சாத்தான் வேதம் ஓதுகிறது! மகிந்த இராசபக்சேயின் வவுனியாப் பேச்சுக்கு ஒரு மறுப்பு

சாத்தான் வேதம் ஓதுகிறது! மகிந்த இராசபக்சேயின் வவுனியாப் பேச்சுக்கு ஒரு மறுப்புசிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு வரும் தமிழீழ மண்! வடக்கில் 18,000 சிங்களக் குடும்பங்கள்  குடியேற்றம்! தலைக்கு மேல் வெள்ளம்!  -  நக்கீரன் -சனாதிபதி மகிந்த இராசபக்சே பங்கேற்ற வடக்கின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று வவுனியா வைரவப் புளியங்குளம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி உரை நிகழ்த்தினார்.

1) பிரபாகரன் கேட்டதையே கூட்டமைப்பும் கேட்கிறது; வவுனியா கூட்டத்தில் மfந்த காட்டம் பிரபாகரன் அன்று கேட்டதையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று கேட்கின்றனர். புலிகள் இந்த நாட்டைப் பிரிப்பதற்குப் பேசியது போன்று இப்போது கூட்டமைப்பினரும் பேசுகின்றனர். இதனை ஒரு போதும் அனுமதிக்கமாட்டேன் என்று சனாதிபதி மகிந்த இராசபக்சே நேற்று வவுனியாவில் வைத்து தெரிவித்தார்.

பதில்: பேச்சுப் பல்லக்கு தம்பி கால்நடை என்பது போல சனாதிபதி மகிந்த இராசபக்சே  வடக்குக்குப் போகும் போதெல்லாம் சமத்துவம், சகவாழ்வு பற்றி தேனொழுகப் பேசுகிறார். ஆனால் நடைமுறையில் தமிழ்மக்கள்  இராணுவத்தால் அடிமைகள் போல் அடக்கி ஒடுக்கி  ஆளப்படுகிறார்கள். இதுதான் உண்மை.

(2) “புறம்பான ஒரு நிகழ்ச்சி நிரலைத் தயாரித்துத் தனிநாட்டை ஈழத்தை ஏற்படுத்தப் போகின்றோம் என்று இனவாதத்தைக் கிளப்பி இந்தப் பகுதியை அபிவிருத்தி செய்ய இயலாது” என்றும் அவர் கூறினார்.

பதில்: ஒரு தேர்தலுக்கும் அபிவிருத்திக்கும் தொடர்பு இல்லை. ஒரு தேர்தலில் ஆளும் கட்சிக்கு வாக்குப் போட்டால்தான் அரசு அபிவிருத்தி செய்யும் என்பது மக்களாட்சி முறைமைக்கு முரணானது. ஆனால் மகிந்த இராசபக்சேயின் ஆட்சியில் அதுதான் நடக்கிறது. தமிழர்கள் தங்கள் உரிமைகளைக் கேட்கும் போது அதனை இனவாதம் என மகிந்த இராஜபக்சே  சொல்கிறார்.  அதே சமயம் அந்த  உரிமைகளை மறுப்பது தேசியம் எனச் சொல்லாமல் சொல்லுகிறார். தனிநாடு கேட்பது வகுப்புவாதம் அல்ல. அந்த  தமிழ்மக்களது உரிமை  அந்த உரிமை தமிழர்களுக்கு உண்டு. அந்நியர் படையெடுத்து வந்த போது தமிழர்களுக்கு என ஒரு தமிழ் இராச்சியம் இருந்தது. போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர் அந்தப் பிரதேசத்தை தனியாகவே ஆட்சி செய்கிறார்கள். ஆங்கிலேயர்தான் 1833 ஆம் ஆண்டு தமிழ்ப் பிரதேசத்தை சிங்கள பிரதேசத்தோடு ஒன்றுபடுத்தினார்கள். நிருவாக வசதிக்காக அப்படிச் செய்தார்கள்.

தமிழர்கள் விட்ட பிழை என்னவென்றால் ஆங்கிலேயர் நாட்டை விட்டு வெளியேறும் போது தமிழர்களது பகுதியை தமிழர்களிடம் கையளித்துவிட்டு வெளியேறவில்லை.  தமிழர் தரப்பும் அதனைக் கேட்கவில்லை. நுனி நாக்கில் தேனும் அடிநாக்கில் நஞ்சும் வைத்துப்  பேசிய டி.எஸ். சேனநாயக்காவின் பேச்சை நம்பி  தமிழ் பிரதிநிதிகள் ஏமாந்தார்கள்.  ததேகூ தனி நாட்டை, தனி ஈழத்தை கேட்கவில்லை. அப்படியான நிகழ்ச்சி நிரல் அவர்களிடம் இல்லை.

