கவிஞர் வெள்ளியங்காட்டானின் படைப்பாளுமை

விஞர் வெள்ளியங்காட்டான் - வீ.கே. கார்த்திகேயன் , முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதிநேரம்), கோவை அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி),கோவை. -பழம்பெரும் தமிழறிஞர் வெள்ளியங்காட்டான் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த படைப்பாளி. கவிஞர் வெள்ளியங்காட்டான், கவிதை பாடும் பொழுது மரபுக்கவிஞர்!  காவியம் படைக்கும் பொழுது புரட்சிப் பாவலர்!  கட்டுரைகள் எழுதும் பொழுது ஆய்வியல் அறிஞர்! கதைகள் கூறும் பொழுது பகுத்தறிவுச் சிந்தனையாளர்! புதினங்கள் படைப்பில் இணையில்லா நாவலாசிரியர்! கடிதங்கள் எழுதும் பொழுது அனுபவ ஊற்று! மொழிபெயர்ப்புகள் செய்யும் பொழுது மொழியியல் வல்லுநர்!  பொன்மொழிகள் சொல்லும் பொழுது தத்துவ ஞானி! மொத்தத்தில்  பன்முக எழுத்தாளர்!  இத்தகைய தமிழறிஞர் கவிஞர் வெள்ளியங்காட்டான் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என்பது பலரும் அறியாத உண்மை.

1904 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 21 ஆம் நாள், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், காரமடை பகுதியிலிருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வெள்ளியங்காடு கிராமத்தில் பிறந்தவர் தான்  என்.கே. ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட  வெள்ளியங்காட்டான்.  அவரது தந்தையார் சொந்த நிலமற்ற ஏழை விவசாயி. தாயார் காவேரி அம்மாள்.  வெள்ளியங்காட்டானோடு உடன் பிறந்தவர்கள் பத்து பேர். 

தன் ஊர், கிராமம், தன்னைச் சுற்றியுள்ள நகரம் என்று வாழ்கின்றவர்களால் இனம் கண்டுகொள்ளப்படாத-பரம்பரையாக வறுமையில் வாடிய ஒரு குடும்பத்தில் முகிழ்த்தவர்தான் கவிஞர் வெள்ளியங்காட்டான்.  அவருக்கு மூன்றாம் வகுப்போடு பள்ளிப் படிப்பு நின்று போனது.

இளமையில், தந்தையாரோடு சேர்ந்து பாத்தியில் நீர் பாய்ச்சிக் களையெடுப்பதும் மாடு மேய்ப்பதும் எனத்தனது பரம்பரைத் தொழிலான விவசாயத்தில் உதவ வேண்டிய, வறுமைச் சூழல். அந்நிலையில்தான்  சுயமாகத் தமிழ்க் கற்கத் தொடங்கினார்.   தமிழ் மீது கொண்டிருந்த பற்றினால் தொடர்ந்து பல இலக்கண இலக்கியங்களைப் படித்தார்.  திருக்குறளையும் புறநானூற்றையும் நன்கு கற்றறிந்தார்.   தந்தையாருடன் வயலில் உதவி வந்த நேரம் போக மற்ற நேரங்களில் புத்தகமும் கையுமாகவே இருந்தார். குறள் படிப்பது,  நன்னூலை மனனம் செய்வது தவிர, அவரது உலகில் வேறு எந்த உல்லாசமும் இல்லை.  சில சமயம் கோழி கூவுதலைக் கேட்ட பிறகுதான் படுக்கைக்குப் போவது வழக்கம்.  அப்படி,  ஏறக்குறைய 30 ஆண்டுகள் சுயமாகக் கற்றிருக்கிறார்.

கவிஞர் வெள்ளியங்காட்டான், ‘பிரசண்ட விகடன்’ இதழில் 1-5-1942 இல் ‘யுத்த கானம்’ என்ற தலைப்பில் முதல் கவிதையினை எழுதினார்.  தொடர்ந்து அவர் எழுதிய கவிதைகள், 1948 ஆம் ஆண்டு வரை, தமிழன், தியாகி, சேரநாடு, இந்துஸ்தான், சுதர்மம், தமிழுலகம், வினோதன், மதுரமித்ரன் முதலிய இதழ்களில் இடம்பெற்றிருந்தன.  1942 முதல் 1948 வரையிலும் எழுதிய கவிதைகளின் தொகுப்பு நூலாக ‘இனிய கவி வண்டு’  வெளிவந்தது.   

