கவிதை: மரணத்தின் உரையாடல்

வாசிப்போம்

நேற்று முன்தினம்
மரணத்தைப் பற்றிய பேச்சை
அதற்கு ஏற்புடையவனுடன்
வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தேன்.

எனது பேச்சை மறுதளித்தே
அவன் என்னிடம்
தரைகுறைவான விமரிசனத்தை
முன்வைத்துக் கொண்டேயிருந்தான்.

 

தொடர்ந்து பேச
நான் திராணியற்று,
அவனுடைய பேச்சில்
சிறைப்பட்டுக் கொண்டேன்.

எங்கும் கேட்டிறாத செய்திகளை
என்னிடம் ஒன்றுவிடாமல்
அவனுக்குத் தெரிந்த மொழிநடையில்,
அவனுக்குத் தெரிந்தவரை
பேசிக்கொண்டே இருந்தான்.

முதலில் அவனது பேச்சானது
பிறப்பை முன்னிருத்தியிருந்தது.

மனிதப் பிறப்பின்
இரகசியங்களை மிகவும்
சிலாகித்து பேசினான்.

ஒரு கட்டத்தில்
மனிதர்கள்
மண் புழுவிற்குக்கூட
ஒப்பாக அறுகதையற்றவர்கள் என்கிற
அவனது விமரிசனத்தைக் கண்டு
அதிர்ச்சியடைந்தேன்.

அவனது பேச்சை
அல்லது
விமரிசனத்தை
மறுதளித்து
நான் பேசத் துவங்கும் முன்,
அவன் தனது காதுகளிரண்டை
மூடிக்கொண்டான்.

எனக்குக் கோபம்
உச்சத்தில் ஏறியது.

மெளனத்தைக் கலைத்து
மீண்டும் பேச்சைத் துவங்கலாமா?
அல்லது
மெளனத்துடனே இருந்துவிடலாமா?
என்று நிதானமிழந்து
அவனுக்கு ஏட்டிக்குப் போட்டியாக,
நான்
மனிதர்களில் மீது வைத்திருந்த
அபிப்பிராயத்தை
அகர வரிசைப்படி
ஒன்றுவிடாமல்
அவன் முன்வைத்தேன்.

இம்முறையும்
காதுகளோடு கண்களையும்
அவன் மூடிக்கொண்டது
என்னையே
உதாசினப்படுத்தியதுபோல்
இருந்தது.

அவனே
என் மெளனத்தைக் கலைத்து
இறப்புக் குறித்து பேசுகிறேன்
கேட்க,
நீ தயாராக இருக்கிறாயா?
என்று வினைவினான்.

எனது நாவின் பதிலை
எதிர்ப்பார்க்காமல்
அவனது நாவு
அவனுக்கு இசைத்தபோது,
நானும்
எமது புலன்களும்
களவாடப்பட்டிருந்தோம்.

kurinjimaindhan19@gmail.com