கனடா எழுத்தாளர் இணையத்தின் சிறுகதை வாசிப்பும் கலந்துரையாடலும்

கனடா எழுத்தாளர் இணையத்தின் சிறுகதை வாசிப்பும் கலந்துரையாடலும்கனடா எழுத்தாளர் இணையத்தின் சிறுகதை வாசிப்பும் கலந்துரையாடலும்கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் இவ்வருடத்திற்கான சிறுகதைப் பட்டறையின் முதலாவது நிகழ்வு ஸ்காபரோ சிவிக் சென்ரர் மண்டபத்தில் சென்ற வெள்ளிக்கிழமை 09-11-2012 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.  ஆரம்ப உரையில் எழுத்தாளர் இணையத் தலைவர் திரு. சின்னையா சிவநேசன் அவர்கள் அடுத்த ஆண்டு எழுத்தாளர் இணையத்தின் 20வது ஆண்டு நிறைவைக் குறிப்பிடும் முகமாக மலர் ஒன்றும் வெளியிட உத்தேசித்திருப்பதாகவும், அதற்குரிய ஆயத்தங்கள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டார். மேலும் இன்றைய காலக்கட்டத்தில் நம்மவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கம் வெகுவாக அருகி வருவதாகவும், இத்தகைய குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் இத்தகைய பட்டறைகளைத் தொடர்ந்தும் நடத்த இருக்கின்றோம் என்றும் குறிப்பிட்டார்.

அடுத்து உரையாற்றிய எழுத்தாளர் குரு அரவிந்தன் சிறுகதையின் அம்சம் பற்றி விளக்கமாகக் குறிப்பிட்டு, சிறுகதையின் வெற்றிக்கு முக்கியமாக கருப்பொருள், கதை சொல்லும் பாணி அல்லது எழுத்து நடை, கற்பனை வளம், கதையின் முக்கிய திருப்பங்கள் ஆகியன மிகவும் அவசியம் என்பதைக் குறிப்பிட்டு, சமீபத்தில் வெற்றிமணி பத்திரிகை நடத்திய இலங்கைத் தமிழ் மாணவர்களுக்கான சிறுகதைப் போட்டியில் நல்ல தரமான கதைகள் மாணவர்களால் எழுதப்பட்டிருந்ததையும் அதற்கான நடுவர்களில் ஒருவராகத் தான் கடமையாற்றியதையும் எடுத்துக் காட்டினார். அடுத்து கவிநாயகர் கந்தவனம் சிறுகதை வரைவிலக்கணம் பற்றியும் சிறுகதைகள் சுருங்கி ஒருபக்கக் கதைகளாகி விட்டதாகவும் குறிப்பிட்டார். வீரகேசரி மூர்த்தி தனது உரையில் மனதைக் கவரும் உண்மைச் சம்பவங்களைக் கருப்பொருளாக்கி சமூகத்தை விழிப்படையச் செய்யும் வகையில் தனது சிறுகதைகள் அமைவதாகவும் குறிப்பிட்டார், ஸ்ரீரஞ்சினி எமது பிள்ளைகளுக்குச் சிறுவயதிலேயே சிறுகதைகளை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் தமது காலத்தில் பெற்றோர்கள் இதற்குத் தடையாக இருந்ததாகவும் குறிப்பிட்டார். பொதுவாக அன்றைய கலந்துரையாடல் மிகவும் ஆக்க பூர்மாக அமைந்திருந்தது.

இரண்டாவது நிகழ்வாக, கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் ஏற்பாடுசெய்திருந்த கலந்துரையாடலின்போது, (16-11-2012) எழுத்தாளர் இணைய அங்கத்தவர்கள் சிலரின் சிறுகதைகள், சில ஆக்கங்கள் வாசிப்பில் இடம் பெற்றன.

கனடா எழுத்தாளர் இணையத்தின் சிறுகதை வாசிப்பும் கலந்துரையாடலும்கனடா எழுத்தாளர் இணையத்தின் சிறுகதை வாசிப்பும் கலந்துரையாடலும்முதலாவதாக குரு அரவிந்தனின் ‘சுமை’ என்ற சிறுகதை வாசிப்புக்கு எடுக்கப்பட்டது. இக்கதை கனடிய தமிழ் வானொலி நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றதும் குறிப்பிடத்தக்கது. வயது முதிர்ந்து பலவீனமான நிலையில் பல காலம் சிறையில் இருந்து விடுதலையாகி வந்த ஒருவனின் நிலை எப்படி வாசலில் படுத்திருக்கு ஒரு சொறிநாயின் நிலைக்குத் தள்ளப்பட்டது என்ற உவமை மிகவும் அழகாக எடுத்துச் சொல்லப்பட்டதை எழுத்தாளர் இணையத் தலைவர் சின்னையா சிவநேசன் அவர்கள் குறிப்பிட்டுப் பாராட்டினார். மிகச் சிறந்த நடையில் எழுதப்பட்ட வித்தியாசமான பார்வை கொண்ட சிறுகதை என்பதை ஆய்வாளரும் எழுத்தாளருமான நவம் குறிப்பிட்டுப் பாராட்டினார். சிறந்த எழுத்து நடையுள்ள சிறுகதை என்று பாராட்டிய கவிஞர் திருமாவளவன், தாயகச் சம்பவங்களில் கவனம் செலுத்துவதைவிட கனடிய சம்பவங்களைக் கருப்பொருளாக்கி எழுதும் போது குரு அரவிந்தன் போன்ற சிறந்த எழுத்தாளர்களால் நல்ல இலக்கியங்களை புகுந்த மண்ணில் படைக்க முடியும் என்று தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.

