குருமண்காட்டு நினைவுகள்….

குருமண்காட்டு நினைவுகள்.... - வ.ந.கிரிதரன் -சில வேளைகளில் நான் நினைத்துப் பார்ப்பதுண்டு: என் எழுத்து மற்றும் வாசிப்பின் மீதான ஆர்வத்திற்கு முக்கிய காரணங்கள் எவை , காரணமானவர்கள் யார் என்று. என் வீட்டுச் சூழல்தான் முதல் காரணம். வீடு முழுவதும் தமிழ்ச் சஞ்சிகைகளும், நூல்களுமாக விளங்கியதற்குக் காரணம் அப்பாதான். எனது பால்யகாலத்தில் வீடு முழுவதுமே தமிழகத்திலிருந்து வெளிவந்த சஞ்சிகைகள், பத்திரிகைகளென்று விளங்கியதற்குக் காரணம் அப்பாதான். இதனால் சிறுவயதிலேயே எங்களுக்கு வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டு விட்டது. இவ்விதம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கிய அப்பா ஒருபோதுமே எங்களது வாசிப்புக்குத் தடை போட்டதில்லை. எனது பாடசாலை வாழ்க்கையில் அப்பா வாங்கித் தந்த நூல்கள் பத்திரிகைகளுடன் அன்றைய காலகட்டத்தில் புத்தகக் கடைகளில் தொங்கிக் கிடக்கும் ‘பாக்கட் சைஸ்’ துப்பறியும் நாவல்களையெல்லாம் வாசித்துத் தள்ளினேன். அப்பாவுக்கு நான் மர்ம நாவல்களை வாசிப்பது தெரிந்திருந்தாலும் ஒருநாளும் ‘அவற்றை வாசிக்காதே’ என்று அணை போட்டதில்லை. இப்பொழுது நினைத்துப் பார்க்கும்போது அவரது பரந்த மனது விளங்குகின்றது. அன்னம் பாலையும் , நீரையும் பிரித்துப் பார்ப்பதைபோல் நாங்களும் பரந்து பட்ட வாசிப்பின்மூலம் நல்லதைத் தேர்ந்தும், அல்லதைத் தவிர்த்தும் விடுவோமென்று அவர் திடமாக நம்பியிருந்ததாகவேபடுகிறது. அந்த நம்பிக்கைக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் நாங்களும் வாசிப்பில் பரிணாமமடையவில்லையென்பதை இப்பொழுது உணரமுடிகிறது.

வாசிப்பு, எழுத்து இவை தவிர எனக்கு மிகவும் பிடித்த இன்னுமொரு விடயம்: இயற்கையை இரசிப்பது. பறக்கும் புள்ளினங்களை, மிருகங்களையெல்லாம் இரசிப்பது; அவற்றை ஆர்வத்துடன் அவதானிப்பது; விரிந்து கிடக்கும் நீலவான், முழுமதி, விண்ணில் கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களெல்லாம் எனக்கு மிகவும் விருப்பமானவை. வீட்டின் முன் , இரவுகளில் சாய்வு நாற்காழியில் படுத்திருக்கும் அப்பாவின் சாறத்தைத் தொட்டிலாக்கி நானும் படுத்திருப்பேன். அவ்விதமான சமயங்களில் அவர் இரவுகளில் விண்ணில் கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களைப் பற்றி, அவ்வப்போது விரையும் செயற்கைக் கோள்கள் பற்றியெல்லாம் கூறுவார். அவற்றை ஆர்வத்துடன் பார்ப்பதுடன் அவற்றைப் பற்றிக் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் சலிக்காமல், அலுக்காமல் அவர் பதிலிறுப்பார். பின்னர் எனக்கு வான் இயற்பியல் துறையில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டதுக்கு அப்பாவுடனான அந்த அனுபவமே முக்கிய காரணமாக அமைந்தது. அன்றைய காலகட்டத்தில் இன்னுமொரு முக்கியமான விடயமொன்றும் நிகழ்ந்தது இன்னும் பசுமையாக ஞாபகத்திலுள்ளது. அதிகாலைகளில் தெரியும் நீண்ட வால்வெள்ளிதானது. அதுபோன்றதொரு மிகவும் தெளிவான, நீண்டதொரு வால்வெள்ளியினை இதுவரை பார்த்ததாக எனக்கு ஞாபகமில்லை.

இயற்கை மலிந்த வன்னி மண்!

இயற்கையுடனான எனது ஈடுபாட்டுக்கு இயற்கை மலிந்த வன்னிமண்ணும் , அதன் வனப்பும்  முக்கியமான காரணங்கள். அப்பொழுது நாங்கள் மன்னார் வீதியில் அமைந்திருந்த குருமண்காடு என்னும் பகுதியில் வசித்து வந்தோம். அம்மா வவுனியா மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். குருமண்காடோ ஒற்றையடிப்பாதையுடன் , காடு மலிநததொரு பகுதியாக விளங்கிய சமயமது. குருமண்காடும் மன்னார் வீதியும் சந்திக்கும் பகுதியில் ‘பட்டாணிச்சுப் புளியங்குளம்’ என்றொரு குளம் அமைந்திருந்தது. சந்தியில் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானதொரு மயானமிருந்தது. இது தவிர ஒரு சில குடிசைகளும், வீடுகளும், இந்திரா நெசவு சாலையென்னும் பெயருடன் கூடியதொரு நெசவு சாலையும், அதனுடன் விரிந்திருந்த பெரியதொரு பண்ணையுமிருந்தது. அந்தப் பண்ணையும், நெசவு சாலையும் மலையகத்தைச் சேர்ந்த, இந்தியவம்சாவளியினரான ‘சத்தியவாசகம்’ என்பவருக்குச் சொந்தமாகவிருந்தது. அவரது உறவினரான டேவிட் என்னும் இளைஞரொருவரின் மேற்பார்வையில் அந்த நெசவுசாலையும், பண்ணையும் விளங்கின. டேவிட் எம்ஜிஆரின் மிகத் தீவிரமான இரசிகன். நாங்கள் வவுனியாவில் இருந்தவரையில் எங்களது நல்லதொரு குடும்ப நண்பராக விளங்கியவர் டேவிட். அவரது சைக்கிளில்தான் நான் முதன்முதலாக சைக்கிள் ஓட்டப் பழகியது.

