கவிதை: மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் !

முள்ளிவாய்க்கால் - ஓவியர் புகழேந்தி -

கவிதை: மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் !

–  வன்னி மண் மீதான நில ஆக்கிரமிப்புப்போரில் பல்லாயிரக்கணக்கில் உயிர் குடிக்கப்பட்ட  மக்களுக்கு, குற்ப்பாக பெண்களுக்கும், தாய்மாருக்கும்  இக்கவிதை உணர்வர்ப்பணம்! –

யாதுமாகி!

இடம்பெயர்தலின் வலி பற்றியும்
மரணங்களை எண்ணிக்கொண்டிருத்தல்
பற்றியும்,
பேசிக்கொண்டிருக்கும் ஈழத்தில்
தாய்க்குலம் தம் சேலை உருவி
கூடாரம் அமைத்தும்,
தடுப்புச்சுவர் அமைத்தும்
நம் சரீரம் காத்த
தியாகம் பற்றியும் பேசுகிறேன்.

ஆகாயத்தை விடவும்
அழகானதும், விசாலமானதும் ஆன
பொருள் உண்டென்றேல்,
தாய்மாரே
அது நிச்சயம் உங்கள் சேலை தான்.

மல்லாக்காக
படுத்துக்கொண்டே
உங்கள் சேலையில் உள்ள
வட்டங்களையும் சதுரங்களையும்,
கோணங்களையும் கோடுகளையும்,
புள்ளிகளையும் பூக்களையும்,
பட்சிகளையும் பறவைகளையும்,
கிறுக்கல்களையும் கீறல்களையும்,
பார்த்துப்பார்த்து
தொட்டுப்பேசி,
பல ஆயிரம் குழந்தைகள்
சித்திரமும் கணிதமும்
கற்றிருக்கிறார்கள்.

துப்பாக்கிச்சன்னங்களும்
எறிகணைச்சிதறல்களும்
உங்கள் சேலையை
சல்லடை இட்டபோதும்,
பொத்தல்கள் வழி
“இன்னுமோர் உலகத்தைக்காட்டி”
முடிந்தவரை
எம் அவல வாழ்வை
அழகாக்க உழைத்திருந்தீர்கள்.

மொத்தத்தில்,
சேலையை சோலையாக்க
நீங்கள் காட்டிய
சிரத்தை போல் பரிசுத்தம்,
இவ்வுலகில்
வேறொன்றுமில்லை.

இலங்கை முல்லைத்தீவிலிருந்து…
இளம் ஊடகவியலாளர், தாயக கவிஞர்
அ.ஈழம் சேகுவேரா
கருத்துகள் மற்றும் பகிர்வுகளுக்கு:

wetamizhar@live.in


மேலுள்ள ஓவியம் பற்றி ஓவியர் புகழேந்தி (முக நூல் பக்கத்திலிருந்து)

முள்ளிவாய்க்கால் - ஓவியர் புகழேந்தி -2009ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி வரை களத்திலிருந்தும் புலத்திலிருந்தும் தொடர்ந்து தொடர்புகள் இருந்ததோடு அங்கு என்ன நடைபெறுகிறது என்பதுகுறித்த செய்தியும்,ஒளிப்படங்களும் கிடைத்தன. அனால் 15 ஆம் தேதியிலிருந்து களத்திலிருந்து எவ்வித தொடர்பும் இல்லை.புலத்திலிருந்து தொடர்பு இருந்ததே தவிர சரியான தகவல்கள் இல்லை.15,16,17 ஆகிய நாட்களில் என்ன நடைபெற்றது என்பதே தெரியவில்லை.தகவல்களும் இல்லை.ஒளிப்படங்களும் இல்லை.எதோ ஒரு கற்பனையில் “முள்ளிவாய்க்கால்” என்ற தலைப்பில் ஒரு ஓவியம் செய்தேன்.ஜூலை மாதம் நடைபெற்ற “உயிர் உறைந்த நிறங்கள்”ஓவியக் காட்சியிலும் வைத்தேன்.அதன் பிறகு தப்பிவந்த போராளிகள்.மக்கள் பலரிடம் 15,16,17 ஆகிய நாட்களில் நடைபெற்றவைக் குறித்து பலமாதங்கள் தகவல்கள் திரட்டினேன்.இரத்தத்தை உறைய வைப்பதாக இருந்தது.அவர்கள் கூறியவைகளை உள்வாங்கிக் கொண்டு 2௦10ல் 5அடி உயரமும்10அடி நீளமும் உள்ள இந்த ஓவியத்தை செய்தேன்.அது முள்ளிவாய்க்காலுக்கு சாட்சி. [ நன்றி: ஓவியர் புகழேந்தியின் முகநூல் பக்கம்.]