குறுநாவல்: ‘தூதர்கள்’

-1-

ஆசி கந்தராஜாடிஸ்கோ பண்டா, பேர்ளின் சுரங்கவண்டி நிலைய வாங்கொன்றில் அமர்ந்திருந்தான். அவன் அருகில் நிறை வெறியில் சில்வா! டிஸ்கோ பண்டாவின் வாயிலிருந்தும் அல்ககோல் நெடி வீசியது. அவன் போதையில் தடுமாறவில்லை. நிதானமாகவே புகையை உள்ளுக்கு இளுத்து வளையம் வளையமாக வெளியே ஊதிக் கொண்டிருந்தான். அவர்கள் இருவரதும் வாழ்க்கை தடம்மாறி, தள்ளாட்டத்துடன் உருண்டு கொண்டிருப்பதை அவர்களுடைய தோற்றங்கள் வெளிப்படுத்தின. இருவரும் ஒரு காலத்தில் என்னுடன் படித்த கலாசாலை மாணவர்கள். ஜேர்மனியில் படித்த காலத்திலே டிஸ்கோ பண்டா எனக்கு அறிமுகமானான். ஜேர்மனி, கிழக்கும் மேற்குமாக இரண்டு நாடுகளாகப் பிரிந்திருந்த காலத்தில் இது நடந்தது. பண்டா அப்போது கிழக்கு ஜேர்மன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தான். இடையில் ஒரு வரலாற்றுக் குறிப்பு! 1949 ஒக்டோபர் மாதம் ஏழாம் திகதி தொடக்கம், 1989 நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதிவரை நாலு தசாப்தங்கள் ஜேர்மனியின் கிழக்குப்பகுதி, கம்யூனிச ஆட்சியின்கீழ், ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு என்ற பெயருடன் விளங்கிற்று. அந்தக் காலங்களில், வளர்முக நாடுகளிலுள்ள கம்யூனிசக் கட்சிகள,; தங்கள் ஆதரவாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசுகள் வழங்கி கம்யூனிச நாடுகளுக்கு அனுப்பிவைத்தன.

இந்தவகையில் கிழக்கு ஜேர்மனிக்கு வந்து சேர்ந்தவன் தான் பண்டா. கிராமத்து விவசாயியான அவனுடைய மாமா கம்யூனிசக்கட்சியின் தீவிர அங்கத்தவர். அவருக்கு கட்சியில் இருந்த செல்வாக்கு காரணமாகவே பண்டாவுக்கு கிழக்கு ஜேர்மனி வரும் அதிர்ஷ்டம் வாய்த்தது.

மாமாவுக்கு ஒரு அழகான பெண் இருப்பதாகவும், அவளையே படிப்புமுடிய கல்யாணம் செய்து கொண்டு இனிதே வாழப்போவதாகவும் பண்டா வந்த புதிதில் இலங்கை மாணவர்கள் மத்தியில் சொல்லித்திரிந்தான்.

பண்டா மகியங்கனை காட்டின் அயலிலுள்ள சிங்கள கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். ஆங்கில மொழி அறிவு குறைவு. ஜேர்மனிக்கு விமானம் ஏறுவதற்குத்தான் அவன் முதன்முதலிலே கொழும்பு வந்தவன் என சில்வா எப்போதும் அவனுக்குப் பழிப்புக்காட்டுவான். பண்டா அதனை பொருட்படுத்துவதில்லை. 

ஜேர்மனியில் ஆங்கில மொழி ஒரு செல்லாக் காசு. சகல அலுவல்களும் அங்கு ஜேர்மன் மொழியில்தான். படிக்க வரும் மாணவர்களுக்கு ஒரு வருடம் தீவிர ஜேர்மன் மொழிப்பயிற்சி தரப்படும். அதன்பின் அவர்கள் பல்கலைக் கழகத்தில் ஜேர்மன் மொழியிலேயே கல்வி கற்கவேண்டும். தண்ணீரில் குதித்தால்தான் நீந்தப்பழகலாம் என்பார்களே. இதை மொழிப்பயிற்சியில் அவர்கள் கடைப்பிடித்தார்கள்.
ஜேர்மனிக்கு பண்டா வந்த அதே மாணவர் குழுவில் வந்தவன்தான் சில்வா. அவனுக்கு தான் கொழும்பு ‘கறுவாத்தோட்டத்தான்’ என்கிற கெறு. அந்தப்பகுதியில் பரம்பரை பரம்பரையாக பணக்காரர்களே   வாழ்ந்தார்கள். அவனுடைய தந்தைக்குப் பணத்தினாலே சம்பாதிக்க முடிந்த அரசியல் தொடர்பும் இருந்தது. இதனால், கொழுத்த வருவாய்தரும் அரச கூட்டுத்தாபனம் ஒன்றின் சகல அதிகாரங்களும் கொண்ட பொது முகாமையாளராகப் பவனிவந்தார். 

சில்வாவின் தகப்பனுக்கு கிழக்கு ஜேர்மன் தூதுவருடன் இருந்த நட்பால், நேரடியாகப் புலமைப்பரிசில் பெற்று பல்கலைக்கழகத்துக்குப் படிக்க வந்தான் சில்வா. அவன் மேட்டுக்குடிச் சிங்களவனின் கொழுப்புடன் வளர்ந்தவன். ஜேர்மனிக்கு வந்த பின்னரும் சிறிது காலம், அந்தக் கொழுப்புக் கரையாத மிடுக்குடன் வாழ்ந்தான்.

உண்மையைச் சொன்னால், பண்டாவின் நெற்றியில் கிராமத்தான் என்று எழுதி ஒட்டியதுபோலவே தோன்றினான். சகசிங்கள மாணவர்களுக்கு அவனுடைய கிராமியத்தை கேலி செய்வது இன்பமான பொழுது போக்காக இருந்தது. அவனுக்கு முன்னாலேயே அவனை மையமாக வைத்துப் பல மோசமான மோடிக் கதைகள் புனைந்து பரிகசிப்பார்கள். அதிக காலம் இந்த நிலமை நீடிக்க பண்டா விட்டுவிடவில்லை. 

தோல்வியை ஒப்புக்கொள்ளாத கிராமத்துப் போராளி அவன். இந்தக் கேலிகளை ஒரு சவாலாக ஏற்று, கிராமத்தானிடம் இயல்பாக உள்ள ரோச உணர்ச்சியுடன் ஜேர்மன் மொழியை வசப்படுத்தி விறுவிறுவென முன்னேறினான். அந்தக் காலங்களில் அங்குள்ள பல்கலைக்கழக மாணவர்கள் அதற்கான விடுதியில்தான் தங்க வேண்டும். பெண்கள் ஆண்கள் அனைவருக்கும் ஒரேவிடுதிதான். விடுதி அறைகள் புறாக்கூடு போன்று சிறியவை. மேலும் கீழுமாக இரட்டைத் தட்டுக் கட்டில் போட்டிருப்பார்கள். அறையில் வெளிநாட்டு மாணவன் தங்கியிருந்தால், அவனுடன் ஜேர்மன் மாணவன் ஒருவனை இணைத்திருப்பார்கள். அந்தவகையில்; பண்டாவின் அறையிலே எரிக் குடியிருந்தான்.

அறையில் வசிக்கும் சகா பெரும்பாலும் கொம்யூனிச கொள்கையில் பிடிப்புள்ளவனாக இருப்பான். இது ஒரு வகையில் மூளைச்சலவை செய்யும் தந்திரம் அல்லது கண்காணிப்பு நடவடிக்கை என்று அந்நிய மாணாக்கர் குசுகுசுக்கவும் செய்தார்கள். எது எப்படியிருந்தாலும், பல்கலைக்கழக விடுதிகளில், கேளிக்கைகளுக்கு குறையிருக்கவில்லை. புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் இரவிரவாக விடுதியின் மேல்மாடி கிளப்பில் ‘டிஸ்கோ’ நடைபெறும்.

இந்த மூன்று நாட்களையும் பண்டா தவறவிடுவதில்லை. தன் கௌரவத்தை நிலைநாட்டிக் கொள்ள டிஸ்கோ நிகழ்ச்சிகளை அவன் மகா கெட்டித்தனமாகப் பயன்படுத்திக் கொண்டான். முயற்சி பயன் தந்தது. அவனது பெயருடன் ‘டிஸ்கோ’ ஒட்டிக்கொண்டு நாளடைவில் அவனது பெயர் டிஸ்கோ பண்டா எனப் பிரபலமடையலாயிற்று. 

