கலைத்தாகம் மிக்க தம்பதியரின் தணியாத தாகம் கலைத்தாகம்!

கமலினி செல்வராஜன்“அத்தானே அத்தானே எந்தன்   ஆசை அத்தானே கேள்வி   ஒன்று கேட்கலாமா  உன்னைத்தானே.? ”   எனக்கேட்ட   கமலினி  செல்வராசன் அத்தானிடமே   சென்றார். திருமதி  கமலினி  செல்வராசன்  கொழும்பில்  மறைந்தார்  என்ற செய்தி   இயல்பாகவே  கவலையைத்தந்தாலும்,  அவர்  கடந்த  சில வருடங்களாக   மரணத்துள்  வாழ்ந்துகொண்டே   இருந்தவர்,  தற்பொழுது   அந்த   மரணத்தைக்கடந்தும்   சென்று  மறைந்திருக்கிறார் என்றவகையில்   அவரது  ஆத்மா  சாந்தியடையட்டும் எனப்பிரார்த்திப்போம்.

ஈழத்தின்   மூத்த  தமிழ்  அறிஞர்  தென்புலோலியூர் கணபதிப்பிள்ளையின்  புதல்வி  கமலினி,  இயல்பிலேயே  கலை, இலக்கிய,  நடன,  இசை  ஈடுபாடு மிக்கவராகத் திகழ்ந்தமைக்கு  அவரது   தந்தையும்  வயலின்  கலைஞரான  தாயார் தனபாக்கியமும் மூலகாரணமாக  இருந்தனர்.  எனினும்  புலோலியூர் கணபதிப்பிள்ளையின்   நெருங்கிய  நண்பராகவிருந்த  பல்கலை வேந்தன்  சில்லையூர்  செல்வராசன்,   அந்த  நெருக்கத்தை   அவர் புதல்வியின்   மீதும்  செலுத்தியமையினால்,  ஏற்கனவே  ஜெரல்டின் ஜெஸி   என்ற  மனைவியும்  திலீபன்,  பாஸ்கரன்,  முகுந்தன்,  யாழினி ஆகிய   பிள்ளைகள்  இருந்தும்  கமலினியை   கரம்  பிடித்தார்.

கலைத்தாகம்   மிக்க,   கமலினி –   களனி  பல்கலைக்கழக  பட்டதாரியாகி    ஆசிரியராகவும்  பணியாற்றியவர்.   தந்தை  வழியில் தமிழ்த்தாகத்தை   பெற்று   வளர்ந்த  கமலினி  தாய்வழியில்  இசை ஞானமும் , கணவர்  சில்லையூர்  வழியில்  கலைத்தாகமும்  பெற்று பல்துறை   ஆற்றல்  மிக்கவராக  திகழ்ந்தார்.

சில்லையூர் செல்வராசன் , 1970  இல்  எழுதிய  ” ஈழத்து  தமிழ்  நாவல் இலக்கிய  வளர்ச்சி ”  என்ற  நூலுக்கு  கமலினியின் தந்தை கணபதிப்பிள்ளை   முன்னுரை   எழுதினார்.  பின்னாளில்  சில்லையூர் கமலினிக்கு   புதிய  முகவரி  வரைந்தார்.

எனினும்   அந்த  முகவரி –  கமலினியின்  தீராத  கலை,   இலக்கிய தாகத்திற்கு  எப்பொழுதும்  துணையாக  நின்று  பாதுகாத்தது. இருவரும்  பல  கலை  – இலக்கிய  மேடைகளில்  தோன்றினார்கள். அதற்காக   பல  ஊர்களுக்கும்  பயணமானார்கள்.   அவர்கள் கலந்துகொள்ளும்  எந்தவொரு  விழாவிலும்  இருவரும் உரையாற்றும்   வகையிலேயே  நிகழ்ச்சி  நிரல்களும்  தயாரிக்கப்படும்.

சில்லையூர் ,  இலங்கை  வானொலியில்  நடத்திய  மக்கள்  வங்கி விளம்பர   நிகழ்ச்சிக்காக  தமது  தணியாத  தாகம்  நாடகத்தையும் தொடராக   ஒலிபரப்பியபொழுது,  தாம்  இயற்றிப்பாடிய  “அத்தானே…அத்தானே ….எந்தன்  ஆசை   அத்தானே… கேள்வி  ஒன்று கேட்கலாமா… உனைத்தானே ”  என்ற பாடலில்  கமலினியும் இணைந்தார்.    தமது  மதுரமான  குரலில்  அந்தக்கேள்வி  ஒன்றையும்  கேட்டார்.   அந்தப்பாடல்  தொலைக்காட்சி  இல்லாத  அக்காலத்தில் இலங்கையிலும்    இந்தியாவிலும்  புகழ்பெற்றிருந்தது.

