காலச்சுவடு.காம் – பயனுள்ள மீள்பிரசுரம் – குழந்தைகள் மீதான வன்முறை: கல்வி நிலையங்களில் கயமை இருள்

-2003 ஜூலை 8 அன்று செய்தித்தாள்களில் அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று வெளிவந்திருந்தது. சென்னைப் புறநகர் தனியார் (சுயநிதி) மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றில் ஒன்பது வயதான நான்காம் வகுப்பு மாணவி மாதவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உடற்கல்வி ஆசிரியரால் பள்ளி நேரத்திலேயே கழிப்பறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். நான் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் இருந்த காலம். உடனே உண்மையறியும் குழு – சிறந்த குழந்தை மருத்துவ வல்லுநர், குழந்தை உரிமை ஆர்வலர், வழக்கறிஞர், ஆணையச் செயலர் ஆகியோர் கொண்ட என் தலைமையிலான குழு – ஒன்றினை நியமித்து, கள ஆய்வுக்குச் சென்றோம். அதற்குள் சென்னை மனித உரிமை நிறுவனம் (Human Rights Foundation) செய்தி சேகரித்து, ஆணையத்தின் தலையீட்டை வேண்டிற்று; ஆய்வில் பெரிதும் துணை நின்றது.  நடுத்தர வர்க்க வீடுகள் கொண்ட தெருவில் எதிரெதிரான இரு கட்டடங்கள்தான் பள்ளி. சுற்றிலுமுள்ள வீடுகளிலிருந்து வேறுபடுத்த முடியாத கட்டடங்கள். மூன்று கட்டடங்களுக்கு அப்பால் குற்றம் நடந்த விளையாட்டுத் திடல். திடலின் ஒரு பக்கம் பின்புறச் சுவரையொட்டி வரிசையாக அமைந்த கழிப் பறைகள். பன்னிரண்டாம் வகுப்புவரை படிக்கும் அனைத்து ஆண் மாணவர்களுக்கும் ஐந்தாம் வகுப்புவரையான பெண் குழந்தைகளுக்கும் ஒரே கழிப்பறைகள்தான்.

 விசாரணை முழுதும் தனிமையில் (in camera) நடத்தப்பட்டது. குழு உறுப்பினரில் ஒருவரான மருத்துவ-குழந்தைநல வல்லுநரால் மாதவி தனியாக விசாரிக்கப்பட்டாள். அவள் கொடுத்த ஒவ்வொரு விவரமும் திடுக்குற வைத்தது. ஆசிரியரின் விஷமத்தனங்கள் ஓராண்டுக்கு முன்பே, அவள் மூன்றாம் வகுப்பில் இருந்தபோதே தொடங்கிவிட்டன. ஒவ்வொரு முறையும் கழிப்பறைதான் குற்றக் களம். குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கும் நேரத்திலேயே, அவர்கள் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே மாதவியை ஆசிரியர் அழைத்துச் சென்றுள்ளார். ஒரு முறையல்ல, பல முறை மாதவி இத்தகைய வன்முறைத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறாள். அவள் மட்டுமல்ல; இன்னும் வேறு இரண்டு மாணவிகள் அந்த ஆசிரி யரிடம் அதே கதிக்கு ஆளாயினர் என்று அவள் சொன்னாள். அவர்கள் இருவரும் பள்ளியை விட்டு நின்றுவிட்டனர்.

இறுதியில் நிலைமை முற்றி வெடித்தபோது, மருத்துவப் பரிசோதனையில் மாதவி பாலியல் வன்முறைக்கு ஆளானது தெரியவந்ததும் அவளது பெற்றோரும் உறவினரும் பள்ளியின் மற்ற பெற்றோரும் பள்ளியின் மேல் படையெடுத்து வந்து, குற்றவாளியை அடித்து நொறுக்கவும் பள்ளி நிர்வாகம் வேறு வழியின்றிக் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தது, குற்றவாளி கைதுசெய்யப்பட்டான்.

எங்களது ஆய்வில் வெளிவந்த நெஞ்சை உலுக்கும் உண்மைகள்:

பள்ளி, அறுபதுகளில் தொடங்கப்பட்டிருந்தாலும் 2000ஆம் ஆண்டுதான் முதன்முறையாக உடற்பயிற்சி ஆசிரியர் நியமிக்கப்பட்டார். குற்றவாளி ஆசிரியரின் நியமனக் கோப்பைக் கண்டு பெரிதும் அதிர்ச்சியடைந்தோம். நியமனம் செய்யப்பட்டபோது அவனுக்கு வயது 18. கொடுக்கப்பட்ட ஊதியம் மாதம் ரூ. 1,200. பள்ளியின் அனைத்து மாணவர்களும் – பருவம் எய்திய பெண்கள் உட்பட – அவனது பொறுப்பில் விடப்பட்டனர். ஆசிரியர் நியமனத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய எந்த விதிமுறையும் பின்பற்றப்படவில்லை. கண்காணிக்கும் பொறுப்புடைய கல்வித் துறையோ கண்டுகொள்ளவேயில்லை. நடந்த பாலியல் வன்முறைச் சம்பவம் செய்தித்தாள்களில் வெளிவந்து ஒரு வாரமாகியும் கல்வித் துறை அதிகாரி எவரும் விசாரணைக்குச் செல்லவில்லை.

