கீற்று.காம்: இயக்குநர் மணிவண்ணன்!

இயக்குநர் மணிவண்ணன்![இன்று ஜூன் 15, 2013 அன்று மாரடைப்பால் மரணமான இயக்குநர் மணிவண்ணன் கீற்று இணையத்தளத்துக்கு வழங்கியிருந்த இந்த நேர்காணலை அவரது நினைவாக மீள்பிரசுரம் செய்கின்றோம். – பதிவுகள் ] இயக்குநர், நடிகர் என பொதுவெளியில் அறியப்படும் மணிவண்ணன், மார்க்ஸிய-பெரியாரிய சிந்ததைனைகளின் மீது; தீவிரப் பற்றாளர் மேலும் தேர்ந்த வாசிப்பனுபவம் உள்ளவர். மார்க்ஸியத்தின் மீதும் பெரியாரியத்தின் மீதும் அவர் கொண்டுள்ள பிடிப்பு நம்மை வியக்க வைக்கக் கூடியது. ஈழ ஆதரவு, தமிழ்த்தேசிய சிந்தனைகளின் ஊடாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும் தமிழ்த்தேசிய அமைப்புகள் மீது விமர்சனங்கள் இருந்தால் சற்றும் தயங்காமல் கருத்துச் சொல்லக்கூடியவர். தமிழ்த்தேசிய அமைப்புகள் மார்க்ஸிய-பெரியாரிய அடிப்படையிலேயே இயங்க வேண்டும், இயங்கவும் முடியும் என்று உரத்துச் சொல்பவர்; இடதுசாரிகளின் ஒற்றுமையை சளைக்காமல் வலியுறுத்துபவர்; சினமாத் துறையினர் மத்தியில் வாசிப்பை ஒரு இயக்கமாகவே எடுத்துச் செல்பவர். இயக்குநர், நடிகர், ஓவியர், பாடகர், களப்பணியாளர் என்று பன்முகங்களை கொண்டிருந்தாலும் அவரிடம் எளிமையானது அவரது தோழமை.மணிவண்ணன் அவர்களை நேர்காணல் செய்ய நம்மை உந்தித் தள்ளியது அவரது வாசிப்பும் வாசக அனுபவமும்தான். அவருடைய சமகால இயக்கப்பணிகள் குறித்தோ, சினிமாத்துறை சார்ந்தோ இந்நேர்காணலில் விரிவாக பதிவு செய்யவில்லை. நம்முடைய நோக்கம் அது மட்டுமன்று. அவரது வாசிப்பு அனுபவங்களை புதிய புத்தகம் பேசுது வாசகர்களுக்கு அறியச் செய்வதன் வழியாக வாசகப் பரப்பு ஒரு சிறிய அளவிலேனும் விரிவடையும் என்பதே நம்முடைய எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் அவ்வளவுதான். – சிராஜுதீன் –

உங்கள் இளைமைக் காலம் பற்றி?

என்னுடைய படிப்பை பற்றிப் பெரியதாக சொல்வதற்கு ஏதுமில்லை. எனது தந்தை ஆர் சுப்பிரமணியம் கோவை மாவட்டத்தில் உள்ள சூளுர் பேரூராட்சி கிளை திமுக செயலாளராக இருந்தார். வீட்டில் எப்போதும் அரசியல் சம்பந்தமான பேச்சுக்கள் நடைபெறுவது சகஜம். அதே மாதிரி எங்களுடைய ஊருக்கு வரக்கூடிய திமுக பேச்சாளர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆகியோர் களுக்கு எங்கள் வீட்டில்தான் விருந்து உபசரிப்பு நடக்கும். அப்படியான சூழலில் கட்சியின் பெரிய தலைவர்களை எல்லாம் சந்திக்கும் வாய்ப்பு சின்ன வயதிலேயே எனக்குக் கிடைத்தது. அதனால் என்னையறியாமலேயே எனக்குள் அரசியல் ஈடுபாடு ஏற்பட்டது. அப்பொழுது அரசியல் குறித்துப் பெரிய புரிதலெல்லாம் எனக்கு இல்லை. தேர்தல் நேரங்களில் திமுக கொடியைப் பிடித்துக் கொண்டு எனது வயதை யத்தவர்களுடன் தேர்தல் நேரங்களில் உதயசூரியன் சின்னத்தை வரைந்து எடுத்துக் கொண்டு தெருவில் போவது போன்ற பழக்க வழக்கம் எனக்கு இருந்தது. மற்ற துறைகளைவிட கலை-அரசியல் துறையில் ஈடுபடுவதற்கு அதெல்லாம் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என நினைக்கிறேன். மற்றபடி நான் திமுகவில் எந்தப் பொறுப்பும் வகித்ததில்லை. என் அப்பா பொறுப்பில் இருந்ததோடு சரி.

இடதுசாரி சிந்தனைகள் பக்கம் எப்போது வந்தீர்கள்?

பள்ளிக்கூட நாட்களில் எனக்கு காளிமுத்து என்ற ஆசிரியர் பாடமெடுப்பார். அவர் ஒரு இடதுசாரி சிந்தனையாளர். அவர் வகுப்பில் பாடத்தை நடத்தும் போது பொதுஉடைமைக் கருத்துகளை கலந்து மாணவர் களுக்குப் புரியுமாறு நடத்துவார். அப்போது எனக்குப் பாடப்புத்தகங்களைத் தவிர தினத்தந்தி, மாலை முரசு போன்ற பத்திரிகைகளை வாசிப்பது, அதில் வரக்கூடிய படக் கதைகளை தொடர்ச்சியாக வாசிப்பது, தலைப்பு செய்திகளை ஆர்வமாகப் பார்ப்பது என்று வாசிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது. வார இதழ்களில் வரக்கூடிய சிறுகதைகள், குறுநாவல்கள், தொடர்கள் ஆகியவை களையும் வாசிக்கத் தொடங்கினேன்.

அப்போதெல்லாம் தமிழ்வாணனுடைய துப்பறியும் நாவல்களைத்தான் அதிகம் படிப்பேன். பொதுவாக புத்தக உலகம் என்றால் இந்த மாதிரியான புத்தகங்கள்தான் என்று நினைத்து கொண்டிருந்த போது முதன் முதலாக மார்க்சீம் கார்க்கி எழுதிய ‘தாய்’ நாவலை எனது ஆசிரியர் காளிமுத்து கொடுத்தார். இதுவரை இல்லாத ஒரு புதிய இலக்கிய உலகத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்புக் கிடைத்தது. திரும்பத் திரும்ப அந்த தாய் நாவலை வாசித்தேன். அதனால் அந்த நாவலில் உள்ள கதாபாத்திரங்கள் எனக்குள் ஆழமாகப் பதிந்து போனார்கள்.

