கனடாவில் சிற்றிதழ்களின் தேக்கநிலை

நூலாசிரியர் அகில்இலங்கையில் நடந்த யுத்தம் ஈழத்தமிழ் மக்களை பல்வேறு நாடுகளுக்கும் புலம்பெயர வைத்தது. இவ்வாறு புலம்பெயர்ந்த மக்களின் பெரும்பாலானவர்கள் கனடாவில் வாழ்கிறார்கள். நாம் வாழும் கனடாவில் மட்டும் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் வாழ்கிறார்கள். புலம்பெயர் நாடுகளில் வாழும் படைப்பாளிகளில்; கணிசமானோர் கனடாவில் வாழ்கி;றார்கள் எனலாம். கவிஞர்கள், நாவலாசிரியர்கள், சிறுகதையாளர்கள், பத்தி எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என்று படைப்பாளிகளின் பட்டியல் முடிவற்றது. இவர்களது படைப்புக்களின் தொகையும் எண்ணிலடங்காதது. குறிப்பாக சிற்றிதழ்கள், பத்திரிகைகளின் தோற்றம் சமீப காலத்தில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கணினி தெரிந்தவரெல்லாம் பத்திரிகை நடத்தலாம் என்றளவில் இதன் தோற்றம் இருந்தாலும் மழைக்கால விட்டில்களாக மறைந்துவிடுகின்ற இதழ்களே அதிகம். இக்கட்டுரையின் நோக்கம் அவ்வாறான இதழ்களின் ஆழ, அகலங்களை ஆராய்வதல்ல. நிறைய எழுத்தாளர்கள் வாழ்கின்ற இந்த கனடா நாட்டில் சிற்றிதழ்கள் எதுவும் ஏன் தொடர்ந்து  வெளிவரவில்லை என்பது பற்றி நோக்குவதே  ஆகும்.

சிற்றிதழ்
பக்க அளவில் சிறியதாக இருந்தாலும் சிற்றிதழ் என்பது தீவிரமான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும். சீரிய இதழ் சிற்றிதழ் என்றும் அழைக்கப்படுகிறது. சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளையும் தொடுவதால் இதனை சிற்றிதழ் என்று குறிப்பிடுவதும் உண்டு. ஒரு குறிப்பிட்ட வாசகர்களைச் சென்றடையும் நோக்கில் சிற்றிதழ்கள் வெளியிடப்படுகின்றன. சிற்றிதழ் வியாபார நோக்கம் எதுவுமின்றி, தத்துவார்த்த நடையுடன் வெளிவரவேண்டும்  என்பர். இலாப நோக்குடன் வெளிவருகின்ற இதழ்கள் வணிக இதழ்களாக, ஜனரஞ்சக இதழ்களாகக் கருதப்படும். தமிழ் இதழியல் வரலாற்றில் எண்ணிறைந்த சிற்றிதழ்கள் தோன்றி பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. 

கனடாவைப் பொறுத்தவரை தமிழ் மக்கள் செறிந்துவாழும் மொன்றியல், ரொறன்ரோ பகுதிகளில் இதுவரை 50 க்கும் மேற்பட்ட சிற்றிதழ்கள் வெளிவந்துள்ளன. எனினும் இன்று கையில் கிடைக்கக்கூடியதாகவும், பலராலும் அறியப்படுவதாகவும் இருப்பன விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலானவையே. ‘தமிழ் எழில்’ என்ற சிற்றிதழே கனடாவில் முதல்முதலில் வெளிவந்த சிற்றிதழாக குறிப்பிடப்படுகிறது. இது கையெழுத்துப் பிரதியாகவே முதலில் வெளிவந்து பின்னர் அச்சுவடிவம் பெற்றது.   கனடாவில் வெளிவந்த, வெளிவருகின்ற தமிழ்ச் சஞ்சிகைகளின் அகரவரிசைப் பட்டியலை தமிழர்தகவல் 22 ஆவது ஆண்டுமலரில் பேராசிரியர் இ.பாலசுந்தரம் பட்டியலிட்டுள்ளார்.

இச்சிற்றிதழ்கள் இலக்கியம், அரசியல், அறிவியல் போன்ற பல்வேறு விடயங்கள் சார்ந்து வெளியிடப்பட்டவை. இவற்றுள் பெரும்பான்மையானவை ஒன்றிரண்டு இதழ்களுடன் நின்றுபோயின. இன்று விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலான சஞ்சிகைகளே நமது கைகளுக்கு கிடைக்கின்றன. அவையும் இன்னும் எத்தனை காலத்திற்கு என்ற கேள்வி எழவே செய்கிறது.