கிராமத்தில் பண்டா கண்டிய நடனத்தை முறைப்படி பயின்றவன். கொண்டாட்ட நாட்களிலே போர்த்துக்கேயர் ஆட்சியின் சின்னமாகச் சிங்களவருடன் ஒட்டிக் கொண்ட ‘பைலா’ ஆட்டங்களிலும் சிரத்தையுடன் கலந்து கொள்பவன். இவை கைகொடுக்வே, மேல் நாட்டு டிஸ்கோ நடனங்களைச் சிரமமின்றி பழகி ஒரு வருடத்துக்குள் சிறந்த ஆட்டக்காரன் என புகழும் பெற்றான். ஜேர்மன் பல்கலைக்கழக பெண்களும் இவனுடன் போட்டி போட்டுக் கொண்டு ஆடத் தொடங்கவே, ஜேர்மன் மாணாக்கரிடையே பண்டா மிகவும் பிரபல்யமாகிவிட்டான். அவனைக் கேலி செய்த சிங்கள சகாக்கள் இதைக்கண்டு வாயைப்பிளந்து வீணீர் வடிக்காத குறைதான்.

பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு முடிவில் டிஸ்கோ பண்டா பட்டிக்காட்டுச் சிங்களவனல்ல. அவன் ஒரு ‘மொடோன்’ சிறீலங்கன்! அவனது ஆங்கில மொழி அறிவின்மை, ஜேர்மன் மொழி பயில்வதற்கு வசதிசெய்திருக்கலாம். ஒரு குழந்தை தாய் மொழியை எப்படி நேரடியாகக் கற்கிறதோ அதே போல பண்டாவும் ஜேர்மன் மொழி பயின்று ஒறிஜினல் ஜேர்மன்காரன்போல் பேசினான். ஜேர்மன் மொழியிலேயே பண்டா சிந்திக்கத் துவங்கியது, பல்கலைக்கழக படிப்பில் முன்னிலைக்கு வருவதை இலகுவாக்கியிருக்கலாம்.

ஆரம்ப நாட்களிலே பண்டாவை கேலி செய்த சகாக்கள் ;அப்பே சகோதரய’ என இப்போது பவ்யமாக பழக ஆரம்பித்தார்கள். சில்வா அவனுடன் வலிந்து நட்பு பாராட்டத் துவங்கிய காலத்திலே, பண்டாவின் உதட்டில் ஓர் அர்த்தமுள்ள புன்னகை முகிழ்ந்து மறைவதை நான் அவதானித்திக்கத் தவறவில்லை.

கொம்யூனிச ஆட்சியில் ஆடம்பரப் பொருள்களை ‘முதலாளித்துவச் சீரழிவு’ என்று ஒதுக்கும் மனோநிலை வளர்க்கப்பட்டது.  அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதில் மட்டும் மனித மனம் திருப்திப்படுகிறதா?

மேற்கு ஜேர்மனியில் அமோகமாக உலவிய ஆடம்பரப் பொருள்களை ஏன் கிழக்கு ஜேர்மன் மக்கள் இழக்கவேண்டும் என்கிற ஆதங்கம் காலப்போக்கிலே அதி வளர்ச்சி காணலாயிற்று.

கிழக்கு ஜேர்மன் மக்கள் மேற்கு ஜேர்மனிக்கு செல்லுதல் மிகவும் சிரமமாக்கப்பட்ட நிலையிலும் வெளிநாட்டு மாணாக்கர்கள், அங்கு தங்கு தடையி;ன்றி சென்று வந்தார்கள். இது சர்வதேச சமூகத்தில் நல்லபிப்பிராயம் சம்பாதிக்கும் உத்தியே. இதனைப் பயன்படுத்தி வெளிநாட்டு மாணாக்கர் மேற்கு ஜேர்மனி சென்று ஆடம்பரப் பொருட்களை கிழக்கு ஜேர்மனிக்கு கொண்டுவந்து சேர்த்தார்கள்.

கிழக்கு ஜேர்மன் பணம் மேற்கு ஜேர்மனியில் செல்லாது. ஆனால் சில்வாவுக்கோ, கிடைக்கும் புலமைப்பரிசில் பணத்துக்கு மேலதிகமாக அவனது தந்தை இலங்கையில் இருந்து அமெரிக்க டொலர்களை கிரமமாக அனுப்பி வந்தார். இதனால் அவன் ஒரு கொம்யூனிச நாட்டில், முதலாளி என்ற திமிருடன் வாழமுடிந்தது.

குடும்பத்தின் பரம்பரைச் செல்வாக்கில் சில்வா மேல்தட்டு வாழ்க்கையைச் சுகித்தவன். தனித்திறமை எதுவுமில்லை. ஜேர்மன் மொழியின் கடினமான இலக்கணத்தையும் அவனால் கிரகித்துக் கொள்ள இயலவில்லை. மொhழிச் சிக்கலினால் சில்வாவின் பல்கலைக்கழகப் படிப்பும் சில்லெடுப்பாக மாறத் துவங்கியது.

ஜேர்மன் இளம் பெண்களுடன் பண்டாவுக்கு இருக்கும் செல்வாக்கைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த விரும்பிய சில்வா, இப்பொழுது பண்டா எதைச் சொன்னாலும் கேட்கும் நிலமைக்கு மாறிவிட்டான். இதெல்லாம் சகஜம் ‘மச்சாங்’ என்பது சில்வாவின் சமாதானமாக அமைந்தது. இருவரும் அடிக்கடி மேற்கு ஜேர்மனி சென்று அமெரிக்க டொலரில் ஆடம்பரப் பொருள்களை வாங்கிவரத் துவங்கினார்கள்.

பண்டா கொண்டுவரும் ஆடம்பரப் பொருள்கள், அவனது டிஸ்கோ ஆட்டம், ஜேர்மன் மொழிப் புலமை எல்லாம் ஜேர்மன் நாட்டின் வெள்ளைக்காரக் ‘குட்டிகள்’ மத்தியிலே அவனுடைய செல்வாக்கை அசுர வேகத்தில் வளர்க்க உதவின.

பண்டா என்னதான் ‘மொடோனாக’ மாறினாலும் சாப்பாட்டு விடயத்தில் கிராமத்துச் சிங்களவன்தான். அவனுக்கு சோறு வேண்டும். சிரமம் பாராமல் நன்றாகச் சமைப்பான்.

மேசை கதிரை இருந்தாலும் பீங்கானிலே சோற்றைப் போட்டு ஒரு கையில் ஏந்தி, மறுகையால் உதறி உதறி குழைத்துச் சாப்பிடுவான்.

சனி ஞாயிற்றுக் கிழமைகளில் அவன் சமைக்கும் சோறும், பருப்பும், தேங்காய் சம்பலும், மிரிஸ் மாலுக் கறியும் அங்கு படித்த இலங்கை மாணாக்கரிடையே மிகவும் பிரசித்தம். சிங்கள மண்ணின் சமையல் கலையை ஐரோப்பிய மண்ணிலே நிலை நாட்டியதாக அவனைப் புகழ்ந்து தள்ளினார்கள்.

நாங்கள் அனைவரும் வார இறுதியில் சாமான்களை வாங்கிக் கொண்டு பண்டா முன் ஆஜராவோம். எல்லோருக்கும் சேர்த்து பண்டாவே சிரமம்பாராது சமைப்பான். நாங்கள் அவனுக்கு தொட்டாட்டு வேலைகள் செய்வோம். அவனது அறையில் வசித்த ஜேர்மன் சகா ‘எரி’க்கும் இப்போது கறி சோறு சாப்பிடப் பழகிவிட்டான். சமையலுக்கு தன் பங்காக அவன் திறமான கோழி இறைச்சி வாங்கிக் கொண்டு வருவான்.

மாலை ஆறுமணியானதும், பண்டா குளித்து ‘சென்ற’; அடித்து டிஸ்கோவுக்கு கிளம்பி விடுவான். நாங்களும் அவனுடன் சேர்ந்து போனாலும், அவனுக்கு வாய்க்கும் அதிஸ்டம் மற்றவர்களுக்கு கிடைப்பதில்லை. பெண்கள் கூட்டத்தின் மத்தியில் பண்டாவுக்கு இருந்த செல்வாக்கைப் பார்த்து நாங்களெல்லாம் பொறாமைப்பட்டது உண்மைதான். ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்வதில்லை.

