கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை நினைவுக் கட்டுரை: புத்தர் வாழ்வை விளக்கும் புதுமைத் தமிழ்க் காப்பியம். ‘ஆசிய ஜோதி’யின் அருங்கனிச் சிறப்பு!

கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை நினைவுக் கட்டுரை: புத்தர் வாழ்வை விளக்கும் புதுமைத் தமிழ்க் காப்பியம். 'ஆசிய ஜோதி'யின் அருங்கனிச் சிறப்பு! - அறிஞர் அ.ந.கந்தசாமி -[ கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை தமிழ்க் கவிதையுலகில் முக்கியமானதோர் கவிஞர். பக்திப் பாடல்கள், குழந்தைப் பாடல்கள், இயற்கை பற்றிய பாட்டுகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள், காவியங்கள், தேசியம் பற்றிய கவிதைகள், சமூக நோக்குடைய கவிதைகள் , வாழ்த்துப் பாக்கள் எனப் பல்வேறு கருத்துடைய கவிதைகளைப் படைத்தவர் கவிமணி. அவரது நினைவு நாளான செப்டம்பர் 26இல் , ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகின் முன்னோடிகளில் முக்கியமானவர்களிலொருவரான அறிஞர் அ.ந.கந்தசாமி கவிமணியின் ‘ஆசிய ஜோதி’ என்னும் காப்பியம் பற்றி எழுதிய ‘புத்தர் வாழ்வை விளக்கும் புதுமைத் தமிழ்க் காப்பியம். ‘ஆசிய ஜோதி’யின் அருங்கனிச் சிறப்பு!’ என்னும் கட்டுரையினைப் பிரசுரிக்கின்றோம்.  புத்தரின் வரலாற்றை மையமாக வைத்து எட்வின் ஆர்னால்ட் எழுதிய ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பிது. அறிஞர் அ.ந.க.வின் கவிமணியின் மொழிபெயர்ப்புக் காவியமான ‘ஆசிய ஜோதி’ பற்றிய இக்கட்டுரை 18.2.1951, 11.3.1951இல் வெளியான ‘சுதந்திரன்’ பத்திரிகையில் ‘கவீந்திரன்’ என்னும் பெயரில் வெளிவந்த கட்டுரை என்பது குறிப்பிடத்தக்கது. அக்காலகட்டத்தில் ‘பண்டிதர் திருமலைராயர்; என்னும் பெயரிலும் ‘சிலம்பு’ பற்றிய கட்டுரைகளை சுதந்திரன் பத்திரிகையில் அ.ந.க. எழுதியிருக்கின்றார். – பதிவுகள் -]

அமைதி கனிந்த அவரது முகத்தைப் போலவே நாஞ்சில் கவிஞர் தேசிக விநாயகம்பிள்ளையின் கவிதையில் ஒரு அற்புதமான ஆழங்காண முடியாத பேரமைதி குடிகொண்டிருப்பதை நாம் காண்கிறோம். பாரதிதாசன் தாக்கிவீசும் சண்டமாருதம் என்றால் இவர் இனிக்க வீசும் மந்தமாருதம். புதுவைப் புலவர் கொந்தளிக்கும் நீலப் பெருங்கடல் என்றால் , இவர் அமைதி நிலவி இருக்கும் ஏரி. அவர் கொள்கைகளில் புரட்சி இல்லை. கொந்தளிப்பில்லை. ஆனால் அன்பும், அழகும் , பக்தியும் , சீலமும் அவர் கவிதைகளில் இடம்பெறுகின்றன. அவரில் இளைமையின் துடி துடிப்புக் கிடையாது. ஆனால் பதட்டமில்லாத முதிர்ச்சியின் முத்திரை அங்கே இருக்கிறது. பாரதிதாசன் பக்தியைக் காய்ந்து பாடுகிறார். தே.வி.யோ அதற்கெதிரிடை. இன்றைய கவிஞரிலே பக்திரசத்தை அவரே நன்கு பாடுபவர் என்றால் அது மிகையாகாது. அவர் எழுதிய நூல்களிலே ‘ஆசிய ஜோதி’ , ‘கீதாஞ்சலி’, ‘உமர் கய்யாம்’, ‘நாஞ்சில் நாட்டு மருமக்கள் மான்மியம்’ என்பன முக்கியமானவை. இவற்றுள் கடைசி ஒன்றைத்தவிர மற்றதெல்லாம் மொழிபெயர்ப்புகள். ‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள், தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்’ என்றார் தேசியக் கவி பாரதியார். நாஞ்சில் கவிஞர் இதனைத் திறம்படச் செய்வதற்கு தமிழ் நாடு அவருக்குக் கடப்பாடுடையதாகும். இந்த மொழிபெயர்ப்புகள்  எல்லாவற்றிலும் ஆசிய ஜோதியே தலை சிறந்தது என்பதை எவரும் ஒத்துக்கொள்ளவே செய்வர். கவிமணியைத் தவிர வேறு யாரும் இந்தக் கஷ்ட்டமான மொழிபெயர்ப்புப் பணியை இவ்வளவு திறம்படச் செய்ய முடியுமா என்பது சந்தேகம் மட்டுமல்ல, முடியாததே என்றும் கூறிவிடலாம். மொழிபெயர்ப்பு நூல்களில் நாம் எதிர்பார்க்கும் இடக்கர்கள் எதுவுமே இந்நூலில் கிடையா.