ததேகூ ஒன்றுபட்ட இலங்கையில் தங்களைத் தாங்களே ஆளும் சுயாட்சி அரசியல் பொறிமுறையைத்தான் கேட்கிறார்கள். இன்னும் ஒரு திருத்தம். பிரபாகரன் மட்டும் தமிழீழத்தை கேட்கவில்லை. அதற்கு முன்னரே தந்தை செல்வநாயகம் தலைமையில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் வழியாக தமிழீழம் கேட்டிருந்தார்.

(3) “இந்தப் பிரதேசத்தை விடுவித்து சுதந்திரமாக இருக்கின்ற சூழ்நிலையில்தான் இந்தத் தேர்தலை நடத்துகின்றோம். உங்களுக்கு கடந்த காலச் சரித்திரத்தை நினைவுபடுத்த வேண்டிய அவசியமில்லை. நாங்கள் சனாதிபதித் தேர்தலை நடத்தினோம். நாடாளுமன்றத் தேர் தலை நடத்தினோம். பிரதேச சபைகளுக்கான தேர்தலை நடத்தினோம். இப்போது மாகாண சபைகளுக்கான தேர் தலை நடத்துகிறோம். நாங்கள் அனைவரும் சனநாயக ரீதியில் ஒருமித்து செயற்படு வதற்காக அனைவரும் முன் வரவேண்டும்” என்று தனது உரையில் கூறினார் சனாதிபதி.

பதில்:  தேர்தல் நடத்துவது மட்டும் சனநாயகம் இல்லை.  அய்நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையைக் கேட்டால் “இலங்கை சர்வாதிகாரப் பாதையில் செல்வதற்கான அறிகுறிகள் அதிகரித்துள்ளது” கடுமையாகச் சாடுகிறார். 2010 இல் சனாதிபதி தேர்தலை நடத்தினவர், நாடாளுமன்றத் தேர்தலை நடத்தியவர் மாகாண சபை தேர்தலை மட்டும் நாலு ஆண்டுகள்  ஏன் இழுத்தடித்தார்? காரணம் என்ன?  தோல்வி பயம்தான் காரணம். ஒன்பது மாகாணங்களில்  8 மாகாணங்கள் ஆளும் கட்சி வசம் இருக்கிறது. வட மாகாண சபைதான் விதி விலக்காக இருக்கப் போகிறது.  அங்கு வெல்லுவது குதிரைக் கொம்பு என்பது மகிந்த இராசபக்சேக்குத் தெரியும்.

(4) “ஏனைய மாகாணங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அத்தனை அதிகாரங்களையும் இந்த மாகாணத்துக்கு கொடுத்திருக்கின்றோம். இப்போது சிலரது தேர்தல்  அறிககையைப் பார்க்கும் போது நான்கு வருடங்களுக்கு முன்னர் பலர் கேட்டுக் கொண்டிருந்த அதே வேண்டு கோளையே இப்போது விடுக்கின்றனர்.

பதில்: கொடுத்திருக்கிறோம் என்பது பிழை. அதிகாரங்கள் அரசியல் யாப்பில் சொல்லப்பட்டுள்ளது.  அதனை நடைமுறைப் படுத்துமாறுதான் ததேகூ கேட்கிறது. அவ்வளவுதான்.

(5) உங்களுக்கு நான் ஒன்றைக் கூற விரும்புகின்றேன். நாட்டைத் துண்டு துண்டாக கூறுபோடுவதற்குப் பிரபாகரனுக்கு எவ்வாறு இடளிக்கப்படவில்லையோ அவ்வாறே எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை” என்றார் மஹிந்தா.

பதில்: நாட்டைத் துண்டு போட யாரும் கேட்கவில்லை. இப்படி வேண்டும் என்றே ததேகூ இன் தேர்தல் அறிக்கைக்குத் தவறான விளக்கம் கொடுப்பது சனாதிபதி  பதவியில் இருப்பவருக்கு  அழகில்லை.

(6) “சனநாயகத்தை மதிக்கின்ற தமிழ்தலைவர்களை ஒவ்வொருவராகக் கொன்றார்கள். எதிர்காலத்தில் அத்தகைய சூழ்நிலை ஏற்பட இடமளிக்க முடியாது. எமது அரசு இனவாதத்தை எதிர்க்கின்ற, வெறுக்கின்ற அரசு. நாம் எல்லா மதங்களையும் மதிக்கின்றோம்.