அதன்பிறகு வள்ளுவதாசன் என்கிற தோழர் செவ்வானம் என்கிற புத்தகக் கடையை நடத்தி வந்தார். அவர் திமுகவின் தீவிர பற்றாளர். அவர் கிராமப்புறங்களுக்கு சென்று திமுக-விற்காக கலைநிகழ்ச்சிகளை நடத்துவார். சிறிது காலத்திற்கு பிறகு திமுக-விலிருந்து விலகினார். அதற்கான காரணம் எனக்கு சரியாகத் தெரியவில்லை. அதன்பிறகு அவர் பொதுஉடைமை கருத்து களால் ஈர்க்கப்பட்டு பொதுஉடைமை அமைப்புகளுக்குள் இயங்க ஆரம்பித்தார். அதற்கான காரணங்களை அவர் பின்னாளில் விளக்கிக் கூறும்போது எனக்கு இன்னும் கூடுதலாக பொது உடைமையிக் கருத்துகளின் மீது பற்று ஏற்பட்டது. அவர்தான் எனக்கு ‘வால்கா முதல் கங்கை’ வரை நூலை வாசிக்கக் கொடுத்தார். இந்த நூலை வாசித்த போது மனிதகுல வரலாற்றைப் புதிய கோணங்களில் பார்க்க எனக்கு உதவி புரிந்தது.

மனிதனின் பரிணாமத்தை உணர்த்திய அந்நூலைத் தொடர்ந்து, ‘குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்’ என்னும் நூலை எனக்கு வாசிக்கவும் தந்தார். ‘வால்கா முதல் கங்கை வரை’ என்ற நூல் நாவல் வடிவமாக இருந்தது. குடும்பம் தனிச்சொத்து அரசு என்ற நூல் அதே சாராம் சத்தில் தத்துவ நூலாக இருந்தது. இந்த இரண்டு நூல்களையும் தொடர்ந்து வாசித்த தால் ஈடுபாடு அதிகரிக்கத் தொடங்கியது.

இந்த நூல்களைத் தொடர்ந்து லெனி ன் எழுதிய ‘அரசு’ என்கிற சிறுநூலையும் வாசிக்க கொடுத்தார். பொதுவாக ஜனநாயக அடிப்படையில் தேர்ந் தெடுக்கப்படுகிற ஒரு கட்சியின் ஆட்சிதான் அரசு என இந்த நூலை வாசிக்கும் முன் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அரசு என்பது நிலையான ஒரு அதிகாரவர்க்கம்தான். அந்த அதிகாரவர்க்கம் தான் எப்போதும் நிலையாக இருக்கும். தேர்ந்தெடுக்கப்படும் போது கட்சிக்காரர்கள் அரசு என்ற இயந்திரத் திற்கு வருவார்கள். போவார்கள். ஏற்கனவே ஆட்சிப்பொறுப்பில் இருந்தவர்கள் பதவியை விட்டு இறக்கம் பெற்றவுடன் அவர்கள் ஆட்சியின் போது இருந்த காவல்துறையினர் ஏதாவதொரு காரணத்தைக்கூறி அவர்களை அடிப்பார்கள். நீதிமன்றம் முன்பு இருந்த ஆட்சியாளர்களைத் தண்டித்து சிறையில் தள்ளுகிறது. ஏற்கனவே காவல்துறையிடம் அடிவாங்கி, நீதி மன்றத்தால் சிறைக்குச் சென்றவர்கள் திரும்பவும் ஆட்சிக்கு வருகிறார்கள். இப்படி ஒரு சூழலில்தான் ‘மியூசிக்கல்சேர்’ எனச் சொல்லப்படுகிற அமைப்புதான் பாராளுமன்ற ஜனநாயகம். அரசு என்கிற நூலை வாசித்தப் பின்புதான் இந்த அரசமைப்பு என்பது நிரந்தரமானது. அந்த அதிகாரக் கட்டமைப்பை அடித்து நொறுக்காமல் சமூகமாற்றம் சாத்தியமில்லை எனப் புரிந்தது. சமூகத்தில் புரட்சிகரமான போராட்டமில்லாமல் பொதுஉடைமைக்கான போராட்டமில்லாமல் சமூக மாற்றம் சாத்தியமில்லை.

இந்த நூல்களைத் தவிர உங்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்திய வேறு நூல்களைப்பற்றி

லீப்னெஹ்ட் எழுதிய ‘சிலந்தியும் ஈயும்’ எனும் நூல் எனக்கு இன்னொரு பரிமாணத்தையும் ஆழமான புரிதலையும் உருவாக்கியது.சிலந்தி பொதுவாக வலைக்குள்ளேதான் இருக்கும். வலையின் பக்கத்தில் வரும் ஈக்களை சிலந்தி அடித்து சாப்பிடும். ஈக்கள் எல்லாம் சேர்ந்து ஒரு நாள் பேசியது. நாமெல்லாம் தனித்தனியாக போவதால்தான் நம்மை சிலந்தி அடித்துச் சாப்பிடுகிறது. அதனால்தான் சாகிறோம். நாம் இனிமேல் ஒன்றாகச் சேர்ந்து போய் சிலந்தி வலையை மோதினால் வலையைப் பிய்த்து எறிந்து விடலாம் என ஈக்களெல்லாம் பேசிக்கொண்டிருந்தபோது, அப்போது குறுக்கிட்டு ஒரு ஈ மட்டும் சந்தேகப்பட்டு அது நம்மளால் முடியுமா எனக் கேட்டது. ஈக்களே முதலில் ஒற்றுமையாகக் இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என நூலாசிரியர் கூறுவார். எல்லா ஈக்களும் சேர்ந்து சென்று சிலந்தியின் வலையில் மோதியது. அதன்பிறகு சிலந்தி வலையே இல்லாமற்போனது. தொழிலாளி வர்க்கம் என்பதும், உழைக்கும் வர்க்கம் என்பதும் இவ்வுலகில் பரந்து விரிந்தது. ஆளும் வர்க்கம் என்பது மிக சிறிய பகுதிதான். தொழிலாளர் வர்க்கம் ஒன்று திரண்டால் ஒற்றுமையோடு போராடினால் நம்முடைய வெற்றியை யாரும் தடுக்க முடியாது என்பது தான் ‘சிலந்தியும் ஈயும்’ நூலில் நான் புரிந்து கொண்டது.

அந்நூல் ஒரு திருக்குறள் மாதிரி மிகவும் சுருக்கமான தொழிலாள வர்க்க உணர்வு ஊட்டக்கூடிய ஒரு நூல். இதிலிருந்துதான் தொடங்கியது என் பரந்துபட்ட நூல்வாசிப்பு. இப்படி வாசித்த பிறகு வார இதழ்கள், பாக்கெட் நாவல்கள் போன்றவற்றை வாசிப்பதையெல்லாம் நான் விட்டுவிட்டேன்.