சரி, இனி ‘ஆசிய ஜோதி’ என்னும் கவிதைப் பூங்காவில் ஒரு சிறிது நாம் நுழைவோம். ‘ஆசிய ஜோதி’ இந்திய நன்னாட்டில் தோன்றிய மகான்களில் ஒருவர் எனப்போற்றப்படும் கெளதம புத்தருடைய வாழ்க்கைக் கதை.  முழு ஆசியாவிலும் தன் மதத்தை நிலைநாட்டிய ‘புத்த ஞாயிறு’க்கு ஆசிய ஜோதி என்ற பெயர் பொருத்தமானதே.

தேவலோகத்தில் இறைவன் தேவர் சபையிலே தாம் மனித உருக்கொண்டு உலகில் அவதரிக்கப் போவதாக அறிவிக்கிறார். இதைத் தொடர்ந்து கபிலவஸ்து மன்னன் சுத்தோதனன் மனையாள் மாயா தேவியின் வயிற்றிலே ஒரு விண்மீன் வந்து புகுந்தது போன்று அத்தேவியார் ஒரு நற்கனவு காண்கிறார்.

இந்த அதிசய சம்பவம் உலகம் முழுவதிற்குமே ஆச்சரியமான பலன்களைக் கொடுக்கின்றது. அதை நாஞ்சில் கவிஞர் செஞ்சொற்களால் வர்ணிக்கும் அழகு மகிழத்தக்கதே.

‘பட்டமரங்கள் தளிர்த்தனவே – எங்கும்
பாழ்க்கிணறும் ஊறிப் பொங்கியதே.
திட்டுத் திடர் மணற் காடும் சுடுகாடும்
சில்லென்று பூத்துச் சிலிர்த்தனவே’

மாயாதேவி கர்ப்பவதியானாள். ஒரு நாள் அவள் நந்தவன மர நிழலில் உலாவிக்கொண்டிருக்கும்போது உரிய காலத்தை உணர்ந்துவிட்ட இயற்கை அந்த அற்புதக் குழந்தையை வரவேற்கச் சித்தமாகின்றது.

‘உரிய காலம் உறுவதை உணர் மரம்
மலர் முடி வணங்கி வளைந்து களித்தொரு
தழை வீடாகச் சமைந்த் நின்றது
பாரிடம்
பன்மலர் மலர்ந்தொரு பஞ்சணையாவது
பக்கத்தெழுமொரு பாறையும் பிளந்து
மதலஇயை அட்ட மஞ்சன நீரை
ஓடும் அருவியில் ஒழுக விட்டது
தேவி
நேரவு நொம்பலம் நோக்காடின்றியோர்
மகவினைப் பெற்று மகிழ்ச்சியுற்றனள்.’

ராஜ குழந்தை பிறந்தால் கேட்கவா வேண்டும்? எத்தனையோ விதமான பரிசுகளைத் தாங்கித் தேவரும் மன்னரும், வணிகரும் வருகிறார்கள். அரண்மனைக்கு வணிகர் கொண்டுவரும் பரிசுகள் தாம் எவ்விதமானவை?