1950 இல் ‘எச்சரிக்கை’ கவிதை நூல் 500 படிகள் வெளிவந்தது. ஒரு புத்தகம் கூட விலைபோகவில்லை.  எங்கெங்கோ கடன்பட்டு, துயர்பட்டு, அசுர முயற்சியோடு அச்சாகி வந்த கவிதைத் தொகுப்பு அது.  அந்நூலுக்கு ஏற்பட்ட நிலையை அவரது மகள் திருமதி. நளினி விவரிக்கிறார்:

‘‘புத்தகங்கள் விற்பனையானால், வறுமையின் பிடியிலிருந்து சற்றே விடுதலை என்ற அவருடைய நம்பிக்கை, கவிதைகள் மக்களைப் பெரிதும் கவர்ந்துவிடும் என்ற அவரின் கனவுகள், புரட்சிகரமான கருத்துக்கள் உள்ளதால், சிலரின் மனமாற்றத்திற்கு உதவும் என்ற அவருடைய எதிர்பார்ப்பு அனைத்தும் புதைந்துபோய் விட்டதைக் காண நான் வந்தேன்…. தராசுத் தட்டோடு பழைய பேப்பர்காரன்…. குவிந்து கிடந்த புத்தகக்குவியல் கிழிக்கப்பட்டு… கிழிப்பதற்காகவே நான் அழைக்கப்பட்டு… திகைப்பும், கலக்கமும் கண்ணீராய் வர…. அப்பா சிரித்தார்! ‘‘எதற்காக அம்மா நீ அழவேண்டும்? ஒரு காசு செலவில்லாமல் நம் கவிதைகளுக்கு விமர்சனமும், விளம்பரமும் கிடைக்கப்போகிறது. கடையில் சுண்டலோ, கடலையோ வாங்கிக் கொறிப்பவன் சும்மா கொறிப்பானா? நம் கவிதைகளைப் படித்துச் சுவைத்துக் கொண்டல்லவா கொறிப்பான்? ஆகா! என்ன அருமையான கவிதை எனப் பாராட்டமாட்டானா? அடுத்துவரும் கவிதைத் தொகுப்பு சக்கைப்போடு போட்டு விற்பனையாகப்போகிறது பார்.  நீ அட்டைப் படங்களைக் கிழித்துக்கொடு… என்றவர் கிலோ ஆறணாவிற்கு அவைகளை விற்ற கொடுமையைக் கண்ணீரோடு காண வேண்டியதாயிற்று’’. வறுமை கவிஞர்களின் சொத்து என்பது வெள்ளியங்காட்டான் வாழ்வில் நிதர்சனமாகியிருந்தது அன்று.

வறுமையில் வாழ்ந்தாலும் கவிஞர்  வெள்ளியங்காட்டான் தமிழகத்தின் பெருமையை வளமையை தனது கவிதைகளில் வடிக்கத் தவறவில்லை. 

நான்பி றந்ததமிழ் நாடு போன்றவொரு
நல்ல    நாடுலகி லில்லையே!
தேன்பி றந்ததமிழ் போன்றி னிக்குமொரு
தெளிவு தந்தமொழி யில்லையே!

என்ற அவரது பாடல்களில்  பொன்னி, வைகை, பெண்ணை, பொருனை நதிகள் பாயும் நாட்டு வளம், அகம், புறம், திருக்குறள் எனத் தமிழர் அடையாளங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ‘அறிவினைப் பெருக்குவதினால் பொருட்செல்வத்தைப் பெருக்குவோம். அதனால் நம் விதியினை புதியதாக்குவோம்’ என்று கவிஞர் வெள்ளியங்காட்டான்  அன்றே வளர்ந்த இந்தியாவையும் வளர்ந்த மக்களையும் பற்றி கனவு கண்டிருக்கின்றார்.

கவிஞர் வெள்ளியங்காட்டானிடத்தில்  சமுதாயப் புரட்சியினை உண்டாக்கும் பாக்களை இயற்றும் துணிவு இருந்திருக்கிறது. மனிதனின் எண்ணத்தின் வலிமையைச் சொல்லி தட்டியெழுப்புகிறார்.