இடதுசாரி சார்ந்த நூல் வாசிப்புக்கு பிறகு இயக்கம் சார்ந்து இயங்கினீர்களா?

இயக்கம் சார்ந்து இயங்கினேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. அப்போதிருந்த இரு பொதுஉடைமை இயக்கங்களுக்குள்ள வித்தியாசங்கள் எனக்குத் தெரியாது. அப்போது மாணவப் பருவத்திலிருந்தேன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி எனச் சொல்வார்கள் ஆனால் எங்கள் ஊரில் ரைட் கம்யூனிஸ்ட், லெஃப்ட் கம்யூனிஸ்ட் என்றுதான் அவர் களை அடையாளப்படுத்துவார்கள். சோவியத்சார்பு, சீனச்சார்பு, என்கிற இந்த விஷயங்களெல்லாம் எனக்குப் அப்போது புரியவில்லை. பொதுஉடைமை இயக்கத்தி லிருந்து யார் கூப்பிட்டாலும் வேலைக்குப் போவேன்.

அந்தக் கால கட்டத்தில் சுவர் எழுத்தெல்லாம் நன்றாக எழுதுவேன். கட்சியின் சின்னங்கள் வரைவது உள்பட. சுத்தியல் அரிவாள் நட்சத்திரமும் வரைவேன், கதிர் அரிவாள் சின்னமும் வரைவேன். ஒரு நாள் இரவு எங்கள் ஊர் பஞ்சாயத்து போர்டு சுவற்றில் ஒரு பீடியை பிடித்துக் கொண்டு கதிர் அரிவாள் சின்னத்தை வரைந்து கொண்டு இருந்தேன். அது வரைவது சிரமமான வேலை. சுவற்றில் வரைவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். அப்பொழுது ஒரு கார் வந்து நின்றது. அன்று எல்லோரும் பிரச்சாரத்தை முடித்துவிட்டு வந்தார்கள். தரா தங்கவேல் என்பவர் எங்கள் வட்டார இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் மேலும் எனது உறவினர். மிகவும் மரியாதைக்குரிய, எளிமையான ஒரு தோழர். மிகவும் வசதியானவர். எளிமையான முறையில் ஒரு விதவையைத் திருமணம் செய்து கொண்டவர்.

எல்லா தோழர்களும் பக்கத்தில் இருந்த கட்சி அலுவலகத்திற்குள் சென்று விட்டார்கள். ஒரு பெரியவர் மட்டும் தோளில் கிடக்கும் துண்டை தரையில் தட்டி எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார் என்ன வரையறீங்க என என்னிடம் கேட்டார். கதிர் அரிவாள் சின்னம் வரைகிறேன் என்றேன். உங்க பெயர் என்ன, உங்க அப்பா பெயர் என்ன என்று கேட்டார். எங்க அப்பா திமுக என்றேன். உங்க அப்பா திமுகங்கறீங்க நீங்க ஏன் கம்யூனிஸ்ட் சின்னத்தை வரையிறிங்க என்றார்.

என்னங்க கேள்வி இது? எங்கப்பா திமுக என்றால் நானும் திமுகவாக இருக்க வேண்டுமா? எங்க அப்பா கம்யூனிஸ்ட்டா இருந்தால் நானும் கம்யூனிஸ்ட்டா இருக்க வேண்டும் என்று கட்டாயம் உள்ளதா? எனக்கென்று சொந்த சிந்தனைகள் இருக்கக் கூடாதா? என்று பதில் சொன்னேன். உங்களுக்கு என்ன மாதிரியான சிந்தனை எனக் கேட்டார். என்ன இந்தக் கிழவன் நம்மளை ரொம்ப அறுக்குறாறேன்னு என்று நினைத்துக் கொண்டு வயதானவர் நம்மோடு உட்கார்ந்து பேசுகிறாரே என பற்ற வைத்த பீடியைக் கீழே போட்டுவிட்டேன்.

அப்படியே பல செய்திகளை பேசிக்கொண்டே இருந்தோம். அவருக்கு டீ கொண்டு வந்து கொடுத்தார்கள். என்னிடம் டீயைக் கொடுத்து நீங்கள் சாப்பிடுங்க தோழரே என்றார். வயசானவரா இருக்காரு, நம்மைப் போய் தோழரே என்கிறாரே என்று எனக்குள் ஒரு திகைப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து அங்கிருந்த தோழர்களிடம் என்னைக் குறிப்பிட்டு ‘இவர் நல்ல தோழர். இவரை நல்லவிதமாக பயிற்றுவிக்கனும்’ என்று பக்கத்திலிருந்த தோழர் அய்யாசாமியிடம் என்னைக் குறித்துச் சொன்னார்.

அவர் புறப்பட்டுச் சென்ற பிறகு தோழர் அய்யா சாமியிடம் யார் இவர் எனக் கேட்டேன். அவர்தான் எம்.கல்யாணசுந்தரம் என்றார். எம்.கே. என்று சொல்லக்கூடிய அவர் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர், மாநிலச் செயலாளர் நம்முடன் அருகில் அதுவும் ரோட்டோரத்தில் அமர்ந்து டீ சாப்பிட்டது எனக்குள் ரொம்பவும் அதிர்வை ஏற்படுத்தியது. அப்பொழுது என்னுடைய மனக்கண்ணில் காங்கிரஸ்-திமுக தலைவர்கள் பொதுகூட்டங்களுக்கு வரும் போதும் போகும் போதும் காரில் வருவதும் பரபரப்பாகத் தலைவர்களை முட்டித் தள்ளி காரில் தொண்டர்கள் ஏற்றி விடுவதும் என்று இவற்றையெல்லாம் பார்த்த எனக்கு கம்யூனிஸ்ட் தலைவர்களைப் பார்த்த பிறகு இவர்கள் பேச்சளவில் அல்ல செயலிலும் பொதுஉடைமைக் கருத்தோடுதான் இருக்கிறார்கள் என்ற கருத்து எனக்குள் வந்தது. இந்நிகழ்விலிருந்துதான் எனக்குப் பொதுஉடைமை இயக்கத்தின் மீது ஈடுபாடு வந்தது.

சோசலிச வாலிபர் முன்னணி இயக்கத்தில் செயல்பட்டீர்களே?

சோசலிச வாலிபர் முன்னணிக்கு மட்டுமல்ல அனைத்து இந்திய மாணவர் இளைஞர் பெருமன்றத்தின் நிகழ்வுகளுக்கும் செல்வேன். நான் நன்றாகப் பாடுவேன் ஆகையினால் இரு பொதுஉடைமை இயக்கங்களுக்கும், அவை சார்ந்த வெகுஜன இயக்கங்கள் நடத்தும் அனைத்து நிகழ்வுகளுக்கும் தவறாமல் செல்வேன். பட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்தை நான் பாடுவேன். மற்றவர்கள் தொடர்ந்து பாடுவார்கள்.