மாதவியின் குடும்பம் கேரளாவிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன் சென்னையில் குடியேறிய குடும்பம். குற்றம் நீதிமன்றம் ஏற வேண்டும்; குற்றவாளி கடுமையான தண்டனை பெற வேண்டும் என்பதில் குடும்பத்தினர் ஆத்திரம் கொண்ட தெளிவுடன் இருந்தனர். நம் சமுதாயத்தில் விதிவிலக்கான குடும்பம் அது. சராசரிக் குடும்பத்திலோ பெண் குழந்தைக்கு நடந்த அக்கிரமத்தை மூடி மறைக்கவே முயல்கின்றனர். அதே பள்ளியில் வேறு இரு குழந்தைகளுக்கும் இதே கதி ஏற்பட்டிருந்தபோதிலும் விஷயம் வெளிவரவே இல்லை. குழந்தைகள் சத்தமில்லாமல் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டனர். பெண்ணடிமைச் சமுதாயத்தின் ஆண் ஆணவ ஆதரவு இது. பெண் குழந்தையின் உடலில் படிந்த கறை, பெண்ணின் தலையில்தான் விடியும் என்னும் அச்சம்; அவளது திருமண வாய்ப்புகள் பாதிக்கப்படும் என்னும் கவலை. பொறுப்பின்றிப் புரளும் நாக்குகளுக்கு நடுங்கி, மூடி மறைத்து, குற்றவாளியைத் தப்பவிட்டு, குற்றங்கள் தொடர ஏதுவாக அமையும் சூழல் இவ்வாறுதான் உருவாகிறது. மௌனத்தில் மறையும் குற்றங்கள் ஏராளம். வெளிவரும் குற்றம் ஒவ்வொன்றைப் போலும் பல மடங்கு குற்றங்கள் வெளிவராமல், சமுதாயத்தின் மௌடீகத்தால் தழைக்கின்றன.

மாதவி பல முறை வன்முறைக்கு உட்படுத்தப்பட்டும் எவரிடமும் அது குறித்து வாய் திறந்து பேசவில்லை என்பது கவலைக்குரிய உண்மை. பெற்றோரிடமோ வகுப்பு ஆசிரியரிடமோ அதைப் பற்றிச் சொல்லவில்லை. குடும்பம் விதிவிலக்கான, ஓரளவு தைரியமான குடும்பமாக இருந்தபோதிலும், அதைச் சொல்லும் துணிவு அவளுக்கு வரவில்லை. விசாரணையின்போது ஏன் எவரிடமும் சொல்லவில்லை என்று மாதவியிடம் கேட்டபோது, வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் என்று குற்றவாளி ஆசிரியர் அச்சுறுத்தியதாகக் கூறினாள். அது மட்டுமே காரணமாக இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. இதேபோல்தான் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகும் குழந்தைகள் நடந்த விபரீதத்தை எவரிடமும் சொல்வதில்லை என்னும் உண்மை பல ஆய்வுகளில் வெளிவந்துள்ளன. பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையில் ஏன் இந்தத் திரை? குழந்தைகள் குற்ற உணர்வுக்கு ஆளாகிவிடுகின்றனரா? பெற்றோர் தங்களையே குறை சொல்வர் என்னும் அச்சமா? பெற்றோர் மனம் வேதனைப்படும் என்னும் கவலையா? கொடுமைக்குள்ளாகி மருகிக்கொண்டிருக்கும் சின்னஞ்சிறு குழந்தைகளின் வாயை அடைப்பது எது?

பள்ளியில் பல முறை நடந்த குற்றம் பள்ளி நிர்வாகத்திற்குத் தெரியவில்லை என்பது நம்பத் தகுந்ததாக இல்லை. விசாரணையின்போது தலைமை ஆசிரியரும் பள்ளித் தாளாளரும் ஒவ்வொரு நாளும் தாங்கள் பள்ளியைச் சுற்றி வந்து மேற்பார்வையிடுவதாகச் சொன்னார்கள். அவர்கள் இருவரும் வசிப்பதும் பள்ளி வளாகத்தில்தான். குற்றம் அவர்கள் காதில் விழும், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்னும் அச்சம் இருந்திருந்தால், குற்றவாளிக்குத் துணிவு வந்திருக்குமா என்பது சந்தேகமே. உடற்பயிற்சி வகுப்பின்போது ஆசிரியர் மாதவியைக் கழிப்பறைக்கு அழைத்துச் செல்வதும் வெகுநேரம் கழித்து வெளி வருவதும் விளையாடிக்கொண்டிருந்த மற்ற மாணவரின் கண்ணெதிரிலேயே நடந்தபோது, அதைப் பற்றிய பேச்சு எழவில்லை என்பதும் நிர்வாகத்தின் காதுக்கும் எட்டவில்லை என்பதும் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. ஆனால், குற்றப் பத்திரிகையில் பள்ளி நிர்வாகம் சேர்க்கப்படவில்லை.