எண்ணடா எண்ணடா, எண்ணடா – என்றும்
ஏற்றத்தையே நெஞ்சி லெண்ணடா
கண்ணுங் கருத்துமா யெண்ணடா – எண்ணில்
கடைத்தேற லாமிந்த மண்ணிலே!

இவ்வரிகளில்  முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ அப்துல் கலாமின் கனவுகள் கலந்து இருக்கின்றன. கவிஞர், அக்காலச்சமுதாய அவலங்களைக் கூட்டியெறியச் சொல்கின்றார். உழைப்பாளர்களைப் பட்டினி இருக்கச் செய்பவர்களையும், கலப்படமாகப் பொருட்களை விற்பவர்களையும், தீண்டாமையைக் கொண்டு வாழ்கின்றவர்களையும் இச்சமுதாயத்தை விட்டு கூட்டியெறியச் சொல்கிறார்.

கூட்டியெறி கூட்டியெறி – கூடும்
குப்பைகூ ளங்களைக் கூட்டியெறி
நாட்டு நலந்தனில் நாட்டமில் லாச்சுய
நாயகக் குப்பையைக் கூட்டியெறி!

என, குப்பைகளாக சமுதாயக் கொடுமைகள் அக்காலத்தில் மலிந்திருந்ததனைப் பதிவு செய்திருக்கிறார்.

வேத உபநிடதப் பொருள் விளக்கங்களை எளிமைப்படுத்தித் தந்திருக்கிறார்.  அவரது கடிதங்கள் வாழ்க்கைத் தத்துவப் பிரதிபலிப்புகளாக விளங்குவன.  தனது பிள்ளைகள், மகன் மனோகரன், மகள் வசந்தாமணி, மகள் நளினி ஆகியோருக்கு எழுதிய கடிதங்களில் அன்புப் பிணைப்புகளுக்கிடையே வாழ்க்கையை வாழும் வழிமுறைகள் அழகாக வரையப்பட்டுள்ளன. 10-07-1947 முதல் 29-12-1962 ஆம்  ஆண்டு வரையில் அவர் எழுதிய கடிதங்கள், நேரு, பேரறிஞர் அண்ணா, மு.வரதராசனார் போன்றோரின்   கடித  இலக்கிய வகைமையோடு ஒப்பிடத்தக்கன. 

‘நவ இந்தியா’ இதழில் வெள்ளியங்காட்டான் பணியாற்றிய காலத்திலும் பிறகும் அவர் எழுதிய பகவத் கீதையின் கருத்துகள் அடங்கிய ‘அமரகீதம்’ என்னும் பெயரிலான பாடல்கள் 1951 ஆம் ஆண்டில் நவ இந்தியாவில் வெளியாயின.  1954 முதல் 1959 வரை எழுதிய சிறுகதைகளும் சங்க இலக்கிய பாடல்களை முன்வைத்து எழுதிய காவியக் காட்சிகளும் சிறுகதைகளும் நவஇந்தியா வார மலரில் வெளிவந்தன.

கவிஞர் வெள்ளியங்காட்டான், விருத்தப்பா வகையில்  குறுங்காவியங்களைப் படைத்து, சாதாரண மனிதர்களைக் காவியத் தலைவர்களாக்கி உலவ விட்டிருக்கிறார். அவரது  காவியங்களான  கவிஞன்(1967), அறிஞன்(1977), தமிழன்(1979), பரிசு(1980), புரவலன்(1984), தலைவன்(2011) துணைவி (2011), ஆகியவை,  காப்பிய மரபு மாறாமல் படைக்கப்பட்டனவாகும்.

1961 ஆம் ஆண்டில் கர்நாடகாவிற்குச் சென்று தங்கியிருந்த காலத்தில் கன்னட மொழியைக் கற்றதோடு அம்மொழியிலிருந்து பல செய்திகளைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

கலீல் ஜிப்ரானை மிகவும் நேசித்தார். ஒவ்வொரு எழுத்தும் ஒரு வைரம் எனப் புகழ்ந்துரைத்தார்.  சரத்சந்திரர், வி.எஸ்.காண்டேகர் போன்றவர்களின் இலக்கியங்களை விரும்பினார்.  ரஷ்ய நாவல்கள் அவரைப் பெரிதும் ஈர்த்தன. 

