘அறுஞர் போராசிரியர் கல்லாநிதி கியூறியஸ் ஜீ’ என்னும் பத்தியில் தனக்கேயுரிய அங்கதத்துடன் எழுதி வந்தார். அப்பத்தியை அவர் ‘அறு(சு)வை’ என்றும் அழைத்து வந்தார்.

அதே சமயம் ‘தாயக’த்தில் கனடியத் தமிழ் எழுத்தாளர்கள் மட்டுமல்லர், ஐரோப்பா, ஆஸ்திரேலியா , இலங்கை போன்ற பிற நாடுகளிலிருந்தும் தமிழ் எழுத்தாளர்கள் எழுதினார்கள். இதன் மூலம் கனடியத்தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்ல, புகலிடத் தமிழ் இலக்கியத்தில், புலம் பெயர் தமிழ் இலக்கியத்திலும் காத்திரமாகத் தன் தடத்தினைப் பதித்துள்ளது ‘தாயகம்’. இது பெருமைப்படத்தக்கப் பங்களிப்பு.

தமிழகத்தின் ‘மணிக்கொடி’, இலங்கையில் ‘மறுமலர்ச்சி’ போல் கனடாத் தமிழ் இலக்கியத்தில் ‘தாயக’க் காலமென்று குறிப்பிடும் வகையில் தன் இலக்கியப்பங்களிப்பைத் ‘தாயகம்’ ஆற்றியிருக்கின்றது. இதனையும் மறந்துவிட முடியாது.

தாயகம் (பத்திரிகை / சஞ்சிகை)  தோற்றம் மற்றும் முடிவு பற்றி..
‘தாயகம்’ பத்திரிகையின் ஆரம்பம் பற்றிக் கேட்டபோது அதன் ஆசிரியர் மிக இலகுவாக, என்றுமே மனத்தில் நிற்கும் வகையில் பதிலொன்றினைத் தந்தார். ‘தமிழர் விடுதலைக்கூட்டணித்தலைவர் அமிர்தலிங்கம் படுகொலைச் செய்யப்பட்டதற்கு அடுத்து வந்த வெள்ளிக்கிழமையே ‘தாயகம்’ முதலில் பத்திரிகையாக வெளிவந்தது’ என்றார் அவர். ‘தாயகம்’ வெளிவந்த காலத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெளிவந்தது. அந்த வகையில் தமிழர் விடுதலைக்கூட்டணித்தலைவர் அமிர்தலிங்கம் அவர்கள் கொலைசெய்யப்பட்ட நாள் ஜூலை 13, 1989. வியாழக்கிழமை. ஆக, ‘தாயகம்’ பத்திரிகையின் முதல் இதழ் ஜூலை 14, 1989 வெள்ளிக்கிழமை வெளியானதாகத் தீர்மானிக்கலாம்.

இவ்விதம பத்திரிகை வடிவில் ஆரம்பிக்கப்பட்ட தாயகம் தன் வடிவமைப்பைச் சஞ்சிகை வடிவுக்கு மாற்றிய நாள் ஜுலை 30, 1993.

தாயகம் ஆசிரியர் - ஜோர்ஜ் குருஷேவ் -இதன் பின்னர் மேலும் இரு வருடங்கள் தாயகம் சஞ்சிகை வடிவில் வெளியானதுடன் தன் இருப்பை நிறுத்திக்கொண்டதாக அறியப்படுகின்றது. இது பற்றிக் கருத்துக்கூறுகையில் ஆசிரியர் ஜோர்ஜ் இ.குருச்ஷேவ் தன்னிடமுள்ள தாயகம் சஞ்சிகையில் இறுதி இதழ் வெளியான திகதி  மே 12, 1995 என்பதன் அடிப்படையில்  தாயகம் பத்திரிகையாக ஜுலை 14, 1989 தனது பயணத்தை ஆரம்பித்து, ஜூலை 30, 1993 தனது வடிவமைப்பைச் சஞ்சிகை வடிவுக்கு மாற்றி, மேலுமிரண்டு வருடங்கள் இயங்கி மே 12, 1995 தனது பயணத்தை நிறுத்திக்கொண்டது  என்னும் முடிவுக்கு வரலாம். தாயகம் சஞ்சிகையின் முடிவு திகதியில் மாற்றம் ஏற்படினும், அது தன் பயணத்தை 1995இல் முடித்துக்கொண்டது என்பதிலெந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. சுமார் ஆறு வருடங்கள் வரையில் இவ்விதமொரு பத்திரிகை, சஞ்சிகை வெளிவந்திருப்பதே கனடியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய சாதனைதான்.