மாணவியின் வகுப்பாசிரியரும் பள்ளியின் மற்ற ஆசிரியர்களும் நடந்தது எதுவும் தங்களுக்குத் தெரியாது என்று மறுத்துவிட்டனர். சுயநிதிப் பள்ளிகளில் ஆசிரியரின் கொத்தடிமை நிலை அனைவரும் அறிந்ததே. ‘இம்’ என்றால் சம்பள இழப்பு, ‘ஏன்’ என்றால் வேலை இழப்பு; கிடைக்கும் ரூ. 2,000இலும் மண். ஆகவே, பள்ளிக்குப் பெரும் அவப்பெயர் அளிக்கும் இந்நிகழ்வு குறித்து அவர்கள் வாய் திறந்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்க இயலாது. சுயநிதிப் பள்ளிகள் அச்சம் அடையடையாய் அப்பிக்கொண்டிருக்கும் நிறுவனங்கள்.

பெற்றோர், முனிசிபல் கவுன்சிலர், பகுதிவாழ் மக்களின் நல்வாழ்வுச் சங்கம் . . . எவருக்கும் பள்ளி குறித்த குறைகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. சொல்லப்போனால், அனைவருமே அது நல்ல பள்ளி என்று சர்டிபிகேட் கொடுத்தார்கள்; ஏதோ விபத்துபோல் இந்த நிகழ்வு நடந்துவிட்டது; இதற்காகப் பள்ளியின் நல்ல பெயர் கெட்டுவிடக் கூடாது என்று கவலைப்பட்டனர். நல்ல பள்ளி என்று அத்தாட்சி கொடுப்பதற்கு என்ன ஆதாரம்? ‘தேர்வில் நல்ல ரிசல்ட்; ஸ்டேட் ராங்க் கூட ஓரிரு முறை பெற்றிருக்கிறது. நல்ல டிசிப்ளின்; சில பள்ளிகள்போல் மிக அதிகமாகக் கட்டணம் வசூலிப்பதில்லை. ரெயில்வே கேட்டுக்கு இந்தப் பக்கம் இருப்பதால் குழந்தைகள் கடந்து போக வேண்டிய அவசியம் இல்லை.’ பதினெட்டு வயது இளைஞன் உடற்கல்வி ஆசிரியராக இருப்பதும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே கழிப்பறைகள் இருப்பதும் சம்மதம்தானா? ‘எங்களுக்கு அதெல்லாம் தெரியாது, மேடம்.’ குழந்தைகளின் நலனில் எத்தனை கரிசனை சமுதாயத்திற்கு? பெற்றோருக்கோ குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்துவிட்டால் போதும்; பன்னிரண்டாம் வகுப்பு முடியும்வரை கவலைப்பட வேண்டியதில்லை.

மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான இயக்கக அதிகாரிகள் இருவர் விசாரணைக்கு வந்திருந்தனர். மாநிலத்தின் ஏராளமான சுயநிதிப் பள்ளிகளைக் கண்காணிக்கும் சாத்தியப்பாடே இல்லையென்று அவர்கள் வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர். அதற்கான கட்டுமான, நிதி ஆதாரங்கள் எவையும் இந்த இயக்ககத்திற்கு அளிக்கப்படவில்லை. பெயருக்கென்று நிறுவப்பட்டிருக்கும் இயக்ககம் இது.

பள்ளிகளின் அவல நிலை குற்றங்கள் நடப்பதற்கு ஆதரவான சூழ்நிலையை உருவாக்குகிறது. குறிப்பாக, சுயநிதிப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு, அதிலும் பெண் குழந்தைகளுக்கு, பாதுகாப்பற்ற சூழல்; அவற்றில் இருட்டு மூலைகளில் பதுங்கி, குழந்தைகளின் இயற்கை யான இயலாமையையும் அறியாமையையும் பயன்படுத்திக்கொண்டு பாயக் காத்திருக்கும் வக்கிரங்கள்; இப்பள்ளிகளின் ஆங்கில மீடியத்தையும் தேர்ச்சி விகிதங்களையும் கண்டு பெருமிதம் கொண்டு, குழந்தைகளைக் காவு கொடுக்கும் பெற்றோர்; பள்ளிகளின் மேல் எந்தக் கண்காணிப்பும் செலுத்தாத கல்வித் துறை; குழந்தைகளின் வளர்ச்சியில் அக்கறையற்ற சமூகம். இத்தனைக்கும் பலியாகின்றனர் குழந்தைகள்.

