கவிதை: மின்னுவதெல்லாம்…..

- தம்பா (நோர்வே) -சாவே வாழ்வான போதினிலும்
குண்டுமழையில் கவசக் குட்டையாகி
மக்களை காத்தவனுக்கு
கைகளையும் கால்களையும்
காணிக்கையாக பெற்றுக் கொண்ட போர்
தண்டனையாக
ஒரு வேளை உணவுக்காக
கை ஏந்தி நிற்கவைக்கிறது.

`பெடியள்´, `போராளி´ என
பல்லாக்கு தூக்கி
போற்றிப் பாடியவன்,
முடம்
பரதேசி
பாரச்சுமை என
ஒதுக்கி ஓடுகிறான்.

கோழிக்கால் புரியாணி
சமிபாடடையும் வரை
பரணியை திரும்பி பார்க்க வைத்த
புறநானுற்று தமிழனென
பரம்பரை பெருமை பேசு.
சீமைச்சரக்கை மொண்டி மொண்டி
முழங்கு,
நாளை தமிழீழம் கிடைக்கும் என்று!