கவிதை: வாழ்த்துதல் நன்றன்றோ!

- வேந்தனார் இளஞ்சேய் -

வாழ்த்துதற்கு நமக்கு நல்மனமது
வேண்டும்
வஞ்சமற்ற நல்ல நெஞ்சமது
வேண்டும்
இதயத்தில் வற்றாத இரக்கமது
வேண்டும்
இன்பமாய் இருந்திடுக என்றே
வாழ்த்துதல் நன்றன்றோ!

பாராட்ட நல்ல உணர்வது
வேண்டும்
பக்குவமான சிறந்த குணமது
வேண்டும்
நல்லதை ரசிக்கும் இயல்பது
வேண்டும்
நலமாய் சிறந்திடுக என்றே
வாழ்த்துதல் நன்றன்றோ! உழைப்பவனை ஊக்குவித்திடல்
வேண்டும்
உற்சாகப்படுத்தி  நன்கு உதவிடல்
வேண்டும்
உயர் கருத்துக்களை மதித்திடல்
வேண்டும்
உறவுகளுடன் உறவாடிடுக என்றே
வாழ்த்துதல் நன்றன்றோ!

கவிதையை ரசிக்கும் கவியுளம்
வேண்டும்
கன்னித் தமிழினைப் போற்றிடல்
வேண்டும்
கற்றோருடன் பழகிடும் பழக்கம்
வேண்டும்
கவலையற்று மகிழ்ந்திடுக என்றே
வாழ்த்துதல் நன்றன்றோ!

இன்பத் தமிழை என்றும் மதித்திடல்
வேண்டும்
இனிய தமிழில் என்றும் பேசிடல்
வேண்டும்
அறிவுத்தமிழை என்றும் கற்றிடல்
வேண்டும்
அருந்தமிழை சுவைத்திடுக என்றே
வாழ்த்துதல் நன்றன்றோ!

அன்னை தந்தையை போற்றிடல்
வேண்டும்
அறிவுதந்த குருவினை மதித்திட ல்
வேண்டும்
ஆண்டவனை என்றுமே துதித்திடல்
வேண்டும்
அன்னைத் தமிழை பரப்பிடுக என்றே
வாழ்த்துதல்  நன்றன்றோ!

சமூகப்பணி புரிவோரை மதித்திடல்
வேண்டும்
சங்கங்களில் சேர்ந்து உழைத்திடல்
வேண்டும்
வலிமை அவர்க்குச் சேர்த்திடல்
வேண்டும்
வாயார வளமே வாழ்ந்திடுக என்றே
வாழ்த்துதல் நன்றன்றோ!

vilansei@hotmail.com