சினிமா: தேசிய சினிமா விருதுகளும் சில சிந்தனைச் சிதறல்களும்!

விக்ரம் - சிறந்த நடிகர் விருதை பிதாமகனுக்காகப் பெற்றிருக்கிறார்.[* ‘பதிவுகள்’ மார்ச் 2005இல் வெளியான இக்கட்டுரை ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகிறது. – பதிவுகள்] இவ்வருடத்தய தாதா சாகேப் பால்கே விருது மிருனாள் சென்னுக்குக் கிடைத்துள்ளது. விக்ரம் – சிறந்த நடிகர் விருதை பிதாமகனுக்காகப் பெற்றிருக்கிறார். பாடம் ஒன்னு ஒரு விலாபம் என்ற மலையாளப் படத்திற்காக மீரா ஜாஸ்மினுக்கு சிறந்த நடிகை விருது கிடைத்துள்ளது. மிருனாள் சென்னுக்கு விக்ரமைப் போல சரியாக இருமடங்கு வயது. (விக்ரம் 1964ம் ஆண்டு பிறந்தவர். மிருனாள் சென் 1923ம் ஆண்டு பிறந்தவர்). இன்றைய வங்காளதேசத்தில் பிறந்து பின் (இன்றைய) மேற்கு வங்கத்துக்கு குடிபெயர்ந்தவர் அவர். கம்யூனிச கட்சியின் கலாச்சாரப் பிரிவில் தன்னை இணைத்துக் கொண்டு மக்களின் போராட்டங்களைத் தான் கண்ட பாதிப்பில் படங்களை எடுத்தவர் ம்ருனாள் சென். கம்யூனிச கோட்பாட்டின் வர்க்க எதிரி முறையை இந்தியக் கண்ணோட்டத்தில் எதிர் கொண்டு, ஒரே வர்க்கத்தினுள் நிலவும் முரண்பாடுகளை, எதிர் சக்திகளை மையப் படுத்தி அவர் எடுத்த படங்கள் உலகளாவிய வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. ஐம்பது வருடங்களாக தொடர்ந்து சினிமாத்துறையில் தமது பங்களிப்பை செய்திருக்கின்றார் . விருதுக்குப் பின்னும் தமது பணி தொடரும் என்று தெரிவித்துள்ளார் மிருனாள் சென்.

தாதா சாகேப் பால்கே விருது 1970ம் வருடத்திலிருந்து கொடுக்கப் பட்டு வருகிறது. இவ்விருது இதுவரை 34 நபர்களுக்கு கொடுக்கப் பட்டிருக்கிறது. மிகவும் தாமதித்தே ம்ருனாள் சென்னுக்குக் கொடுத்திருக்கின்றார்கள். சிவாஜி கணேசண் அவர்களுக்குக் கூட மிகவும் தாமதித்து 1997ம் வருடம் தான் கொடுத்தார்கள்( அதற்கு முந்தய வருடம் கன்னட ராஜ்குமாருக்கு அளிக்கப் பட்டது இவ்விருது).

தாதா சாகேப் பால்கே விருதை மிருனாள் சென்னுக்கு தந்து விட்டு பேசிய ஜனாதிபதி அப்துல் கலாம், அரசியலில் மேன்மை வரவேண்டும் (nobility in politics) என்றும், அதற்கு சினிமா உலகம் தன்னளவில் முயல வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த “அரசியலில் – மேன்மை” கோஷத்தை ரொம்ப நாளாகவே அவர் முன்மொழிந்தும் வருகிறார். அவரது கூற்றின் படி, அரசியல் மேம்பட்டால் அதன் தாக்கம் எல்லா மட்டங்களிலும் ஏற்பட்டு நாடு நலமுறும் என்பதே. விக்ரம் – மீரா ஜாஸ்மின் ஏற்படுத்திய தாக்கத்தில், விழாவை கவர் செய்த பல பத்திரிகைகள், இதை ஒரு ஓரமாகவே போட்டிருக்கின்றன. இனிப்பினூடே மருந்தாகவாவது இச்சிறு செய்தி போய்ச் சேருகிறதே அவ்வகையில் சந்தோஷம் தான்.

ஜனாதிபதி கையால் விருது வாங்கியவர்களில் தமிழர்கள் என்று பார்த்தால் விக்ரமும், ஜனநாதனும் தான். சங்கர் மகாதேவனை நாம் சொந்தம் கொண்டாட முடியாது. மீரா ஜாஸ்மின் நமக்கு அறிமுகமானவர் என்றாலும், விருது கிடைத்ததோ மலையாளப் படத்திற்காக.