கறுவாத் தோட்டத்து மேட்டுக்குடிப் பிறப்புக் கர்வம் சில்வாவை உலுக்கி எடுக்கவே, ‘இந்தா நானும் ஒரு பெட்டையை பிடிக்கிறன்’ என்று அமெரிக்க டொலர்களை விசுக்கி எறிந்தான். இறுதியில் ஒருநாள், ஒரு பெண்ணைக் கூட்டிவந்து, அவள் தன்னுடைய சிநேகிதி என்றும் அவள் பெயர் ‘மோனிக்கா’ என்றும், அறிமுகப்படுத்தினான். அவளுக்கு சில்வாவிலும் பார்க்க, குறைந்தது ஐந்து வயதாகிலும் அதிகமாக இருக்கும் என்பது, அவளுடைய முதிர்ந்த முகத்தைப் பார்த்ததுமே தெரிந்;தது. மோனிக்காவுடன் ஒரு சிறுவனும் வந்திருந்தான்.

தன்னுடைய முந்திய சிநேகிதனுக்கு பிறந்த மகன் என்று கூச்சப்படாமல் அறிமுகம் செய்து வைத்தாள்.

சிரிப்பை நான் என்னுள் அடக்கிக்கொண்டேன்.

‘என்ன சில்வா, கண்டோடை மாட்டை அவிட்டிருக்கிறாய்’ என ஜேர்மன் மொழியில் அருகில் நின்ற பரமசிவம் கேட்டான். அவன் இயல்பாகவே ஓர் ‘ஓட்டைவாயன்’!

பரமசிவம் ஜேர்மன் மொழியில் கேட்டது சில்வாவுக்கு கொதியைக் கிளப்பவே ‘போடா தமிழ் நாயே’ எனக் கத்தினான்.

‘என்னடா…?’ என கோபத்துடன் எழும்பினான் பரமசிவம். தமிழ் மொழி, தமிழ்; இனம் என்ற விடயங்களில் அவன் எப்போதும் உணர்ச்சி வசப்படுவான். கொம்யூனிச கட்சியின் வீ பொன்னம்பலம் உதவியுடன் கிழக்கு ஜேர்மனிக்கு படிக்க வந்தவன். சுண்ணாகத்தில் விவசாயம் செய்த ஏழை கமக்காரனின் மகன். மண்வெட்டி பிடித்து உரம் பாய்ந்த கைகள். அவன் அடித்தால் சில்வா நொருங்கிப் போவான்.

இனரீதியாக நிலமை திசை திரும்பும் விபரீதத்தை புரிந்து கொண்ட பண்டா, அசலான கொம்யூனிச பரம்பரையில் வளர்ந்தவன் என்கிற தோரணையில் ‘இனிமேல் சாப்பிட வருவதென்றால் இங்கு தமிழ் சிங்கள துவேசம் இருக்கக்கூடாது’ எனக் கண்டிப்புடன் கூறினான்.

பண்டாவின் சாப்பாட்டுச் சுவை இருவரையும் பெட்டிப் பாம்பாக அடக்கிவிட்டது.

எரிக்கிக்கு தமிழ் சிங்கள அரசியல் அவ்வளவாகப் புரியாது. கிழக்கு ஜேர்மனிக்கு அப்போது மேற்கு நாடுகளின் சஞ்சிகைகள் பத்திரிகைகள் இறக்குமதியாகாததால், வாசித்து அறியும் வாய்ப்பும் குறைவு. அங்கு படித்த பதினேழு சிறீலங்கன் மாணவர்களுள் நானும் பரமசிவமும் மாத்திரமே தமிழர்கள் என்பதால், அரசியல் விசயத்தில் அடக்கியே வாசித்தோம். இருப்பினும் சில்வாவின் சிங்கள திமிர்க் கதைகளுக்கு பரமசிவம் பொங்கி எழுவான்.  உணர்ச்சிகளின் கெம்புதலினால் எதுவும் நடக்கமாட்டாது என்பதை விளக்கி பரமசிவத்தை ஓரளவு அடக்கி வைத்திருந்தேன்.

எரிக் நாளடைவில் தமிழ் சிங்களப் பிரச்சனையின் ஆதிமூலத்தை    எப்படியோ அறிந்து கொண்டான். சில்வா துவேஷம் பேசும் போதெல்லாம், எரிக் அவனைக் கண்டிப்பான். பண்டா எரிக்குக்கு துணை நிற்பான்.

சில்வா கிடைக்கும் பணத்தில் பெரும்பகுதியை மது குடிப்பதில் செலவழித்துவிடுவான். இலங்கையில் அரசாங்கம் மாறியதால் சில்வாவின் தந்தை வகித்த பதவியும் பறிபோனது. ஆதிகார துர்ப்பிரயோகம் செய்தவர் என புதிய அரசால் குற்ரம் சாட்டப்பட்டார். அவருடைய செல்வாக்கும் ஆடம்பரமும் சுருங்கின. இதனால் வீட்டில் இருந்து வந்த டொலர்களின் வரத்தும் குறைந்தது.

நாங்கள் படித்த காலத்தில கிழக்கு ஜேர்மன் இளம் பெண்கள் மத்தியிலே ஒரு ‘போக்கு’ இருந்தது.  அவர்கள் வெளிநாட்டுப் பிரஜையைத் திருமணம் செய்தால் கணவனின் நாட்டுக்கு செல்ல சட்டப்படி உரிமையுண்டு. ‘கணவன் நாட்டுக்குச் செல்கிறேன்’ எனச் சாக்குச் சொல்லி எல்லையைக் கடந்து மேற்கு ஜேர்மனிக்கு வந்ததும், பெரும்பாலான பெண்கள் தற்காலிக கணவனைக் கழற்றிவிட்டு, புதிய இடத்தில் புதுவாழ்க்கையைத் துவங்குவதற்கு அலைவதும் வழக்கமாகிவிட்டது.

இந்த உத்தியை மோனிக்கா நன்கு அறிந்திருந்தாள். மேற்கு ஜேர்மனி சென்று புதிய வாழ்க்கை ஒன்றினை அமைப்பதுவே அவளுடைய திட்டம். இதற்காக அவள் சில்வாவின் சபலத்தினை முறையாகப் பயன்படுத்தி அவனுடன் தொற்றிக் கொண்டாள்.

சில்வா படிப்பில் கெட்டிக்காரன் அல்ல. ஆடம்பரச்செலவாலும், குடியாலும் சில்வா படிப்பில் கோட்டைவிட பல்கலைக்கழகம் அவனை வெளியேற்றியது. படிக்காவிட்டால் கிழக்கு    ஜேர்மனியில் வசிக்க முடியாது. இதனால் மோனிக்காவை சட்டப்படி மணம் முடித்து, மாடும் கன்றுமாக கிழக்கு ஜேர்மனியை விட்டு வெளியேறிவிட்டான்.

அவனுக்கிருந்த மேட்டுக்குடி திமிர் காரணமாக அதன்பிறகு அவனைப்பற்றி அவனது சகாக்களும் அதிகமாகக் கவலைப்படவில்லை.

டிஸ்கோ பண்டா படிப்பும் டிஸ்கோவுமாக சுற்றித் திரிந்தான். அவனது ‘மன்மத செல்வாக்கு’ அவனுடன் கூடப்படித்த போலந்து நாட்டுப் பெட்டையின் வயிற்றில் விளைந்தது. இருவரும் பல்கலைக்கழகப் படிப்பின் இறுதியாண்டில் படிக்கும் போது, பண்டாவின் ஆண் குழந்தையைப் போலந்து பெண் பெற்றெடுத்தாள். அதற்குப்பின் பண்டா அடங்கிவிட்டான். அந்தப் பெண்ணுடனும் குழந்தையுடனும் அவன் வேறொரு விடுதியிலே தங்கியிருந்தான். நாங்களும் தேவையில்லாமல் அவர்களுக்கு தொந்தரவு கொடுப்பதைத் தவிர்த்துக் கொண்டோம்.

‘மாமன்ரை பெட்டையின்ரை நிலை என்ன? என்று பண்டாவைக் கேக்கட்டோ’ என பரமசிவம் என்னை இடையிடையே கேட்பான்.

‘சும்மா இரு. உள்ளதுக்கை நல்ல சிங்களவன் அவன்தான். அவனையும் விரோதியாக மாற்றிவிடாதே’ என பரமசிவத்தை வழக்கம் போல தடுத்து வைத்திருந்தேன்.

