கீதா கணேஸின் ‘எத்தனங்கள்’ சிறுகதைத் தொகுப்பிற்கான இரசனைக்குறிப்பு..

எழுத்துத் துறையில் ஆரம்ப நிலையில் இருக்கும் கீதா கணேஸ் தமிழ் இலக்கியப்பரப்பில் தன் கதைகள் மூலம் ஆழமான தடத்தை பதித்திருக்கிறார். அவரது கதைத்தொகுப்பை வாசித்து முடிந்ததும் என்மனதில் எழுந்த இக்கருத்து மிகையானதல்ல.யாழ்ப்பாணத்திற்கு தெற்கே உள்ள வேலணையில் சிற்பனை எனும் ஊரில் பிறந்த கீதா கணேஸ் தற்போது யாழ்ப்பாணத்தில் வசித்து வருகிறார் யாழ் பல்கலைக்கழகப்பட்டதாரியான இவரது எத்தனங்கள் என்ற சிறு கதைதொகுப்பு அண்மையில் வெளியிடப்பட்டது ஈழத்து இலக்கியப்பரப்பில் ஒரு வறட்சியான போக்குநிலை அவதானிக்கப்படுகின்ற சூழலில் கீதாகணேஸின் கதைகள் வெளிவந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. போர்ச்சூழல் ஓய்ந்து விட்ட நிலையிலும் தமிழ் சமூகத்தில் காணப்படுகின்ற போலித்தனங்கள் மூட நம்பிக்கைகள் வக்கிரங்களுக்கெதிராக போராட வேண்டிய நிலையில் தமிழ் சமூகம் உள்ளதை இவரது கதைகள் சுட்டி நிற்கின்றன. தான் வாழ்ந்த சமூகத்தில் காணப்படுகின்ற சமூக போலித்னங்களுக்கெதிராக பகுத்தறிவு குரலாக ஒலிக்கின்ற இவரது கதைகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு செய்தியை எமக்குசொல்கின்றன. இருப்பினும் என்னை மிகவும் கவர்ந்த கதைகள் பற்றி இங்கு குறிப்பிட விழைகிறேன்.

முதலாவது கதை ‘கற்பூர வாசனை’ நடந்து முடிந்த  போரில் தன் தாய் தந்தையரை இழந்து அனாதையாகி கோவிலிலே கற்பூரம் விற்கின்ற சிறுவனின் எதிர்காலம் மீது முற்போக்கு குணமுள்ள இளைஞன் ஒருவனின் கரிசனை சொல்லப்படுகிறது. நிகழ்ந்த போரினால் எதிர் காலம் சிதைந்து போயுள்ள இளைய தலைமுறை ஒன்று எம்முன்னே நிற்பதையும் மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவருடைய கடமையையும் இக்கதையினுடாக வலியுறுத்கிறார் கீதா கணேஸ். தமிழ் சமூகத்தின் மீது திணிக்கப்பட்ட போர் அதன் பாதிப்புகள் பெரும் சமூக அவலமொன்றை தோற்றுவித்துள்ளது  இதை பதிவு செய்வதில் இருந்து பிரஞ்ஞையுள்ள எழுத்தாளர்கள் எவரும் விலகியிருக்க முடியாது இந்த வகையில் போர் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளில் ஒன்று இளம் விதவைவகள் .இவர்கள் எதிர்காலம் வளமாக என்ன செய்ய முடியும் கனவுகள் ஈடேறும் கதையில் இதைபற்றி எழுதுகிற கணேஸ் ஜாதி மதம் கௌரவம் என்று கட்டுண்டிருக்கின்ற சமூகம் அதை விட்டு வெளியே வந்து நல்ல மனங்களை தேட வேண்டும் என சொல்கிறார். .