இந்நிலை இதுவரை கனதியான சிற்றிதழ் எதுவும் கனடாவில் தோன்றவில்லையா என்ற ஐயப்பாட்டை  ஏற்படுத்துகிறது. சிற்றிதழ்களின் இந்த தேக்கநிலைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

போதிய ஊடக அறிவோ அனுபவமோ இன்மை:
ஊடகத்துறை என்பது ஒரு பொறுப்புவாய்ந்த சமூகப்பணி. அதனை செவ்வனே செய்தல் வேண்டும். வெறுமனே புகழுக்காகவும், பணத்திற்காகவும் அன்றி பொழுதுபோக்காகவும் செய்யக்கூடாது. சிற்றிதழின் வெற்றி அதன் தரமான ஆசிரியர் குழுவில்தான் தங்கியுள்ளது. ஒரு சிற்றிதழை அதன் ஆசிரியர் குழுவை வைத்தே எப்படிப்பட்ட சிற்றிதழாக இருக்கும் என்பதைக் கூறிவிடலாம். சிற்றிதழ் நடத்துவதற்கு வெறுமனே கொள்கைப்பிடிப்பு மட்டும் போதாது. பத்திரிகைத்துறை சார்ந்த அறிவும், பட்டறிவும் அவசியம். இலக்கிய அறிவு, தொழில்நுட்ப அறிவு, விநியோக நுட்பங்கள் சிற்றிதழ்களை அகலக்காலூண்ற வைக்கும். எந்தவித முன்னனுபவமோ, அதுசார்ந்த அறிவோ இன்றி ஆரம்பிக்கப்பட்ட சஞ்சிகைகள் காலகதியில் மறைந்துவிட்டன. இலங்கையில் பத்திரிகை அலுவலகத்தில் சாதாரண ஊழியனாக இருந்தவர்கள் கூட பத்திரிகைத்துறையில் அனுபவம் நிறைந்தவர்களாக தம்மைக் கூறிக்கொண்டு இந்தத் துறையில் நுழைந்துவிடுகிறார்கள்.

சமீபகாலமாக கணினி தெரிந்தவரெல்லாம் சிற்றிதழ் நடத்தலாம் என்ற நிலையில் சில சிற்றிதழ்கள் வெளிவரத்தொடங்கியுள்ளன.  இவை சிற்றிதழுக்கு சாவுமணியே தவிர வேறில்லை.

குழுச்சார்புநிலை:
சிற்றிதழ்களின் இயங்குநிலை என்பது ஒரு குழு சார்ந்ததாகவும், ஒரு குழுவை மையப்படுத்தியதாகவும் இருக்கின்றது. அந்தக் குழு ஒரு கொள்கை சார்ந்ததாக இருக்கும். தமது கொள்கைகள் சார்ந்த கருத்துக்கள், இலக்கிய வடிவங்கள் என்பவற்றைப் பரப்புகின்ற ஒரு சாதனமாகவே சிற்றிதழ்களை அவை பயன்படுத்துகின்றன. அக்கருத்துக்களுக்கு முரண்பாடானவர்கள் ஒதுங்கிக்கொள்கிறார்கள் அல்லது ஒதுக்கப்படுகிறார்கள். குறிப்பிட்ட எழுத்தாளர் குழுமமே தொடர்ந்து அவற்றில் பதிவுகளை மேற்கொள்ளும். அந்த அரசியல் சார்ந்த, கொள்கை சார்ந்த வாசகர்களாலேயே அவர்களுடைய சஞ்சிகைகள் படிக்கப்படுகின்றன. மற்றவர்கள் அப்படியொரு சஞ்சிகை கனடாவில் வெளிவருகின்றது என்பதைக் கூட அறியமாட்டார்கள். இந்நிலை இவற்றின் பரம்பலும், வளர்ச்சியும் ஒரு குறுகிய வட்டத்துக்குள், குறுகிய காலத்துக்குள் முடிந்து போகக்காரணமாகிறது. நவீனத்துவம், முற்போக்கு, பெண்ணியம், ஈழஎதிர்ப்பு என்று பல்வேறு கருத்தியல் சார்ந்து இதழ்கள் வெளியாகின்றன. காலம் சஞ்சிகை நீண்டகாலமாக வெளிவந்துகொண்டிருந்தாலும் அது அதன் குழுசார்ந்து, கொள்கை சார்ந்து இயங்குவதால் குறிப்பிட்ட சில எழுத்தாளர்களையும், கனடாவில் குறுகிய வாசகர்களையுமே கொண்டிருக்கிறது.

