கோசின்ரா (கொல்கத்தா) கவிதை

1
கோசின்ரா (கொல்கத்தா) கவிதைநண்பனுக்கு நிறைய வேலைகள்
என்னுடைய காலையைப்போலத்தான்
அவனுடைய காலையும்
இளம் வெயிலால் நிரப்பட்டிருக்கும்
அவனுடைய தொடக்கமும்
என்னுடைய தொடக்கமும்
உறக்கத்திலிருந்து எழுவதுதான்
அவனுடைய கடமையும் என்னுடைய கடமையும் வேறுவேறு
வெவ்வேறு பரபரப்புகளால் மூடப்பட்டவை
நண்பன் பூப்பறித்துக்கொண்டிருக்கும் போது
நான் தூங்கிக்கொண்டிருப்பேன்
நண்பன் வேதம் ஓதிவிட்டு  யோகா செய்யும் போது
நான் என் உறக்கத்தைக்கழற்றி விடுவேன்
அவன் காயத்திரி மந்திரம் ஜெபிக்கும் போது
விடுதலை படிப்பேன்

அவனுக்காககாத்துக்கொண்டிருக்கின்றேன்
நாங்கள் ஒரே பேருந்தில் பயணிக்கிறோம்
பசிக்கும் போது
நான் விரும்பிய  உணவையே
என் நண்பனும் விரும்புகின்றான்
உணவு விடுதியிலிருந்து வெயிலுக்குள் வருகிறோம்
சத்தங்கள் சூழ்ந்துக்கொள்கின்றன
வாகனங்கள் தம் வாயிலிருந்து புகைகளாய்
அன்றைய சித்தாந்தங்களை வெளிப்படுத்துகின்றன
சித்தாந்தங்களை நன்றாக உறிஞ்சிக்கொள்கிறோம்
யாரோ ஒருவன் தொடர்ந்து
இருமிக்கொண்டிருக்கின்றான்
சித்தாந்தக்குள் பொருந்த முடியாமல்
விதவிதமான சித்தாந்தங்கள் வீதியெங்கும்
புகைந்துக்கொண்டிருக்கிறன.
உடலுக்குத்தீங்கு எனும் சிகரெட் புகை
பக்தியைச்சொல்லும் ஊதுபத்திப்புகை
கர்ம வினைகளை அகற்றும்
யாகப்புகை
கர்ப்பக்கிரகத்துக்கும் மனித வரிசைக்கும் நடமாடும்
கற்பூரப்புகை
இன்னும் ஆலைகள் கக்கும் புகை
நடைபாதையின் அடுப்புப்புகை
குப்பைகள் எரிக்கும்
சாலையோரப்புகையென வரிசை நீள்கிறது
எல்லா சித்தாந்தங்களும் புகை வடிவங்களே
வடிவங்கள் மோதுகின்றன
சிலர் கீழே விழுகின்றனர்
சிலர் தடுமாறுகின்றனர்
நாங்கள் தப்பித்து நகர்கின்றோம்
ஒரு பூங்கா இழுத்துக்கொள்கிறது
பழைய காலத்தின் சிறு கவளத்தை
என் வாயில் ஊட்டினான் நண்பன்
அவனுக்கும் என் இறந்த காலத்தின்
ஒரு துண்டை ஊட்டினேன்
இருவரும் விடை பெறுகிறோம்
அவனுக்குத்தெரியும்
அவன் புகைச்சலும்
என் புகைச்சலும் வேறு வேறு
தூக்கத்திலும் சொல்ல முடியும்
உன் நண்பன் யாரென்று கேட்டால்
தயங்காமல் சொல்லுவேன் அவனுடைய பெயரை.

gcrajendran@gmail.com