சாத்தான் வேதம் ஓதுகிறது! மகிந்த இராசபக்சேயின் வவுனியாப் பேச்சுக்கு ஒரு மறுப்புபதில்: இந்தப் புளுகு கந்தபுராணத்திலும் இல்லை.  மகிந்த இராசபக்சே அரசில் கொல்லப்பட்டவர்களது பட்டியல் இருக்கிறது. யோசேப் பரராசசிங்கம். நடராசா ரவிராஜ், தியாகராசா மகேஸ்வரன், கந்தர் சிவநாதன்…………… இந்த நாட்டில் இனவாதத்தை விதைக்கின்ற அரசு மகிந்த இராசபக்சேயின் அரசு. தமிழர், முஸ்லிம்கள், சிங்களவர் என்று அமைச்சர்கள் பிரித்துப் பேசுகிறார்கள். தமிழர்களது தொண்டைக்குள் இந்த அரசுதான் சிங்கள தேசிய கீதத்தை திணிக்கிறது. இந்த அரசுதான் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வட கிழக்கில் ஓய்வுபெற்ற  சிங்கள இராணுவ தளபதிகளை ஆளுநர்களாக, அரசாங்க அதிபர்களாக நியமித்துள்ளது. பெயர்ப்பலகைகளை தனிச் சிங்களத்தில் எழுதி வைத்துள்ளது. எல்லா மதங்களையும் மதிப்பது சரியானால் மசூதிகள், கோயில்கள், தேவாலயங்கள் மீது  பவுத்த வெறியர்கள் மேற்கொள்ளும் தாக்குதல்களை ஏன் தடுக்கவில்லை? கல் எறிந்து தாக்கிய பவுத்த பிக்குகளை ஏன் அரசு கைது செய்யவில்லை?  விக்கிரகங்களை தெருவில் போட்டு உடைக்கும் மஞ்சள் அங்கிகளை ஏன் கைது செய்யவில்லை?  வரலாற்றுப் புகழ் பெற்ற கதிர்காமம் இன்று சிங்கள பவுத்தர்களது கைக்கு மாறிவிட்டது. பவுத்தத்துக்குத்தானே யாப்பில் முன்னுரிமை. பின் எப்படி மதங்களுக்கு இடையில் சமத்துவம் நிலவும்?

(7) எல்லா இனங்களும் அவர்களுடைய கலை, கலாசார, பாரம்பரியங்களைப் பாதுகாத்து வாழ வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டியது எமது கடமையாகும்” என்றும் ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டார்.

பதில்: இது வாயளவில்தான் இருக்கிறது. திருகோணமலையில் தமிழ்ப் பெண்கள் நெற்றியில் பொட்டோடு தெருவில் போக முடியாது இருக்கிறது.

(8) “இந்த நாட்டிலுள்ள எல்லா இனமக்களும் ஒன்று சேர்ந்து நாம் இலங்கையர் என்ற அடிப்படையில் நாட்டை அபிவிருத்தி செய்ய ஒரு குடையின் கீழ் ஒன்றுபட வேண்டும். இனபேதம், மதபேதம், குல பேதம் பாராது ஒற்றுமையாகச் செயற்படவேண்டும்.

பதில்: சாத்தான் வேதம் ஓதுவதற்கும் இதற்கும் வித்தியாசமில்லை. டி.எஸ். சேனநாயக்காவும் சுதந்திரம் பெறும் முன் நாம் எல்லாம் இலங்கையர் என தேனொழுகப் பேசினார். நாடு சுதந்திரம் பெற்ற அதே ஆண்டு பத்து இலட்சம் மலைநாட்டுத் தமிழர்களது குடியுரிமையைப் பறித்தார். அடுத்த ஆண்டு அவர்களது வாக்குரிமையைப் பறித்தார். இப்படி இனிக்கப் பேசி கழுத்தை அறுப்பதில் சிங்கள அரசியல் வாதிகள் விண்ணர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

(9) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரபாகரன் அன்று சொன்ன கதையைத் தான் இன்று சொல்கிறது. புலிகள் இந்த நாட்டைப் பிரிப்பதற்குப் பேசியது போன்று இப்போது கூட்டமைப்பு பேசுகின்றது. அதில் எவ்வித அர்த்தமுமில்லை. இன்றிருக்கக்கூடிய இந்த சுதந்திரத்தை இல்லாது செய்வதற்கு எவரும் விரும்பமாட்டார்கள்.