இரு பொது உடைமை இயக்கங்களைச் சேர்ந்த சிமிஜிஹி, கிமிஜிஹிசி, பிவிஷி, தொமுச போன்ற தொழிற்சங்கள் மே தினத்தன்று மட்டுமாவது தொழிலாளி என்கிற உணர்வின் அடிப்படையில் மே தினத்தைக் கொண்டாட வேண்டும் என பிரசுரம் போட்டு அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் கொடுத்தோம். அப்போதெல்லாம் எனக்கு பெரிய பண வசதி இல்லாத காலம்.

ஆனால் அப்படியான ஒருங்கிணைப்பு எதுவும் நடக்கவில்லை. அந்தந்த தொழிற்சங்கங்கள் தனித் தனியாகவே மே தினத்தைக்கொண்டாடினார்கள். மே தினத்தன்று நாங்கள் இருபது பேர் மட்டும் சைக்கிளில் கம்யூனிஸ்ட் கட்சிக்கொடியைக் கட்டிக் கொண்டு பாட்டாளி வர்க்க சர்வ தேசிய கீதத்தைப் பாடிக்கொண்டு ஊரைச் சுற்றி வலம் வந்தோம். எல்லோரும் எங்களைக் கிண்டலும் கேலியும் செய்தார்கள். பின்னர் ஐந்தாறு வருடங்கள் கழித்து எல்லா தொழிற்சங்கங்களின் பங்கேற்புடன் மே தினக் கொண்டாட்டம் நடக்கத்தான் செய்தது. தொடர்ந்து வேலை செய்யும் போது இது போன்ற ஒற்றுமைகள் சாத்தியம்தான்.

உங்களது கோவை மாவட்டத்தில் சாதியப் பிரச்சனைகளை இடதுசாரிகள் எவ்வாறு எதிர்கொண்டார்கள்?

மற்ற மாவட்டங்களோடு கோவையை ஒப்பிடும் போது இங்கு சாதிப்பிரச்சனைகள் குறைவுதான். இப்பொழுது சாதிய அமைப்புகள் வலுவடைந்து உள்ளதால் சாதியின் தாக்கம் இருப்பது போன்ற ஒரு தோற்றம் இருக்கிறது.

எனக்குத் தெரிந்தவரையில் சாதி அடிப்படையிலான சண்டைகள் எதுவும் இங்கு இல்லை. எல்லா சாதியினரும் சகஜமாக பழகிக்கொள்வார்கள். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக கூலி வேலைக்குப் போவார்கள். அவர்களிடம் இவர்கள் பீடி வாங்கிப் பிடிப்பார்கள். இவர்களிடம் அவர்கள் பீடி வாங்கிப் பிடிப்பார்கள். இப்படியான சகஜமான உறவுகள்தான் இருந்தன. பள்ளர் களுக்கும் பறையர்களுக்கும் சண்டை, பறையர்களுக்கும் தேவர்களுக்கும் சண்டை என்பது மாதிரியான விஷயங் களெல்லாம் இங்கு இல்லை. நாயக்கர் சாதிக்கார்கள் எங்கள் பகுதியில் பணவசதி உள்ளவர்கள். ஆனால் அவர்கள் குறைந்த எண்ணிக்கையிலே உள்ளனர். ஆலைக ளெல்லாம் அவர்களுக்குத்தான் சொந்தம். அவர்கள் மென்மையாகத்தான் இருப்பார்கள். கவுண்டர் சாதியினரும் அதே மாதிரிதான்.

ஆங்காங்கே சின்னச் சின்ன புகைச்சல் இருந்திருக்கலாம். அதெல்லாம் உள்ளூர் அளவிலேயே பேசித் தீர்க்கப்பட்டு விடும். பெரிய சாதிப்பிரச்சனை என்று இல்லை.

சாணிப்பாலும் சவுக்கடியும் இல்லை என்றாலும் கூட ஏதாவதொரு விதத்தில் சாதியம் தஞ்சை மாவட்டத்தில் இருக்கிறது. கோவை மாவட்டத்தில் சாதியம் இல்லையென்று சொல்கிறீர்கள். அதற்கு இடது சாரிகளுடைய பணிகள்தான் காரணம் என்று சொல்ல முடியுமா?

அப்படியும் சொல்லலாம். ஆனாலும் கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை இடதுசாரிகள் தொழிற் சங்கத்தை மையமாக வைத்தே வேலை செய்து இருக்கிறார்கள். கிராமப்புறங்களில் இடதுசாரிகள் இன்னும் கூடுதல் வேலை செய்து இருக்கலாம் என்பது என்னுடைய கருத்து. ஒருவேளை அதற்கான முகாந்திரம் இல்லாமல் இருந்திருக்கலாம். தஞ்சை மாவட்டத்தில் இருப்பதைப் போல சாதியம் இங்கு இல்லை என்பது கூட காரணமாக இருக்கலாம்.

இன்றைய உலகமயச் சூழலில் இடதுசாரிகளின் செயல்பாடுகளை எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?

மிகச் சிறந்த செயல்பாடுகள்தான். அதையாராலும் மறுக்க முடியாது. இடதுசாரிகள் ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தவில்லையென்றால் அமெரிக்காவின் கப்பல்படை நம்முடைய வங்காள விரிகுடாவில் ஒரு அணிவகுப்பையே நடத்தி இருப்பார்கள். இந்த போராட்டத்தினால் அமெரிக்கா பின் வாங்கியது. அமெரிக்காவிற்கு எதிராக குரலொன்று எழும்புகிறது என்றால் அது இடதுசாரிகளின் குரலாகத்தான் இருக்கும். மற்ற கட்சிகள் எல்லாம் எதிர் கட்சிகளாக இருந்தால், ஆளும் கட்சியுடன் அமெரிக்காவிற்கு ஆதரவாக இருப்பது வழக்கம்.

இடதுசாரிகள் மட்டும்தான் கொள்கை அடிப்படையிலும், திட்ட அடிப்படையிலும் நீண்ட காலமாக இங்கு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். உலகமயமாக்கல் என்பது மிக நுட்பமாக நம்மிடையே பரவி இருக்கிறது. அதைக் களைந்து எடுப்பதற்கு நிறைய போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கிறது.