இத்தகைய அக்கறையற்ற, அனைத்தையும் அனுமதிக்கும் permissive சூழல்தான் கல்வி நிலைய இடுக்குகளில் பதுங்கியிருந்து குழந்தைகளின் மேல் பாயும் வன்முறைக்கும் வக்கரிப்புக்கும் பெரும்பாலும் காரணம். இதுவரை பேசப்பட்ட குறிப்பிட்ட வன்முறைத் தாக்குதல் சுயநிதிப் பள்ளியில் நடைபெற்றதால், இப்பள்ளிகளின் கேட்பாரற்ற, தான்தோன்றித்தனச் சூழல்தான் இதற்குக் காரணம் என்று பொருள்படுத்தக் கூடாது. அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பெண் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு இலக்காகிக்கொண்டுதான் இருக்கிறார்கள். குறிப்பாக, பரிசோதனைக் கூடங்களில், தனி வகுப்புகள் (sஜீமீநீவீணீறீ நீறீணீssமீs) நடக்கும்போது, என்று பல இடங்களில் இத்தகைய கொடுமைகள் நடப்பதாகக் கேள்விப்படுகிறோம்.

மேலே குறிப்பிடப்பட்டது கேவலம் ஒரு விதிவிலக்கான நிகழ்வா? இல்லை என்று அனைத்து ஆய்வுகளும் பறைசாற்றுகின்றன. சமீபத்தில் மத்திய அரசே செய்வித்த ஆய்வு ஒன்று சில நடுநடுங்கச் செய்யும் விவரங்களை நம் முன் வைத்தது. நாட்டில் இரண்டில் ஒரு குழந்தை வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறது; மூன்றில் ஒரு குழந்தை பாலியல் தாக்குதலுக்கு இலக்காகிறது; இந்தக் குரூரங்களில் ஈடுபடுபவர் குழந்தை அறிந்த குடும்ப உறவினரோ நண்பரோதான். நடந்த கொடுமையைக் குழந்தை, பெற்றோர் உட்பட எவரிடமும் சொல்லுவதில்லை. பிஞ்சுப் பருவத்தில் உள்ளுணர்வின் ஆழத்தில் விழுந்த பலமான அடி, ரணமாகி, சீழ்கட்டி, காலப் போக்கில் மாறாத வடுவாகி, வாழ்க்கையைப் பற்றியும் உறவுகளைப் பற்றியும் ஆரோக்கியமற்ற, அச்சம் கொண்ட, வக்கரிப்புகளை உருவாக்குகிறது. தலைமுறைகளாகத் தாக்கம் தொடருகிறது.

குழந்தைகள்மீதான பாலியல் கொடுமை (Child Sexual Abuse) இந்தியாவில் மறுத்து, மறைத்துவைக்கப் பட்டிருக்கும் பெரும் ரகசியம். காரணம், அறியாமை, ஒப்புக்கொள்வதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்த குழப்பம், அச்சம், இப்படிப் பல. விளைவு: குழந்தைகள் பாதுகாப்பு உரிமையை இழக்கின்றனர். இக்கொடுமையை அனைத்து வகைப்பட்ட குழந்தைகளும் – பொருளாதார, சமூக, சாதி, பால் வேறு பாடின்றி – அனுபவிப்பதாக ஆய்வுகள் சொல்லுகின்றன.

சில உலுக்கும் விவரங்கள்: (பள்ளிகளில் மட்டுமல்ல, அனைத்து இடங்களிலும் நடந்தவை)

* துளிர் என்னும் நிறுவனம் 2006இல் சென்னையில் பள்ளி செல்லும் 2211 குழந்தைகளிடம் நடத்திய ஆய்வுவின் முடிவுகள்: 42% குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு இலக்காகின்றனர். அனைத்து வகைப்பட்ட சமூக-பொருளாதார நிலை சார்ந்த குழந்தைகளும் கொடுமைகளுக்கு இலக்காகிறார்கள். ஆண் குழந்தைகளில் 48%, பெண் குழந்தைகளில் 39% இலக்காகியுள்ளனர். 15% கடுமையான வன்முறையை அனுபவித்துள்ளனர்.

* சாக்ஷி என்னும் அமைப்பு, புது டில்லியில், 1997இல் பள்ளி செல்லும் 350 பெண் குழந்தைகளிடம் செய்த ஆய்வு: 63% குழந்தைகள் குடும்ப உறுப்பினரால் கொடுமைக்கு உள்ளாகி இருக்கின்றனர். அவர்களில் 25% பாலியல் பலாத்காரத்திற்கோ (rape) மற்ற கடுமையான பாலியல் வன்முறைக்கோ உள்ளாக்கப்பட்டனர்.

* ராகி என்னும் அமைப்பு 1997இல் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, கோவா ஆகிய நகரங்களில் நடுத்தர, மேல்தட்டுப் பெண்களிடையில் நடத்திய ஆய்வு: 75% தாங்கள் குழந்தையாக இருந்தபோது பாலியல் கொடுமைக்கு உள்ளானதாகக் கூறியுள்ளனர். 71% சொந்தக்காரர் அல்லது தங்களுக்குத் தெரிந்த, நம்பிக்கைக்கு உரியவராலேயே கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

* சம்வாதா அமைப்பு பெங்களூரில் 1996இல் மாணவரிடையே நடத்திய ஆய்வு: 47% பாலியல் கொடுமைக்கு உள்ளாயினர்; அவர்களில் 62% பாலியல் பலாத்காரத்திற்கு (rape) ஒரு முறையும் 38% வன் முறைக்கும் இலக்காயினர்.