துள்ளுற மாடு பொதி சுமக்கும் என்பார்கள். அது பண்டாவின் விஷயத்திலும் நடந்தது. படிப்பு முடிய போலந்து நாட்டுப்பெண் நாடு திரும்ப வேண்டும். போலந்து நாட்டின் அப்போதைய கம்யூனிச அரசும் பெண்ணின் உறவினர்களும் பண்டாவை ஏற்கத் தயாரில்லை. அவள் போலந்து நாட்டுக் கடவுச்சீட்டு வைத்திருப்பதால், ஜேர்மன் பெண்களைப்போல மேற்கு ஜேர்மனிக்குச் செல்லும் வாய்ப்பு இருக்கவில்லை. போலந்துப் பெண் ஒரு நாள் திடீரென்று காணாமல் போய்விட்டாள். கொம்யூனிச அரசின் கெடுபிடிகளினால் அவள் தனது சொந்த இடமான முசயமமழற நகருக்கு குழந்தையுடன் சென்று விட்டதாக மற்றைய போலந்து நாட்டு மாணவர்கள் பேசிக் கொண்டார்கள். அந்தக் கூற்றின் உண்மையை உறுதி செய்வதற்கு எங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. இந்த சம்பவத்தின் பின்னர், பண்டா சில நாள்கள் நாயோட்டம் பேயோட்டம் என்று அலைந்தான். பின்னர் படிப்படியாக மனம் தேறியவனாக பழைய டிஸ்கோ பண்டாவாக மாறினான்.

இறுதி ஆண்டின் இறுதி பரீட்சையை நெருங்கிக்கொண்டிருந்தோம். எங்கள் எல்லோரது படிப்பும் நிறைவுறும் தறுவாயிலிருந்ததால், மற்றவர்கள் வாழ்க்கையைப்பற்றி அக்கறைப்பட நேரமில்லாத அவதி. ஒவ்வொருவரும் தத்தமது எதிர்காலங்களைத் திட்டமிடும் தியானத்திலே மூழ்கினார்கள். ஊரிலிருந்து கலியாணம் பற்றிய நெருக்குதல்களும் வந்தன. புதிய சூழ்நிலைக்கு எப்படித் தயாராவது என்கிற கவலைகளும், பரபரப்புகளும் எல்லோரையும் தனிமைப்படுத்தின.

ஈற்றில் நானும் புலம்பெயர்வு என்கிற அலைகளிலே எற்றுண்டு அவுஸ்திரேலியா வந்து குடும்பஸ்தனாக சிட்னியில் வாழத் தலைப்பட்டேன்.

பண்டாவின் அறை நண்பன் எரிக்குடன் என் நட்பு தொடர்ந்தது.  நாங்கள் படித்த காலத்தில் எரிக் பலருக்கும் பலவிதத்திலும் உதவியவன். நானும் பரமசிவமும் சிறுபான்மை இனத்தவர்கள் என்ற காரணத்தால் சிங்களவர்கள் துவேஷம் பேசிய போழுது தமிழரின்  உரிமைக்கு குரல் கொடுத்தவன். கம்யூனிச தத்துவத்தை உண்மையாக நேசிப்பவன். மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுவான். இதனால், அவனுடன் நட்பு பாராட்டி வாழ்வதை நான் பெருமையாகக் கருதினேன். என் நட்பினைத் தொடர்வதில் அவனும் அக்கறை காட்டினான்.

அரசியல் நிர்ப்பந்தங்களினால் பிளவுபட்டிருந்த ஜேர்மனி 1989 ம் ஆண்டு ஒன்றிணைந்தது. இந்நிகழ்வு எரிக்கின் வாழ்க்கையிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. அவற்றை விரிவாக கடிதங்களில் எழுதுவான். கட்டுப்பாடுகள் அறுபட்ட சு10ழலிலே அவன் தன் மனைவி மேரியுடன் விடுமுறை ஒன்றிற்கு அவுஸ்திரேலியா வந்தான்;. நான் அவர்களை வற்புறுத்தி என் வீட்டில் தங்கும்படி செய்து உபசரித்தேன்.

 ஓரு நாள்!

இரவு உணவு உண்ணும் போது பழைய நண்பர்கள் பற்றிய கதையில் மேய்ந்தோம். அப்போது பண்டாவைப் பற்றிக் கேட்டேன். அவன் மீது எப்போதும் எனக்கு அபிமானம் இருந்தது. சிங்கள இனவாதத்துக்கு அப்பாலாக அவன் தமிழர்களுடன் நல்லுறவு பேணியமை இதற்கு காரணமாக இருக்கலாம்.

போலந்து நாட்டுப் பெண் போனபின்னர்  ஒரு ஜேர்மன் பெண்ணொருத்தியை, மணம் முடித்து பண்டா வசதியான வாழ்க்கைதேடி அப்போதே மேற்கு ஜேர்மனி சென்றுவிட்டதாகவும், அதன்பின் அவனுடன் தனக்குத் தொடர்பு அறுந்து விட்டதாகவும் எரிக் கூறினான்.

‘உனக்குச் சில்வாவை ஞாபகம் இருக்கிறதா?, அவன் கதை பெரியகதை….!’ என எரிக் துவங்க, வேண்டாம் என்பதுபோல அவன் மனைவி மேரி சைகை காட்டினாள்.

‘பரவாயில்லை அவன் சொல்லட்டும், தடுக்காதே மேரி’ என்று நான் அவசரமாகக் குறுக்கிட்டேன்.

எரிக் சட்டம் படித்தவன். ஓன்றிணைந்த ஜேர்மனியில் தற்போது பேர்ளினில் அரச சட்டத்தரணியாக பணிபுரிகிறான். நீதிமன்றத்தில் அரசு சார்பில் ஆஜரானபோது மோனிக்கா ஒரு நாள் குற்றம் சுமத்தப்பட்டவளாக வந்திருந்த சம்பவத்தை எரிக் கூறினான்.

‘என்ன குற்றம் செய்தாள்? சில்வாவும் வந்திருந்தானா….?’ என ஆவலை அடக்க முடியாமல் கேட்டேன்.

என் ஆர்வத்தைக்கண்ட மேரி ‘மற்றவர்களின் வாழ்க்கை அவலங்களை அறிவதற்கு ஆண்களும் இப்படிப் பறப்பார்களா? என்று நமட்டுச் சிரிப்புடன் கேட்டாள்;.

அவளுடைய குறுக்கீட்டை நாங்கள் பெரிதுபடுத்தாது தொடர்ந்தோம்.

‘பேர்ளினில் மோனிக்கா அனுமதியின்றி விபசாரம் செய்தமைக்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றம் கொண்டுவரப்பட்டாள்’  

‘ஐயொ பாவம். மோனிக்காவிடம் பேசினாயா….?’

‘சில்வா பற்றி விசாரித்தேன்… அவள் எதுவும் கூறவில்லை. ஏன் என் விஷயத்தில் நீ தலையிடுகிறாய் என்பதுபோலப் பார்த்துவிட்டு அவள் சென்றுவிட்டாள். மோனிக்கா கிழக்கு ஜேர்மனியில் இருந்த காலத்திலேயே சட்டவிரோதமான முறையில் விபசாரியாக இருந்திருக்க வேண்டும்…’ என்று ஏதோ சொல்ல எத்தனித்த எரிக்கை இடைமறித்த மேரி ‘அநுமானங்களை வைத்துக் கொண்டு ஒரு பெண்மீது பழி சுமத்தாதே’ என்று பெண்ணுரிமைக்குக் குரல் கொடுத்தாள். அத்துடன் கிழக்கு ஜேர்மன் நண்பர்கள் பற்றிய எங்களுடைய கதை தொடராமல் அந்தரத்தில் தொங்கிற்று. சிறிது நேரம் நாம் எதுவும் பேசவில்லை. எங்களுடைய நனவிடை தோய்தலை நிறுத்திவிட்ட குற்ற உணர்வில் மௌனத்தைக் கலைத்தாள் மேரி.

‘உன் நாட்டின் தற்போதைய நிலைமை என்ன? சமீபத்தில் சிறீலங்கா சென்றாயா….?’ எனக்கேட்டு நமது கதையைத் தொடர வைக்க முயன்றாள்.

‘எதைச் சொல்வது, எதைவிடுவது’ என்கிற அந்தரத்தில் குழம்பிப்போய்  அவளைப் பரிதாபமாகப் பார்த்தேன். ‘நான் அரசியல் விஞ்ஞானம் படித்ததவள்;. இலங்கை இனப்பிரச்சினைபற்றி நிறையவே வாசித்தறிந்துள்ளேன். நீங்களெல்லோரும் இனப்பிரச்சனையை மேலெழுந்தவாரியாக மட்டும் பார்க்கிறீர்கள். சிங்களவர்கள் இலங்கையில் பெரும்பான்மையினமாக வாழ்கிறார்கள். இருந்தாலும் இந்திய துணைக்கண்டம் என்கிற பிராந்தியப் பூகோள அமைப்பில் சிங்களவர்கள், தாங்கள் தமிழர்களிலும் பார்க்க குறைந்த எண்ணிக்கையில் வாழ்வதான எண்ணம் அவர்களை அறியாமலே அவர்கள் உள்ளத்தில் வளர்ந்துள்ளது, அல்லது வேண்டுமென்றே அரசியல்வாதிகளினால் வளர்க்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை இனத்துக்கு இருக்கக்கூடாத சிறுபான்மை உணர்வும், அதனால் ஏற்படும் தாழ்வுச்சிக்கலும்தான் சிங்களர் அரசியல் தலைமைத்துவத்தை ஆட்டிப்படைக்கும்  பிரச்சனையின் ஆணிவேர்’ என மேரி ஒரு அறிவியல் பிரசங்கம் நிகழ்த்தி முடித்தாள்.

