கவிதை: பெண் குழந்தை இல்லாதவனின் பிரார்த்தனை

கவிதை: பெண் குழந்தை இல்லாதவனின் பிரார்த்தனைஜவுளிக்கடையில் கண்கவரும்
பெண்பிள்ளை ஆடைதனை காண்கையில்
அதைவாங்கி அணிவித்து அழகுபார்க்க
ஆசைப்பட்டுவிடும் மனது .

எவருடையதாயினும் பெண்குழந்தையை
தூக்கி எடுத்துக் கொஞ்சிவிட்டுத்
திருப்பிக் கொடுக்கையில் ஒட்டிக்கொள்ளும்
பிரியங்களின் நிறங்களை பிரிப்பது சிரமமாகிறது

அக்கா அக்கா என்று சற்றே வயதுள்ள
அடுத்தவீட்டுப் பெண்குழந்தையுடன்
விளையாடிவிட்டு வீட்டுக்குள் நுழைந்து
ஏம்ப்பா எனக்குமட்டும் அக்கா இல்லை
என்று வருந்தும் மகனிடம் காரணமில்லாத
பொய்சொல்ல வேண்டி வந்துவிடுகிறது

அடுத்ததாவது பெண்ணாய் பிறக்கணுமென்ற
எதிர்பார்ப்பை ஒவ்வொரு தடவையும்
ஏமாற்றிபோன கடவுளிடத்தில் இப்போதெல்லாம்
வரப்போகும் மருமகளாவது  மகளைப்போல
இருக்கவேண்டும் என்பதாகிறது
பெண் குழந்தை இல்லாதவனின் பிரார்த்தனை.

megathoothan001@hotmail.com