குமரி எஸ்.நீலகண்டன் (ஆழ்வார் பேட்டை, சென்னை) கவிதைகள்

குமரி எஸ்.நீலகண்டன் (ஆழ்வார் பேட்டை, சென்னை) கவிதைகள்

1. நியூட்டனின் மூன்றாம் விதி

*இருவர் சந்தித்தார்கள்
*அவன் சிரித்தான்.
கண்கள் சிரித்தன.
உதடுகள் சிரிக்கவில்லை.

***எதிர் வினை
இரண்டாமவரின்
கண்கள் மட்டும்
சிரிக்கலாம்.
கண்களோடு உதடுகளும்
சிரிக்கலாம்.

*வெப்பம் படர்ந்த
அவனது கண்கள்
சிரிக்கவில்லை.
உதடுகள் மட்டும்
சிரித்தன.
***எதிர் வினை..
இரண்டாமவரின்
உதடுகள்  மட்டும்
சிரிக்கலாம் அல்லது
உதடுகள் தட்டி
உணர்வுகளை எழுப்பலாம்

*கனிவுடன்
கண்களோடு உதடுகளும்
சிரித்தன.
***எதிர் வினை
பௌர்ணமி நிலவில்
பரந்த வானமாய்
உடல் முழுக்க
பரவசிக்கலாம்.

*மௌனமாய் இருந்தான்
***எதிர் வினை
அங்கொரு குறைந்த
காற்றழுத்த மண்டலம்
உருவாகி அதுவே
பெருத்தப் புயலின்
மையமாகலாம்
மழையும் பெய்யலாம்.
பிழையான மழையால்
மௌனம்
ஒரு மயானத்தையும்
உருவாக்கலாம்.
                         
2. அகங்காரப் பலி

அவர்களின்
சந்தோஷதருணத்தில்
சங்கீதமாய்
அந்தச் செடி
மாடி ஜன்னலில்
ஆடிப் பாடியது.

அவர்கள் தயவில்
தண்ணீரும் ஒளியும்
தயங்காமல் ஓடியது.

அகங்காரப் பெண்ணிற்கும்
ஆணவ கணவனுக்கும்
அதிகாரச்சண்டையில்
தண்ணீரின்றி தள்ளாடி
நின்றது அந்தச் செடி..

தண்ணீர் தண்ணீர்
என வளைந்து
கெஞ்சியது…
அவர்களின் கண்களுக்கும்
அகங்காரக் காதுகளிலும
அது படவே இல்லை.

வானத்தை கெஞ்சியது.
வானம் கருக்க
செடிக்கு ஓரளவு ஆறுதலாக
இருந்தது.

வெளியே மழை பெய்ய
வீட்டிற்குள்
இடி மழையாய்
வாதங்கள்.

வானம் இரங்கியும்
செடி ஜன்னலிலிருந்து
எட்டி எட்டி
தன் கரங்களை ஏந்தியும்
அதனால் பெய்யும் நீரை
எட்டாத அளவில்
சிமென்ட் கூரை தடுத்தது.
கைப்பிடிச் சுவரில்
துள்ளித் தெறிக்கும்
நீர் கூட செடியை
எட்ட இயலாமல்
கண்ணீர் போல் வடிந்தது.

இறுதியில்
மானுட அகங்காரத்திற்கு
மரணமானது
அந்தச் செடி.

punarthan@yahoo.com