இப்போது தொலைக்காட்சியில் நிறைய விளம்பரங்கள் வருகிறது. விளம்பரப்படுத்தக் கூடிய எந்தப் பொருளும் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுபவை அல்ல. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிற பொருள் என்று பார்த்தால் சக்தி மசலா மட்டும்தான். உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட எந்தத் தொழிலும் தமிழ்நாட்டில் இல்லை. ஹ¨ண்டாய், ஃபியட் கார் கம்பெனி இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் சராசரி மனித வாழ்க்கைக்குத் தேவையானதாக எதுவும் இல்லை. அதனால் உற்பத்தி சிதைந்து கொண்டு இருக்கிறது. விவசாயம் கிட்டத்தட்ட சிதைக்கப்பட்டு விட்டது. இந்தக் காலகட்டத்தில் இடதுசாரிகளின் பங்களிப்பு இந்தியா முழுமைக்கும் முக்கியமானது.

மார்க்சிய லெனினிய இயக்கத்திற்கு மாறியதற்கான காரணம்?

போராட்டம், புரட்சி என்கிற கருத்தியல் தளத்திலிருந்து இரு பொதுஉடைமைக் கட்சிகளும் பாராளுமன்ற ஜனநாயகத்தை அதிகமாக கையில் எடுத்துக்கொண்டார்கள். பிறகு தொழிற்சங்க வாதத்திற் குள்ளும் முடங்கிக் கொண்டார்கள். தொழிற்சாலைகள் இருக்கிற இடங்களில் கட்சி வலுவாக இருப்பதும் மற்ற இடங்களில் பலவீனமாக இருப்பதும் எனக்கு மனக்குறை இருந்தது. உதாரணமாக கோவையில் 40 ஸ்பின்னிங் மில்கள் மூடப்பட்டு விட்டன. அந்த மில்களை வைத்து இயங்கிய தொழிற்சங்கங்கள் அழிந்து போய்விட்டன. இது நாம் வாழும் காலத்து நிஜம். இந்தச் சூழ்நிலையில் எனக்கு சாரு மஜும் தாரை சந்திக்கின்ற வாய்ப்புக் கிடைத்தது. அவரைப்பற்றிய நூல்களும் வாசிக்கக் கிடைத்தது. இளமைத் துடிப்போடு அப்போது இருந்த எனக்கு இயல்பாகவே எம்.எல். இயக்கத்தின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் அப்பொழுது மனித உரிமை அமைப்புகள் எல்லாம் கிடையாது.

பி.வி.பக்தவத்சலம்தான் மனித உரிமை அமைப்பை தமிழ்நாட்டில் முதன்முதலில் தொடங்கியவர். அவரை கோவை மாவட்டத்திற்கு அழைத்து வந்து மனித உரிமை அமைப்புகளை கட்டுவதற்கான வேலைகளைச் செய்ய ஆரம்பித்தோம். எம்.எல். இயக்கத்தில் ஈடுபாடு அதிகமாக இருந்தாலும் தனி நபரை அழித்தொழித்தல் என்கிற கோட்பாட்டில் எனக்கு உடன்பாடு கிடையாது. மக்கள் திரள் போராட்டத்தின் மூலமாகப் புரட்சியை முன்னெடுப்பது, உறுதியான போராட்டங்களை நடத்துவது, அதற்கான குழுக்களை உருவாக்குவது என்ற அடிப்படையில் இயங்கிக் கொண்டு இருந்தபோது தேவையற்ற முறையில் அமைப்பு சிதைந்து போனது. சீராளன், சிவலிங்கம், பாலன் போன்றவர்களை திருப்பத்தூரில் வைத்துக்கொன்றார்கள். இந்நிகழ்விற்குப் பிறகு கட்சி நடவடிக்கை என்ற பெயரில் எல்லோரும் சிதறிப்போகின்ற ஒரு நிலை ஏற்பட்டது. அந்தச் சூழ்நிலையில் நான் தனிமைப்படுத்தப்பட்டேன்.

இயக்க நடவடிக்கைகளிலிருந்து சினிமாவுக்கான நகர்வு எப்போது தொடங்கியது?

எம்.எல். இயக்க நடவடிக்கையிலிருந்து விலகல் தன்மை வந்தவுடன் எந்த செயல்பாடுகளும் இல்லாமல் இருந்தபோதுதான் சென்னைக்கு வந்தேன். இங்கு வந்த போதுதான் பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் என்ற படத்தைப் பார்த்தேன். அந்தப் படத்தைப் பற்றிய விமர்சனம் ஒன்றை பாரதிராஜாவிற்கு எழுதி அனுப்பினேன். அந்த விமர்சனத்தைப் படித்துவிட்டு சந்திக்க வரச்சொல்லி இருந்தார் பாரதிராஜா. அப்பொழுது வேலையற்ற இளைஞர்களைப் பற்றிய கதை ஒன்றை அவரிடம் சொன்னேன். அந்தக் கதை அவருக்குப் பிடித்துப்போனது. அந்தக் கதையை படமாக்கலாம். நீங்களே வசனம் எழுதுங்கள் என்றார். இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. உதவி இயக்குநராக வேண்டுமென்றுதான் எனக்குள் ஆசை இருந்தது. ‘நிழல்கள்’ என்ற படத்திலிருந்து என்னுடைய சினிமா வாழ்க்கை தொடங்கியது. அதைத் தொடர்ந்து சினிமாவிலேயே மூழ்கிப்போனேன். சினிமாவுக்குள் மூழ்கிப்போனது வாழ்க்கையில் பெரும் முன்னேற்றம்தான். ஆனால் கருத்தியல் ரீதியாகப் பெருத்த பின்னடைவுதான்.

இயக்குநராக அறிமுகமானது எப்போது?

கலைமணி என்ற நண்பர் இருந்தார். நான் இயக்கினால் நீங்கள் தயாரிப்பாளராக இருங்கள், நீங்கள் இயக்கினால் நான் தயாரிப்பாளராக இருக்கிறேன் என்று எங்களுக்குள்ளாகவே முடிவெடுத்துக் கொண்டோம். எவெரஸ்ட் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை அவர் ஆரம்பித்தார். அந்த நிறுவனத்திலிருந்துதான் ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ படத்தை அவர் தயாரித்தார் நான் இயக்குனரானேன்.

சினிமாவுக்கு வந்ததற்குப் பிறகு இயக்கத்துடனான தொடர்பு…

இயக்கத்துடனான தொடர்பு என்பது இல்லை. இயக்கத்தில் இயங்கக்கூடிய தோழர்களைச் சந்திப்பது பழைய கதைகளைப் பேசுவது தொடர்கிறது.

இப்படி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் அப்படி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்கிற ரீதியில் இருக்கும் உரையாடல்கள்தான். அது பாட்டி வடை சுட்ட கதையைப் பேசுவது மாதிரிதான். காங்கி ரீட்டான திட்டம் எதுவுமில்லாததனால் ஈடுபாட்டுடன் இயக்கங்கக் கூடிய கட்சிகள் நடத்தக் கூடிய நிகழ்ச்சிக்கு செல்வேன். எல்லா பொது உடைமை இயக்கங்கள் நடத்தும் நிகழ்ச்சிக்கும் செல்வேன். இடதுசாரிகள் ஒற்றுமை என்பதையும் வலியுறுத்துவேன்.