எங்கள் வீட்டு அயலவர்களாக விளங்கியவர்களில் முக்கியமானவர்கள்: மரவேலை செய்துவந்த சிங்கள் பாஸ் குடும்பத்தவர்கள். பாஸ் வீட்டில் வீட்டு வேலை செய்துவந்த கெங்கா என்னும் முதிய பணிப்பெண் அம்மாவுக்கும் ஓய்வு நேரங்களில் வந்து உதவி செய்வதுண்டு. பண்டிகை நாட்களில் அங்கிருந்து ‘கிரிபத்’ எங்களுக்கு வரும்; எங்களது பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் எங்களது உணவு வகைகள் அங்கு போகும். இன்னுமொரு அயலவர் மிகவும் வித்தியாசமானவர். துவக்குகள் திருத்துவதைச் சுய தொழிலாகச் செய்து வந்தவர். மகாபாரத்ததின் கெளரவர்கள்பால் மிகுந்த பற்றுதலுள்ளவர். அவரது பிள்ளைகளில் பலருக்குக் கெளரவர்களின் பெயர்களையே துச்சாதனன், துரியோதனன் என்று சூட்டியிருந்தார். அவரது பெயர்கூட துரைசாமி. துவக்குத் திருத்தும் துரைச்சாமியென்றே ஊரவர்களால் அழைக்கப்பட்டு வந்தார். அவரது அநேகமான பிள்ளைகளின் பெயர்கள் ‘து’ எழுத்திலேயே ஆரம்பிக்கும். அவரது மனைவியின் பெயர்கூட ‘து’வில் துரையம்மா என்றிருந்ததாக ஞாபகம். துரைசாமி குறி பார்த்துச் சுடுவதிலும் வல்லவர். உருவாக்கும் துவக்குகளைப் பரீட்சித்துப் பார்ப்பதற்காக அவர் சில சமயங்களில் விண்ணில் கோடிழுக்கும் நீர்க் காகங்கள் அல்லது ஆலா போன்ற பறவைகளைக் குறிதவறாமல் சுடுவதைப் பல தடவைகள் பார்த்திருக்கின்றேன்.

புயல் தந்த மாற்றம்!

இது தவிர நாங்கள் வவுனியா சென்றிருந்த ஆரம்ப காலகட்டத்தில் மிகப்பெரியதொரு புயல் அடித்தது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வேரோடியிருந்த முதிரை, கருங்காலி, பாலை போன்ற பெருவிருட்சங்களையெல்லாம் வேரோடு பெயர்த்தெறிந்து விட்ட புயலது. அந்தப் புயலுக்கு முன்னர் ஒற்றையடிப்பாதையும், ஒரு சில வீடுகளையுமே கொண்டிருந்த அந்தக் குருமண்காடு என்னும் பகுதி அந்தப் புயலைத் தொடர்ந்து முதன்முதலாக மாறத் தொடங்கியது. நீர்கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்துப் பகுதிகளிலிருந்தெல்லாம் மக்கள் அந்தப் பகுதிக்கு வந்து, காடு வெட்டிக் குடியேறினார்கள். அதன் விளைவாக எமக்கும் புதிய நண்பர்கள் சிலர் கிடைத்தார்கள்.  குறிப்பாக நீர்கொழும்பு பகுதியிலிருந்து வந்து குடியேறிய ‘லைனஸ்மான்’ஆக வேலை பார்த்த சிங்கராசா என்பவரின் குடும்பம், கந்தரட்ணம் என்பவரின் குடும்பம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவர்களின் குழந்தைகளெல்லாரும் எமது பால்ய காலத்து நண்பர்களானார்கள். அற்புதநேசன், ராசா, அன்டன், அருள், இவர்களுடன் அவர்களது சகோதரி ஒருத்தியும் எங்களுடன் காடு, மேடெல்லாம் அலைநது திரிவார்கள். இந்திரா நெசவு சாலை அமைந்திருந்த பண்ணையிலிருந்து கூழாம் பழ மரத்திலிருந்து கூழாம் பழங்களைப் பறித்து காற்சட்டைப் ‘பாக்கற்’களில் போட்டுக்கொள்வோம். இது தவிர ‘கெட்டர்போலும்’, கையுமாகக் காடு , மேடெல்லாம் அலைந்து திரிந்து வீரை, பாலையென்று பழங்களைப் பறித்துண்போம். பறவைகள்தாம் எத்தனை! எத்தனை! மாம்பழாத்தி, பச்சைக்கிளி, ஆலா, ஆட்காட்டி, கொண்டை விரிச்சான், குக்குறுபான், தேன் சிட்டு, காட்டுப் புறா, பருந்து, கொக்கு, நாரை, மீன் கொத்தி.. என்று பறவைகளின் எண்ணிக்கைக்கு அளவேயில்லை. பறவைகள் தவிர செங்குரங்கு, ‘தாட்டான்’ குரங்கு என்று இருவிதமான குரங்கு வகைகளை அங்கு காணலாம்.