பத்து மடிப்பிலே மூடினாலும் – முகம்
பார்வை மறைந்திடாப் பட்டுக்களும்,
சித்தரச் சேலைத் தினுசுகளும் – நல்ல
செம்பொற் சரிகையுந் தாங்கிவந்தார்

பத்து மடிப்பிலே மடித்தாலும் பார்வை தெரியும் அந்தப் பட்டு எத்தகைய அற்புதமான மிருதுவான பட்டாயிருந்திருக்க வேண்டும்.

பிள்ளைக்கு நாமகரணமுமாயிற்று. சித்தார்த்தன் என்பது பெயர். பிள்ளை வளர்ந்து வாலிபமடைகிறது. அன்பே அதன் உள்ளமும் உடலுமாயமைந்துவிட்டது. ஒரு நாள் தேவதத்தன் என்ற அரசிளங்குமரன் வானில் பறக்கும் அன்னப் பறவை ஒன்றை வில்லினால் எய்து வீழ்த்துகிறான். காயத்தோடு கீழே விழுந்த பறவையை சித்தார்த்த குமாரன் கையிலெடுத்துச் சிசுருஷைகள் செய்கிறான். அதனைக் கவிஞர் அழகொழுக வர்ணிப்பது மனோரம்மியமாயிருக்கிறது.

விழுந்த அப்பறவை, மேனி முழுதும்
ஒழுகி ஓடும் உதிரம் புரளத்
துள்ளித் துள்ளித் துடிப்பது கண்டு,
சிந்தை கனிந்து, திருமா மன்னரின்,
செல்வக் குமாரன் சித்தார்த் தன்போய்,
மலர்ந்து விரியா வாழைக் குருத்தினும்
தண்ணிய கரங்களால் தாங்கி எடுத்து,
மடியில் வைத்து மார்போடு அணைத்துத்
தழுவித் தழுவித் தளர்ச்சி நீக்கினன்.
அப்பால்,
இடக்ககையிற் பறவையை ஏந்தி, அம்பினை
வலக்கை யதனால் வாங்கி, வடிந்த
உதிரம் மாற்றி, உறுத்திய புண்ணில்

தேனும் தளிரும் சேர்த்துப் பிசைந்து
பூசியே வருத்தம் போக்கினன். ஆங்கே

சித்தார்த்தன் இவ்வளவு அன்பு காட்டினான் அல்லவா? ஆனால் அவனுக்கு நோவென்பது கடுகத்தனையும் தெரியாது. நோவு எவ்விதம் இருக்கும் என்று பரீட்சை பார்க்க விரும்பினான் அரசகுமாரன், எனவே:

பறவையின் மீது பாய்ந்த அம்பின்
முனையைத் தனது முழங்கை யதனில்
அமுக்கிப் பார்த்தனன்; ஐயோ! ‘ என்றனன்;
பிரிந்து பின்னும் பறவையை எடுத்துத்
தாயினும் இரங்கித் தழுவி அணைத்தனன்.

சிறிது நேரம் செல்ல தேவதத்தன் அங்கே வந்து பறவையைத் தரும்படி  கேட்கிறான். சித்தார்த்தன் மறுக்கிறான். ‘ பறவை இறந்திருந்தால் அதனை நான் உனக்குத் தந்திருப்பேன். ஆனால் அது இறக்கவில்லை. உனக்கு அது உரிமையில்லை. அதனைக் காப்பாற்றியவனுக்கே அது உரியதாகும்’ என்கிறான் அவன்.

எய்தவனுக்கே எக்காலத்தும் பறவை உரியது என்று வாதிக்கிறான் தேவதத்தன்.

சொன்ன மொழிகேட்டான் – ஐயன்
துன்பம் மிகஅடைந்தான்;
அன்னப் பறவையினைக் – கன்னத்தோடு
அணைத்து வைத்துக் கொண்டான்

முடிவில் நீதிமன்றத்துக்குப் போவோம் என்று சித்தார்த்தன் சொல்ல இருவரும் அவ்வாறே செல்கின்றனர். அங்கு வ்ழக்கை முடிவுகட்ட முடியாது அறிஞர்கள் – பண்டிதர் தவிக்கின்றனர். அப்போது ஒரு புரோகிதன்:

“உயிரைக் கொன்றிடவே – முயலும்
ஒருவ னுக்குஅந்த
உயிரின் மேலேதும் – உரிமை
உண்டோ? கூறும் ஐயா!