சினிமாக்காரர்கள் இடதுசாரிகளின் மேடையை பயன்படுத்திக் கொண்ட அளவிற்கு இடதுசாரிகள் சினமாவைப் பயன்படுத்திக் கொண்டார்களா?

நான் சினிமாவைப் பயன்படுத்திக் கொண்டேன். நானொரு இடதுசாரிதானே? சினிமாவுக்குள் இப்பொழுது பெரும் பாய்ச்சல் இருக்கிறது. நான் சினிமாவுக்குள் வந்த காலத்தில் அப்படி இல்லை. சின்னச் சின்ன விசயங்களில் தான் நம்முடைய கருத்துக்களைப் பேச முடிந்தது. கதைக் கருவை நமக்கான கொள்கை அடிப்படையில் தீர்மானிக்க முடியவில்லை. தயாரிப்பாளர்களும் அதற்கு இணக்கம் காட்டவில்லை. இப்பொழுது நிறைய இடதுசாரிகள் சினிமாவுக்குள் இருக்கிறார்கள். எஸ்.பி.ஜனநாதன், மிஷ்கின் இது போன்று இன்னும் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

நல்ல சினிமாக்கள் வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் திரையிடுவதில் பெரும் சிக்கல்கள் இருக்கிறதே?

ஆமாம். இதை உலகமயமாக்கலின் ஒரு குட்டிப்பாம்பு என்று சொல்லலாம். பணம் படைத்தவர்கள், ஊடக வளர்ச்சி உள்ளவர்கள் அதிகார பலத்தால் தங்களுடைய படத்தை மட்டும் வெளியிட்டு அதை மட்டும் ஜனங்கள் பார்க்கிற, அதன் மூலம் கிடைக்கிற லாபத்தை அவர்கள் மட்டுமே அனுபவிக்கிற ஒருவித ஜனநாயகமின்மை இருக்கிறது. போட்டிபோட்டும் வெல்ல முடியாத சூழலும், தவிப்பும் இருக்கிறது. ஆளானப்பட்ட விஜய்க்கே இதுதான் கதி. இந்த சூழலை தேர்தல்தான் தீர்மானிக்க வேண்டும்.

பண்பாட்டுத்தளத்தில் இடதுசாரிகளுடைய செயல்பாடுகள் குறித்து…

கலை இரவு என்கிற வடிவம் இடதுசாரிகளின் அற்புதமான ஒரு கண்டுபிடிப்புதான். மறுக்க முடியாத உண்மை. மக்கள் மத்தியில் இது பெரும் வீச்சை உண்டாக்கியது. கட்சி அரசியலைத் தாண்டி ஆண்களும், பெண்களும், மாணவர்களுமாக திரளாகப் பங்கெடுக்கும் ஒரு நிகழ்வாக கலை இரவு இருக்கிறது. இரு பொது உடைமை இயக்கங்களும் மிக அற்புதமான முறையில் அந்நிகழ்வை நடத்தி வருகிறார்கள். இதையே இன்னும் முன்னெடுத்துப் பொங்கல் விளையாட்டு விழாவெல்லாம் கூட நடத்தலாம்.

கலைஇரவு, பொங்கல் விளையாட்டு விழா போன்ற நிகழ்வுகளின் மூலம் மட்டுமே பண்பாட்டு வேலைகளைச் செய்துவிட முடியுமா?

சாதியத்திற்கு எதிராகப் பண்பாட்டுத்தளத்தில் வேலை செய்ய வேண்டியது இருக்கிறது. அதை இடதுசாரிகள் தஞ்சை மாவட்டத்தில் செய்து இருக்கிறார்கள். மற்ற மாவட்டங்களில் கொஞ்சம் குறைவுதான். சுதந்திர காலத்திற்கு முன்னரே தஞ்சை மாவட்டத்தில் இடதுசாரிகளின் செயல்பாடு இருந்தது. அதனாலேயே அங்கு தொடர்ந்து வேலை செய்வது சாத்தியமானது. அங்கு கூலித்தொழிலாளிகள் மத்தியில் வேலை செய்ததும் முக்கியமான ஒரு காரணம்.கூலித்தொழிலாளி களாக இருப்பவர்கள் ஒடுக்கப்பட்ட சாதியினராக, விளிம்பு நிலையினராக இருப்பார்கள். அவர்களோடு சேர்ந்து இயக்கம் கட்டினோம்.

கோவை மாவட்டத்தில் சிறுநில விவசாயிகள், பெருநில விவசாயிகளின் கையில்தான் விவசாயிகள் சங்கம் இருந்தது. இன்று அது ஒரு சாதிய சங்கமாக உருமாறிவிட்டது. தஞ்சை மாவட்டத்தில் இருப்பதைப் போன்று, கோவை மாவட்டத்தில் விவசாயக் கூலித்தொழிலாளர்கள் அமைப்பாக்கப்படவில்லை. அதற்கு காரணமும் இருந்தது. ஆங்காங்கே வேறு வேறான விவசாயமும் நடந்தது. உதாரணமாக கரும்பு விவசாயம் நடக்கும். கரும்பு விவசாயத்திற்கு பழநியிலிருந்து வேலைக்கு வருவார்கள். சர்க்கரை ஆலையில் வேலை பார்க்க திண்டுக்கல், சத்தியமங்கலம் பகுதியில் இருந்து வருவார்கள். வேலை முடிந்த உடன் அவர்கள் ஊருக்கு பருத்தி எடுக்க சென்றுவிடுவார்கள். அதனால் விவசாயத் தொழிலாளர்களை அங்கு அமைப்பாக்குவதில் பிரச்சனைகள் இருந்தன.

சமீபத்தில் வாசித்த நாவல்களில் உங்களுக்குப் பிடித்தது?

‘ஆழிசூழ் உலகு’. அது ஒரு குடும்பம் தனிச்சொத்து அரசு, வால்கா முதல் கங்கை வரை நூல்கள் மாதிரிதான்.