பண்டிதர் சின்னத்தம்பியின் குடும்பத்தவர்களையும் மறக்க முடியாது. இவர் வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். இவருக்குப் 12 குழந்தைகள். பலர் நன்கு பாடுவார்கள். பின்னாளில் ஈழத்தின் சிறந்த பாடகிகளிலொருவராக இருந்து மறைந்த கலாநாயகி அவர்கள் இவரது புத்திரிகளில் ஒருவரே. இவரது மகன் சிவகுமார் நன்கு பாடும் திறமை மிக்கவர். ‘ஒளிமயமான எதிர்காலம்’ பாடலை நன்கு இனிமையாகப்பாடுவார். அதனைப் பல தடவைகள் கேட்டு மகிழ்ந்திருக்கின்றோம். இவர்களது குடும்பம் சிறிது காலம் குருமண்காட்டுப்பகுதியில் இருந்து வேறிடம் சென்றுவிட்டது. இருந்த காலகட்டத்தில் நாங்கள் நன்கு பழகிய அயலவர்களில் இவர்களது குடும்பத்தினரும் அடங்குவர்.

நாங்கள் நெருங்கிப்பழகிய அயலவர்களில் அற்புதநேசன் குடும்பத்தினரும் முக்கியமானவர்கள். மிகுந்த பிரயாசை மிக்க குடும்பம். தோட்டம், வயலென்று எப்பொழுதும் உழைத்துக்கொண்டிருப்பார்கள்.

சவுந்தரநாயகம் மாஸ்ட்டரின் மகன் ரிஷாங்கன் இன்னுமொரு குறிப்பிடத்தக்கக் குருமண்காட்டு வாசி. தற்போது மருத்துவராக விளங்கும் ரிஷாங்கன் என் பால்யகாலத்து நண்பர்களிலொருவர். சங்கீதமாஸ்டரின் மகன் சண்முகராஜா, ஜெயக்குமார், திருநாவுக்கரசு, மதவாச்சி துரைராசா, மெளளீஸ்வரன், கேதீஸ்வரன, என்று என் பால்யகாலத்து நண்பர்கள் நினைவுக்கு வருகின்றார்கள்.

மாரியென்றால் பட்டாணிச்சுப் புளியங்குளம் நிறைந்து வான் பாயத் தொடங்கும். பல்லின மீன்களும், நீர்ப்பாம்புகளும் நிறைந்து குளமிருக்கும். வெங்கணாந்திப் பாம்புகள் (இது மலைப்பாம்பு வகையினத்துப் பாம்புகளிலொன்று) வான் பாயும் குளத்து நீரில குறுக்கிடும் விரால்களைப் பிடித்துண்ணும். தாமரைகள் பூத்துக் குலுங்கும் இந்தப் பட்டாணிச்சுப் புளியங்குளத்தில்தான் நான் முதன் முறையாக நீந்தப் பழகியது. இந்தக் குளத்தில் இருதடவைகள் மூழ்கித் தப்பியிருக்கிறேன். முதல் தடவை வன்னிக்குச் சென்றிருந்த புதிதில் நிகழ்ந்தது. நானும் , அக்காவும் கரையிலிருக்க அப்பா மூழ்கி, மூழ்கிக் குளித்துக்கொண்டிருந்தார். மாரி காலமென்றதால் குளம் முட்டி வழிந்து கொண்டிருந்தது. படிக்கட்டிலிருந்தபடி நீரில அலைந்து விளையாடிக்கொண்டிருந்து கொண்டிருந்த சமயம் , தவறி நீரினுள் விழுந்துவிட்டேன். மூழ்கியவன் மூச்சு முட்டத் தண்ணீரையும் குடித்துவிட்டேன். நான் நீரில் தவறி விழுந்து மூழ்கியதைக் கண்ட அக்காதான் கத்தி அப்பாவின் கவனத்தை ஈர்த்தார். அப்பா நீரினுள் சுழியோடி வந்து என்னைத் தூக்கிக் காப்பாற்றினார்.