‘உண்மைதான். மேரியும் நானும் இதுபற்றி நிறையவே பேசியுள்ளோம். சோறுகறிச் சாப்பாட்டில் எனக்கிருக்கும் மோகத்தால் மேரி என்னை ‘அரைச் சிறீலங்கன்’ என்றே அழைப்பாள். நாங்கள் படித்த காலத்தில் சில்வா ஒருவன்தான் இனத்துவேசம் பேசியவன். குடும்பச் செல்வாக்கை தக்கவைத்துக் கொள்ள மேட்டுக்குடிச் சிங்களவருக்கு அது அவசியமாக இருந்திருக்கலாம். ஆனால் பண்டாவை நினைத்துப்பார். அவன் எப்போதும் நடுநிலையாக சிந்திப்பவனாகவே கணிக்கப்பட்டவன். சிறுபான்மை இனம் என்கிற தாழ்வு மனப்பான்மை எப்படி பொரும்பான்மை இனச் சிங்களவரின் பலவீனமோ, அப்படியே ‘மந்தைப் புத்தியுடன்’ நியாய அநியாயங்களை சீர்தூக்கிப் பார்க்காது இனக் கலவரங்களின்போது செயற்படுதலும், சிங்களவருடைய இன்னொரு குணமாகும். ஒருவகையில் அவர்கள் அவுஸ்திரேலிய செம்மரியாடுகளைப் போன்றவர்கள்தான். ஒரு ஆடு சென்றால் மறு ஆடு யோசிக்காது பின் தொடரும்’ என்று கூறிச் சிரித்தான் எரிக்.
‘இதைத்தான் அரசியல் விஞ்ஞானத்தில் ‘ஆழடி ஆநவெயடவைல’ என்பார்கள். ஆளும்வர்க்கம் இதையே தனது அரசியல் மேட்டிமைக்கான மூலதனமாகப் பயன்படுத்திக் கொள்கிறது’ என்று விளக்கம் சொன்னாள் மேரி.இலங்கை இனப்பிரச்சினை விடையத்தில் மேரியின் அணுகுமுறையிலே தொனித்த நியாயம் என்னை வியப்படைய வைத்தது.   

-2-

பதினைந்து வருடங்களின்பின் டிஸ்கோ பண்டாவை கொழும்பில் சற்றும் எதிர்பாராத விதமாகச் சந்திக்க நேர்ந்தது. உல்லாசப் பயணிகள் தங்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டலிலே, தான் முகாமையாளராகப் பணியாற்றுவதாக சொன்னான். தான் படித்த துறையில், தனக்கு போதிய தொழில் அநுபவம் இன்மையால் நல்ல உத்தியோகம் பெறமுடியவில்லை என்றான். இருப்பினும் தான் பயின்ற ஜேர்மன் மொழி அறிவே தனக்கு கைகொடுத்து உதவியுள்ளதாகவும் சொன்னான்.

பரஸ்பரம் விசாரணைகள் முடிந்ததும், மறுநாள்  இரவு உணவுக்குத் தனது ஹோட்டலுக்கு வருமாறு வற்புறுத்தி, ஹோட்டல் வாகனத்தை எனது இருப்பிடத்துக்கு அனுப்புவாதாக் கூறி, என் முகவரியையும் பெற்றுச் சென்றான். மறுநாள் காலை என் அலைபேசியிலே தொடர்பு கொண்டு நமது சந்திப்பை உற்சாகத்துடன் நினைவுபடுத்தியதுடன், வாக்குத் தவறாது மாலையில் சொகுசு வாகனத்தையும் என்னை அழைத்துவர அனுப்பியிருந்தான்.

ஹோட்டல் அலுவலகத்தில் பண்டாவைச் சந்தித்தபோது, ‘எத்தனை காலம்’ என என்னை ஆரத்தழுவி வரவேற்று அன்புடன் உபசரித்தான். ‘உன்னுடைய பிரசித்தி பெற்ற  தேங்காய் சம்பல் இங்கே கிடைக்குமா….?’ என பகடியாகக் கேட்டேன். ‘அதை மறப்பேனா…? உனக்காக மாசிக் கருவாடும் சின்ன வெங்காயமும் போட்ட அசல் தேங்காய் சம்பலும், காரமான ‘கட்ட’ சம்பலும் செய்யுமாறு ஓடர் கொடுத்துள்ளேன்’ என்றவன், தொலைபேசியில் யாரையோ அலுவலகத்துக்கு வருமாறு அழைத்தான். சிறிது நேரத்தில், கரையோரச் சிங்களத்திகள் பாணியிலே சேலை அணிந்த ஒரு பெண் அங்கு வந்து சேர்ந்தாள். அவளை பண்டா தன் மனைவி என்று அறிமுகப்படுத்தியது நான் சற்றும் எதிர்பார்க்காததொன்று.

‘ஆயுபோவான் மாத்தையா’ என்று குனிந்து கைகூப்பி அவள் வணக்கம் சொன்னாள்.

அப்போது ஹோட்டலின் தலைமை சமையல்காரர் ‘உணவு ரெடி’ என்று தகவல் அனுப்பினார். ஹோட்டல் சாப்பாட்டு மண்டபத்தின் வசதியான மூலையில் நாம் மூவரும் அமர்ந்தோம்.

ஊபசரிப்புக்கு பஞ்சமில்லை. ஹோட்டல் மேலாளரின் விருந்தினரல்லவா நான்!

பண்டாவும் நானும் ஜேர்மன் பல்கலைக்கழக நாள்களின்   நினைவலைகளில் மிதக்கலானோம். பண்டாவின் சிங்கள மனைவிக்கு ஆங்கிலம் புரியாது என்பதைச் சிறிது நேரத்தில் தெரிந்து கொண்டேன். பண்டாவுக்கு இன்னமும்  ஆங்கிலம் அரைகுறைதான். எனக்கோ சிங்களம் ‘கொஞ்சங் கொஞ்சங்@ டிக்க டிக்க புளுவாங்’…!

இதனால் ஜேர்மன் மொழியில் உரையாடுவது எங்களுக்கு இலகுவாகவும் சந்தோசமாகவும் இருந்தது.

அருகில் இருந்த சாப்பாட்டு மேசையில் தம்பதிகளாக உணவருந்திக் கொண்டிருந்த ஜேர்மன் உல்லாசப் பயணிகள் எங்கள் அருகில் வந்து ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.

இரண்டு இலங்கையர்கள், சொந்த மொழியை விடுத்து, ஜேர்மன் மொழியிலே கொழும்பில் உரையாடுவது விசித்திரமாக இருக்கிறது எனச் சொல்லிச் சிரித்தார்கள். உண்மைதான். உள்நாட்டின் மொழிப்பிரச்சினை இந்த நாட்டின் இரண்டு குடிமக்களுக்கு அந்நிய மொழி ஒன்றினைப் பொது மொழியாக்கிய விசித்திரம் சடுதியாக மின்னலைப்போல என் மூளையிலே பளிச்சிட்டு மறைந்தது.

பண்டாவின் சிங்கள மனைவிக்கு நாம் உரையாடுவது எதுவுமே புரியப் போவதில்லை என்ற தைரியத்தில், ‘உனது மாமாவின் மகளா இவள்?’ எனக் கேட்டேன்.

‘இல்லை மச்சான். உன்னைப் பேல நானும் மாமாவின் மகளை முதலிலேயே கட்டியிருந்தால் இப்ப சந்தோசமாக இருந்திருப்பன். எல்லாம் விதி’ எனச்சொல்லி வருத்தப்பட்டான்.

அப்போது பரிசாரகன் போலந்து வொட்கா போத்தல் ஒன்றையும், கண்ணாடிக் கிண்ணம் நிறைந்த பனிக்கட்டிகளையும் கொண்டுவந்து வைத்தான். பண்டா எழுந்து சென்று வொட்கா குடிப்பதற்கு ஏற்றவகையில் உறை குளிரில் வைக்கப்பட்ட வெட்கா கிளாஸ்களைக் கொண்டுவந்தான்.