சிற்றிதழ்களின் அடிப்படையே தீவிர கொள்கை பரப்புதலாக இருந்தாலும் அதன் வாசிப்பின் நீட்சியும், விரிவாக்கமும் மட்டுமே சிற்றிதழின் வளர்ச்சிக்கும், தொடர்ச்சிக்கும் துணைசெய்யவல்லது. தன் குழுவுக்கு வெளியே எப்படி சிற்றிதழ்களை கொண்டுசெல்ல வேண்டும், குழுக்களை இன்னும் எவ்வாறு விரிவாக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் சிந்திக்கவேண்டும்.

பொருளாதார ஆதரவின்மை:
பத்திரிகையாகட்டும் அல்லது ஒரு சிற்றிதழ் ஆகட்டும் தொடர்ந்து வெளிவருதற்கு உறுதியான பொருளாதார அடித்தளம் அமையவேண்டும். கனடாவைப் பொறுத்தவரை ஒரு பத்திரிகை அல்லது சஞ்சிகை நடத்துவதற்கு ஒருவருக்கு நிலையான வருமானம் இருக்கவேண்டும் அல்லது விளம்பர உதவி இருக்கவேண்டும். விளம்பரங்களை நம்பியே பெரும்தொகையான இதழ்கள் வெளிவந்தன.

விளம்பரங்களை நம்பியே  பெருந்தொகையான இதழ்கள் வெளிவந்தன. விளம்பரங்களுக்கான பக்கங்கள் அதிகரிக்க அவற்றுக்கிடையே சிக்கித்தவிக்கின்ற   படைப்புக்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய வேலை வாசகர்களுக்குரியதாகிறது. இதுவே சிற்றிதழ்கள் தன் சுயத்தை இழக்கவும் காரணமாகிவிடுகிறது. பத்திரிகைகள், சஞ்சிகைகளின் தொகை அதிகரிக்க, அதிகரிக்க விளம்பர ஆதரவுகளுக்குப் போட்டிபோடவேண்டி உள்ளது. தொடர்ந்து விளம்பரங்கள் கிடைக்காத பட்சத்தில் சஞ்சிகைகள் அப்படியே முடங்கிப் போகின்றன. விளம்பரங்கள் சஞ்சிகைகளின் ஆயுளைக் குறைத்துவிடுவதில் முக்கியபங்கு வகிக்கிறது.

சுவாசிக்கும் மூச்சுக்காற்றைத் தவிர அனைத்துப் பிற தேவைகளும் பணத்தைக் கொடுத்தே பெற்றுக்கொள்கின்ற நிலையில், பணம் கொடுத்து ஒரு பத்திரிகையை அல்லது சஞ்சிகையை வாங்கிப்படிக்க யாருமே  முன்வருவதில்லை. தமிழ் அங்காடிகளில் கேட்பாரற்றுக் கிடக்கும் இந்த சஞ்சிகைகளில் கைக்கெட்டும், அல்லது கவர்ச்சியான அட்டைப்படம் கொண்ட ஒன்றிரண்டு பத்திரிகை, சஞ்சிகைகளை ஆர்வத்துடன் எடுத்துக்கொண்டு செல்வோரில் எத்தனைபேர் அவற்றை பிரித்துப் படிக்கிறார்கள் என்பதும் கேள்விக்குறியே.

வாசகர் அதிருப்தி:
கனடாவில் திருப்திதரும் வகையில் எந்தவொரு சஞ்சிகையும் வெளிவரவில்லை என்பதுதான் நிதர்சனம். வாசகர்களுக்கு திருப்தியளிக்கும் வகையிலோ, வாசகர்களை ஊக்குவிக்கும் வகையிலோ சஞ்சிகைகளின் வெளிப்பாடு இல்லை. வெறுமனே இந்தியா, இலங்கை பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்களில் இருந்து பிரதியெடுக்கப்பட்ட மறுபிரசுரங்களே அதிகம். சாதாரண துணுக்குகள் கூட என்றோ, எங்கேயோ பார்த்த, படித்த விடயங்களாகவே இருக்கின்றன. ஏற்கனவே கேள்விப்பட்ட, படித்த பழைய சமாச்சாரங்களை மீண்டும் மீண்டும் வாசிக்க வாசகனும் விரும்புவதில்லை. தரமான வாசகர்கள் இல்லை என்று குற்றம் சாட்டுவதைவிட வாசகர்களின் வாசிப்பைத் தூண்டும் புதிய முயற்சிகளில் சஞ்சிகைகள் இறங்கவேண்டும்.