இவரது தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த கதை ‘இருப்பை தேடி’.  வெளிநாட்டில் இருந்து பல காலத்திற்கு பின் யாழ்ப்பாணம் வருகின்ற இளைஞனைபற்றி கதை விபரிக்கிறது இக்கதையினுடாக புலப்பெயர்விற்கு பின்பாக எமது சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள. மாற்றங்களை பதிவுசெய்ய முயல்கிறார் கணேஸ் திடீர்ப்பணம் ஏற்படுத்திய போலிக்கௌரவம் வீண் ஆடம்பரம் என்பன விமர்சிக்கப்படுகிறது. வெளிநாட்டில் கூலி வேலை செய்து அனுப்பும் காசில் அதே வேலையை வேறொருவரை கொண்டு வீட்டில் உள்ளவர்கள்  செய்ய முனைகின்ற போது கதை நாயகனுக்கு ஏற்படும் கோபம் பின்வருமாறு வெளிப்படுகிறது. ‘எங்கட சனங்களுக்கு வெளிநாட்டுக் காசென்றால் ஏதோ சொர்க்கம் என்ற நினைப்பு இல்லாட்டி அங்க நாங்க கக்கூசு கழுவி அனுப்புற காசை இஞ்ச தங்கட கக்கூசுகள் கழுவுறத்திற்கு ஆள் பிடிச்சும் .கோவில் களுக்குபவுண்கணக்கில் நேத்தியும் வைக்குங்களே’ இவ்வாறு சமுதாயத்தை சிந்திக்கவைக்கினற இடங்கள் இத்தொகுப்பில் நிறையவே  காணப்படுகினறன.

அகவயமான உணர்வை சித்தரிக்கும் கதையாக ‘பாகற்காய்’ என்ற கதை அமைகிறது. வெளிநாட்டு  மோகத்தால் பிள்ளைகள புலம்பெயர தனியே இருந்து தங்கள் அடிப்படை தேவைகளையே நிறைவு செய்ய அல்லற்படுகின்ற முதியவர் ஒருவருடைய கதை இதில் சொல்லப்படுகிறது .இதில் வருகின்ற மாணிக்கத்தார் பாகற்காய் குழம்பை காச்சி சாப்பிட பிரியப்படுகிறார் அதை தயாரிப்பதற்கு முதுமை இடங்கொடுக்கவில்லை பின்பு உடல்நலமின்றி மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிறார்  அவரது ஆசையை நிறைவேற்ற மனைவி பாகற்காய் குழம்போடு வருகிறார் அவர் இறந்து விடுகிறார்  அநத இடத்தில் வாசகனையும் உருக்கிவிடுகிறார்  கீதா  கதை இப்படி முடிகிறது. வைத்தியர் வந்து பார்த்தும் மாணிக்கதார் எழும்பவில்லை.பாவம் தங்கம்மா  அவள் கைப்பிடிக்குள் இருந்த பாகற்காய் குழம்பு போத்தல் மெல்ல நழுவுகிறது..பாகற்காய் போல எம் சமுக யதார்த்தம் மனதில் நின்று கசக்கிறது. இக்கதை எழுதப்பட்ட விதம் கைதேர்ந்த எழுத்தாளர்களுக்கே உரியது பிரகாசமாக தெரிகிறார் கீதா .

இவ்வாறு இவரது ஒவ்வொரு கதையும் தான்வாழும் சமூகத்தின் பதிவாகவும் கோபமாகவும ஆதங்கமாகவும் வெளிப்பட்டு நல்லதோர் சமூகத்தை காண விளைகின்ற எத்தனமாக அமைகிறது .இருந்தாலும் சிறு கதையில் புதிய வடிவங்கள் கட்டுடைப்புக்கள் நிகழ்கின்ற இக்கால கட்டத்தில் கீதா கணேஸிடம் இருந்தும் புதிய விடயங்களை எழுத்துலகம் எதிர்பார்க்கிறது. எத்தனங்கள் தொடர வாழ்த்துக்கள் ….

drsothithas@gmail.com