அடுத்து ஜீவநதி கனடிய மலரில் வெளிவந்த வீரகேசரி மூர்த்தியின் ‘பிரசவ வேதனைப் புதினம்’ என்ற ஆக்கம் கலந்துரையாடலில் எடுத்துக் கொள்ளப்பட்டது. சிறுகதையாகத்தான் தான் அதை எழுதியதாகவும் ஆனால் அதைப் பகுத்தவர்கள் கட்டுரையில் போட்டு விட்டதாகவும் குறிப்பிட்டார். கனடிய தமிழ் பத்திரிகைகளை மையக்கருவாக வைத்து இந்த ஆக்கத்தை மூர்த்தியவர்கள் படைத்திருந்தார். சிறுகதைக்குரிய எந்த ஒரு அடிப்படை காரணிகளும் அதை நிறைவு செய்யவில்லை என்பதைத் தனது கருத்தாகக் கவிஞர் திருமாவளவன் குறிப்பிட்டார். அப்போது திரு. அ. முத்துலிங்கம் அவர்களின் ஆக்கமும் கட்டுரைப் பகுப்பிலேயே இடம் பெற்றிருக்கிறது, அது சிறுகதை இல்லையா என்று முருகேசு பாக்கியநாதன் குறிப்பிட்டார். அச்சந்தர்ப்பத்தில் சிறுகதைக்குரிய சரியான வரைவிலக்கணம் என்ன என்று சின்னையா சிவநேசன் வினாவினார். க.நவம் அவர்கள் சிறுகதைக்குரிய அம்சங்கள் பற்றித் தெளிவாகக் குறிப்பிட்டு, தனது கருத்தின்படி இப்படித்தான் சிறுகதை இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை என்ற தனது கருத்தை விளக்கினார்.

கனடா எழுத்தாளர் இணையத்தின் சிறுகதை வாசிப்பும் கலந்துரையாடலும்ஜீவநதி கனடா சிறப்பிதழ் பற்றி ஆராயப்பட்டபோது, வடிவமைப்பில் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம் என்று திருமாவளவன் குறிப்பிட்டார். மலரில் வெளிவந்த ஏனைய ஆக்கங்கள் பற்றிய கலந்துரையாடலின்போது, பல ஆக்கபூர்வமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக சுல்பிகாவின் கனேடியத் தமிழர்களின் கலை இலக்கிய வாழ்வியல் பற்றிய கட்டுரை சிறப்பாக அமைந்திருந்ததாகவும் இன்னும் அதை விரிவாக்கலாம் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது. குறுகிய வட்டத்திற்குள் நின்று குழு சார்ந்த நிலையில் எழுதுபவர்களைக் கலைஞர் திவ்யராஜன் வன்மையாகக் கண்டித்து இந்த நிலை நீடித்தால் புலம்பெயர் இலக்கியம் ஒருபோதும் வளர்ச்சி அடையாது என்பதையும் தெரிவித்தார். க.நவத்தின் நேர்காணலில் கனடிய தமிழ் இலக்கிய ஆளுமை பற்றிய கேள்விக்குக் கனடாவில் உள்ள அத்தனை படைப்பாளிகளும் ஏதோவொரு வகையில் தத்தமக்குள்ளே தமிழ் இலக்கிய ஆளுமைதான் என்று குழு சார்ந்த நிலையைத் தவிர்த்துச் சிறப்பாகப் பதில் கொடுத்திருந்தமையைப் பலரும் பாராட்டினார்கள். எஸ். சந்திரபோஸ் எழுதிய திவ்வியராஜனின் கலை இலக்கியப் பங்களிப்பு பற்றிய கட்டுரையும் சிறப்பாக இருப்பதாக ஸ்ரீரஞ்சனி கருத்துத் தெரிவித்தார். இறுதியாகக் கனடிய எழுத்தாளர்கள் பலரின் ஆக்கங்கள் இந்த மலரில் இடம் பெறாமல் போனது பற்றிப் பொறுப்பாளர்களுக்குச் சுட்டிக் காட்டப்பட்டது.

கனடிய தமிழ் எழுத்தாளர் இணையத்தின் அடுத்த கலந்துரையாடல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் அதே மண்டபத்தில் நடைபெற இருக்கின்றது.

maliniaravinthan@hotmail.com.