கவிதை: பூமித் தாயைக் காப்போம்….!

- சீ. நவநீத ராம கிருஷ்ணன் -

கோடி ஆண்டுகளாய் சுழலுகின்ற பூமி
கொட்டிக் கிடக்கின்ற பிணிகளோடு இன்று…

நாம் அவளைத் தோண்டினோம் – வளங்கள் தந்தாள்!
அவளைக் காயப்படுத்தினோம் – தாயாய் நின்றாள்!
நெஞ்சைப் பிளந்தோம் – நீராய் வந்தாள்!
நேசத்தை வார்க்கின்ற வேராய் வந்தாள்!

அவளே நமக்கு கருவறை – கல்லறையும் அவளே!
அவள் மடி இருக்கும் வரை – அநாதை என்பதே இல்லை!
ஆயிரம் ஆயிரம் பிள்ளைகள் இருந்தும்
அவள் நிற்பதோ ஆதரவற்றவளாய்…

மரங்கள் அவளது ஊமைச்சேய்கள்…
நதிகள் அவளது இரத்த ஓட்டங்கள் – அவளது நிலை
கண்டு வானம் கூட தன் வற்றிப்போன
கண்களால் எப்போதாவது மழையாய் அழுகிறது!

பொறுமையின் சிகரமாய் அவள் இருந்தாள்!
பூகம்பமாய் குலுங்கி அழக் காரணம் நாமே!
ஏர்பிடித்து உழுதவுடன் ஊர்முழுதும் சோறிட்டு
உள்ளம் நெகிழ்ந்தவள் – இன்று பாளம் பாளமாய்
வெடித்துச் சிதறும் பரிதாபம் நம்மால்தான்…

இனியாவது அவளை வளப்படுத்தாவிட்டாலும் வேண்டாம்
நண்பா! இரணப்படுத்தாமலாவது இருப்போம்!

snrk1981@gmail.com