இதன் பிறகு இரண்டாவது தடவையாக நான் நீர் மூழ்கியது நான் ஏழாம் வகுப்பிலிருந்தபொழுது நிகழ்ந்தது. இந்தச் சம்பவத்தைப் பற்றி அடிக்கடி எனது கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கின்றேன். எனது வன்னி மண்ணுடனான அனுபவங்களை வைத்து எழுதி, தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளிவந்த எனது ‘வன்னி மண்’ நாவலிலும் பதிவு செய்திருக்கின்றேன். அன்று எங்களது அயலவரான அந்தச் சிங்கள பாஸ் குடும்பத்தவர்களுடன் பட்டாணிச்சுப் புளியங்குளத்துக்குச் சென்றிருந்தேன். பாஸ் வீட்டில் தங்கி, அவருடன் மரவேலை செய்துகொண்டிருந்த சாந்தா என்னும் இளைஞனுடன் மரக்குற்றியொன்றைப் பிடித்தபடி நீந்துவதற்குப் பழகிக்கொண்டிருந்தேன். இவ்விதம் நீந்துக்கொண்டிருந்ததில் ஆழம் கூடிய குளத்தின் நடுப்பகுதிக்குச் சென்று விட்டிருந்தேன். அச்சமயத்தில்தான் மரக்குற்றியினைப் பற்றியிருந்த எனது பிடி தளர்ந்தது. விளைவு.. குளத்தினுள் மூழ்கி விட்டேன். என்னுடன் நீந்திக்கொண்டிருந்த சிங்கள இளைஞனான சாந்தாவுக்கு நீந்தத் தெரியும். அருகில் நீந்திக்கொண்டிருந்தவன் நான் பிடி தவறி, நீரினுள் மூழ்கத் தொடங்கியதும், ஓடி வந்து என்னைக் கட்டிப்பிடித்துத் தூக்க முயன்றான். நீரினுள் மூழ்கிக் கொண்டிருந்தவனுக்குப் பற்றிக்கொள்ள ஒரு பிடி கிடைத்தால் எப்படியிருக்கும்? நானும் சாந்தாவைப் பலமாகக் கட்டிப்பிடித்துக்கொண்டேன். என் பாரத்தைத் தாங்கமாட்டாத சாந்தா என்னுடன் சேர்ந்து மூழ்கத் தொடங்கினான். நாங்களிருவரும் மூழ்குவதைக் கரையிலிருந்து விடுப்பு பார்த்துக்கொண்டிருந்த அக்காதான் முதலில் கண்டு கூச்சல் போட்டது. அப்பொழுது பாஸ் குளத்துப் படிக்கட்டில் நின்று, சவர்க்காரம் போட்டுக்கொண்டிருந்தார். அக்காவின் கத்தல் மூலம் நிலைமையினை விரைவாகவே புரிந்துகொண்ட பாஸ் விரைவாக நீந்தி வந்து , நீரினுள் மூழ்கிக் கொண்டிருந்ந்த என்னையும், சாந்தாவையும் தனது இரு கைகளாலும் கிடுக்கிப் பிடியாகப் பிடித்துக் கரைக்கு இழுத்துச் சென்று காப்பாற்றினார். அன்று என்னை இவ்விதம் தனது உயிரையும் மதிக்காமல் காப்பாற்றிய அந்தச் சிங்கள் பாஸும், அவரது குடும்பத்தவர் அனைவரும் இலங்கையில் தமிழ்ர்களின் ஆயுதப் போராட்டம் உச்சம் பெற்றிருந்த காலகட்டத்தில் ஆயுதமேந்திய அமைப்பொன்றின் அப்பகுதிப் பொறுப்பாளரொருவரால் அருகிலிருந்த காடொன்றுக்கு இழுத்துச் செல்லப்பட்டுச் சுட்டுக்கொல்லப்பட்டதாகப் பின்னர் அறிந்தேன். அந்தப் பொறுப்பாளரும் பின்னர் இன்னுமொரு சக விடுதலை அமைப்பொன்றினால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அறிந்தேன்.  எனது ‘வன்னிமண்’ நாவல் விரிவாகவே இது பற்றிய எனது உணர்வுகளை எடுத்துரைக்கும். ‘வன்னிமண்’ நாவலினையும் இந்தக் கட்டுரையினையும் வாசிப்பவர்கள் எவ்வளது தூரம் அந்த நாவல் என் வன்னிமண்ணுடனான வாழ்வியல் அனுபவங்களைப் பிரதிபலிக்கிறதென்பதைப் புரிந்துகொள்வார்கள்.

குருமண்காட்டுக் கலைவிழா!

குருமண்காடு என்றதும் எனக்கு ஞாபகத்தில்வரும் இன்னுமொரு விடயம்: எங்களது அயலில் குடிவந்த சிற்றம்பலம் என்னும் பொலிஸ் அதிகாரியுடன் சம்பந்தப்பட்டது, மிகப்பெரிய மீசையுடன் கூடிய சிற்றம்பலம் அங்கிருந்த எங்களைப் போன்ற சிறுவர்கள், இளைஞர்களுடன் இணைந்து உதை பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளில் பங்கேற்று விளையாடுவார். அவருக்கொரு சகோதரி இருந்தார். அவர் இராமாயணத்தை மையமாக வைத்து, கைகேயி தசரதனிடம் அவர் முன்னர் கொடுத்த வரங்களை ஞாபகப்படுத்தி, இராமனைக் காட்டுக்கு அனுப்புவதை மையமாக வைத்து நாடகமொன்றினை எழுதினார். எங்களைப் போன்ற ஊர்ச்சிறுவர், சிறுமிகளை வைத்து அந்தப்பெண்மணி ஒரு மாலைப்பொழுதில் தனது வீட்டின் முன், சிறு மேடை அமைத்து  அந்த நாடகத்தை நடிக்க வைத்தார். அந்த நாடகத்தில் என் அக்கா கைகேயியாக நடித்திருந்தார். அவருக்கு உபதேசம் செய்யும் கூனியாக நான் நடித்திருந்தேன். நடிக்கும்போது வசனங்களையெல்லாம் மறந்துவிட்டேன். திரை மறைவிலிருந்து அந்தப் பொலிஸ் அதிகாரியின் சகோதரி மெதுவான குரலில் கூறக் கூற அவற்றைக் கேட்டு ஒருமாதிரி ஒப்புவித்தேன். என் வாழ்க்கையில் இதுவரையில் நான் நடித்த ஒரேயொரு நாடகமென்ற பெருமை அதற்குண்டு. குருமண்காட்டு வாசிகளுக்கு நல்லதொரு பொழுதுபோக்காக விளங்கிய நிகழ்வது. அன்றைய கால கட்டத்தில் அந்தப் பெண்ணின் கலை, இலக்கியத்தின் மீதான ஆர்வமும், எங்களைப் போன்ற சிறுவர், சிறுமியரைக் கொண்டு நாடகமொன்றினையும், வேறு சில பாடல் நிகழ்வுகளையும் தயாரித்து, அக்குருமண்காட்டுவாசிகளுக்கு நல்லதொரு கலை நிகழ்வினைத் தந்த அந்தப் பெண்ணின் அச்செயலும், அந்நிகழ்வும் இப்பொழுதும் என் நினைவில் பசுமையாகவுள்ளன. அதன்பின்னர் அவர்கள் வீடு மாறி வேறிடம் சென்று விட்டார்கள். நினைவுகளைத் தந்துவிட்டு எம் வாழ்க்கையிலிருந்தும் மறைந்து விட்டார்கள்.