டிஸ்கோ பண்டா ஜேர்மனியில் வாழ்ந்த காலத்திலெயே ஒரு வொட்காபிரியன். போலந்து வொட்கா உலகப்பிரசித்து பெற்றது. கிழக்கு ஜேர்மன் பணத்தை கறுப்புச் சந்தையில்மாற்றி எல்லை கடந்து போலந்து சென்று வொட்கா வாங்கிவருவான். பண்டாவின் முதல் காதலியும் போலந்து போய்த் திரும்பி வரும் போதெல்லாம் விலை உயர்ந்த வொட்கா வாங்கி வருவாள். அந்த வொட்கா போத்தலுக்குள் நீண்டதொரு புல்லிலை இருக்கும். அதுவே அந்த போலந்து வொட்காவின் சிறப்புச் சுவைக்கான காரணமென்பார்கள். அது என்னவகை புல்லு என அறியும் முயற்சியில் அதிதீவிரமாக முயன்றும் இன்று வரையில் என்னால் அந்த இரகசியத்தை அறியமுடியவில்லை! குளிர்ந்த வொட்கா, சிறிதுசிறிதாக வயிற்றுக்குள் இறங்க, மனமும் உடலும் சில்லிட்டது. கொழும்பு வெக்கைக்கு அது இதமாகவும்

இருந்தது. மெதுவாக அவனுடைய போலந்து காதலி பற்றியும், அவளுக்கு பிறந்த மகனைப்பற்றியும் விசாரித்தேன். வொட்கா மயக்கத்திலும் பண்டாவின் முகத்தில் கவலை தோன்றியது.

முன்னாலிருந்த புதிய கிளாஸில் வொட்காவை வாத்து எதுவும் கலக்காமல் பச்சையாக குடித்த பண்டா, சிறிது நேரம் கண்களை மூடி மௌனமானான். பின்னர் தன்னை சுதாகரித்துக் கொண்டு, எவ்வளவோ முயன்றும் அவளைத் தொடர்பு கொள்ள முடியில்லை என்றும், மகனின் எண்ணம் தனக்கு அடிக்கடி வருவதாகவும் சொல்லி வருத்தப்பட்டான். பூராயம் புடுங்கும் ஆர்வம் என்னை விடவில்லை. ‘நீ பின்னர் ஜேர்மன் பெட்டை ஒன்றை மணம் முடித்து மேற்கு ஜேர்மனி சென்றதாக அறிந்தேன்’ என எரிக் சொன்ன தகவலை, மூலத்தை அறிவிக்காமல் அவிழ்த்தேன்.

பண்டாவின் முகம் சிவந்து கோபம் பொங்கியது.

‘அவள் பட்டை வேசை’ மேற்கு ஜேர்மனிக்கு போவதற்காக என்னைக் கட்டினவள். புதிதில் ஒழுங்காக இருந்தாள். கிழக்கும் மேற்கும் இணைந்த பின்பு, அவளின் ஜேர்மன் குணத்தைக் காட்டிவிட்டடாள். என்னை விவாகரத்துச் செய்துவிட்டு இன்னொரு ஜேர்மன்காரனைக் கலியாணம் செய்து, இப்போது பேர்ளினில் வாழ்கிறாள்’ என்றவன் ஜேர்மன் பாசையில் உள்ள அத்தனை ஊத்தையான தூஷண வார்த்தைகளையும் ஒன்றுதிரட்டி அவளைத் திட்டித்தீர்த்தான்.

எங்கள் உரையாடல்களுக்கு மத்தியில், பண்டாவின் மனைவி, கலவரமடைந்த முகத்துடன் எதுவும் பேசாமல் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பண்டா தனது பழைய கிளாசில் மீதமாக இருந்த வொட்காவை ஒரே மடக்காக் குடித்துத் தன்னைச் சகஜமாக்கினான். ‘அவளைக் கட்டினதாலை வந்த ஒரேயொரு நன்மை, எனக்கு ஜேர்மன் பாஸ்போட் கிடைத்ததுதான். எல்லாம் விதி. நான் கனக்கப் பிழைகள் விட்டிட்டன் மச்சான். உன்னையும் பரமசிவத்தையும் போல கட்டுக்கோப்பாய் இருந்து இலங்கைப் பெட்டையைக் கட்டியிருக்கவேணும்’  என ஈற்றில் ஞானம் பெற்றதான சுருதியிலே முடித்தான்.

‘வெள்ளைத் தோலுக்கும் வெந்தையக் குழம்புக்கும் ஒருசேர ஆசைப்படக்கூடாது பண்டா’ என பகிடியாகச் சொன்னேன். அதைக்கேட்டு கவலைகளை மறந்து வாய்விட்டுச் சிரித்தவன், ‘நீ சொல்வதில் பாரிய உண்மை இருக்கு மச்சான்’ எனச் சொல்லியபடியே சிறுநீர் கழிக்கவென எழுந்து சென்றான்.

நாம் என்னதான் ஜேர்மன் மொழியில் உரையாடினாலும், பண்டாவின் மனைவி முகத்தில் பலவித உணர்ச்சிகள் தோன்றி மறைவதை நான் அவதானிக்கத் தவறவில்லை. பண்டாவின் மனைவி என்முன்னே அமைதியாக உட்கார்ந்திருந்தாள். அவளுடன் எதுவும் பேசாமல் இருப்பது பண்பல்ல. மொழி தெரியாத எனது கையாலாகாத நிலைமையை எண்ணி இலங்கையின் அனைத்து அரசியல்வாதிகளையும் ஒருதடவை மனசுக்குள் சபித்துக் கொண்டேன்.

பண்டா இன்னமும் வரவில்லை. நிலைமையை சுமூகமாக்க அவளைப்பார்த்துப் புன்னகைத்தேன்.

பண்டாவின் மனைவி, ‘லொக்கு மாத்தையா (பெரிய கனவானே)’ என அழைத்து கண்கலங்கினாள். தனக்குத் தெரிந்த ஆங்கிலச் சொற்களையும், பண்டாவிடம் படித்த சில ஜேர்மன் சொற்களையும் கலந்து சிங்களத்தில் பேசத்துவங்கினாள். அவள் சொன்னவை முழுவதும் எனக்குப் புரியாவிட்டாலும் அதன் சாராத்தை ஓரளவு கிரகித்துக் கொண்டேன்.

பண்டாவின் கிராமத்துக்கு அயலிலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவள் அவள். அவளுடைய குடும்பம் பாரம்பரியமாக சிங்கள சுதேச வைத்தியம் செய்பவர்கள். ஆயுர்வேதக் கல்லூரியில் படித்தவள். இப்பொழுதும் அவள் ’வெதமாத்தையா’வாகப் பணியாற்றுகிறாள;   சடுதியாகப் பண்டாவின் லீலைகள் பற்றி தொடர்ந்தாள். அப்போது அவளின் கண்களில் திரண்ட கண்ணீரை நான் கவனிக்கத் தவறவில்லை. முகத்தை சுத்தம் செய்வதுபோல, மேசையில் இருந்த ரிசுப் பேப்பரால் கண்ணீரைத் துடைத்தபின் மீண்டும் தொடர்ந்தாள். ‘நான் முதிர்கன்னி என்பதை தெரிந்து கொண்டே, பண்டா என்னை மணம் முடித்தார். பண்டாவுக்கு இந்த வயதிலும் உள்ள காமவேட்கையை என்னால் தணிக்க முடியாது என்பதை அவர் முன்னமே எண்ணிப் பார்த்திருக்க வேண்டும். பண்டாவுக்கு என்னால் ‘அந்த விஷயத்தில்’ ஈடுகொடுக்க முடியாது என்பது உண்மைதான். என்றாலும் இங்குவரும் உல்லாசிகளுடன் என் முன்னாலேயே அவர் கூடிக்குலாவுவதை சிங்களப் பெண்ணான என்னால தாங்கமுடியவில்லை அண்ணா. எனது உணர்வுகளை சொஞ்சமேனும் அவருக்கு புரியும்படி எடுத்துச் சொல்லுங்கள்’ எனகச் சொல்லி அழுதாள்.

‘மாத்தையா’ என்று பண்டாவின் அலுவலகத்தில் அழைத்தவள், ‘அண்ணா’ என்று உறவு கொண்டாடி அழைத்தது என் மனதை உலுக்கியது.

‘கவலைப்படாதே அவனுக்கு நான் சகலதையும் எடுத்துச் சொல்கிறேன்’ எனச் சொல்லி மானசீகமாக அவளைத் தேற்றினேன்.