‘தாயகம்’ , அதன் படைப்பாளிகள் மற்றும் அதில் வெளியான படைப்புகள் பற்றிச் சுருக்கமானதோர் அறிமுகம்!
ஜோர்ஜ் இ.குருஷேவ் தானே ஆசிரியராகவிருந்து, பதிப்பாளராகவிருந்து, தட்டச்சு செய்பவராகவிருந்து, அச்சடிப்பவராகவுமிருந்து (இதற்காக சிறியதொரு அச்சியந்திரத்தையும் தன்னிருப்பிடத்தில் வைத்திருந்தார். ஒருவரே கைகளால் இயக்கக்கூடிய அச்சியந்திரம். அந்த அச்சியந்திரம் இன்னும் அவரிடம் ஞாபகச்சின்னமாக இருக்கக்க்கூடும்) சுமார் ஆறு வருடங்கள் வரையில் ‘தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகையினைக் கொண்டு வந்தார். முப்பது வருடங்களில் ஐம்பது இதழ்களைக்கொண்டு வருவதைப்பார்த்து மூக்கில் விரலை வைத்து வியக்கும் நம்மவர்கள் , ஐந்து வருடங்களில் இருநூறுக்கும் அதிகமாகச் தாயகம்(கனடா)வினைத் தனியொருவராக வெளிக்கொணர்ந்தவர் இவர் என்பதை அறிந்தால் வியப்பின் எல்லைக்கே சென்று விடுவார்கள்.

தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகையில் எழுத்தாளர்கள் அருள் சுப்பிரமணியம், மாத்தளை சோமு (ஆஸ்திரேலியா), செழியன் (ஒரு போராளியின் நாட்குறிப்பு), வ.ந.கிரிதரன் (கணங்களும், குணங்களும், வன்னி மண், அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும், அமெரிக்கா,  நவசீதா ஆகிய நாவல்கள்) தொடர்களாக வெளியாகியுள்ளன. வ.ந.கிரிதரனின் நாவலான 1983 (83 இனக்கலவரத்தை மையமாகக்கொண்டது) தொடராக வெளிவந்து முற்றுபெறாமலேயே நின்று போனது.  ‘காலம்’ செல்வம் எழுதிய நாடகமொன்றும் தொடராக வெளியாகியுள்ளதாக ஞாபகம். கடல்புத்திரனின் ‘வேலிகள்’ ‘வெகுண்ட உள்ளங்கள்’ நாவல்களும் , சிறுகதைகளும் ‘தாயகம்’ சஞ்சிகையில் வெளியாகின. அமரர் உமாகாந்தனின் உலக அரசியல் பற்றிய கட்டுரைகள் தொடராக வெளிவந்துள்ளன. எழுத்தாளர் ஆனந்த பிரசாத்தின் ‘ஆடலுடன் பாடல்’ என்னும் இசைக்கலை பற்றிய பத்தியெழுத்து , எஸ்.கெளந்தியின் ‘இருத்தலியல் விசாரணைகள்’ என்னும் இலக்கியப்பத்தி, சின்னத்தம்பி வேலாயுதம் அவர்களின் ஈழத்தமிழர்களின் அரசியல் வரலாறு பற்றிய ‘ஈழம் ஒரு தொடர்கதை’ தொடர்,  ‘அசை’ என்னும் சிவதாசனின் பத்தி (இதன் காரணமாகவே சிவதாசன் பின்னர் ‘அசை’ சிவதாசன் என்று அழைக்கப்பட்டார்.) , வ.ந.கிரிதரனின் ‘மரபும், கவிதையும்’ பற்றிய தொடர், மற்றும் அவரது ‘வளர்முக நாடுகளின் குடிமனைப்பிரச்சினைகள்’ தொடர், வ.ந.கிரிதரனின் ‘நல்லூர் இராஜதானி நகர அமைப்பு’ ஆய்வு தொடர், … இவற்றுடன் நேசனின் மொழிபெயர்ப்பில்  ஜீன் போல் சார்த்தரின் ‘கறை படிந்த கைகள்’ என்னும் நாடக மொழிபெயர்ப்பும் தொடராக வெளிவந்தது ஞாபகத்திலுள்ளது.  வசந்த திசாநாயக், பற்றிக் பெர்னான்டோ, சரத் த சில்வா, ரஞ்சித் குமார ஆகியோர் சிங்களத்தில் எழுதிய ‘ஜே.வி.பி.யின் வரலாற்றுக்கதை’யினை செ.லோகநாதன் மொழிபெயர்ப்பில் ‘தாயகம்’ (கனடா)’ வெளியிட்டுள்ளது. பேராசிரியர் சிவசேகரத்தின் கட்டுரைகளும் அக்காலகட்டத்தில் தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகையில் வெளியாகியுள்ளன. எழுத்தாளர் கலாமோகன் தாயகத்தில் தன் சொந்தப்பெயரிலும், புனைபெயர்களிலும் நிறைய படைப்புகளை எழுதியிருக்கின்றார். ஜெயந்தீசனின் குட்டிக்கதைகள் வெளிவந்த காலகட்டத்தில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றவை. கலாமோகனே ஜெயந்தீசன் என்பதைச் சில வருடங்களின் முன்னரே அறிந்துகொண்டேன். கலாமோகனின் மொழிபெயர்புப்படைப்புகளும் வெளியாகியுள்ளன. தாயகம் சஞ்சிகையில் நகைச்சுவை எழுத்துகளும் வராமலில்லை. அவ்வகையான எழுத்துக்கு டொன்மில்ஸ் சிவப்பிரகாசம் உடனடியாக நினைவில் வருகின்றார்.