பதில்: பிரபாகரன் தமிழ்மக்களது விருப்பத்தைத்தான் சொன்னார். பிரபாபகரனைக் கொன்றுவிட்டோம் என்று சொல்லிக் கொள்கிறீர்கள். பின் எதற்கா பிரபாகரனைப் பற்றிப் பயப்படுகிறீர்கள். பிரபாகரன், ததேகூ தலைவர்கள் தமிழர்கள் தங்களது பாரம்பரிய நிலப்பரப்பில் சுதந்திரமாகவும் தன்மானத்தோடும் வாழ விரும்புகிறார்கள் என்ற உண்மையைச் சொல்லுகிறார்கள்.  இபிடிபி ஆயுதக் குழு இதற்கு விதிவிலக்காக இருக்கலாம். இன்று சிங்களவர்களுக்கு சுதந்திரம் இருக்கிறது. தமிழர்களுக்கு சுதந்திரம் இல்லை என்பதுதான் யதார்த்தம்.

(10) நான் தென்னிலங்கைக்குப் போனால் அங்குள்ள சிறுவர்கள் தமிழ் படிக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள். அதேபோல் இங்குள்ளவர்கள் தாம் சிங்களம் படிக்க வேண்டும். அதற்கு ஆசிரியர்களைத் தாருங்கள் என்று கேட்கிறார்கள். இதுதான் இன்று மக்களின் உள்ளத்திலுள்ள கருத்து.

பதில்: ஆண்டான் அடிமையின் மொழியைப் படிப்பதற்கும் அடிமை ஆண்டான் மொழியைப் படிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. சிங்களம் படித்த தமிழனுக்கு வேலை கிடைக்கப்  போவதில்லை. தமிழ் படித்த சிங்களவனுக்குத்தான் வேலை கிடைக்கும்.

(11)இந்தப் பகுதிகளில் காணிப் பிரச்சினைகள் இருக்கின்றது. வீட்டுப் பிரச்சினை இருக்கின்றது. பிரச்சினைகள் இங்கு மட்டுமல்ல தென்னிலங்கையிலும் உள்ளன. ஏன் நாடு முழுவதிலுமே உள்ளன. இவற்றை எல்லாம் பேசித் தீர்க்கமுடியும். அதனை ஒரே நாளிலேயோ அல்லது ஒரு வருடத்திலேயோ செய்து விடமுடியாது. பல வருடங்களாக அடக்கப்பட்ட முடக்கப்பட்ட பிரச்சினைகளை நாம் மெல்ல மெல்ல தீர்த்து வருகின்றோம்.” என்று அவர் மேலும் கூறினார்.

சாத்தான் வேதம் ஓதுகிறது! மகிந்த இராசபக்சேயின் வவுனியாப் பேச்சுக்கு ஒரு மறுப்புபதில்: இல்லையே. சனாதிபதி மகிந்த இராசபக்சே பிரச்சினைகளை தீர்ப்பதற்குப் பதில் அதற்கு நெய்யூற்றி வளர்க்கிறாரே? மாகாண சபைக்கு யாப்பில் இருக்கும் காணி, காவல்துறை அதிகாரங்களைத் தரமுடியாது என்று சண்டித்தனம் பேசுவது யார்?  அப்படிப் பேசி பிரச்சினைகளை வளர்ப்பது யார்? வடக்கிலும் கிழக்கிலும் மீள்குடியமர்த்தப்படாத மக்களின் எண்ணிக்கை 93,000. கணவனை இழந்த 89,000 கைம்பெண்கள் இருக்கிறார்கள். தெற்கில் இந்தப் பிரச்சினை இருக்கிறதா?  இடம்பெயர்ந்த தமிழ்மக்களுக்கு அரசு ஒரு வீட்டைத்தன்னும் கட்டிக் கொடுக்கவில்லை. அதே சமயம் தமிழர்களுக்குச் சொந்தமான காணிகளில் 8,000 சிங்களப் போர் வீரர்களுக்கு  திருமுருகண்டியில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதே? இதற்கு என்ன காரணம்? சிங்கள – பவுத்த பேரினவாதச் சிந்தனை அல்லவா?

முடிவாக கடந்த தேர்தல்களில் மகிந்த இராசபக்சேயையும் அவரது கட்சியையும் தமிழ் வாக்காளர்கள் நிராகரித்துள்ளார்கள். இம்முறையும் இன்னும்  காத்திரமான முறையில்  நிராகரிக்க இருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என மகிந்த இராசபக்சே  ஆர அமரச் சிந்திக்க வேண்டும்.

athangav@sympatico.ca