கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரனுக்குத் தலைக்கோல் விருது.

கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரனுக்குத் தலைக்கோல் விருது. கே.எஸ்.பாலச்சந்திரன்சென்ற ஞயிற்றுக்கிழமை கனடாவில் உள்ள ஸ்காபரோ விலேச் கொம்யுனிற்ரி மண்டபத்தில் ((Scarborough Village Community Center) குரு அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற பாராட்டுவிழாவில் கே.எஸ். பாலச்சந்திரனுக்கு தலைக்கோல் விருது வழங்கும் வைபவம் அரங்கம் நிறைந்த பார்வையாளர் மத்தியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அந்த விழாவில் அதைத் தொடர்ந்து பாலச்சந்திரனின் வரலாற்றுப் பதிவான ‘பாலச்சந்திரன் என்றொரு கலை ஆளுமை’ என்ற பாராட்டு நூலும் சோக்கல்லோ சண்முகத்தால் தொகுத்து, மொன்றியல் இரா. நடராஜா அவர்களின் அனுசரனையோடு வெளியிடப்பட்டது. பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற தலைக்கோல் விருது வழங்கும் விழாவை மொன்றியல் இரா. நடராஜா, தா. சண்முகநாதன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

திரு. கே. எஸ். பாலச்சந்திரன், திருமதி. எட்னா பாலச்சந்திரன், திருமதி மாலினி அரவிந்தன், மொன்றியல் இரா. நடராஜா, ஆகியோர் மங்கல விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தார்கள். தமிழ்வாழ்த்து, கனடிய தேசியகீதம் ஆகியன செல்விகள் ஆதிரை விமலநாதன், சங்கவை விமலநாதன் ஆகியோரால் பாடப்பெற்றன. தொடர்ந்து கனடா லயபவ டான்ஸ் அக்கடமி அதிபர் நிருத்தியகலாமணி ஸ்ரீமதி கிருபா இரத்தினேஸ்வரனின் மாணவிகளான அகல்யா பார்த்தீபன் பிரேமி சாந்தமூர்த்தி ஆகியோரின் வரவேற்பு நடனம் இடம் பெற்றது. அடுத்து அமைப்பாளர் மொன்றியல் நடராஜாவின் வரவேற்புரை இடம் பெற்றது. அடுத்து இடம் பெற்ற விழாத் தலைவர் குரு அரவிந்தனின் உரையில் ‘வாழும்போதே ஒரு கலைஞனைக் கௌரவிக்க வேண்டும் என்ற சிந்தனையோடு தமிழகத்தில் அமுதன் அடிகளார் இலக்கிய விருதைப் பெற்ற கலைஞரும், எழுத்தாளருமான அண்ணை ரைட், தணியாததாகம் புகழ் கே. எஸ். பாலச்சந்திரனைப் பாராட்டி இச் சந்தர்ப்பத்தில் கனடிய கலை, இலக்கிய ஆர்வலர்கள் சார்பில் விருது வழங்குவதில் பெருமைப் படுகிறோம்’ என்று குறிப்பிட்டார்.

அடுத்து சோக்கல்லோ சண்முகம் வில்லடிப்பாட்டுக் குழுவினரின் ‘பாரதி பித்தன் பாலச்சந்திரன்’ என்ற வில்லிசை நிகழ்ச்சி இடம் பெற்றது. சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த வில்லிசை நிகழ்ச்சி பலராலும் பாராட்டப்பட்டது. இதில் பங்குபற்றிய கலைஞர்கள் சோக்கல்லோ சண்முகம், நளினி குகசீலன், இராஜ்மீரா இராசையா, சி. விமலநாதன், வி.ரி. இராஜேந்திரன், இ. உருக்குமணிகாந்தன், கலாபூசணம் சிவபாதம், வி. டின்சன், சசி, சுதாகரன், நமோ நாகேஸ்வரி ஆகியோர் மிகவும் சிறப்பாக வில்லிசை நிகழ்ச்சியை நடத்தியிருந்தனர்.