இரவுகளில் மன்னார் வீதியை அண்மித்துள்ள இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான மயானப் பகுதியிலிருந்து நரிகள் ஊளையிடுவது கேட்கும். சில தடவைகள் பாடசாலை செல்லும் போது ஒரு குழுவாக அவை எம்மைக் கடந்து அந்த மயானத்துக்குள் ஓடிச்செல்வதைக் கண்டிருக்கிறேன். அன்றைய கால கட்டத்தில் அந்தப் பகுதிக்கு மின்சாரம் வந்திருக்கவில்லை. அரிக்கன் லாந்தர் மற்றும் இன்னுமொரு பெரியதொரு திரியுடன் கூடிய விளக்கும்தாம் எங்களுக்கு இரவுகளில் துணையாக விளங்கின. நாங்கள் (நான், எனது சகோதரன் மற்றும் சகோதரிகள் மூவர்) எல்லோரும் சுற்றிவர மேசையிலிருந்து பாடங்களைப் படிப்பது வழக்கம். எங்களது முக்கியமான பொழுதுபோக்கு வாசிப்பதுதான். வானொலிப் பெட்டிக் கூட கிடையாது. அந்தக் குறையினை அந்தப் பகுதிக்குக் குடிவந்திருந்த ‘லைன்ஸ்மான்’ சிங்கராஜா தீர்த்து வைத்தார். இரவுகளில் வேலை முடிந்து குடித்துவிட்டு வீடு வரும் சிங்கராஜாவின் குரலில் அன்றைய காலகட்டத்து சினிமாப் பாடல்களைக் கேட்கலாம்.  அவர் அடிக்கடி பாடும் பாடல்களிலொன்று: ‘மாசில்லா என் உண்மைக் காதலே..’ அமைதியான இரவுகளில், குடித்துவிட்டு ஆனந்தமாக ஒலிக்கும் சிங்கராஜாவின் குரலில் ஒலிக்கும் அந்தப் பாடல்கள் கேட்பதற்கு மிகவும் இனிமையாகவிருக்கும். அப்பா, அம்மா எல்லோரும் மிகவும் விரும்பி இரசிப்பார்கள்.

இன்னும் சில சம்பவங்கள் குருமண்காட்டு அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்தவை. இந்திரா நெசவுசாலையில் பல பெண்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். காலையில் நாங்கள் பாடசாலை செல்லும் நேரங்களில் அந்த நெசவுசாலையில் வேலை செய்யும் பெண்கள் சிலர் குழுவாக கேலியும் கிண்டலுமாக வம்பளந்தபடி வேலைக்குச் சென்றுகொண்டிருப்பார்கள். அவர்களிலொருத்தி கருமையான ஆனால் மிகவும் துடுக்கும் , அழகும் மிக்கவளாக விளங்கினாள். எந்த நேரமும் ஓலைத்தொப்பியொன்றினையும் அணிந்தபடி வருவாள். அந்தப் பெண் ஒரு நாள் திடீரென யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த புகைவண்டியின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாள். எதற்காக அவள் அவ்விதம் செய்தாளென்பது எமக்குத் தெரியாது. அதற்குக் காரணங்களாகப் பல்வேறு கதைகள் உலாவின. ஆனால் அதன்பிறகு இரவுகளில் அந்த நெசவுசாலையில் அந்தப் பெண் தனிமையில் நெய்யும் தறியோசை கேட்பதாகக் குருமண்காட்டில் பேய், ஆவிக் கதைகள் நிறையவே உலாவத் தொடங்கின. அவள் தனிமையில் இரவுகளில் வேலைக்குச் செல்வதைக் கூடச் சிலர் கண்டதாகக் கூறிக்கொண்டார்கள்.

இன்னுமிருவரும் அன்றைய காலகட்டத்தில் குருமண்காட்டை அண்மிய பகுதிகளில் புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்கள். மலையக வம்சாவளியினரான பாலா என்பவரும், ‘குவார்ட்டர்ஸ்’ பகுதியில் வசித்து வந்த ஜேக்கப் என்னும் வவுனியா மகா வித்தியாலய மாணவரொருவருமே அவ்விதம் தற்கொலை செய்துகொண்டவர்கள்.

எங்களது குருமண்காட்டு வாழ்வுடன் பிணைந்துகொண்டவர்களில் முக்கியமான இன்னுமொருவர் பக்கத்து வீட்டு ஆச்சி. புயலின் பின்னர் அந்தப் பகுதிக்குக் காடழித்துக் குடியேறியவர்களில் அவருமொருவர். அவர் ஒரு சிங்களப் பெண்மணி. கணவர் தமிழர். அவர்களது மகனொருவர் மன்னார் வீதியில் ‘கராஜ்’ ஒன்றினை வைத்திருந்தார். ஆச்சியோ எங்களது வீட்டுக்கு அருகில் குடிசையொன்றினை உருவாக்கித் தனியாக வாழ்ந்து வந்தார். பெரும்பாலான சமயங்களில் நாங்கள் சினிமாவுக்குச் செல்வது அவருடன்தான். அவருக்கும் சேர்த்து டிக்கற் வாங்குவதற்கு அம்மா அவரிடம் பணம் கொடுப்பார். அதற்குப் பிரதி உபகாரமாக எங்களைப் படத்துக்குக் கூட்டிக்கொண்டு செல்வார். அப்பொழுது வவுனியா நகரில் மூன்று தியேட்டர்களிருந்தன. ரோயல், ஶ்ரீமுருகன் மற்றும் நியூ இந்திரா ஆகியவையே அவை.