வெள்ளைக்காரன் காலத்தில் ஒரு பகுதியில் இருக்கும் சிறு நகரம் எப்படி துறைமுகப்பெரு நகரமாக வளர்ந்தது. ஒரு இனக்குழு அங்கு உறுதியானதாக மாறியது என்பதை அற்புதமாகச் சொல்லி இருப்பார் ஜோடிகுரூஸ். போற்றத்தக்கப் படைப்பாளி. இதற்குப்பிறகு எனக்குப் பிடித்த புத்தகத்தை சொன்னால் நீங்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது. ஜெயமோகனுடைய காடு என்ற நாவல். எனக்கு ரொம்ப பிடித்தமான நாவல். மைனா சினிமா கூட காட்டைப் பற்றியது என்று சொல்கிறார்கள். ஆனால் காடு என்பதை ஒரு கதாபாத்திரமாகவும் அற்புதமான மொழி நடையாலும் சொல்லி இருப்பார் ஜெயமோகன். பின்தொடரும் நிழலின் குரல் கூட நல்ல மொழிநடைதான். ஆனால் சாருநிவேதிதா மாதிரி தேவையற்ற பாலியல், வக்கிரங்களையெல்லாம் திணித்து இருப்பார். பின் தொடரும் நிழலில் குரல் வாசிக்கும் போது நமக்கு கோபம்வரும். ஸ்டாலினை அருகில் இருந்து பார்த்தது மாதிரி அவரைப் பற்றி தேவையற்ற சித்தரிப்புகள் எல்லாம் கூட இருக்கும். அவரது நோக்கம் மார்க்சிய தத்துவத்தை சிதைப்பதுதான். விஷ்ணுபுரம் கூட வாசித்துள்ளேன் ஆனால் காடு தான் எனக்குப் பிடித்தது.

இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலைக் கருவியாக பௌத்தத்தை அம்பேத்கர் தொடங்கி பலரும் அடையாளப்படுத்தி உள்ளனர். இலங்கையில் பௌத்தம் ஒடுக்கும் கருவியாக இருக்கிறது என்று சொல்லலாமா?

இலங்கையில் மட்டுமா, சீனாவில், திபெத்தில், மலேசியாவில் ஏன் எல்லா நாடுகளிலும் அப்படித்தானே இருக்கிறது. எந்தத் தத்துவமும் பெரும்பான்மை வாதமாக மாறும் போது வன்முறையாக மாறிவிடுகிறது. பௌத்த அடிப்படையில் பௌத்தர்கள் என சொல்லிக் கொள்பவர்கள் அந்த அடிப்படையில் வாழ்வதில்லை. பிக்குகளும் வாழ்வதில்லை. அன்பை போதித்த பிக்குகள் கொலை கூட செய்து இருக்கிறார்கள். பௌத்தத்தில் இருக்கிற நல்ல கருத்துக்களை நாம் ஏற்றுக் கொள்ளலாம். அது ஒடுக்குமுறைக் கருவியாக மாறும்போது அதை எதிர்த்துதான் ஆக வேண்டும்.

கம்யூனிஸ்ட் அறிக்கையை அடிக்கடி வாசிப்பீர்களாமே?

கம்யூனிஸ்ட் அறிக்கையை ஒவ்வொரு முறையும் வாசிக்கும் போதும் புதியப் புதிய பரிமாணம் கிடைத்துக்கொண்டே இருக்கும். இப்பொழுது எடுத்து வாசித்தாலும் என்ன இது இவ்வளவு நாளா நமக்குப் புரியலையே என்ற எண்ணம்தான் வரும். அந்தமாதிரி ஒரு அறிக்கை உலகத்தில் எந்தக் கட்சிக்கும் கிடையாது. கட்சி அறிக்கை என்று சொல்வதை விட மக்களுக்கான நூலாயுதம் என்று கூட சொல்லலாம். செவ்விலக்கியம் என்றும் கூட அதை வகைப்படுத்தலாம். உலக மயமாக்கலுக்கு எதிரான வேர்கூட அதில் இருக்கிறது.

சமீபத்திய சினிமா குறித்த உங்கள் அவதானிப்பை சொல்லுங்களேன்?

இலக்கிய உலகிலும், சினிமா உலகத்திலும் புதிய சக்திகள் உருவாகியுள்ளது. இது மிகவும் ஆரோக்கியமானது. நந்தலாலா படம் வந்து இருக்கிறது அதற்கு ஆயிரம் குறை சொல்கிறார்கள். இது ஜப்பான் படம் என்றெல்லாம் சொல்கிறரர்கள். அப்படி கதை திருடுகிறவர்கள் இந்திப்படத்தைத் திருடக்கூடாதா? ஏன் ஒரு கமர்ஷியல் படத்தைத் திருடக்கூடாதா? ஆனால் நந்தலாலா படம் ஒரு காவியமாக இருக்கிறது. அப்படத்தின் இயக்குனரைக் கொச்சைப்படுத்துவது அநாகரிகம்.

ஈழ எழுத்தாளர்கள் எழுதியுள்ள நூல்களில் ஏதேனும் குறித்து…

யாழ்ப்பாண சமூகத்தைப் பற்றிய ஒரு சித்திரம் இருக்கும். எஸ்.பொ.வினுடைய ‘வரலாற்றில் வாழ்தல்’ என்னும் நூலில் மன்னார் சமூக மக்களின் உணவுப் பழக்க வழக்கங்கள், கலாசாரங்களெல்லாம் கூட அந்நாளில் பதிவு செய்யப்பட்டு இருக்கும். வேறு நூல்களில் இம்மாதிரியான பதிவுகள் கிடையாது. தேங்காய் உருட்டுவது என்ற ஒன்றை இந்நூலில் எஸ்.பொ. பதிவு செய்திருக்கிறார். தேங்காய் உருட்டுவதைப் பற்றி இப்போது உள்ள சமூகத்திற்கு தெரியவில்லை. யாழ்ப்பாணத் தமிழர்களிடமும் இதைப்பற்றி கேட்டுப் பார்த்தேன். கடந்து முப்பது ஆண்டுகால யுத்த சூழலில் பலவிதமான திருவிழாக்களை அந்த மக்கள் இழந்து விட்டார்கள். நம் நாட்டில் கூட யுத்தமில்லாமல் பல பண்பாட்டு நிகழ்ச்சிகள் அழிந்து போய்விட்டது.

யாழ்ப்பாணத் தமிழர்கள் தங்களை இந்து என்று சொல்லிக் கொள்வதில்லை. முருக பக்தர்கள், சைவர்கள் என்றுதான் சொல்லிக்கொள்வார்கள். தற்பொழுது ‘பிரம்மிப்பூட்டும் தமிழக வரலாறு’ என்னும் நூலை வாசித்துக் கொண்டு இருக்கிறேன். மிகவும் குறிப்பிடப் படவேண்டிய நூல் அது.

அரசியலற்ற இலக்கியம் என்ற வகைப்பாடு உண்டா.

இலக்கியம் மட்டும் என்ற ஒன்று கிடையாது. அப்படி இருந்தாலும் அதில் எனக்கு உடன்பாடும் கிடையாது. அரசியலும் இலக்கியமும் இணைந்தேதான் செயலாற்ற முடியும். இலக்கியம் மட்டும்தான் என வகைபிரித்தால் ஒரேயரு விசயம்தான்; மக்களுக்கான இலக்கியம் மக்களுக்கு எதிரான இலக்கியம் என்றுதான் வகைப்படுத்த முடியும். இலக்கியத்தில் அரசியலெல்லாம் கிடையாது அதெல்லாம் இங்கு பேசமுடியாது. இது இலக்கியவாதிகள் கூட்டம் என்று சில இலக்கியவாதிகள் கூறுவர். பெந்தகொஸ்தே சபையா என்ன அது.

