கவிதை: குற்றுயிரும் குலையுயிரும்

- தம்பா (நோர்வே) -கலியுகத்தின் பிரளயங்கள் ஓயாத
ஒரு பொழுதில்
ஓய்ந்துவிட்ட பூமியின் சூழற்சி.

ஆயிரம் அணுகுண்டுகளை
அடக்கி ஆள்பவனும்,
இலட்சம் படைகளை திரட்டி
மூக்கணாம் கயிறின்றி
முரண்டு பிடிப்பவனும்
கோடான கோடி டாலர்களை
அடுக்கி அரண்களை அபகரித்தவனும்
ஈரல்குலை நடுநடுங்க
அற்பமாய் ஆக்கி போடும்
கண்ணற்ற அழிவின் கடவுளெது?

தூங்கா நகரங்கள் உச்சிப்பொழுதினிலும்
தாலாட்டையும் தலையணைகளையும்
தானமாக பெற்றுக்கொள்கிறது.

 

தத்துவங்களை தரையில் புதைத்து
வேண்டுதலை வேட்டையாடி
கட்டிடத்தில் கடவுளரை சிறைவைத்து
கணக்கில்லா காரியத்தை
காவு கேட்கிறது.

ஏவுகணைகளை எட்டித்தடுக்கும்
எல்லை காவலனை ஏமாற்றி
எல்லைகளில்லா பண்டைய உலகத்திற்கு
பாதைகளை புதுப்பித்து தருகிறது.

போர்களை பொதுவெளியில்
போற்றாத பொன் நாளில்
ஏககாலத்தில் எல்லைகளை
மூடிவிடும் பதற்றமும்,
எதிரிகளே இல்லாத தேசமெங்கும்
படைகள் தெருவின் காற்றை
காவல்காக்க வைப்பதுமேன்?

காணா பொருளொன்று
கத்தியின்றி இரத்தமின்றி
சத்தமும் இன்றி மனித இருப்பில்
கன்னம் போட காத்துக்கிடக்கிறது.

இந்த கணத்தில்
இனம்,நிறம்,சாதி, சமயம்,தேசியம்
எதுவும் இல்லாத முகமிழந்தவன் நீ.
உனது அடையாளம்
`முகமூடி மனிதன்´ மட்டும் தான்.

நிலம் நீர் ஆகாயம்
பறவைகள் விலங்குகள் என
அனைத்து பொருள் மீதும்
பிரகடனப் படுத்திய போரில்
உலகையே சிறைப்பிடித்த மானிடன்
யாருமே பிரகடனப் படுத்தாத போரில்
சிறை பட்டுப் போனான்.

வா,
நம்பிக்கை வை.

மீண்டும் `யூகான் நகரில்´
சூரியன் தன் கதிர்களை
தரை இறக்கி வைக்க
பறவைகள் பாடல்கள்
இசைக்க தொடங்கியுள்ளன.

பிரமாணம் எடு.
உயிரினங்கள் எதுவுமே
வியாபார பொருள் இல்லை
சிறைகள் எதுவும் சிறப்பில்லை,
ஓசோன் திரையில்
துளையிடுதல் பெருமையில்லை
வாழ்க்கை என்பது
ஒற்றை பரிமாண இல்லை
நாடு தழுவிய
நலிந்தவரில்லா நல்வாழ்வே
நாளும் பொழுதும்
நம் தேவை என்றும்
அன்பும் அறமும்
அன்றாட தேவை என்றும் பிரமாணம் எடு.

உன்னிடம் இருக்கும்
கையிருப்பு நம்பிக்கை மட்டும் தான்.
அபார நம்பிக்கை வை.
அனைத்தும் கடந்து போகும்.