சில்லையூரை   மணந்து  சித்தி  என்ற  ஸ்தானம்  பெற்று  கணவரின் பிள்ளைகளுடன்   வாழ்ந்த  கமலினிக்கும்  தாய்  அந்தஸ்த்தை வழங்கினார்   சில்லையூர்.   சில்லையூரின்   மற்றுமொரு  வாரிசாக  அதிசயன்  பிறந்தான். சில்லையூரின்   குடும்பம்  ஒரு  கலைக்குடும்பம்.   அவர்  மகன்மாரும் கமலினியும்   நடித்த  சந்திரன்  ரத்தினம்  இயக்கிய   ஆதர  கதாவ திரைப்படம்   இலங்கையில்  முக்கியமானதொரு  படமாகும்.   தமிழ் – சிங்கள   உறவை ,  இனநெருக்கடி  உச்சத்திலிருந்த  காலத்தில் சித்திரித்த படம்.   இதில்  கமலினியும்  நடித்திருந்தார்.

கணவனும்  மனைவியும்  இணைந்து  காதலர்களாக  நடித்த  படம் கோமாளிகள்   முழு  நீள  நகைச்சுவைப்படம்.   கலைஞர்கள்   அருணா   செல்லத்துரை,  கே.எஸ். பாலச்சந்திரன், கோமாளிகள்  ராமதாஸ்,   வரணியூரான்  கணேசபிள்ளை,   கே.எம். வாசகர்   முதலானோர்  தயாரித்து  இயக்கிய  பல  வானொலி,  தொலைக்காட்சி   நாடகங்களிலும்  தமது  திறமையான  நடிப்பினால் புகழ்பெற்றவர்  கமலினி. சில்லையூர்   மறைந்த பின்னர்  அவரது  முதல்தாரத்துப்பிள்ளைகளும் வெளிநாடுகளுக்கு   சென்றதையடுத்து  கமலினி  மகன்  அதிசயனுடன் தனது வாழ்வை   கொழும்பில்  தொடர்ந்தார்.  ஆசிரியப்பணியுடன்  ஐ.ரி. என்.   தொலைக்காட்சியில்  தேசிய  லொத்தர்  சபையின்  விளம்பர   நிகழ்ச்சிகளில்  பங்கேற்றார்.  கலை,  இலக்கிய மேடைகளிலும்   தோன்றினார்.

கணவர்   மறைந்த  பின்னரும்  அவரது  விருப்பப்படி  நெற்றியில் திலகத்துடன்   வலம்  வந்து  பெண்ணியமும்  பேசினார்.  அது தொடர்பாக   பத்திரிகைக்கும்  நேர்காணல்  வழங்கினார்.  அவரது கலைத்தாகத்தின்   ஊற்றாக  விளங்கிய  தந்தையினதும்  கணவரினதும்  மறைவையடுத்து   எதிர்கொண்ட  சவால்களை சமாளித்தார்.   சில்லையூரினால்  ஏற்கனவே  எழுதப்பட்டு சிதறிப்போயிருந்த    கவிதைகள்,   காவியங்களைத்  தேடித்திரட்டினார். தேர்ந்தெடுத்த   கவிதைகள்  வரிசையில்  சில்லையூர்  செல்வராசன் கவிதைகள் ( தொகுதி – 1)   நூலை  வெளியிட்டார். 1997  ஆம்  ஆண்டில்  கமலினியால்  தொகுக்கப்பட்டு  வெளியான  அந்த   நூலில்  சில்லையூரின்  கவியரங்கப்பாடல்கள், தேசபக்திப்பாடல்கள்,   புலவன்  மனங்கவர்ந்த  பொன்னாடுகள்,  அகம் – புறம் ,   அங்கதம்,  கவிஞனின்   தத்துவம்,  பெண்மை,  இசைப்பாடல்கள், பரிவும் – பிரிவும் ,  நெடும்பா ,  மொழிபெயர்ப்பு  பாடல்கள்  என அதிகாரங்கள்   பிரித்து  அந்தத் தொகுதியை   வெளிக்கொணர்ந்தார் கமலினி. அத்துடன்   அந்த  நூலில்  சில்லையூரின்  வாழ்வில்  நிகழ்ந்த  பல உள்நாட்டு,   வெளிநாட்டு  இலக்கிய  பொது  நிகழ்ச்சிகளை சித்திரிக்கும்   படங்கள்,   அவரின்  பெற்றோர்,   பிள்ளைகள்,  முதல் மனைவி   உட்பட  பலரும்  இடம்பெறும்  படங்களையும்  தவிர்க்காமல்   அந்த  நூலில்  இணைத்திருந்தார்.    அவற்றையெல்லாம் சேகரிப்பதில்   கமலினி   காண்பித்த  தீவிர  அக்கறையை   அந்த  நூல் காலம்தோறும்  சொல்லிக்கொண்டிருக்கும்.