உண்மை இவ்வாறிருக்க, இந்த விபரீதத்தைப் பற்றிய உணர்வோ புரிதலோ நிவாரணமும் தீர்வும் காண வேண்டுமென்ற கவலையோ இன்றி, மூடி மறைத்து விட்டால், நடக்கவேயில்லை என்று மறுத்துவிட்டால் பிரச்சினை தீர்ந்தது என்ற மூடத்தனத்தில் மூழ்கிக் கிடக்கிறது நம் சமுதாயம். ஒரு மௌனச் சதி (conspiracy of silence) நடக்கிறது.

எங்களது விரிவான விசாரணை அறிக்கை அரசுக்கு உடனடியாக அனுப்பப்பட்டது. அதில், நடந்த குற்றம் தொடர்பாக உடனடி நடவடிக்கைகளைக் குறிப்பிட்டிருந்தோம். குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும், பெயில் கொடுக்கக் கூடாது; பள்ளி நிர்வாகத்தின் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, தண்டனை அளிக்கப்பட வேண்டும். கல்வித் துறையும் துறைவழி நடவடிக்கை (departmental action) எடுக்க வேண்டும். அத்துடன் புரையோடிக் கிடக்கும் இப்பிரச்சினை தொடர்பாகக் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறை, எடுக்க வேண்டிய தொலை நோக்கு நடவடிக்கைகள் குறித்தும் பல சிறந்த பரிந்துரைகளை எங்கள் அறிக்கை அளித்தது. இதே வழக்கு மீண்டும் ஒரு முறை ஆணையம் நடத்திய பொது விசாரணை மன்றம் முன்பும் வந்தது.

இவ்வழக்கில் குறிப்பிட வேண்டிய ஒன்று, உள்ளூர்க் காவல் துறையின் பொறுப்பான, சிறந்த, உடனடிச் செயல்பாடு. குற்றவாளி உடன் கைதுசெய்யப்பட்டு, குற்றப்பத்திரிகையும் விரைவில் தாக்கல்செய்யப்பட்டது. வழக்கு நீதிமன்றத்தின் முன் 2006ஆம் ஆண்டு வந்தது. குற்றவாளிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளி தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது; அத்துடன் பெயில் வழங்கப்பட்டு, குற்றவாளி வெளியில் நடமாடிக்கொண்டிருக்கிறான். குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறை வழக்குகளில் பெயில் கொடுக்கக் கூடாது என்னும் மாதர் இயக்கங்களின் நீண்டகாலக் கோரிக்கை பயனற்றுக் கிடக்கிறது. பள்ளி நிர்வாகத்தின் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. நிர்வாகம் செய்த அல்லது செய்யத் தவறிய குற்றம் (sins of omission and commission) எதுவும் தண்டனைக்கோ கண்டனத்திற்கோ உரியதாகக் கருதப்படவில்லை. கல்வித் துறையும் நிர்வாகத்தின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலே குறிப்பிட்ட வன்முறை மகளிர் ஆணையத்திற்கு வந்த பெண் குழந்தைகள்மீதான பாலியல் தாக்குதல்கள் தொடர்பான பல மனுக்களில் ஒன்றுதான். பெண் குழந்தைகள் எதிர்கொள்ள நேர்ந்த பல வகைப்பட்ட அநீதிகள், உரிமை மீறல்கள், வன்முறைகள் ஆகியவற்றைத் தனித் தனியாகக் கையாண்டபோதும், இவை குறித்துச் சமூக விழிப்புணர்வு தேவை என்ற எண்ணத்தால் இரு பொது விசாரணைகளை நடத்தினோம். ஒன்று, 2003 அக்டோ பரில் பெண் குழந்தைகள் மீதான பல வகைப்பட்ட வன்முறைகள் குறித்தது; அவற்றில் பள்ளிகளில் நடந்த பாலியல் பலாத்காரங்களும் அடங்கும். அதன் பின்னும் பல மனுக்கள் வந்து குவிந்ததால், 2004 டிசம்பரில் பள்ளிகளில் நடந்த பாலியல் வன்முறைகள் குறித்து மட்டுமே முழுப் பொது விசாரணை ஒன்றை நடத்தினோம்.

இங்குக் குறிப்பிட வேண்டியது, குழந்தை பாலியல் கொடுமைக்குப் பலியாவது பெண் குழந்தைகள் மட்டுமல்ல; ஆண் குழந்தைகளும் பெருமளவுக்குப் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், எங்கள் ஆணையம் மகளிர் ஆணையம் என்னும் காரணத்தினால், பெண் குழந்தைகள் தொடர்பான வன்முறைகள் மட்டுமே எங்கள் அதிகார வரம்பிற்குள் இருந்தன; ஆகவே, அவற்றை மட்டுமே ஆணையம் ஆய்வுக்குத் தேர நேர்ந்தது.