சில சிற்றிதழ்கள் எப்படிப்பட்ட வாசகர்களை இலக்குவைக்கிறது என்பதே புரியாமல் இருக்கும். சரியான அடித்தளம், கருதுகோள் எதுவுமின்றி ஆரம்பிக்கப்படும் சஞ்சிகைகள் இவை. வெறும் தென்னிந்திய சினிமாச்செய்திகள், பழைய ஈழத்து நாவல்தொடர்கள், என்றோ நடந்த பழைய சுவாரஸ்யமான செய்திகள், கணினியில் கத்தரிக்கப்பட்ட தகவல்கள், சமையல்குறிப்புகள், எங்கோ படித்த நகைச்சுவைத்துணுக்குகள்…. அந்த அளவுக்கு வாசகர்களை மலினப்படுத்தும் சஞ்சிகைகளும் அவ்வப்போது வந்துபோவதுண்டு.

குழுசார்ந்த சிற்றிதழ்கள் அவை சார்ந்த கொள்கைகள், கருத்துக்களை பரப்புவதிலேயே முனைப்புடன் செயல்படுகின்றன. தமக்கு ஒவ்வாத கருத்துநிலை, அமைப்பு சார்ந்த சிற்றிதழ்களை வாசகர்கள் புறக்கணிக்கிறார்கள். தீண்டத் தகாதவைகளாகக் கருதுகிறார்கள். புலி எதிர்ப்புக்கொள்கையாளர்களது சிற்;றிதழ்கள் அதன் ஆதரவாளர்களால் திட்டமிட்டே முடக்கப்பட்டன. ஈழ எதிர்ப்பாளர்கள் தாயக நேசிப்பு சார்ந்த சிற்றிதழ்களை கண்டும் காணாதவர்களாக ஒதுக்குகிறார்கள்.

இந்திய மோகம்:
இதில் எழுத்தாளர்களும், வாசகர்களும் முக்கியபங்கு வகிக்கிறார்கள். சிற்றிதழ்களுக்கு ஆக்கங்களைச் சேகரிப்பதென்பது கடினமான விடயமாக உள்ளது. கனடாவில் வாழும் பெரும்பான்மையான எழுத்தாளர்கள் இந்திய, சர்வதேச மோகம் காரணமாக தமது புதிய படைப்புக்கள் எதனையும் இங்கு வெளியாகும் சஞ்சிகைகளில் பிரசுரமாவதை விரும்புவதில்லை. முதலில் இந்திய சஞ்சிகை. பிறகு இணையத்தளம். அதன்பின் இங்குள்ள பத்திரிகை அல்லது சஞ்சிகைக்காரர்கள் கேட்டால் அவர்களுக்கு பிரசுரிக்க வழங்குவது என்பதையே வழமையாகக் கொண்டிருக்கிறார்கள். இந்த எழுத்தாளர்களது மனநிலை நல்ல சஞ்சிகை ஒன்று உருப்பெறுவதற்கு பெரும் தடையாக உள்ளது. கனம்காத்திரமான, நம்பகத்தன்மையான புதிய படைப்புக்கள் இல்லாவிட்டால் எப்படி ஒரு சஞ்சிiயை வெளிக்கொண்டுவர முடியும்? எழுத்தாளர்களின் இழுத்தடிப்பு, உதாசீனம், நம்பிக்கையின்மை, அனுசரணையின்மை, பாராமுகம் சிற்றிதழாளர் மத்தியில் கசப்புணர்வை ஏற்படுத்துபவை.

ரமணிச்சந்திரனையும், ராணிவாரமலர், குமுதம், ஆனந்தவிகடனையும் பணம் கொடுத்து, மாதந்தோறும் பதிவுசெய்து பெற்றுக்கொள்ளும் எமது வாசகர்கள் இலவச விநியோகங்களான இந்த சிற்றிதழ்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. தென்னிந்திய திரைப்படங்கள், தொடர்நாடகங்களோடு இவர்கள் திருப்தியடைந்துவிடுகிறார்கள்.

