கவிதை: புனைபெயரின் தன்வரலாறு

 

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

கவிதை: புனைப்பெயரின் தன்வரலாறு

என் புனைபெயர் என் தனியறை;
அரியாசனம்;
நட்புவட்டம்;
வீடு; நாடு; சமூகம்; உலகம்;
கடல்; கானகப் பெருவெளி;
காலம்; காலாதீதம்;
கனாக்களின் கொள்ளிடம்….
என் நம்பிக்கைகளின் கருவூலம்;
என்னிலிருந்து பல கிளைபிரிந்து
விரிகின்ற கற்பகவிருட்சம்…
காணக் கண்கோடிவேண்டும் தரிசனம்,
தேவகானம்…..

ஒரு புனைபெயருக்குள் இயங்கிக்கொண்டிருக்கும்
தனியடையாளங்களை,
இருமடங்கு வாழ்வை,
மும்மடங்கு ஆற்றலை,
பன்மடங்கு உயிர்ப்பை
இனங்காணவியலாதவர்கள்
விதண்டாவாதம் செய்வது இயல்புதான்.
வருந்தி வருந்திக் கேட்டதால்தான்
அனுப்பிவைத்தேன் என் எழுத்துக்களை.
இதை ஒப்புக்கொள்ளும் திராணி யுனக்கிருக்குமோ
தெரியவில்லை.

அட, வகையான நிதியுதவியோடு, வெளியிடத் தயாராய்
பத்திரிகையைக் கையில் வைத்திருப்பவரிடம்
கட்டளையிட்டுவிட முடியுமா என்ன?

மாற்றிதழ்காரரிடம் மரியாதை கிடைக்கும் என்று நம்பியது
என் தவறுதான்.

கேவலம் செய்த பின் என் கவிதைகளை வெளியிடலாகாது
என்று கூறினேன்; திட்டவட்டமாகவே.
திரும்பவும் கூறுவேன்.
அது ஏனோ தெரியவில்லை _
சிலருக்குப் பேனாவைப் பிடித்தாலே
திரித்து எழுதத்தான் முடிகிறது.

பூஜ்யத்திற்குள் ராஜ்யமே என் பரிபூர்ண சுதந்திரமாய்
வாழ்ந்துவருபவள் நான்.
எனக்கா வகுப்பெடுக்கிறாய் _
பெயரென்றால், புகழென்றால் என்னவென்று?

என் பெயரையோ படைப்புகளையோ
எந்தப் பத்திரிகைக் கல்வெட்டுகளிலும் பொறித்துவைக்க
என்னாளும் நான் பிரயத்தனப்பட்டதில்லை.
என்னோடு என் எழுத்துக்களும் தடயமின்றி மறைந்திடவேண்டும்
என்பதே என் பெருவிருப்பம்.
(தேவைப்பட்டால் அதுகுறித்து
ஓர் உயில் எழுதிவைக்கவும் எண்ணமுண்டு!)
உன்னொத்தவர்களின் இரக்கமற்ற கைகளில் சிக்கி
யவை அடிமைகளாய் சீரழிந்துவிடலாகாது.

நீ மிகவும் நேசிக்கும் உன் புனைபெயரையே நானும் வரித்து
நீ மிகவும் நம்பும் கலையைப் புழுதியில் தள்ளிக் கரித்துக்கொட்ட
என் கவிதையால் முடியும்;
உன்னைக் கொண்டே உன்னைக் காயப்படுத்தினால்
ஒருக்கால் வலி புரியலாம் உனக்கும்.
எனில், கீழ்மை பழகாது என் கவிதை யென்றும்.

ramakrishnanlatha@yahoo.com