‘கரிகாலன் விருது’ பெறும் ஜெயந்தி சங்கரை வாழ்த்துகிறோம்!

ஜெயந்தி சங்கரின் திரிந்தலையும் திணைகள் நாவலுக்குக் கரிகாலன் விருதுமுல்லை அமுதன் , 'காற்றுவெளி' ஆசிரியர்சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தில் தனக்கென முத்திரை பதித்து எழுதி வருபவர் திருமதி ஜெயந்தி சங்கர். கவிதை, மொழிபெயர்ப்பு, சிறுகதை, கட்டுரை, நாவல் என இவரின் இலக்கியம் விரிகிறது. தமிழக மதுரையில் 1964இல் பிறந்தவர்.சிங்கப்பூரில் வாழ்கிறார். மதுரை ஹிந்து சினீயர் செகண்டரி பள்ளி,சிதாலக்ஸ்மி ராமசாமி கல்லூரி, பெசண்ட்தியாசோபிகல் பள்ளி ஆகியவற்றில் பயின்று இன்று பி.எஸ் சி பிசிக்ஸ் பட்டதாரியாகவும், பகுதி நேர மொழிபெயர்ப்பாளராகவும், முழுநேர எழுத்தாளராகவும் நமக்குத் தெரிந்திருக்கிறார். நாலேகால் டாலர், பின்சீட், நியாயங்கள் பொதுவானவை, மனுஷி, திரைகடலோடி, தூரத்தே தெரியும் வான்விளிம்பு,வாழ்ந்து பார்க்கலாம் வா,நெய்தல், மனப்பிரிகை, குவியம், ஏழாம் சுவை, பெரும் சுவருக்குப்பின்னே, சிங்கப்பூர் வாங்க,ச்சிங்மிங், கனவிலே ஒரு சிங்கம், முடிவிலும் ஒன்று தொடரலாம், மிதந்திடும் சுயபிரதிமைகள், சூரியனுக்கு சுப்ரபாதம்,இசையும் வாழ்க்கையும், மீன்குளம் எனப் பல சிறுகதை,மொழிபெயர்ப்பு,சிறுவர் இலக்கியம், நாவல், கட்டுரைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

இவரின் படைப்புக்களை தமிழக,சிங்கப்பூர் புலம்பெயர் சஞ்சிகைகள் வெளியிட்டு வருகின்றமையும், அனேக இணையங்களிலும் பிரசுரமாகி பலராலும் பாராட்டப்பட்டவைகளாகவும் இருப்பது கண்கூடு. அவரின் படைப்புக்கள் சில காற்றுவெளியிலும் வெளிவந்த்து குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் ஜெயந்திசங்கருக்கு இவ்வாண்டு முஸ்தபா அறக்கட்டளையினரின் சார்பில்’கரிகாலன் விருது’ விருது’ ஜெயந்தி சங்கரின் எழுதிய’திரிந்தலையும் திணைகள்’ நாவலுக்குக் கிடைத்திருப்பது இலக்கிய உலகம் செய்த பாக்கியமாகும். தஞ்சாவூர் பல்கலைக் கழகம் வழங்கும் இவ்விருது வழங்கும் வைபவம் மார்கழி மாதம் பதினாலாம் திகதி தஞ்சாவூர் பல்கலைக் கழத்தில் நடைபெறும் என அறியக்கூடியதாக இருக்கிறது.

அவரின் எழுத்துதிறமையை அவரின் -படைப்புக்களில் காணலாம். அவரின் எழுத்துப்பணி மேலும் தொடர காற்றுவெளியும் வாழ்த்தி நிற்கிறது.

mullaiamuthan@gmail.com