காதலர்தினக் கவிதை: காதல் எனும் கனியமுது

- எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா -

இளமையிலும் காதல் வரும்
முதுமையிலும் காதல் வரும்
எக்காதல் இனிமை என்று
எல்லோரும் எண்ணி நிற்பர்
இளமையிலே வரும் காதல்
முதுமையிலும் தொடர்ந்து வரின்
இனிமை நிறை காதலென
எல்லோரும் மனதில் வைப்போம்

காதலுக்கு கண்ணும் இல்லை
காதலுக்குப் பேதம் இல்லை
காதல் என்னும் உணர்வுதனை
கடவுள் தந்தார் பரிசெனவெ
காதலிலே மோதல் வரும்
காதலிலே பிரிவும் வரும்
என்றாலும் காதல் எனில்
எல்லோரும் விரும்பி நிற்பார்

காதல் என்று சொன்னவுடன்
கவலை எல்லாம் ஓடிவிடும்
கனவுபல தோன்றி  வந்து
கண்ணுக்குள் புகுந்து நிற்கும்
கற்பனையில் உலா வந்து
களிப்புடனே நாம் இருப்போம்
காதல் என்னும் உணர்வில்லார்
கல்லினுக்கே சமம் ஆவார்

காவியத்தில் காதல் வரும்
ஓவியத்தில் காதல் வரும்
கல்வியிலும் காதல் வரும்
காசினிலும் காதல் வரும்
அக்காதல் கொள்ள மனம்
ஆசை பட்டு நின்றாலும்
அழகு மங்கை தரும்காதல்
அனைவருக்கும் பிடிக்கும் அன்றோ

மனித குலம் முழுவதற்கும்
மகிழ்வு எனும் மருந்தாக
வரமாக காதல் அது
வந்து அமைந்து இருக்கிறது
புவிமீது நாம் வாழ
பொலிவு தரும் அமிர்தமென
காதல் எனும் கனியமுதை
கடவுள் எமக் களித்துள்ளார்

jeyaramiyer@yahoo.com.au