கனடாவில் சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவந்துகொண்டிருக்கும் சஞ்சிகையாக காலம் சஞ்சிகை குறிப்பிடப்படுகிறது. எனினும் இச்சஞ்சிகை தாங்கிவருகின்ற பெரும்பான்மையான படைப்புக்கள் இந்தியாவிலிருந்து வெளியாகும் காலச்சுவடு என்ற இதழை ஒட்டியதாகவே இருக்கிறது. (விக்கிபீடியா – இணையதளம்) எஸ்.ராமகிருஸ்ணன், ஜெயமோகன், அழகியபெரியவன், மனுஷ்யபுத்திரன், நீல.பத்மநாதன், சுந்தரராமசாமி போன்ற தமிழக எழுத்தாளர்களின் படைப்புக்கள், விமர்சனங்களையே காலம் சஞ்சிகையிலும் காணக்கூடியதாக உள்ளது. காலச்சுவட்டின் சுவட்டில் அதன் தரத்தை ஒட்டிய தரத்தை பேணும் ஒரு மாயையான விம்பத்தை வாசகரிடையே  ஏற்படுத்த முனைகிறது காலம் சஞ்சிகை.

ஈழத்து இலக்கியத்தின் ஒரு வகிபாகமாக கருதப்பட்ட ‘புலம்பெயர் இலக்கியம்’ தற்போது பல்கிப் பெருகிய அதன் வகைதொகை காரணமாக நாடுகளை அடிப்படையாகக் கொண்டு கனடா தமிழ் இலக்கியம், அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியம், பிரான்ஸ் தமிழ் இலக்கியம் என்று நாடுகளை அடிப்படையாகக்கொண்டு பகுத்து நோக்குகின்ற மரபு தோன்றியுள்ளது. இந்நிலையில் கனடா தமிழ் இலக்கிய வரலாற்றில் அதன் சஞ்சிகைகள் பற்றி நோக்கும்போது சிற்றிதழ்களின் உள்ளடக்கம், படைப்புக்கள், அவற்றின் தரம், படைப்பாளர்கள் என்பன உற்றுநோக்கப்படும். நாம் வாழும்நாடு, அதுசார்ந்த இலக்கியம், இங்கு வாழும் படைப்பாளிகளது ஆக்கங்கள் சார்ந்ததாகவே சஞ்சிகைகள் இருக்கவேண்டுமே அன்றி, தமிழக எழுத்தார்களுடைய படைப்புக்களையும், அவை சார்ந்த விமர்சனங்கள் வாதப்பிரதிவாதங்களையும் தாங்கிவருவது அபத்தமானது. ஆபத்தானது. இதனை கவனத்தில் கொள்ளாவிட்டால் புலம்பெயர் நாட்டில் எத்தனை காலங்களாக ஒரு சஞ்சிகை வெளிவந்தாலும் அதன் பயன் ஒன்றுமில்லை.  

கருத்துப் பகிர்வின்மை:
வாசகர்கள், எழுத்தாளர்களுக்குள் கருத்துப் பரிமாற்றம் என்பது முக்கியமானதொரு விடயம். இவ்வாறான சந்திப்புக்கள் இதழாளர், எழுத்தாளர், வாசகர் இடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்தும். சிற்றிதழின் வளர்ச்சிக்கு செழுமை சேர்க்கும். வாசகர்களிடம் வாசிப்பைத் தூண்டும். எழுத்தாளர்களை எழுதத்தூண்டும்.  சிற்றிதழ்களை நடத்துபவர்கள் இவ்வாறான சந்திப்புக்களை குறைந்தபட்சம் வருடம் ஒருமுறையாவது நடத்தவேண்டும். சிற்றிதழாளர்கள் சிற்றிதழ் வெளிவந்ததும் தங்களின் வேலை முடிந்துவிட்டதென்று ஒதிங்கிவிடுகிறார்கள். அடுத்த இதழ் பற்றிய தேடலில் இறங்கிவிடுகிறார்கள். தமிழர் தகவல், காலம் போன்ற சிற்றிதழ்கள் வாசகர் – எழுத்தாளர் – இலக்கியவாதிகள் இடையே மேற்கொள்கின்ற தொடர்ச்சியான கருத்துப்பரிவர்த்தணை, கலந்துரையாடல்கள் அவற்றின் நிலைத்த தன்மைக்கு ஒரு காரணம் எனலாம்.