இரண்டு விசாரணைகளிலும் அரங்கத்திற்கு வந்த சில மனுக்களை மட்டும் இங்கு அளிக்கிறேன்.

1) நாகை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் 7ஆம் வகுப்பின் 14 வயது மாணவி, 45 வயதான ஆசிரியரால் பரிசோதனைக் கூடத்தில் பல முறை பாலியல் வன்முறைக்குப் பலியானாள். அவள் கருதரித்ததும் உண்மை வெளிவந்தது. குண்டர்களை வைத்து அவளது குடும்பத்தை அச்சுறுத்த முயன்றாலும் வழக்குப் பதிவாயிற்று.

2) மதுரை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவரின் வக்கிரத்திற்கு நான்கு மாணவியர் பலியாகியுள்ளனர். உண்மை வெளிவந்ததும், கிராமப் பஞ்சாயத்தில் ‘சமரசம்’ செய்து, இரு பெண்களுக்கும் தலா ரூ. 50,000 கொடுத்து வாயடைத்துவிட்டனர். ஆனால், மற்ற இரு பெண்கள் வழக்கில் துணை நிற்கின்றனர். விசாரணையில் வெளிவந்த செய்தி: இதே ஆசிரியர் மற்றொரு பள்ளியில் இதற்கு முன்னும் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். அவருக்குக் கல்வித் துறை அளித்த தண்டனை வெறும் இடமாற்றம். ஆகவே, மற்றொரு பள்ளியிலும் அவர் துணிவுடன் தனது கொடுஞ்செயல்களைத் தொடர்ந்திருக்கிறார். இடமாற்றம்தான் இம்மாபெரும் குற்றத்திற்கு அரசு அளிக்கும் தண்டனையா? இந்தப் பொறுப்பற்ற அணுகுமுறை குற்றங்கள் வளர ஏதுவாக அமையாதா?

3) ஈரோடு மாவட்ட ஆரம்பப் பள்ளியில் ஏழே வயதான ஓரு பிஞ்சுக் குழந்தை தலைமை ஆசிரியரின் கொடிய பாலியல் தாக்குதலுக்கு உள்ளானாள். இந்தக் குற்றவாளியும் மற்றொரு பள்ளியில் இதே குற்றம் செய்ததன் விளைவாக இடமாற்றம் செய்யப்பட்டவர்.

4) கோவை நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருத்தி ஆசிரியரின் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டதன் விளைவாகத் தற்கொலை செய்துகொண்டாள்.

5) கோவை மாவட்ட மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருத்தி ஆசிரியரின் பலாத்காரத்தால் கருத்தரித்து, கருச்சிதைவிற்கு உட்படுத்தப்பட்டு, உடலும் உள்ளமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மன நோயாளியானாள்.

அடுக்கிக்கொண்டே போகலாம். இரண்டாவது, பொது விசாரணையில், நிறைய சாட்சியங்களுடன் மன்றத்தின் முன் நாங்கள் கொண்டு வந்தவையே 13 வழக்குகள். இரு பொது விசாரணைகளிலும் முதலில் விவரித்த தனி விசாரணையிலும் நடுவர் குழுக்கள் பல பரிந்துரைகளையும் குறிப்பிட்ட பிரச்சினை குறித்துப் பொதுவானவையையும் அளித்தன. அவற்றில் சில:

1) இவ்விசாரணைகளில் எடுத்துக்கொண்ட வன்முறைச் சம்பவங்கள் நடந்த பள்ளிகள் குறித்த கவலை தரும் விவரங்கள் பல வெளிவந்தன. அரசுப் பள்ளிகளிலும் விடுதிகளிலும் கழிப்பறை வசதிகள் இல்லாமையால் பெண் குழந்தைகள் சுற்றிலும் உள்ள பொது இடங்களைப் பயன்படுத்தும்போது, வக்கிரமான குணம் கொண்டோ ர் அதைப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பாகிறது.

மகளிர் விடுதிகளில், குறிப்பாக ஆதிதிராவிடத் துறைப் பெண் விடுதிகள் பலவற்றில் ஆண்களே விடுதிக் காப்பாளர்களாக உள்ளனர்.

2) கல்வித் துறையின் ஒழுங்கு நடவடிக்கைகள் குற்றம் புரியும் ஆசிரியர்மேல் எடுக்கப்படுவதில்லை. காவல் துறையின் விசாரணை பயனளிக்காவிட்டால் கல்வித் துறை நடவடிக்கை எடுக்கவியலாது என்னும் தவறான கருத்து நிலவுவதாகத் தெரிகிறது. இந்நிலை மாறி, குற்றவியல் சட்டத்தின் கீழ் நீண்ட கால தாமதத்திற்குப் பின் நீதி கிட்டட்டும் என்ற அலட்சியம் மாறிக் குற்றம் புரியும் ஆசிரியர்மேல் உடனே துறைவழி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3) சந்தேகத்திற்குரிய ஆசிரியர் பற்றிய விவரங்களை ரகசியமாக மற்ற பள்ளிகளுக்குத் தெரிவிக்கவும் குழந்தைகளை இத்தகைய குற்றவாளிகளிடமிருந்து காப்பதற்கும் வழி காண வேண்டும்.