என்று கேட்டு சித்தார்த்தனுக்கே அன்னம் உரியதென்று தீர்ப்புக் கூறுகிறான். தீர்ப்புக் கூறிய புரோகிதன் வடிவில் வந்த தேவன் பின்னால் மாயமாய் மறைந்துவிடுகின்றான்.

மேலே கூறிய பகுதிகளிலே கையாளப்பட்ட மேற்கோட்கள் தேசிக விநாயம்பிள்ளை கவிதை எவ்விதம் இருக்கும் என்பதற்கு நல்ல உதாரணங்கள். அகவற் பாவை அலங்காரமாக இலக்கண ஓசை மோனை நயம் சொட்டும்படி அவர் ஆசிய ஜோதியில் பல இடங்களில் கையாண்டிருப்பது  புத்தரின் கருணை – அவரது அமைதி நிறைந்த – மென்மையும் , கம்பீரமும் கொண்ட தோற்ற – செயல் எல்லாம் இக்க்கவிதையில் நம் கண்முன்னே நன்கு தோன்றும்படி அதற்கேற்ற பாணியிலும், பாவத்திலும் பாடப்பட்டிருப்பது விசேஷித்த அம்சமெனக் குறிப்பிடலாம்.

சித்தார்த்தன் பிரம்மசரியத்தைக் கடந்து கிரகஸ்தாசிரமத்தில் புகுந்துவிட்ட பின் நடந்த சம்பவங்கள் இவை.

வைசாகமதி வானிலே விளங்கி உலகை ஒளிமயப்படுத்தும் ஓர் இரவு. சித்தார்த்தன் அரன்மனைச் சுகங்களை ஒதுக்கி துறவு மேற்கொண்டு வெளியேறுகிறான். அவன் காதல் மனைவி யசோதை வயிற்றிலே கருவுற்று களங்கமில்லாமல் நித்திரையில் ஆழ்ந்து கிடக்கிறாள். பார்த்தான் சித்தார்த்தன். இருந்த போதிலும் அவளது அழகிய முகம் அவனது வைராக்கியத்தைக் கலைக்கவில்லை. அதே சமயத்தில் போலித்துறவறம்  பேசிப் பெண்களைப் பேயென்று காயும் பண்பில்லை சித்தார்த்தனுக்கு.  உலகையே கருணை மயமாக்க எண்ணும் ஒருவனுக்கு பெண்ணில் வெறுபேற்படுவது அடுக்குமா?  உண்மையை ஆராயும் தனது பணிக்கு  மெல்லியலாள் குந்தகமாவாள் என்பதுதான்  அவன் எண்ணம். அதனால் தான் பிரிந்து செல்கிறான்.  துயில்கொள்ளும் யசோதையைப் பார்த்து அவன் கூறுகிறான்:

வெறுத்தற் கரிய விண்ணமு தே! என்
அன்பின் உருவே! அசோதையே! உன்னை
மறந்து செல்ல மனந்துணி கின்றேன்;

இவ்வார்த்தைகளில் தான் என்ன தாபம்! என்ன அன்பு! அவன் மேலும் சொல்லுகிறான்:

காரிகை யேநம் காதலில் மலர்ந்த
மலரென உன்தன் வயிற்றினில் வளரும்
மகவினைக் கண்டு வாழ்த்துதற் குரிய
காலம் வரும்வரை காத்து நிற்போனல்,
மனத்தில்
கொண்ட உறுதி குலைந்து போய்விடும்.

குலைந்தால் என்ன? அதனால் உலகத்துக்கே நஷ்டம் ஏற்படும்.

உண்மை ஞானம்இவ் வுலகெலாம் ஒளிரச்
செய்வதென் கடனாம், சிறிது காலம்
பிரிகின் றேன், இதில் பிழையெதும் இல்லை,
வாய்த்த மனைவியே! வயிற்று மகவே!
தந்தையே! தமரே! தரணி மாந்தரே!
பொறுத்திட வேண்டும்; பொறுத்திட வேண்டும்.
பொறுத்துக் கொள்வது புண்ணிய மாகும்
உள்ளம் தேறினேன்; உறுதியும் கொண்டேன்.
இனியொரு கணமும் இங்குத் தங்கிடேன்.
யாதுந் தடையிலை; இறங்கிச் செல்வேன்.
நீள்நில மீது நித்தியா னந்த
வாழ்வை யடையும் வழிஇது வென்ற
தீவிர மான தியாகத் தாலும்
ஓய்வில் லாத உழைப்பி னாலும்
அறியலா மென்னில் அறிந்து வருவேன்;
வாடி வருந்தி மன்னுயி ரெல்லாம்
அடையும் துன்பம் அனைத்தும் ஒழிப்பேன்”
நன்று நாடிய ஞானிசித் தார்த்தனே.