அந்தவகையில் – சில்லையூரைப்பற்றிய படைப்பிலக்கியத்தகவல்களுக்கு   ஆவணமாகவே   அந்த  நூல்  இன்று திகழுகின்றது.   சில்லையூருக்கு  இவ்வாறும்  ஒரு  மனைவி   வந்து வாய்த்தது   அவருக்கு  இறைவன்  கொடுத்த  வரம்தான்.

சில்லையூர்  25-01-1933  ஆம்   திகதி   பிறந்து 14-10-1995  ஆம்  திகதி மறைந்தார்.   ஆனால்,  1997   ஆம்  ஆண்டு  வெளியிடப்பட்ட  அந்த நூலில்  –   வாழ்க்கைக்குறிப்புகள்  பகுதியில்  அவரது  பிறப்பு, பெற்றோர்,   பெற்ற  விருதுகள்,   தெரிந்த  மொழிகள்,   நடித்த நாடகங்கள்,    கூத்துக்கள்,   திரைப்படங்கள்,   வெளியான  நூல்கள், பெற்ற   விருதுகள்  பற்றியெல்லாம்  பதிவுசெய்துள்ள  கமலினி , கணவரின்   மறைவுத் திகதியை  மாத்திரம் பதிவு செய்யவில்லை. இந்த உலகத்தைப்பொறுத்தவரையில்  அவர்  மறைந்தாலும் தன்னைப்பொறுத்தவரையில்   அவர்  வாழ்ந்துகொண்டிருக்கும் உள்ளுணர்வையே அந்த  நூலில்  இழையோடவிட்டிருந்தார்  கமலினி  செல்வராசன்.

கொழும்பில் நாரஹேன்பிட்டியில் அந்தத்தம்பதியர்  வாழ்ந்த  பைஃப் ரோட் ( Fife Road)  இல்லம்   எப்பொழுதும்  கலகலப்பாகவே  இருக்கும் எழுத்தாளர்கள்,  கலைஞர்கள்,  வானொலி,  தொலைக்காட்சி, ஊடகத்துறையினர் அடிக்கடி வந்து செல்லும்  கலையகமாகவே அந்த   இல்லம்  திகழ்ந்தது. ஆனால், அது வாடகை இல்லம். சில்லையூரின் மறைவுக்குப்பின்னர் அந்த இல்லத்தை தேசிய நினைவில்லமாக்குவதற்கு    கமலினி அரும்பாடுபட்டார்.

அரச   மட்டத்திலும்  கலை,  இலக்கிய  அமைப்புகள்  மட்டத்திலும் கடும்   முயற்சிகளையும்   மேற்கொண்டார்.   ஆனால் – அந்த  இல்லம் வாடகை  இல்லம்  என்பதனால்  சட்டப்பிரச்சினை  காரணமாக கமலினியின்   கனவு   நனவாகவில்லை.  அந்த   ஏமாற்றம்  அவரிடம் நீண்ட   நாட்கள்  நீடித்தது.

எனினும் சில்லையூருக்காக பொரளை கனத்தை மயானத்தில் ஒரு நினைவுச்சிற்பத்தை அவர் அமைத்தார். அதற்கு அவருடன் இணைந்து ஆக்கபூர்வமாகச்செயற்பட்டவர் அகில இலங்கை கண்ணதாசன் மன்றத்தின் தலைவரும் கலை, இலக்கிய ஆர்வலரும் கொழும்பு  மாநகர  சபை உறுப்பினருமான திரு. கங்கை வேணியன் என்பதையும் இங்கு  தெரிவித்தல்  பொருத்தமானது.