பால்யகாலத்து வாழ்வின் கணங்கள் எப்பொழுதும் பசுமையாக ஆழ்மனதினுள் பதிந்துவிடுகின்றன. முக்கியமான காரணம் அப்பிராயத்தில் வாழ்வில் எந்தவிதப் பொறுப்புகளுமோ, கடமைகளுமோ அற்று பெற்றோரின் அரவணைப்பில் வாழ்வதால் நிகழும் சம்பவங்களெல்லாம் பசுமரத்தாணிகளாகப் பதிந்துபோய் விடுகின்றன. அதனால் அவை எப்பொழுதுமே மனதுக்கு இன்பந்தருபவையாக வாழ்க்கை முழுவதும் இருந்துவிடுகின்றன. உண்மையில் ஒவ்வொரு மனிதரினதும் வாழ்வில் மிகவும் இன்பகரமான பருவமாகக் குழந்தைப் பருவத்தையே கூறுவேன். அந்தப் பருவத்தின் மகிழ்ச்சியே பின்னர் அம்மனிதர் அவர்களது குடும்ப வாழ்வினை இனிமையாக்க உதவியாகவிருக்கின்றன.

ஒற்றையடிப் பாதையாகவிளங்கிய குருமண்காட்டின் முக்கியமான மாற்றத்துக்குக் காரணகர்த்தாக்களிலொருவர் புலேந்திரன். இவர் பின்னர் வ்வுனியா ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம அமைப்பாளராக விளங்கியவர். விடுதலை அமைப்பொன்றினால் சுட்டுக்கொல்லப்பட்ட அரசியல்வாதிகளில் இவருமொருவர். இவர் அப்பொழுதுதான் அரசியலில் காலடியெடுத்து வைத்துக்கொண்டிருந்தார். முதல் முறையாக, வவுனியா நகர சபையின் தலைவருக்கான  அல்லது ‘கவுன்ஸிலரு’க்கான தேர்தலாக இருக்கவேண்டுமென்று நினைக்கின்றேன், போட்டியிட்டு வென்றிருந்தார். அப்பொழுது அவரைத் தூக்கியபடி அவரது ஆதரவாளர்கள் கோஷமிட்டபடி வந்துகொண்டிருந்தார்கள். அந்தக் கோஷம்கூட இன்னும் பசுமையாகக் காதுகளில் ஒலிக்கின்றது. ‘வென்று விட்டான் புலேந்திரன்; ஒற்றையடிப் பாதையை ஒழித்து வைப்போம்’ என்பதுதான் அந்தக் கோஷம். கூறியதுபோலவே குருமண்காட்டை ஊடுருவிச் சென்றுகொண்டிருந்த அந்த ஒற்றையடிப்பாதை அகலமாக்கப்பட்டது புலேந்திரனால்தான்.

தமிழ் ஆசிரியை யோககுமாரன் டீச்சர்!

எனது பால்யகாலத்துடன் பின்னிப் பிணைந்தவர்களில் முக்கியமான இன்னுமொருவர் வவுனியா மகா வித்தியாலயத்தில் என் ஆறாம் வகுப்பில் தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றிக்கொண்டிருந்த திருமதி யோககுமாரன் டீச்சர். இவருக்கு அப்பொழுதுதான் திருமணம் ஆகியிருந்தது. யோககுமாரன் என்னும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரையே திருமணம் செய்திருந்தார். இவர் ஒரு தமிழ்ப் பண்டிதையென்று நான் நினைக்கவில்லை. பயிற்றப்பட்ட ஆசிரியையென்றே நினைக்கின்றேன். ஆனால் அவரிடம் படித்த நவாலியூர் சோமசுந்தரம்பிள்ளையின் ‘இலவு காத்த கிளி’ மற்றும் புகழேந்தியாரின் ‘நளவெண்பா’ ஆகியவற்றைத் தமிழ்ப் பாடத்திற்காகப் படித்ததை நான் ஒருபோதுமே மறக்க மாட்டேன். ஆறாம் வகுப்புக்கான தமிழ் மலர் பாடத்திட்ட நூல் அவற்றையும் உள்ளடக்கியிருந்தது. ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு பாடலாகக் காத்திருந்து இரசித்துச் சுவைத்தது நல்லதோர் அனுபவம். இலவம் பழம் காயாகிக் கனியாகப் பழுக்கும்வரை காத்திருந்த கிளிக்கு அந்த இலவம் பழம் பழுத்து வெடித்து உள்ளிருந்த பஞ்சு பறக்கும்போது கிடைக்கும் ஏமாற்றத்தை விளக்கும் சோமசுந்தரப்புலவரின் அற்புதமான குழந்தைப் பாடல்களிலொன்று இந்த ‘இலவு காத்த கிளி’ கதைப் பாடல். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடலாகப் படித்து வந்தபோது நாங்களும் அந்தக் கிளியைப்போலவே மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம். எங்களுக்கும் அச்சமயத்தில் இலவம் பழத்தின் தன்மை பற்றிய அறிவு ஏதுமிருக்கவில்லை. டீச்சரும் அதனை இறுதிவரையில் மர்மமாகவே வைத்திருந்தார்.

துஞ்சாது விழித்திருந்தே யதிகாலை யெழுந்து
சொல்லிவைத் தோரையுங் கூட்டிவரும் போது
பஞ்சாகிக் காற்றுடனே பறந்ததுவே வெடித்துப்
பைங்கிளியார் போற்றிவந்த முள்ளிலவம் பழமே

என்ற பாடலைப் படித்த அன்று அந்தக் கிளியைப்போலவே நாங்களும் ஏமாற்றம் அடைந்தோம். அதே சமயம் அந்தக் கிளியின் ஏமாற்றத்தை நன்கு விளங்கியபோது அந்தக் கிளியின் முட்டாள்தனத்தை மட்டுமல்ல எம்முட்டாள்தனத்தையும் எண்ணிச் சிரித்துக்கொண்டோம்.