தாயகம் (கனடா)வில் அதிக அளவில் சிறுகதைகளும் வெளியாகியுள்ளன. வ.ந.கிரிதரனின் சிறுகதைகள் பல (மணிவாணன் என்னும் பெயரிலும், வ.ந.கிரிதரன் என்னும் பெயரிலும்) வெளியாகியுள்ளன. சுமதி ரூபன், மொனிக்கா, கனடா மூர்த்தி, சுகன், சிவதாசன், ஜோர்ஜ் இ.குருஷேவ் , ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியன் (இங்கிலாந்து), பவான், பாலசுந்தரன், இணுவையூர் ஞா.வடிவேலனார் எனப் பலரின் சிறுகதைகள் தாயகத்தில் வெளியாகியுள்ளன. தாயகம் (கனடா)வில் பவான் எழுதிய ‘முகமில்லாத மனிதர்கள்’ சிறுகதை எஸ்.பொ / இந்திரா பார்த்தசாரதி தொகுத்து வெளியிட்ட ‘பனியும், பனையும்’ தொகுப்பில் வெளியாகி, எழுத்தாளர் சுஜாதாவால் சிலாகிக்கப்பட்டதும் நினைவுக்கு வருகின்றது. எழுத்தாளர் பவான் யார்  என்று இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றேன். இன்னும் அதற்கான பதில் கிடைக்கவில்லை. உங்களுக்கு யாருக்காவது தெரிந்தால் அறியத்தரவும்.  இணுவையூர் ஞா. வடிவேலனாரின்  ஆக்கங்கள் பல தாயகம் (கனடா)வில் வெளியாகியுள்ளன. தாயகம் ஆசிரியர் ஜோர்ஜ் இ.குருஷேவ்வின் சிறுகதையொன்றும் ‘பனியும், பனையும்’ தொகுப்பில் வெளியாகியுள்ளது. ‘தாயகம்’ (கனடா)வில் ஜோர்ஹ்.இ.குருஷேவ் எழுதிய ‘கொலைபேசி’ மிகுந்த வாதப்பிரதிவாதங்களை உருவாக்கிய சிறுகதை.