மோனத்திலிருந்து அவன் நடத்திய ஆத்ம விசாரணைகள் அவனுக்கு உள்ளறிவைத் தந்ட்து புத்தனாக்கி விடுகிறது. இந்நிலையில் ஒருநாள் வழி நடந்த களைப்பால் பாதையிலே சோர்ந்து கிடந்தார் அவர். அப்பொழுது தாழ்ந்த குலச்சிறுவன் ஓர் ஆட்டிடையன், அவர்மீது கருணைகொண்டு தன் ஆட்டின் மடியை அவரது வாய்க்கு நேரே நிறுத்தி பாலை மெல்லக் கறந்து விடுகிறான். புத்தர் அறிவு தெளிந்தார்.  ஆப்பையனை நோக்கி ‘கலையத்தில் கொஞ்சம் பால் தா’ என்று கேட்டார்.

சிறுவன் மறுக்கிறான். ‘ நான் எளிய சாதி.  எனது கலையத்தில் நீங்கள் உண்ணலாமா? ‘ என்று கூறும் சிறுவனிடம் புத்தர் கூறுகிறார் பதில்:

நெற்றியில் நீறும் – மார்பில்
நீண்ட பூணுலும்
பெற்றுஇவ் உலகுதனில் – எவரும்
பிறந்த துண்டோ அப்பா!

தீண்டாமையை எதிர்த்து இதிலும் பார்க்க ‘ஒழித்துக் கட்டும்’ வகையில் வாதிக்க வேறு வாதங்களுண்டோ? முடிவில் சிறுவன் கலையத்தில் பால்  தர அதனைக் கருணை வள்ளல் உண்டு மகிழ்கிறார்.


புத்தர் வழியோடு போய்க்கொண்டிருக்கிறார். அப்போது அவர் கண் எதிரே ஒரு ஆட்டு மந்தை எதிர்ப்படுகிறது.  அத்தனை ஆடுகளும் பிம்பிச்சார மன்னனின் யாகசாலையில் பலியாவற்காகப் போகின்றன. அவற்றில் ஒரு ஆட்டுக்குட்டி நொண்டி நொண்டி நடக்கிறது. அண்ணல் அதனைத்தனது தோள்களில் தாங்கி நடக்கின்றார்.

நல்ல பக்தரான தேசிகவிநாயகம் பிள்ளைக்கு புத்தர் இளமறியோடு தோன்று இக்காட்சி மானேந்தி ஆடும் சிவபெருமானையே ஞாபகமூட்டுகிறது.

நெற்றியில் நீறும் – மார்பில்
நீண்ட பூணுலும்
பெற்றுஇவ் உலகுதனில் – எவரும்
பிறந்த துண்டோ அப்பா!

என்று வர்ணிக்கிறார் கவிஞர்.

இந்த யாகத்தைத் தடுக்க வேண்டுமென்று தீர்மானிக்கிறார் புத்தர். நகர வீதிகளில் புத்தர் நுழைந்து செல்கையிலே பொது மக்கள் தமது கருமங்களை மறந்து அவரையே நோக்குகிறார்கள். அத்தகைய திவ்யமான தோற்றங்கொண்டவரல்லவா அந்தக் கருணை வள்ளல்.

பெண்டுகள் வாசலில் கூடிநின்றார் – இந்தப்
     பேரரு ளாளனும் யாரோஎன்றார்;
கண்டவர் உள்ளம் கனியுதென்றார் – இவண்
     கண்ணின் அழகினைப் பாரும் என்றார்

கன்னி ஒருமகள் மையெழுதி – இரு
     கண்ணும் எழுதுமுன் ஓடிவந்தாள்;
பின்னும் ஒருமகள் கூந்தலிலே – சூடும்
     பிச்சி மலர்கையில் சுற்றிவந்தாள். 
பாலுக் கழுத மதலையுமே – ஐயன்
     பக்கம் வரக்களிப் புற்றதென்றால்,
சேலொக்கும் மாதர் விழிகள் – அவன்முகச்
     செவ்வியில் ஆழ்வது அதிசயமோ!