‘சொல்கிறேன’ என்பது மட்டும் பாத்றூமிலிருந்து திரும்பிய பண்டாவுக்கு அரைகுறையாகக் கேட்டிருக்க வேண்டும் ‘என்ன சொல்லப் போகிறாய்…..? நாங்கள் கிழக்கு ஜேர்மனியில் படித்த கார்ல் மார்க்ஸின் தத்துவத்தையா?’ எனச் சொல்லிச் சிரித்தான். உணவு பரிமாறப்பட்டது. உண்மையைச் சொல்லவேண்டும். அசல்சாப்பாடு. நான் விரும்பி உண்ணும் உணவு வகைகளை ஞாபகம் வைத்து, பண்டா தனது ஹோட்டல் சமையல்காரர்களுக்கு ஓடர் கொடுத்திருக்க வேண்டும். நானும் பண்டாவின் மனைவியும் மௌனமாக சாப்பாட்டில் கவனம் செலுத்தினோம். பண்டாவோ, உல்லாசிகளாக ஹோட்டலுக்கு வரும் பெண்கள் மத்தியில் தனக்கிருக்கும் ‘மவுசு’ பற்றி அட்டகாசமாகச் சொல்லிக்கொண்டே சாப்பிட்டான்.

அப்போது நான் அதிகம் பேசவில்லை. எனது உரையாடலை பண்டாவின் மனைவி அரைகுறையாக விளங்கக்கூடும். அது தவறான அர்த்தங்களைக் கற்பிக்கலாம். பண்டா தன் மனைவியுடைய அப்பாவித் தனத்தை பரிகசிப்பதுபோல் நடந்து கொள்வதை தவிர்ப்பதற்காக அவர்களிடமிருந்து விடைபெறுவதில் அவசரம் காட்டினேன்.

பண்டாவின் மனைவி இறுதிவரை மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டது அவள் மீதிருந்த மதிப்பைக் கூட்டியது. பண்பைத் துலைக்காது வாழும் அவள் மிகவும் அபூர்வமானவளாகவே எனக்குத் தோன்றினாள். ஹோட்டல் வாசல்வரை அவளும் பண்டாவுடன் நடந்து வந்தாள்.

வாசலில் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் இலங்கைப் பெண்களுடன் கூடிநின்றார்கள். அவர்களுக்கு கிடைத்த வாடகைக் காதலிகளே அவர்கள். பண்டாவே அவர்களை ஒழுங்கு செய்திருக்கலாம். உல்லாசிகள் தங்கள் இலங்கைக் காதலிகளுக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இந்தச் சோரங்களும் இணைந்ததுதான் இலங்கையின் உல்லாசப பயணம் என்பதை நேரில்பார்த்து சங்கடப்பட்டேன்.
பண்டாவின் மனைவியைப் பார்த்தேன். இவற்றை அவள் கண்டு கொள்ளாத லாவகத்திலே சிங்களப் பெண்மையைக் காப்பாற்றி நின்றாள்.

நான் அவர்களிடமிருந்து விடைபெற்று, வாகனத்தில் ஏறும் போது, ‘போமஸ்துதி ஐய’ (வணக்கம் அண்ணா) என குனிந்து வணங்கி விடைதந்தாள்.

-3-

கொழும்பிலே டிஸ்கோ பண்டாவைச் சந்தித்து பல ஆண்டுகளாகிவிட்டன.

என்னுடைய தொழில் சார்ந்த விஜயம் ஒன்றினை மேற்கொண்டு, பேர்ளின் நகருக்குச் சென்றிருந்தேன். பணிகள் இனிதே நிறைவேறின.

அடுத்த நாள் சிட்னி திரும்புவதாக என் பயண ஏற்பாடு இருந்தது.

எரிக்கையும் அவன் மனைவி மேரியையும் ஒன்றாக இரவு உணவு உண்ண அழைத்திருந்தேன். அந்தச் சுரங்க வண்டி நிலையத்தில் அவர்களை நான் சந்திப்பதாக ஏற்பாடு. அங்கிருந்து நல்ல உணவு விடுதிக்கு செல்வது எமது திட்டம். அவர்களுக்காக நான் காத்திருந்த பொழுதுதான், டிஸ்கோ பண்டாவையும், சில்வாவையும் ஒன்றாக மேற்படி கோலத்திலே சுரங்கவண்டி நிலைய வாங்கொன்றில் அமர்ந்திருப்பதைப் பார்க்க நேர்ந்தது. 

சில்வாவின் முகத்தில் வயதுக்கும் மீறிய முதுமை தெரிந்தது. பல நாள் சவரம் செய்யாத முகம். தலை மயிர்களும் தாடியின் சில பகுதிகளும் ஆங்காங்கே நரைத்துக் காணப்பட்டன. ஆவனுடைய  சேட்டில் ஊத்தை அப்பியிருந்தது. சேட்டின் கீழ்ப் பொத்தான்கள் அறுந்து தொலைந்த நிலையில், பியர் குடிக்கும் பழக்கத்தினால் பருத்திருந்த அவன் வயறு துருத்தித் தெரிந்தது.

அவர்களை நான் பார்த்துக் கொண்டு நின்ற நிலையில், சுரங்கவண்டியில் வந்திறங்கிய எரிக்கும் மேரியும் என்னுடன் சேர்ந்து கொண்டார்கள். சில்வாவின் இந்தக் கோலம் அவர்களுக்கு எத்தகைய ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை. படிப்பும் இன்றி, தொழிலும் இன்றி அலையும் அவன், அல்கஹோலிக்காக மாறுவான் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். பெற்றோரும் இறந்து, உறவினரும் கைவிடடுவிட்ட பரிதாப நிலை.

வெளிநாடுகளில் வாழ்ந்து, சிங்கள ஆட்சியை ‘அப்பே ஆண்டுவா’ கோஷம் எழுப்பி ஆதரிக்கும் தூதுவர்களுள் சில்வாவும் ஒருவனாக இருக்கலாம்.

ஆனால் பண்டா…..?

பண்டாவை நான் கொழும்பில் சந்தித்த விபரத்தையும், அங்கு அவன் வசதியாக ஒரு முதிர்கன்னியை மணம்முடித்து வாழும் வர்த்தமானத்தையும் எரிக் தம்பதியினருக்கு முன்னரே சொல்லியிருந்தேன். அத்தகைய பண்டா எப்படி பேர்ளினிலே சில்வாவுடன் கூட்டுச் சேர்ந்தான்? என்னால் ஆச்சரியத்தை அடக்கமுடியவில்லை.

‘பண்டா, இது என்ன கோலம்? நீ எப்பொழுது மீண்டும் ஜேர்மனிக்கு வந்தாய்?…’ உண்மையான பரிவுடன் கேட்டேன்.

பண்டா பதில்கூற முன், சில்வா முந்திக் கொண்டு சத்தம் போட்டான்.

‘கோலத்தில் என்ன பிழை? நல்லாத்தான் இருக்கிறம். நாங்கள் சிங்கங்கள். சிங்களச் சிங்கங்கள். புலியை அடக்கிவிட்டோம் பார்த்தாயா…?

இந்த வெற்றிச் செய்தியை உலகெங்கும் பறைசாற்றும் தூதுவர்கள் நாங்கள்….’

சுரங்க வண்டி நிலையத்திலுள்ள அந்த வாங்கினை அரசியல் மேடையாக்கிக் கத்தினான்.

எரிக்கம் மேரியும் சங்கடத்தில் நெளிந்தார்கள்.  சில்வா பேசும் அரசியலை இப்பொழுது எரிக் நன்றாக அறிவான். எனவே அங்கிருந்து செல்வதற்கு அவசரப்பட்டான்.

பண்டா எதுவும் பேசவில்லை.   பண்டாவைப் பார்த்து ‘வருகிறேன்’ என்று மெதுவாகச் சொன்னேன். கொழும்பில் அவன் தந்த ராஜ வரவேற்பும் விருந்துபசாரமும் இன்னமும் என் நெஞ்சில்; பசுமையாக இருந்தன. மூவரும் நகரத்துவங்கியதும், பண்டா சடுதியாக ‘பசிக்கிறது’ சாப்பாடு வாங்கித் தருவாயா?’ என்று கேட்டான். அந்தக் கேள்வி என்னை நிலைகுலைய வைத்தது.

ஜேர்மன் பல்லைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், இலங்கையின் பிரத்தியேக சுவையைப் பேணி, நான் பரமசிவம் உட்பட எல்லோருக்கும் சமைத்துப் போட்ட பண்டா, என்னைக் கொழும்பிலே சந்தித்த பொழுது, பழைய நட்புறவு சற்றும் குறையாது, ராஜ விருந்தளித்து என்னை அசத்திய அதே பண்டா, இப்பொழுது பிச்சைக்காரனைப் போல ‘பசிக்கிறது’ என்று கேட்பது என்னை வேருடன் சாய்த்தது.