தமிழர்தகவல் சஞ்சிகை அதன் படைப்பாளிகளோடும், வாசகர்களோடும் நெருங்கிய தொடர்பைப் பேணி வருகிறது. வருடாந்தம் விருது விழாக்கள், எழுத்தாளர் – வாசகர் ஒன்றுகூடல், நூல் வெளியீடுகள் நடத்திவருகின்றது. கனடாப் பத்திரிகை வரலாற்றில் மட்டுமல்லாது கனடிய தமிழ் மக்கள் வரலாறு, வாழ்வியல்  தொடர்பான வரலாற்றின் பதிவாகவும் காத்திரமான முறையில் உள்ளடக்கத்தை கொண்ட தமிழர்தகவல் இன்று 22 வருடங்களைக் கடந்து பெருமையுடன் நிற்கிறது. இதற்கு அது வாசகர் – எழுத்தாளர்களுடன் கொண்டிருக்கும் நீட்சியான உறவே காரணம் எனலாம். காலம் சஞ்சிகையும் கலந்துரையாடல்கள், விமர்சனக் கருத்தாடல்கள், நூல் வெளியீடுகள் என்பவற்றோடு குறிப்பாக நூற்கண்காட்சியும் ஆண்டுதோறும் நடத்திவருகின்றது.

விநியோக முறைமை:
இலவசமாக கிடைக்கின்ற எதுவும் தரமற்றது, பணம் கொடுத்து வாங்கினால் தான் தரமாக இருக்கும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இருக்கிறது. பணம் கொடுத்து வாங்கினால் வாங்கிவிட்டோமே படித்துப்பார்ப்போம் என்ற எண்ணத்தையாவது ஏற்படுத்தும். இலவசமாகக் கிடைப்பது படிக்காவிட்டாலும் பரவாயில்லை. இந்த மனநிலை வாசிப்பில் நாட்டமின்மையை ஏற்படுத்துகிறது. புதிய விநியோக உத்திகளைக் கையாண்டு, வித்தியாசமான முறையில் தமது சஞ்சிகைகளை மக்களிடம் அறிமுகம்செய்து தரம்மிக்க தனது சிற்றிதழ்களுக்கு வாசகர்களை அதிகரிக்கச் செய்கின்ற பொறுப்பு சிற்றிதழாளர்களையே சாரும்.

நிறைவாக:
பொதுவாக எல்லோராலும் சொல்லப்படுகின்ற விடயம் வாசிப்பு பழக்கம் அரிதாகிக்கொண்டு வருகின்றது என்பதுதான். உண்மைதான் தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி இளம்பிராய மாணவர்களிடையே கூட வாசிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் நாம் சிந்திக்கவேண்டிய விடயம்தான். அதையும் மீறி வாசிப்பில் நாட்டம் மிக்கவர்கள் தமது வாசிப்பைத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இந்த தமிழ் பத்திரிகை, சிற்றிதழ்களின் ஆயுள் கூட இந்தத் தலைமுறையுடன் நின்றுபோகும் என்ற கருத்தும் இருக்கத்தான் செய்கிறது. எமது தமிழ்மொழியின் நீட்சிக்கும், தொடர்ச்சிக்கும் நிச்சயம் சிற்றிதழ்களின் பங்கு இன்றியமையாதது. தகுதிவாய்ந்த, சமூகத்தின்மீது அக்கறை கொண்ட சிந்தனைவாதிகள் புதிய உபாயங்களைக் கையாண்டு தரமான சிற்றிதழ்கள் தோன்ற ஆவணசெய்யவேண்டும். எழுத்தாளர்கள், கல்விமான்கள் தம் அனுபவங்களை ஒன்றுதிரட்டி இந்த நவீன யுகத்தில் சிற்றிதழ்களை இளம்பிராயத்தவர்களையும் கவரும்வண்ணம் வெளிக்கொண்டுவர முயற்சிசெய்ய வேண்டும்.  தரமான, தகுதியான பொருளை வாங்கிப் பயன்பெற நம்மக்களும் பின்னிற்கமாட்டார்கள். கனடா தமிழ் இலக்கிய உலகில் காத்திரமான சிற்றிதழ்கள் நிலைபெறும்.


‘தமிழர்தகவல்’ இதழில் ஏற்கனவே வெளியான இக்கட்டுரையினைப் பதிவுகளுக்கு அனுப்பியவர் எழுத்தாளர் அகில்.

editor@tamilauthors.com