தொடர்ந்து கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரனுக்கு தலைக்கோல் விருது வழங்கும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக இடம் பெற்றது. திரு. மொன்றியல் நடராஜா விருதை திரு வி. என். மதியழகனிடம் கையளிக்க அவர் தலைக்கோல் விருது பற்றிய விளக்கத்தைக் கூறி அதை கே. எஸ். பாலச்சந்திரனுக்கு வழங்கினார். திரு. பி. விக்னேஸ்வரன், திரு. ஆ.சிவநேசச்செல்வன் ஆகியோரும் பாராட்டு வழங்கினர். ஆடல் பாடல்களில், கூத்து நடிப்புகளில், இசைத்திறமைகளில் அறிவும் திறமையும் உள்ளவர்களைப் பாராட்டி தலைக்கோல் விருது கொடுத்திருப்பதாக சங்க இலக்கியங்களில் இருந்து தெரிய வருகின்றது.  ஆடலழகி மாதவிக்கு இவ்விருது கிடைத்ததாக குறிப்புகள் கூறுகின்றன. மலைப்புக்குரிய சிறப்பினை எய்தியவருக்கு தலைக்கோல் பட்டம் உரித்து’ என்று சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய கலைக்கோல் விருது கனேடிய கலைத்துறை வரலாற்றில் முதன் முதலாக எழுத்தாளர் குரு அரவிந்தன் தலைமையில் கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரனுக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருக்கின்றது.

கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரனுக்குத் தலைக்கோல் விருது நிகழ்வில்...

தொடர்ந்து ‘பாலச்சந்திரன் என்றொரு கலை ஆளுமை’ நூல் வெளியீடு நடைபெற்றது.  மொன்றியல் இரா. நடராஜா வெளியிட பாலச்சந்திரனின் தாயார் மகேஸ்வரி சுப்பிரமணியம் அவர்கள் நூலைப் பெற்றுக் கொண்டார். திரு. கந்தசாமி கங்காதரன் நூல் விமர்சனம் செய்தார். மூலப்பிரதியைத் தழுவிய அவரது விமர்சனம் இருந்ததால் அதன் பின் நூலில் ஏற்பட்ட திருத்தங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனாலும் அவரது விமர்சனம் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.

தொடர்ந்து வானெலி நாடகங்கள், திரைப்படக் கலைஞர் திரு. வைரமுத்து திவ்வியராஜனின் உரை இடம் பெற்றது. பாலச்சந்திரனுக்கும் திரைப்படத் துறைக்கும், குறிப்பாகக் கனடிய தமிழ் திரைப்படத்துறைக்கும் உள்ள தொடர்புகள் பற்றி அவர் உரையாற்றினார். அடுத்து ‘பார்க்காத பக்கங்கள்’ என்ற தலைப்பில் பாரிசில் இருந்து வருகை தந்திருந்த எழுத்தாளர் திருமதி. தமிழ்ப்பிரியா இளங்கோ அவர்கள் உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து திரு. சுப்பிரமணியம் இராசரத்தினத்தின் உரை இடம் பெற்றது. பாலச்சந்திரனின் கலை இலக்கிய சாதனைகள் பற்றி அவர் உரையாற்றினார். அடுத்து விழாவின் நாயகன் கே. எஸ். பாலச்சந்திரனின் ஏற்புரை இடம் பெற்றது. அவர்தனது எற்புரையில் விழாத் தலைவருக்கும், விழா அமைப்பாளர்களுக்கும், மற்றும் உரையாற்றியவர்களுக்கும், வருகைதந்து தன்னைக் கௌரவித்தவர்களுக்கும், ஆக்கங்களைத் தந்து உதவியவர்களுக்கும், ஒலி ஒளி அமைப்புச் செய்து உதவிய வி.ரி. இராஜேந்திரன், இரா. மைக்கேல் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தார். அவரது ஏற்புரையைத் தொடர்ந்து ‘பாலாவின் நனவோடை’ என்ற விவரணச்சித்திரம் இடம் பெற்றது.

தமிழக அமுதன் அடிகளாரின் இலக்கிய விருதுபெற்ற கே.எஸ். பாலச்சந்திரனுக்கு ரொறன்ரோவில் பாரதி கலைக்கோயில் சார்பாக மதிவாசன் ஏற்கனவே 2011ல் விழா எடுத்திருந்தார். பல கலைஞர்களின் ஆக்கங்கள் இடம் பெற்ற, எழுத்தாளர் குரு அரவிந்தன் தொகுத்து வழங்கிய வரலாற்று நூலை பவதாரணி பாரதி கலைக் கோயில் வெளியிட்டிருந்தனர். இந்த நூலில் இடம் பெற்ற ‘ஒரு நடிகன் எழுத்தாளராகின்றார்’ என்ற குரு அரவிந்தனின் கட்டுரையில் பாலச்சந்திரனின் வாழ்க்கை வரலாறு பதிவாகியிருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இறுதியாக செல்வி. வித்தியா சிவகுமார், செல்வி. சங்கவி சிவகுமாரன் ஆகியோரின் தமிழ்தாய் வாழ்த்து கனடிய தேசிய கீதத்துடன் விழா இனிதே முடிவுற்றது.

அனுப்பியவர்: maliniaravinthan@hotmail.com