கண்ணிற் கருணை விளங்குதென்றார் – நடை
     கம்பீர மாகவுங் காணுதென்றார்;
எண்ணில் இடையனும் ஆகான் என்றார் – இவன்
     இராஜ குலத்தில் பிறந்தோன் என்றார்; 
யாகப் பசுவை எடுத்துவரும் – இவண்
     எண்ணரும் பக்தி யுடையன் என்றார்;
மாகந் தொழுதேவ ராஜன்என்றார் உயர்
     மாதவச் செல்வன் இவனே என்றார். 
செம்பு நிறைந்துபால் சிந்திடவே – சிலர்
     சிந்தை மறந்து கறந்துநின்றார்;
எம்பிரான் செல்லும் வழியின் சிறப்பெலாம்
     எங்ஙனம் சொல்லி முடிப்பேன், அம்மா!

கடைசியில் யாகசாலையை நண்ணுகிறார் புத்தர்.  அங்கே கொலை பாதகம் நடக்கப் போகிறது.  ஏராளமாக ஆடுகள் வெட்டுப்படப் போகின்றன. ‘தீட்டிய கத்தியும் கையுமாக’ விளங்கிய தீட்சிதர் ஒருவர் அவிப்பாகங்களைத் தேவர்களுக்கு அர்ப்பணிக்கிறார். அவர் கூறுவது யாகத்தின் கொடுமையை, பலியிடுதலின் கொடுமையை நன்கு உணர்த்துவதாக அமைந்துள்ளது:-

யாகத் திறைவரே! எண்ணருந் தேவரே!
அம்பவி யாளும் அரசர் பெருமான்
பிம்பி சாரப் பெருந்தகை, இந்நாள்
மறைகளில் விதிக்கும் வழிவகை யறிந்து
முறையிற் செய்து முடிக்கும்இம் மகத்தில்

பேணி உமக்கிடும் பெரும்பலி இதுவாம்;
உயிரொடு துள்ளி ஒழுகிடும் உதிரம்
கண்களிற் கண்டு களிப்பீ ராகுக!
சீரிய குணத்துஎம் செங்கோல் மன்னன்
பாரில் செய்த பழியும் பாவமும்
தாங்கி இவ்வாடு சாவக் கையினில்
வாங்கும்இவ் வாளால் வதைத்துஅவ் வூனையும்
எரிவாய் இடுவன், யாவும்
பொரியாய்ப் புகையாய்ப் போவது குறித்தே

இதனைக்கண்ட அன்பரசர் அதனைத் தடுக்க விரைகிறார்.

காலிலே கட்டிய
கட்டவ்ழித்தான். – அதன்
வாயினில் கட்டும்
அவிழ்த்து விட்டான்.

சபையோரிடம் உயிர்ப்பலியின் கொடுமையை எடுத்து விளக்குகிறார். முடிவில்,

கொன்று பழிதேட வேண்டாம்ஐயா; – இனிக்
     கொல்லா விரதம்மேற் கொள்ளும் ஐயா!

என்று கூறுகிறார் அவர். இந்தக் காட்சி எவ்வாறிருந்தது தெரியுமா? வாய் பேசா உயிர்களெல்லாம் வாய்பெற்றுப் பேசுவது போலிருந்ததாம் ஆது. இந்த அறிவுரை கேட்டு தீட்சிதர் வாளை  எறிந்தார். அக்கினிக்குண்டம் அழிக்கப்பட்டு எல்லோரும் புத்தர் காலில் வீழ்ந்தனர். பிம்பிசார மன்னர் அதன்பின் உயிர்ப்பலியை நாட்டில் அறவே ஒழிக்க, புத்தர் ஆனந்தம் அடைகிறார்.

கவிமணியின் கதை சொல்லும் திறமை இந்தக் கவிதைகளிலே பரக்கத் தோன்றுகிறதென்பதைக் கூறவேண்டியதில்லை.  மேலே கூறிய ஆசிய ஜோதிக் கதைகளைவிட அரிய கவிதைகள் ‘புத்தரும், சுஜாதையும்’, ‘புத்தரும் மகனிழந்த தாயும்’ என்பவையாகும். அவற்றை அடுத்துவரும் கட்டுரையில் பரிசீலிப்போம்.

நன்றி: சுதந்திரன் 18.2.1951 /  11.03.1951