எரிக் என்னுடைய தர்ம சங்கடமான நிலையை ஊகித்திருக்க வேண்டும்;. என்னுடைய விருப்பத்துக்கு ஒத்திசைவாக நடக்க முன்வந்தமை எனக்கு ஆறுதலாக இருந்தது.

சுரங்க வண்டி நிலையத்தின் வெளியே, நடக்கக்கூடிய தூரத்தில் இத்தாலிய ரெஸ்ரோரெண்ட ஒன்று இருந்தது. அது சற்றே பிரபலமானதும்.

நிலமைகளை உத்தேசித்து அங்கு உணவு சாப்பிடலாம் என்று எரிக்கே முன்மொழிந்து என்வயிற்றில் பால் வார்த்தான்.

‘வா…., அந்த இத்தாலிய றெஸ்ரோரெண்டுக்கு போகலாம்’ என பண்டாவைப் பார்த்து அழைத்தேன். சில்வா எழுந்து நிற்கவே   சிரமப்பட்டான். பண்டா அவனைத் தாங்கிக் கொண்டான். பண்டாவின் அணைப்பிலே சில்வா எங்களைப் பின் தொடர்ந்தான்.

இருவரிடமிருந்தும் பலநாள் குளிக்காததற்கு அடையாளமாக ஒருவகை ‘துர்நாற்றம்’ வீசியது.

அவர்களுடைய  கோலமும், அவர்களைச் சாப்பாட்டுக்கு அழைத்ததும் மேரிக்கு பிடிக்கவில்லை என்பதை அவளுடைய முகபாவம் துல்லியமாகக் காட்டியது. இருந்தாலும் எங்களுடைய உணர்வுக்கு மதிப்பளிக் வேண்டுமென்று பொறுத்துக் கொண்டாள். றெஸ்ரோரெண்ட மனேஜர் சில்வாவையும் பண்டாவையும் உள்ளே அனுமதிக்க முதலில் மறுத்தான். ஆனால் எரிக் அவனிடம் விஷயங்களை விளக்கியபிறகு, முணுமுணுத்துக் கொண்டே அனுமதித்தான்.

சில்வா, நுழைந்ததும் நுழையாததுமாக ரொயிலெற்றைத் தேடிச் சென்றான். 

நீண்ட நேரமாக என் மனசைக் குடைந்து கொண்டிருந்த கேள்வியை பண்டாவிடம் கேட்டேன். ‘உன் சிங்கள மனைவி எங்கே….?’

என்பதுதான் என் கேள்வி. இந்தக் கேள்வியை அவனுடைய நிலையில் அவன் எதிர்பார்ததிருக்க மாட்டான் போலும். சற்று நேர மௌனத்திற்குப் பின்னர், ‘அவள் தற்கொலை செய்து கொண்டாள்’ என்று கூறி என் முகத்தை ஏறிட்டுப் பார்க்க விரும்பாதவனைப் போல வேறு திசையிலே பார்த்தான். அவளுடைய மரணத்துக்கு தானே காரணம் என்ற குற்ற உணர்வு அவனுடைய குரலிலே புரையோடிக் கிடந்தது. அந்தச் சம்பவத்தை மறப்பதற்கு கஸ்டப்படுபவன் போல உடைந்தான். அவன் அழுது கொண்டிருக்கிறான் என்பதை என்னால் உணரமுடிந்தது.

ரொயிலெற்றால் திரும்பிக் கொண்டிருந்த சில்வா, பண்டா அழுவதைப் பார்த்திருக்க வேண்டும். ‘ஏண்டா மச்சான் அழுகிறாய்?’ என்று சிங்களத்தில் ஆவேசமாகக் கேட்டான்.

‘ஒன்றுமில்லை மச்சான்’ என்று மழுப்பினான் பண்டா.

அதற்கிடையில் எங்கள் மேசைக்கு பரிசாரகன் வந்து சேர்ந்தான். சில்வா தனக்கு விருப்பமானதெல்லாம் தாராளமாக ஓடர் செய்யத் துவங்கினான். எங்களுக்கு என்ன விருப்பமாக இருக்கக்கூடும் என்பதைப்பற்றி அவன் அக்கறைப்படவில்லை. காசு கொடுக்கப் போவது நான் என்பது அவனுக்குத் தெரியும். அதனை அங்கீகரிக்கும் இங்கிதம் கூட அவனிடம் இருக்கவில்லை. மேரிக்கு என்ன விருப்பம் என்று கேட்பதின் மூலம், குறைந்தபட்ச மேசை நாகரிகத்தையாவது பேண நான் முயன்றேன். சாப்பாடு வந்ததும், நாங்கள் மௌனமாகச் சாப்பிடத் துவங்கினோம். ஆனால் சில்வாவோ இறுதி யுத்தத்திலே புலிகள் தோற்றுப்போனது பற்றி அட்டகாசமாகப் பேசினான். ‘சாப்பிடும்போது ஏன் வீண் அரசியல்’ என்று எரிக் நாகரீகமாகச் சொன்னான். ‘வீணான தர்க்கத்திலே ஈடுபட வேண்டாம்’ என்று என்னை எச்சரிக்கவும் செய்தான்.

நான் சில்வாவின் கேள்விகளைச் சட்டை செய்யாது, இரவுச் சாப்பாட்டினை சுமுகமாக முடிவுக்கு கொண்டுவருவதில் முனைப்புக் காட்டினேன். சாப்பாட்டிற்கான பில்வந்தது. நான் அதற்கான பணத்தைச் செலுத்திக் கொண்டிருந்தேன்.

சில்வாவின் பேச்சை நான் சட்டை செய்யாதது அவனுக்கு எரிச்சலைக் கிளப்பியிருக்க வேண்டும்.

‘இப்ப தமிழன் அரசியல் பேசமாட்டான்தான்…. ஏன் தெரியுமா….? நாங்கள் அவங்களுக்கு மண்டையிலை அடிபோட்டு, கோவணம் கட்டிஅல்லோ அனுப்பி வைச்சனாங்கள்…’ என்று மீதமிருந்த மதுவை ஊற்றிக் குடித்துக் கொண்டே கேலி பேசினான். எனக்கு கோபம் எல்லை தாண்டியது. என்னை அறியாமலே எழுந்து சில்வாவின் சேட்டைப் பிடித்து உலுப்பினேன். அடுத்த கணமே, என் தவறை உணர்ந்தவனாக சமாதானமடைந்து, பில்லுக்கான பணத்தினைச் செலுத்தினேன். எல்லோரும் எழுந்தோம். அப்போ பண்டா சொன்ன வாசகம் என்னை உறைநிலை அடைய வைத்தது. ‘இஞ்சை பார். சிங்களவன் ஆளப்பிறந்த இனம். தமிழன் எங்கிருந்தாலும் எங்களுக்கு அடிமையாக இருக்கப் பிறந்தவன். அவன் எங்களுக்கு கப்பம் செலுத்தி வாழவேண்டும்’ என வெறியில் பிதற்றிக் கொண்டிருந்தான்.

நான் சாப்பாட்டு மேசையை விட்டு, றெஸ்ரோரென்றுக்கு வெளியே வந்தேன். எரிக்கும் மேரியும் என்னைப் பின் தொடர்ந்து வந்தனர்.

என்னை சாந்தப்படுத்தும் வகையில் எரிக் என் தோள்மீது ஆதரவாகக் கையை வைத்தான். ‘பன்றியுடன் சேர்ந்து மாடும் சாக்கடையில் புரளுகின்றது’ என்றாள் மேரி. எரிக் என் கைகளைப்பற்றிக் கொண்டு ‘இப்பொழுதுதான் இலங்கைப் பிரச்சனையின் முழுப்பரிணாமமும் எனக்குப் புரிகிறது’ என்றான். சாதாரண எரிக்கிற்கு சமாச்சாரம் புரிகிறது! இது சர்வதேச சமூகத்துக்கு புரியுமா…?  சில்வா பண்டா போன்று புலம்பெயர்ந்த நாடுகளிலே ‘தூது’வர்களாக வலம் வருவோரினால், சர்வதேச சமூகத்தின் அபிப்பிராயம் உருவாக்கப்படுகின்றதா? சிதைவிலிருந்து எழுந்து நிற்கும் பேர்ளின் நகர வீதியிலே, நான் இடிந்துபோய நின்றேன்.

ak105@aub.edu.lb