4) தமிழ்நாடு கல்வி விதிமுறைகள் (Tamil Nadu Education Rules) மாற்றி அமைக்கப்பட்டு, பாலியல் கொடுமை இழைப்பவர்மீதும் பள்ளி நிர்வாகத்தின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க ஏதுவாக்கப்பட வேண்டும்.

5) குற்றவியல் சட்டத்தில் மாற்றங்கள் செய்து, கல்வி நிறுவனங்களில் நடந்த பாலியல் குற்றங்களை உடனடியாகக் காவல் துறைக்குத் தெரிவிக்க வேண்டியது அந்நிறுவனங்களின் பொறுப்பாக்கப்பட வேண்டும். அப்படிச் செய்யத் தவறும் நிர்வாகங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6) மனித உரிமைகள், குறிப்பாகக் குழந்தை உரிமைகள், அனைத்துப் பள்ளிப் பாடத் திட்டங்களிலும் ஆசிரியர் பயிற்சியிலும் சேர்க்கப்பட வேண்டும். மாணவர் தங்களைச் சுற்றி நடக்கும் மனித உரிமை மீறல்களை வெளிக்கொணரவும் குற்றவாளிகளை அச்சமின்றி அம்பலப்படுத்தவும் ஏதுவான சூழல் உருவாக வேண்டும்.

7) கல்வித் துறை அனைத்துப் பள்ளிகளிலும், சுயநிதிப் பள்ளிகள் உட்பட, நடக்கும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்கும் பொறுப்பினையும் குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

8) குழந்தைகள்மீதான பாலியல் வழக்குகளுக்குக் காவல் துறை முன்னுரிமை கொடுத்து, வழக்குகளை வெகுவிரைவில் முடிக்க வேண்டும்.

9) இத்தகைய பலாத்காரங்களுக்குப் பலியாகும் குழந்தைகளுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை (Psychological counselling) மிகவும் தேவைப்படுகிறது. அவர்களுக்கு உடனடியாகவும் தொடர்ந்து நீண்ட காலமும் உளவியல் ஆலோசனை அளிப்பதற்கு அரசு மருத்துவமனைகள் முன்வர வேண்டும்; இல்லாவிடில், வேறு வல்லுநர்களை நியமிக்க வேண்டும்.

10) குழந்தைகள்மீதான பாலியல் கொடுமையைத் தடுக்கும் விசேஷச் சட்டம் இயற்றப்பட வேண்டும். இச்சட்டம் நமது அரசியல் சாசனம் அளித்துள்ள குழந்தை உரிமைகள், ஐ.நா.வின் குழந்தை உரிமை சாசனம் (Convention on the Rights of the Child), சித்திரவதை மற்றும் பிற கொடிய, மனிதாபிமானமற்ற, இழிவுபடுத்தும் நடைமுறை அல்லது தண்டனை ஆகியவற்றிற்கு எதிரான சாசனம் (Convention against Torture and other Cruel, Inhuman or Degrading Treatment or Punishment) ஆகியவை அனைத்திலும் உள்ள குழந்தை உரிமைகளை உள்ளடக்கி உருவாக்கப்பட வேண்டும்.

அனைத்திற்கும் மேலாக, குழந்தைகளின் மனநிலையைப் புரிந்துகொள்ளும் முயற்சியை அனைவரும் மேற்கொள்ள வேண்டும். பாலியல் கொடுமைக்கு இலக்காகும் குழந்தைகள் ஏன் அதை யாரிடமும் சொல்லத் தயங்குகின்றனர்? அவர்களது அச்சத்தின் அடிப்படை என்ன?