யோககுமாரன் டீச்சரிடம் படித்த புகழேந்தியாரின் ‘நளவெண்பா’ என்னும் வெண்பாக்களால் ஆன சிறு காப்பியமும் என் வாழ்வில் மிகவும் முக்கியமானதொரு விடயம். நிடத நாட்டு மன்னனான நளன் சோலையில் அன்னமொன்றினைக் காண்கின்றான். அந்த அன்னம் விதர்ப்ப நாட்டு இளவரசியான தமயந்தியின் அருமை, பெருமைகளை நளனிடம் எடுத்துரைக்கின்றது. இதன் மூலம் தமயந்தியின் மீது காதல் கொள்கின்றான் நளன். அந்த அன்னத்தையே தமயந்தியிடம் தூதாகவும் அனுப்புகின்றான். தமயந்தியும் நளன்மேல் காதலுறுகின்றாள். இவ்விதமானதொரு சூழலில் தமயந்தியின் தந்தையான விதர்ப்ப நாட்டு மன்னனான வீமன் தமயந்திக்கு சுயம்வரம் நிகழ்த்துகின்றான். பல்வேறு நாட்டு மன்னர்களுடன், தமயந்தியை அடைவதற்காகத் தேவர்களும் நளன் வடிவில் அந்தச் சுயம்வரத்திற்குச் செல்கின்றனர். நளனும் செல்கின்றான். தமயந்தியோ தேவர்களின் கண்கள் அசைவதில்லை, அவர்களது கால்கள் நிலத்தைத் தொடுவதில்லை மற்றும் அவர்கள் அணிந்திருக்கும் மாலைகள் வாடுவதில்லை போன்ற உண்மைகளை வைத்து, கண்களை அடிக்கடி சிமிட்டியபடி, தரையில் பாவிய கால்களுடனும், வாடிய மாலைகளுடனும் காதலுடனிருந்த உண்மையான நளனைக் கண்டுபிடித்து மாலையிடுகின்றாள். நளவெண்பாவின் சுயம்வரகாண்டத்தின் முக்கியமான வெண்பாக்களை உள்ளடக்கியிருந்ததது தமிழ் மலர் பாடத்திட்டம். ஒவ்வொரு வெண்பாவாக, ஒவ்வொரு தமிழ் வகுப்பிலும் சுவையாக, மனமொன்றிப் படிப்பித்தார் ஆசிரியை. இதற்காக ஒவ்வொரு நாளும் நளவெண்பாவின் கதையின் முடிவினை அறிவதற்காக ஆவலுடன் அவரது தமிழ் வகுப்புக்காகக் காத்திருப்பது மாணவர்களின் வழக்கமாகிவிட்டது. அன்று படித்த நளவெண்பாவின் சில வெண்பாக்கள் இன்றும் பசுமையாக மனதிலுள்ளன.

அந்தியின் வருகையினைச் சிறப்பித்துக் கூறும்

மல்லிகையே வெண்சங்கா வண்டுத, வான்கருப்பு
வில்லி கணைதெரிந்து மெய்காப்ப ,- முல்லையெனும்
மென்மாலை தோளசைய , மெல்ல நடந்ததே
புன்மாலை அந்திப் பொழுது.

என்னும் வெண்பாவும்,

அச்சம், மடம், நாணம் , பயிர்ப்பு ஆகிய நான்கு குணங்களையும் நான்கு வகை சேனைகளாகவும், ஐம்புலன்களை நல அமைச்சர்களாகவும், ஆர்க்கும் சிலம்பினை பேரிகையாகவும், கண்களை வாள் மற்றும் வேற் படைகளாகவும் கொண்டு . வதனமென்னும் மதிக்குடைக்குக் கீழிருந்து பெண்மையென்னும் அரசினை ஆளும் அரசியாக விதர்ப்ப நாட்டு இளவரசியை வர்ணித்து நளனுக்கு அன்னமுரைக்கும்

நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்குஞ் சிலம்பே அணிமுரசா – வேற்படையும்
வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்
ஆளுமே பெண்மை யரசு

என்னும் வெண்பாவும்,

இவற்றால் அன்னத்தின் உரையால் ஆவிதுடிக்கும் நளனின் நிலையினை எடுத்துரைக்கும்,

அன்னமே ! நீயுரைத்த அன்னத்தை என்னாவி
உன்னவே சோரும்! உனக்கவளோ – டென்னை
அடை’வென்றான் மற்றந்த அன்னத்தை முன்னே
நடைவென்றாள் தன்பால் நயந்து.

என்னும் வெண்பாவும் ஞாபகத்திலுள்ளன. இவற்றுடன் நிடத நாட்டு சிறப்பினை எடுத்துரைக்கும்

காமர் கயல்புர்ளக் காவி முகைநெகிழத்
தாமரையின் செந்தேன் தளையவிழப் – பூமடந்தை
தன்னாட்டம் போலுந் தகைமைத்தே சாகரஞ்சூழ்
நன்னாட்டின் முன்னாட்டும் நாடு.,

நின்று புயல்வானம் பொழிந்த நெடுந்தாரை
என்றும் அகில்கமழும் என்பரால் – தென்றல்
அலர்த்துங் கொடிமாடத் தாயிழையார் ஐம்பால்
புலர்த்தும் புகைவான் புகுந்து.

