கவிதை: அந்தி விடிவெள்ளி!

கவிதை: அந்தி விடிவெள்ளீ!

அதிகாலை விடிவெள்ளிப்பெண்ணே
ஒருபோதில்
அதிகாலைகளுக்கெல்லாம் எழிலூட்டினாய்.
அதிகாலைகளில் நான் விழித்தெழுந்ததெல்லாம்
அடியே! கிழக்கினில்
ஆடி அசைந்து வரும்
உன் அழகைப்பருகுவதற்காகத்தானென்பதை
நீ அறியாய்! அந்தத் தைரியத்தில் நானுனை
அணு அணுவாக இரசித்ததுண்டு; தெரியுமா?
அதிகாலை விடிவுப்பெண்ணே!
அதிகாலைகளினெழிலேற்றிய
விடியற் பெண்ணே!
இடையிலெங்கே சென்றாய்?
தனிமையிலெனைத் தவிக்க விட்டு நீ
தலைமறைவானாய்! ஏன்?

பகலவன் மறைத்த பகற்பொழுதுகளில்
நீ மறைந்திருந்தாய் ஆயினும்
நானுனை மறக்க வில்லையடி.
விடிவினை வழிமொழிந்த
என் பிரிய
விடிவெள்ளிப்பெண்ணே!
தனிமைகளில் கூட உன் நினைவால்
நான் இனிமை கண்டதுண்டு.
தெரியுமா? அறிவாயா?
மறைந்த  நீ மீண்டும் அந்தியில் உன்
முகம் காட்டினாய்.முறுவலித்தாய்.
காலைகளுக்கு எழிலூட்டிய விடிவுப்பெண்
நீ – இன்று
மாலைகளுக்கும் எழிலூட்டுகின்றாய்.
யார் சொன்னது உன்னை
விடிவினை மட்டும் வழிமொழியும்
விடிவுப்பெண்ணென்று.
நான் சொல்லுவேன் நீ
அந்திக்கும் அழகூட்டும்
அழகுப்பெண்ணென்று
அந்தியையும் மயங்க வைத்திடும்
அந்தியின் விடிவெள்ளியென்று.

ngiri2704@rogers.com