பாலியல் கொடுமைக்கு உள்ளான குழந்தைகள் அந்தக் கசப்பான அனுபவத்தை மனத்தின் ஆழத்தில் புதைத்து, மறக்க முயல்கின்றனர். அதைப் பற்றிப் பேசுவதே மீண்டும் காயப்படும், வேதனைப்படும் அனுபவமாக இருக்கிறது. தங்களுக்கு ஏற்பட்ட அருவருக்கத்தக்க நிகழ்வினால் தாங்களே கறைபட்டுவிட்டதாக உணர்கின்றனர். வயது வந்தவருடன் ஏற்பட்ட அந்த அனுபவம் தவறானது என உணர்ந்து பெரிதும் அவமானப்படுகின்றனர். ஏதோ வகையில் தாங்களும் அதற்குப் பொறுப்போ என்னும் சந்தேகமும் தாங்களும் பொறுப்பு என்று பெரியவர்கள் நினைப்பார்களோ என்னும் கவலையும் அவர்களை வாட்டுகின்றன. இதனால் பெற்றோரின் அன்பை இழந்துவிடுவோமோ என்று அஞ்சுகின்றனர். அவர்களது மற்றொரு குழப்பம், நடந்ததை மற்றவர்கள் நம்பமாட்டார்கள்; தாங்கள் கற்பித்துச் சொல்வதாக மற்றவர்கள் நினைப்பார்கள்; பாலியல் தொடுதல்களைத் (sexual touches) தாங்களே விரும்பியதாக நினைத்துக் கொள்வார்கள் என்னும் பயம். சில சமயங்களில் குற்றவாளிகள் தப்பித்துக் கொள்வதற்காகக் குழந்தை தான் தன்னைத் தொடச் சொன்னது என்று கூறுவதுண்டு. குழந்தைகள் அன்பையும் அரவணைப்பையும் வேண்டுகின்றனர்; அது அவர்களது உரிமையுமாகும். ஆனால், செக்ஸ் அனுபவம் வேண்டும் என்று கேட்பதில்லை. இவை அனைத்துடன், பல சமயங்களில் குற்றவாளி வெளியில் சொல்லக் கூடாது என்று குழந்தைகளைக் கடுமையாக எச்சரிக்கிறான். இவை அனைத்தும் சேர்ந்து தான் குழந்தைகளின் நாவைக் கட்டிப்போடுகின்றன.

இத்தகைய சூழலில் நாம் செய்ய வேண்டியது என்ன? குழந்தையின் முழு நம்பிக்கைக்கும் நாம் பாத்திரமாக வேண்டும். குழந்தை சொல்வதை முழுவதும் நம்பவேண்டும். நடந்ததைச் சொல்வதில் தவறே இல்லை என்று குழந்தையிடம் வலியுறுத்திச் சொல்ல வேண்டும். நடந்தவற்றிற்குக் குழந்தை எந்த வகையிலும் பொறுப்பல்ல என்பதை ஆணித்தரமாகக் கூற வேண்டும். நல்ல ஆலோசகரிடம் (counseller) குழந்தையை அழைத்துச்சென்று ஆலோசனையும் ஆதரவும் கிடைக்கச் செய்ய வேண்டும். இவை தவிரப் பல தடுப்பு நடவடிக்கைகளும் தேவைப்படுகின்றன. குழந்தைகளுக்குச் சிறு வயதிலிருந்தே தற்காப்பு விவரங்கள் பற்றிச் சொல்ல வேண்டும். அவர்களது விருப்பம் இல்லாமல் அவர்களது உடலைத் தொடுவதற்கு யாருக்கும் உரிமையில்லை என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும். Good touch எது, bad touch எது என்னும் பாகுபாட்டை அவர்கள் புரிந்துகொள்ளச் செய்ய வேண்டும்.

இவை அனைத்திலும் கல்வி நிலையங்களுக்குப்பெரும் பொறுப்பு உண்டு. குறிப்பாக, செக்ஸ் பற்றிக் குழந்தைகளிடம் பேசுவதற்குப் பெற்றோர்கள் பெரும் கூச்சப்படும், பேசக் கூடாது என்று நம்பும் நம் சமுதாயத்தில் இப்பொறுப்பு கல்வி நிலையங்களால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அந்தப் புகலிடத்திலேயே கொடும் தாக்குதல் நடந்தால் எங்கே போவது?

நமது சமுதாயம் குழந்தைகளின் உரிமைகளை மதிக்காத சமுதாயம். ஒழுக்கம் என்ற பெயரில் குழந்தைகளை வாய் திறந்து பேசும் தைரியமும் தன்னம்பிக்கையும் அற்றவர்களாக வளர்த்து, அநீதிகளை மௌனமாகச் சகித்துக்கொள்ளும் அபலைகளாக மாற்றிவிடுகிறோம்.

குற்றங்களுக்குப் பலியாகின்றவர்களில் மிகவும் பரிதாபகரமானோரும் உதவி கிட்டாதவரும் காயப்படுத்தப்படுவோரும் அவமானப்படுத்தப்படுவோரும் குழந்தைகள்தாம். தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வியலாத பருவமாதலால், தனிப்பட்ட விகாரங்களுக்கும் வக்கிரங்களுக்கும் அவர்கள் இலக்காகின்றனர். சமுதாயமும் அரசும் இவை குறித்த ஆழ்ந்த புரிதலும் கவலையும் கரிசனையும் கொண்டு, தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு, இத்தகைய கேவலங்களையும் கதியற்றோரை வேட்டையாடும் கொடூரங்களையும் ஒழித்துக்கட்ட வேண்டும். நமது சமுதாயத்தை, குறிப்பாகக் கல்வி நிலையங்களை, மூச்சு விட முடியாமல் அழுத்திக்கொண்டிருக்கும் அச்சப் புகைமண்டலம் விலக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் நாம் மனிதாபிமானமுடைய சமுதாயமாக மாற முடியும்.

நன்றி: காலச்சுவடு http://www.kalachuvadu.com/issue-90/child01.asp