புத்தகக் கண்காட்சிக்கு வருபவர்களை அசூயையாகப் பார்ப்பது நாம் ஏதாவது இலக்கியம் பேசினால் இவனெல்லாம் எதுக்கு இலக்கியம் பேசுறான் என்பது. இப்படியாகவும் சில இலக்கியவாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்றைக்கு சினிமாவில் வாசிக்கக் கூடியவர்கள் அதிகரித்திருக்கிறார்கள்.

நாவல்கள், மார்க்சிய நூல்கள் என பல நூல்களை உதவி இயக்குநர்களுக்கு வாசிக்கக் கொடுப்பேன். ஒரு முறை தன் உதவி இயக்குநரிடம் இருந்த புத்தகத்தைப் பார்த்து இயக்குநர் கேட்டிருக்கிறார் என்ன இது என்று, மணிவண்ணன் சார் கொடுத்தார் படிக்கச் சொல்லி அப்படின்னு உதவி இயக்குனர் கூறியிருக்கிறார். பிறகு ஒரு நாள் அந்த இயக்குநர் என்னிடம் ஏன் சார் எங்க பசங்களை எல்லாம் கெடுக்குறீங்க என்றார். புத்தகம் கொடுத்து படிக்கச் சொல்வது கெடுக்கிறதா என்ன இது அசிங்கமாக இருக்கே என்றேன். ஆனால் இன்று ஒரு பெரிய வாசக பரப்பு உருவாகி இருக்கிறது. அரசியல் இலக்கியப் புரிதல்களோடு நிறையப் பேர் இருக்கிறார்கள் இது எதிர் காலத்தின் மீது எனக்குப் பெரிய நம்பிக்கையை ஊட்டுகிறது.

மாறி இருக்கும் இப்புதிய சூழலில் மீண்டும் படங்களை இயக்குகின்ற உத்தேசம் இருக்கிறதா?

ஆரோக்கியமான மாற்றத்தில்தான் இன்றைய தமிழ்சினிமா இருக்கிறது. அந்த மாற்றத்தை மிகவும் ஆழமாகவே உள்வாங்கியிருக்கிறேன். இந்த சூழலில் புதிய படத்தை இயக்கலாம் என்றுதான் யோசித்திருக் கிறேன். அதில் பிரச்சினை என்பது காதல்தான். எல்லா தமிழ் சினிமாவிலும் காதல் இல்லை என்றால் தமிழ் சினிமாவே இல்லையென்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. விதிவிலக்காக நந்தலாலா வந்துள்ளது. அதில் காதல் இல்லை. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சரவணபவன் சாப்பாடு மாதிரி சினிமா இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இலை போட்டு ஒரு இனிப்பு, கூட்டு, பொறியல், சாம்பார், மோர் குழம்பு, வத்தக்குழம்பு, ரசம், பாயாசம், தயிர், மோர், ஊறுகாய் இப்படியாக ஒரு சினிமாவில் எல்லாமும் இருக்க வேண்டும்.

வெளிநாட்டுக்காரர்களுக்கு சினிமா தமிழ் சினிமா மாதிரி இல்லை. அவர்கள் பீஸா சாப்பிடுபவர்கள். அதிலும் கை நனையாமல் சாப்பிட்டு பேப்பரில் துடைத்துப்போட்டு போய் விடுவார்கள். அவர்களுக்கு ஒரு படத்தில் ஒரேயரு விசயம் இருந்தால் போதும்.

புறங்கையை வழித்துச் சாப்பிட்டால்தான் நம்மவர் களுக்கு சாப்பிட்ட மாதிரி இருக்கும். இரண்டரை மணி நேரம் ஓடும் சினிமாவில் ஐந்து பாடல் 5 X 4 = 20 நிமிடம், டைட்டில் ஹீரோ அறிமுகம், ஹீரோயின் அறிமுகம், காமெடியின் அறிமுகம் என்று நாற்பது நிமிடம் மொத்தமாக போய்விடும். மீதமுள்ள ஒரு மணிநேரத்தில்தான் கதை சொல்ல வேண்டும்.

காதல் இல்லாத மனிதனே கிடையாது. கார்ல் மார்க்ஸ்க்கும் காதல் இருந்தது, வள்ளுவருக்கும், மூதறிஞர் என்று சொல்லக்கூடிய கலைஞருக்கும், பேரறிஞர் அண்ணாவிற்கும் காதல் இருந்தது. காதல் இல்லாத மனிதன் இல்லை. அதற்காக காதலே வாழ்க்கையும் இல்லை. மனிதனுடைய வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. அதற்கு நடுவில் காதல். அவ்வளவுதான்.

புத்தகக் கண்காட்சியைப் பற்றி?

என்னைப் பொறுத்தவரையில் அது வளர்ச்சி அடைந்த அல்லது வெற்றி அடைந்த ஒரு வடிவமாகவே பார்க்கிறேன். பதிப்பாளர்களுக்கு லாபம் ஈட்டுவதாகவோ அல்லது நஷ்டம் அடைவதாகவோ இருக்கின்ற இடத்தையும் தாண்டி ஒரு பண்பாட்டு நகர்வாக இருக்கிறது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். பொழுதைப் போக்குவதற்காக, சைட் அடிக்கிறதுக்காக வருகிறவர்களும் இருக்கிறார்கள். ஜோடனைக்காக புத்தகங்கள் வாங்குகிறவர்களும் கண் காட்சிக்கு வருகிறார்கள்.

புத்தகக் கண்காட்சி நடைபெறுகிற அதே காலகட்டத்தில் பொருட்காட்சியும் நடைபெறுகிறது. பொருட்காட்சியில் வெறும் வேடிக்கையும் கேளிக்கையும் மட்டும்தான் இருக்கிறது. ஒப்பீட்டளவில் பார்க்கும்போது பொருட்காட்சியைவிட புத்தகக் கண்காட்சி மிகவும் முக்கியமான ஒரு பண்பாட்டு நடவடிக்கை. வார இதழ்களையும் துப்பறியும் நாவல்களையும் வாசித்துக் கொண்டிருந்த நான் ஏதோ ஒரு புள்ளியில் தீவிர வாசகனாக மாறியதைப்போல கண்காட்சிக்கு வருபவர்களும் ஏதோ புள்ளியில் ஒரு மாற்றத்தை அடையக்கூடும். என்னுடைய மாணவப் பருவத்தில் இது போன்ற புத்தகக் கண்காட்சி இல்லையே என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது.

நன்றி: கீற்று.காம்