தாயகம் (கனடா)வில் நூற்றுக்கணக்கில் கவிதைகளும் பிரசுரமாகியுள்ளன. கவிஞர் பா.அ.ஜெயகரன், கெளரி, வ.ந.கிரிதரன், அ.கந்தசாமி, மலையன்பன் (‘உதயன்’ ஆசிரியர் லோகேந்திரலிங்கம். இவர் ‘தாயகம்’ சஞ்சிகையில் பல்வேறு புனைபெயர்களில் எழுதினார்.), ரதன்,, ராவுத்தர்,, மொனிக்கா, சுமதி ரூபன், நிவேதிகா, க.கலாமோகன், நந்தன், தினேஷ்குமார் ,நிலா குகதாசன், அருண், சி.கிருஷ்ணராஜா  என்று பலர் கவிதைகள் எழுதியிருக்கின்றார்கள். இப்பட்டியலைப்பூர்த்தி செய்ய உங்கள் ஞாபகத்திலுள்ள தாயகம் (கனடா) கவிஞர்களைப்பற்றிய விபரங்களை அறியத்தாருங்கள். கவிதைகளைத் ‘தாயகம்’ ‘புதுக்க விதை’ என்னும் தலைப்பில் வெளியிட்டு வந்தார்கள். நல்லதொரு தலைப்பு. புதுக்கவிதைகள் , புதுக்க விதைத்த கவிதைகள் என்று ஒரு கல்லில் இரு மாங்காய்கள்.

உதாரணத்துக்குக் கலாமோகனின் கவிதையொன்று:

கவிதை: புகலிடம்
– க. கலாமோகன் –

ஒரு சிறைச்சாலையிலிருந்து தப்பி
இன்னொரு பெரிய
சிறைச்சாலைக்குள் நான்
சிக்குப்பட்டு விட்டேன்.

‘முனியின் கேள்வி – பதில்கள்’ பற்றியும்  நிச்சயம் குறிப்பிட வேண்டும். தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகையில் வெளியான ‘முனிவர் கேள்வி பதில்கள்’ வெளிவந்த காலத்தில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றவை. அந்த ‘முனிவர்’ வேறு யாருமல்லர் கனடா மூர்த்தியே. கனடா மூர்த்தி என்று அறியப்பட்ட எழுத்தாளர் நாராயணமூர்த்தி ஓவியரும் கூட. இவரது ஓவியத்துடன் வ.ந.கிரிதரனின் ‘அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்’ நாவல் வெளிவந்துள்ளது.

ஆவணப்படுத்தப்பட வேண்டிய ‘தாயகம்’
தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகையில் வெளியான படைப்புகள் பற்றிய அனைத்து விபரங்களும் முதலில் ஆவணப்படுத்தப்பட்டு, முறையான ஆய்வுகள் செய்யப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். தனி மனிதனாக வாராவாரம் தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகையினை வடிவமைப்பு, தட்டச்சு, வெளியீடு, அச்சமைப்பு என அனைத்தையும் தான் ஒருவரே தனியாகப்பொறுப்பெடுத்து, சக எழுத்தாளர்களின் ஆக்கப்பங்களிப்புகளுடன் அவ்விதழினை வெளியிட்டு வந்திருப்பதே பாராட்டுக்குரியது மட்டுமல்ல வியப்புக்குரியதும்தான். தனிமரம் தோப்பாவதில்லை என்பர். ஆயினும்  தனி மரமும் சில சமயங்களில் தோப்பாவதுமுண்டு. அதற்குதாரணம் எழுத்தாளர் ஜோர்ஜ் இ.குருஷேவ்வின் ‘தாயகம்’. அத்துடன் தாயக’த்தில் வெளியான படைப்புகள் சிறுகதைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள், நாவல்கள் என வகைப்படுத்தப்பட்டு, அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்கங்கள் தொகுக்கப்பட்டு நூலுருப்பெற வேண்டும்.  அச்சில் வெளிவருவதில் சிரமங்கள் இருந்தாலும், குறைந்தது மின்னூல்களாகவாவது ஆவணப்படுத்தப்பட வேண்டும். இது தவிர்க்க முடியாத காலத்தின் கட்டாயம்.

இதன் முதற் கட்டமாக, இணையத்தில் தாயகம் சஞ்சிகையின் இதழ்கள் ‘படிப்பகம்’ இணையத்தளத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன. இதற்காகப் படிப்பகம் இணையத்தள நிர்வாகத்தினரைப் பாராட்டலாம். ‘படிப்பகம்’ இணையத்தளத்தில் (http://padippakam.com/ ) ‘தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகையின் ஐம்பது பிரதிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. புகலிடத்தமிழர்களால் வெளியிடப்பட்ட பத்திரிகை / சஞ்சிகைகளில் தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகைக்கும் முக்கியமானதோரிடமுண்டு.

ngiri2704@rogers.com