ஆகிய வெண்பாக்களும் நினைவிலுள்ளன. இவையெல்லாம் அப்படியே முழுமையாக ஞாபகத்திலிருக்காவிட்டாலும் ‘நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சா’, ‘அன்னமே ! நீயுரைத்த அன்னத்தை என்னாவி உன்னவே சோரும்!’, ‘காமர் கயல்புர்ளக் காவி முகைநெகிழத் தாமரையின் செந்தேன் தளையவிழ’, ‘நின்று புயல்வானம் பொழிந்த நெடுந்தாரை என்றும் அகில்கமழும்’ போன்ற வெண்பா வரிகளை மறப்பதற்கில்லை.

என் வாழ்க்கையில் யோககுமாரன் டீச்சரிடம் தமிழ் படித்ததைப் போல் அதன்பிறகு வேறு எவரிடமும் ஆர்வத்துடன், அனுபவித்து படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. பின்னர் யாழ் இந்துக் கல்லூரியில் பல்கலைக்கழகப் புகுமுகம் வரையில் கல்வி கற்றபோதும் எனக்கு நல்லதொரு தமிழ் ஆசிரியரிடம் பாடல் பயிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. யாழ் இந்துக் கல்லூரியைப் பொறுத்தவரையில் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த சொக்கன், தேவன் (யாழ்ப்பாண) போன்றவர்களேல்லாரும் ஆசிரியர்களாகப் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அவர்களைப் போன்ற ஒருவரிடமும் பாடம் பயிலச் சந்தர்ப்பம் கிடைக்காதது ஒரு இழப்பாகவே இன்றுவரை இருக்கிறது. இவ்விதமானதொரு சூழலில்தான் வவுனியா மகா வித்தியாலயத்தில் ஆறாம் வகுப்பில் தமிழ் படிப்பித்த யோககுமாரன் டீச்சரின் முக்கியத்துவமிருக்கிறது. பாடத்தை மாணவர்களுக்கேற்ற வகையில் சுவையாக, ஆர்வமுறும்படி கற்பித்தது அவரது திறமையாக விளங்கியது. பின்னர் ஏழாம் வகுப்பில் கல்வி பயின்றபோது மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழ்த் தின விழாக் கட்டுரைப்போட்டியில் முதலாவதாக வந்ததற்குத் தமிழ்ப் பாடத்தின் மீது, நளவெண்பா போன்ற தமிழ் இலக்கியப் படைப்புகள் மீது ஆறாம் வகுப்பில் யோககுமாரன் டீச்சரிடம் படித்ததுமொரு காரணமாகவிருக்கக் கூடும். நளவெண்பாவும், அதன் முக்கிய கதாபாத்திரமான தமயந்தியும் அதன்பிறகு எனக்கு மிகவும் பிடித்த விடயங்களாகிவிட்டன. அது எங்கே போய் முடிந்ததென்றால் எனது மூத்த மகளுக்குத் தமயந்தி என்னும் பெயர் வைப்பது வரையில் என்று கூறலாம். இந்த வகையிலும் யோககுமாரன் டீச்சரிடம் தமிழ் பயின்றது என் வாழ்வின முக்கியமான விடயங்களிலொன்றாகிவிட்டதெனலாம்.

அதிகாலைககளில் வவுனியா மகா வித்தியாலயத்துக்கு மன்னார் வீதியிலிருந்து பிரிந்து செல்லும் ஸ்டேசன் வீதி வழியாகத்தான் செல்வது வழக்கம். வீதியின் ஒருபக்கம் மன்னார் வீதியை அண்மித்த பகுதி பசுமையான வயல்களால் நிறைந்திருந்தது. அம்மாவுடன் நாங்கள் அனைவரும் கூடச் செல்வதுண்டு. அப்பொழுது ஒவ்வொரு நாளும் ஒருவர் மடித்துக் கட்டிய வெள்ளை வேட்டியும், சட்டையற்ற திறந்த மேலுடம்புமாக, வேப்பங் குச்சியால் பல் விளக்கியபடி எதிர்ப்புறமாகச் செல்வார். பார்த்தால் அசல் என்.எஸ்.கிருஷ்ணன் போலவே இருப்பார் அந்த மனிதர். அவர் தொலைவில் வருவதைக் கண்டதுமே நான் அம்மாவிடம் ‘அம்மா, என்.எஸ்.கிருஷ்ணன் வருகிறார்’ என்பேன். ஒரு நாள் அம்மா அந்த மனிதரை நிறுத்தி, “இவன் உங்களைப் பார்த்தால் என்.எஸ்.கிருஷ்ணன் மாதிரி இருக்கிறீர்கள் என்கின்றான்’ என்று கூறிவிட்டார். அந்த மனிதருக்கோ அளப்பரிய சந்தோசம். அந்த சந்தோசம் முகத்தில் பொங்க என்னப் பார்த்துச் சிரித்துவிட்டு, தலையைத் தட்டிவிட்டுச் சென்றார்.

இன்னும் நனவிடை தோய்ந்து குருமண்காட்டு நினைவுகளை எழுதுவதற்கு விடயங்கள் பல உள்ளன. அவற்றைப் பிறிதொரு சமயத்தில் எழுதலாம். இவ்விதமான பால்ய காலத்து நினைவுகள் எப்பொழுதும் பசுமையாக நெஞ்சில் நிலைத்து நின்று விடுகின்றன. பால்ய காலத்து அனுபவங்கள் ஒருவிதமானவையென்றால், பதினமப் பிராயத்து அனுபவங்கள் இன்னொரு வகையானவை. இல் வாழ்க்கை இன்னுமொரு வகையினது. இவ்விதமாக மானுட வாழ்வு என்பதே பல்வேறு பிராயங்களையும், அவற்றுக்குரிய அனுபவங்களையும் கொண்டு விளங்குபவைதானே. இவ்விதமான அனுபவங்களும், அவை பற்றிய நினைவுகளும் இருப்புள்ளவரையில் எப்பொழுதுமே கூட வருபவை.

ngiri2704@rogers.com