கவிதை: முத்த சுதந்திரம்.

கவிதை: முத்த சுதந்திரம்.

அள்ள அள்ள குறையாத அன்பின் கொடையிது
கொடுப்பதனால் மட்டுமே பெற்றுக்கொள்கிற
அன்பின் பரிவர்த்தனை.
கொடுப்பதற்கென்றே உதடுகளில் ஒட்டியிருக்கிற முத்தம்
எப்போதும் எந்த நேரத்திலும்
தன்னை வழங்கத் தயாராக இருக்கிறது.

மழை நேரத்தில் சூடாயிருக்கிற முத்தம்
வெய்யில் நேரத்தில் குளிராகி உறைகிறது
கண்ணிமைக்கும் நேரத்தில்
கன்னத்தில் ஒட்டிக்கொள்கிற அதே நேரம்  
குருதியில் ஓமோனைக் கூட்டிக்கொள்கிறது.
காலம் காலமாய் கண்ணுக்குத்தெரியாமல்
நம்மோடிருக்கிறது.

அன்பளிக்க பொருளில்லாதவரும்
காதல் இருந்தால் இதைக் கொடுத்து விடமுடிகிறது

முத்தம் வெட்கப்படுவதில்லை
நாம் தான் அதன் மீது வெட்கத்தை பூசி விடுகிறோம்
முத்தம் அச்சம் அறிவதில்லை
அதன் மீது அச்சத்தை ஏற்றியிருக்கிறோம்

ஆடையில்லாமலே அழகாயிருப்பது முத்தம்
காதல் உள்ளங்களே அதைக் கண்டு கொள்கின்றன.

அந்த அன்பின் பேராறுக்கேன் அணைகள்.
காற்றின் வெளிகளிலும் கைகுலுக்கும் நேரங்களிலும்
கொண்டாடப் பட வேண்டிய முத்தத்தை
ஏன் இருட்டறைகளில் மட்டும் அனுமதிக்கிறீர்கள்

எந்தத் தளைகளும் இந்த அன்பின் வெகுமதிக்கு வேண்டாம்
எங்கும் முத்தத்தை அனுமதியுங்கள்
முத்தம் நமக்கொன்றும் இடையூறல்ல
சத்தம் வருமென்கிறீர்களா?
அது காதலின் சங்கீதம் .

drsothithas@gmail.com