அந்த   நினைவுச்சிற்பத்தை   செதுக்கியவர்  கலைஞர்  புல்லுமலை நல்லரத்தினம்.  நினைவுச்சிற்பத்தின்   திறப்பு  நிகழ்ச்சியில் அப்பொழுது  மேயராக  இருந்த  கே. கணேசலிங்கம்,  கனத்தை  மயான பரிபாலகர்  சானக  பெரேரா,  ஆகியோரும்  கலந்துகொண்டனர். மற்றவர்கள்   வழக்கம்போல்,    கணவர்  மறைந்தவுடன்  அந்தியேட்டி நடத்தி   – கல்வெட்டு  வெளியிட்டு –  அன்னதானம்  வழங்கும் ஆயிரத்தில்   ஒரு  நிகழ்ச்சியாக  அந்த  மறைவை   அனுட்டிக்காமல் என்றென்றும்   நிலைத்திருக்கும்  சில்லையூரின்  நூல்களையும் வெளியிட்டு,    அன்னாருக்காக  நாம்  என்றென்றும்  பார்க்கத்தக்க நினைவுச்சிற்பமும்   அமைத்த  ஆளுமையுள்ள  பெண்தான் திருமதி   கமலினி  செல்வராசன்.

அவருக்கு   இருந்த  கலைத்தாகம்  காதல்  கணவர்  மீதும் அபரிமிதமாக   இருந்ததை   பதிவு செய்திருப்பதே  அவர்  வாழ்ந்த வாழ்க்கை. கமலினிக்கு   நினைவு   மறதி  நோய்  எதிர்பாரத  விதமாக வந்தபொழுது  – தனது   தாயை   ஒரு  தாயாகவும்  தந்தையாகவும் தனயனாகவும்   பாதுகாத்து  உணவூட்டி  போசித்தவர் அருமைச்செல்வன்   ஏக  புதல்வன்  அதிசயன்  செல்வராசன்.

தமிழ்   கலை,   இலக்கிய,  வானொலி,  தொலைக்காட்சி, திரைப்படத்துறையில்   மங்காப்புகழுடன்  வாழ்ந்த  கமலினி செல்வராசன்   நோயுற்றபொழுது அவரின்  அந்திமகால துயரச்சித்திரத்தை   வரைந்தது  ஒரு  சிங்கள  ஏடுதான்  என்பதை அறிந்தால்   அதிசயிப்பீர்கள்.  ஆம்,   அதுதான்  உண்மை.    அதிசயன்  செல்வராசனின்  நேர்காணல் கமலினியின்   அந்திமகால  தோற்றத்துடன்  ரவிரச  என்ற   சிங்கள ஏட்டில்   வெளியானது. தனது   தாயாரை  பராமரிக்க  அதிசயன்  நாளாந்தம்  மேற்கொண்ட பாசமிகு   பணிகள்  பலருக்கும்  முன்மாதிரியானது.   சில்லையூருக்கு கமலினி   வந்து  வாய்த்தது   எத்தகைய  கொடுப்பினையோ அதற்குச்சற்றும்   குறைவில்லாதது  கமலினிக்கு  அதிசயன்  என்ற மகன்   உருவில்  கிடைத்த  கொடுப்பினை.

இன்று   தாயையும்  தந்தையையும்  இழந்து  நிற்கும்  அதிசயனுக்கு ஆழ்ந்த   அனுதாபங்கள்  தெரிவிப்பதுடன்  நின்றுவிடாமல்  அந்த இளைஞரின் இழப்பில்  பங்கேற்று  ஆறுதல்  வார்த்தைகள் சொல்வோம்.   அவருக்கு  பக்கபலமாக  இருப்போம்.  கலைத்தம்தியர்கள்   சில்லையூரும்  –   கமலினியும்  மேல்   உலகில் தமது   எஞ்சியிருக்கும்  கலைத்தாகத்தையும்  தணித்துக்கொள்ளட்டும் என   பிரார்த்திப்போம்.   எனினும்    அவர்களின்   கலைத்  தாகம்    தணியாத  தாகம்தான்.

letchumananm@gmail.com