கவிதை: காயத்தால் பயிர் செய்.

- தம்பா (நோர்வே) -அரசனும் மந்திரியும்
வாள்களை வீசி விளையாட
வழியெங்கும் வலிகளை
ஊமைகளும் குருடர்களும்
சுமக்க வேண்டி இருக்கிறது.

பகைவனைச் சுடுவதற்கே
சுருங்கிக் கொண்ட
சுண்டு விரல்கள்
சுருள்வாளைச் சுழற்றி
சுழலவிட்டுச்
சுருண்டு கிடக்கின்ற
சுற்றத்தானை
சுற்றி ஓடவிடும்
சூட்சுமத்தை
சூறையாடிக் கொண்டன.

குவளைத் தண்ணீரில்
குதிக்கப் பயந்தவன்
அரபுக்கடலை ஆறுதடவை
அளந்து வந்தானாம்.

“ஆமை ஓட்டுக்குள்
தலையையும் உடலையும்
இழுத்துக் கொள்வதுபோல்
பதுங்கிய பங்கர் வாழ்க்கையில்
அப்பனும் உழைத்ததில்லை
பாட்டனை உழைக்க விட்டதுமில்லை.
தசாப்தங்களாகக் குத்தவைத்து
சோறுபோட்ட யுத்தம் இது.

தடி எடுத்தவனெல்லாம்
தண்டல் காரனென
ஊரும் சனமும்
சபித்துப் போகட்டும்,
சீமைக்குச் சென்றவனெல்லாம்
சீர்வரிசை செய்கிறான் சின்னவனுக்கு.
எனைச் சீராட்டி பாராட்ட
எவன் எடுப்பான் தத்து?”

பகைவர்கள் வென்ற தேசங்களில்
ஓலங்கள் மட்டுமே
மந்திரங்களின் மதிப்பைப் பெறுகின்றன.

அவனோ இவனோ
எதிரியை எதிர்த்த வீரனுமல்லன்,
தர்மத்தை தருவிக்கின்ற தர்மவானுமல்லன்.
உணர்வின் எதிர்ப்பை
ஏலத்தில் ஏய்க்கின்ற
ஏகபோக எஜமானர்கள் ஆனார்கள்.

வன்மத்தை விதைத்த
மலட்டு நிலத்தில்
நச்சுக் காளான்கள்
அமோக விளைச்சலைத் தருகின்றன.