இப்படித் தனது இறுதிக் காலம் வரையிலும் படிப்பாளியாகவும், படைப்பாளியாகவும், தன்மானம் மிக்க ஒரு கவிஞராகவும், மற்றவரை எதிர்நோக்காத வாழ்க்கை வாழ்ந்தவராகவும் உலவியவர் அவர்.

கவிஞர் வெள்ளியங்காட்டான் படைப்புகளை, தமிழ்நாடு அரசு 2010 ஆம் ஆண்டு நாட்டுடைமையாக்கியது.  அவரது  படைப்புகள் அனைத்தையும் தொகுத்து 1716 பக்கங்களில் இரண்டு தொகுதிகளாக, வெள்ளியங்காட்டான் படைப்புகள் என்னும் தலைப்பில் 2011 ஆம் ஆண்டில் காவ்யா பதிப்பகம் வெளியிட்டது. 

தாகூரைப் போன்ற தாடி, ஆஜானுபாகுவான அவரது மேனி ஆறுஅடி உயரத்துக்குச் செக்கச்சிவந்த செம்மாதுளை நிறத்தில் மின்னும். அப்படிப்பட்ட அவரைத்தான்  புற்றுநோய் தாக்கியது. 

1904 ஆம் ஆண்டு ஆகஸ்டு 21 ஆம் நாள்  பிறந்த வெள்ளியங்காட்டான், 1991 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் நாள் இயற்கை எய்தினார். 
தனது சுயசரிதத்தை,

‘‘ என் காவியங்களே என் வாழ்க்கை.
என் வாழ்க்கையே என் எழுத்து.
என்னைப் பற்றிச் சொல்வதற்கு
என் இலக்கியங்கள் உயிர் வாழ்தல் மட்டுமே!’’

என, கவிஞர் வெள்ளியங்காட்டானைப் போல நான்கே வரிகளில் சொல்லிச் சென்றவர்களை தமிழுலகம் எங்கும் பார்த்திருக்காது. 

ஒரு சாதாரண வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கின்ற மனிதன் – பள்ளிப் படிப்பின் முழுமை அறிந்திராத ஒரு சாதாரண ஏழை விவசாயி –  தன் சுய முயற்சியால் இலக்கண இலக்கிய அறிவில் உயர்ந்தது; உபநிடத கருத்துக்களில் ஆழங்கால் பதித்தது; வேற்று மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கின்ற திறம் பெற்றது; கட்டுரைகளாகவும், கதைகளாகவும், நாவல்களாகவும், பொன்மொழிகளாகவும் இலக்கணக் கடலின் ஆழத்தில் பாக்களின் முத்துக்களைத் தேர்ந்து பாமாலைகளை வடித்தெடுத்தது; ஆகிய நிகழ்வுகள் கவிஞர் வெள்ளியங்காட்டான் வடிவிலே நடந்தேறியது அறிவார்ந்தவர்களையும் ஆச்சர்யப்பட வைப்பனவாகும். 

எளிமையின் உருவமாய், உண்மையின் வெளிப்பாடாய், தமிழ்ப்புலமையில் ஈடு இணையில்லாதவராய் வாழ்ந்தவர், கவிஞர் வெள்ளியங்காட்டான்.  அவரது தமிழ்ப் பயன்பாட்டில், கற்றுத் துறைபோய புலவர்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்கள் வலிமையாக நடம்புரிந்திருக்கின்றன.  கொங்கு மண்ணான கோவை வட்டாரத்திலிருந்து கவிஞர் வெள்ளியங்காட்டான் எனும் அற்புதமான குயில் கூவிக்கொண்டிருந்திருக்கின்றது.  புதுவைக் குயிலுக்கு பாரதி கிடைத்தனால் தமிழுக்குப் பாரதிதாசன் கிடைத்தார். கோவைக் குயிலான கவிஞர் வெள்ளியங்காட்டானுக்குத் தமிழ்ப் புலவரிடையில் தோளில் தட்டிக்கொடுக்க  ஒரு புரவலன் கிடைக்காமல் போனது நோக்கத்தக்கது.

உசாத்துணை:
1. ‘வெள்ளியங்காட்டான்’ (வாழ்வும் பணியும்),

மின்னஞ்சல்: pudalvan.vkk@gmail.com