விருது வாங்கியவர்களில் விக்ரமையும், இயற்கை படத்தை இயக்கிய ஜனநாதனையும் தவிர வேறு யாராவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை. 1997ல் சிவாஜி கணேசனுக்கு கிடைத்த தாதா சாகேப் பால்கே விருதும், மறுபக்கத்துக்க்காக சேது மாதவனுக்கு 1991ல் கிடைத்த தங்கத் தாமரை விருதும் தான் தமிழ்சினிமாவின் பெயரை கொஞ்சமாவது தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. சினிமா எடுப்பவர்களை விட, பார்க்கும் நம்மைப் போன்றவர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம் இது. டிமான்ட் – சப்ளை அடிப்படையில் தானே அவர்களாலும் படம் எடுக்க முடியும். கலைப்படங்களுக்கான பிரத்யேக மார்கெட் ஒன்று நம்மிடையே உருவானால் மட்டுமே தரமான தமிழ்ப் படங்கள் அதிகம் வெளிவரும் என்று தோன்றுகிறது.

மரத்தடி இணையக் குழுமத்தில் இப்போது மலையாளப் படங்களைப் பற்றிய சுவையான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நல்ல படங்களின் பட்டியலைப் பலர் எழுதியிருக்கின்றார்கள். இம்மாதிரியான வித்தியாசமான சப்ஜெக்டுகளை தமிழ்த் திரையுலகம் எப்போது கையில் எடுக்குமோ தெரியவில்லை. இம்முறை விருது வாங்கிய படங்களில் இடம் பெற்றுள்ள மலையாளப் படங்களைப் பார்க்கும் போதே பிரமிப்பூட்டுகிறது:

பாடம் ஒன்னு – ஒரு விலாபம்:
இப்படத்தில் ஒரு முஸ்லீம் பெண்ணாக நடித்ததற்காகத்தான் மீரா ஜாஸ்மினுக்கு சிறந்த நடிகை விருது கிடைத்தது. கதை இஸ்லாமிய சமூகங்களில் இருக்கும் இளைய மணம், பலதார மணம், வரதட்சினை, வளைகுடா வேலை, பெண்கல்வி, கட்டுப் பெட்டித்தனம் பற்றியது.

டி.வி.சந்திரன் இயக்கியுள்ள படம் இது.இவர் ஏற்கெனவே (1993ல்) சிறந்த இயக்கத்திற்கான தங்கத் தாமரை விருது வாங்கியவர்.

எண்ட வீடு… அப்பூண்டேயும்:
மாற்றாந்தாய் எல்லோரும் மோசமானவர்களா? இல்லை என அழகுற சித்தரிக்கும் இனிய படம். மற்றொரு குழந்தை வீட்டுக்குள் உதிக்கும் போது, அதுவரை அன்பிற்கு ஏகபோக உரிமை பெற்றிருந்த முதல் குழந்தை மனதில் கலக்கமும், களங்கமும் ஏற்படுவது நாம் எல்லாம் அறிந்த ஒன்றுதான். அந்த முதல் குழந்தையின் தாய் இறந்திருந்து, மாற்றாந்தாயின் அன்பைப் பருகி வளர்ந்த குழந்தை தவறு செய்வது இயல்பே. அதைச் சுற்றிப் பின்னப் பட்ட கதை இது. ஜெயராம் நடித்த படம். ஜெயராமின் மகன் காளிதாஸ¤க்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது இப்படத்தில் நடித்தமைக்காக கிடைத்துள்ளது.

சபலம்:
வயோதிகம், அதைச் சுற்றிய தாம்பத்ய ஸ்நேகம். இதை கருவாகக் கொண்டு எடுக்கப் பட்ட படம்.

The 18th Elephant : 3 Monologues:
மூன்று யானைகள் பேசுவது போன்று அமைக்கப் பட்ட ஒரு டாகுமென்டரி படம். நமக்கு, இயற்கையை மதிக்கவும் உயிரனங்களை நம் வசதிக்காக வேரறுப்பதையும் உறுத்துவதற்கென எடுக்கப் பட்ட படம். பாலச்சந்திரன் சுள்ளிக்காடுக்கு விருதைப் பெற்றுத்தந்திருக்கிறது இப்படம். இப்படத்திற்காக கே.ஜி.ஜெயனுக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. பாடம் ஒன்னு – ஒரு விலாபம் படத்திற்கும் இவரே ஒளிப்பதிவாளர். சுற்றுச் சூழல் பற்றிய கவலைகளை சிறந்த , நூதன முறையில் (யானைகள் மனிதக் குரலில் பேசிக் கொள்வது போன்று) எடுத்துக் காட்டியதற்காக அறிவியல்/சுற்றுச் சூழல் பிரிவில் சிறந்த படம் என்ற விருதும் இப்படத்திற்கு வழங்கப் பட்டுள்ளது. தயாரிப்பாளரும், இயக்குனருக்கும்(பாலன்) விருதுகளைப் பெற்றுத்தந்துள்ளது இப்படம்.

உன்னி:
கமலாதாஸ் எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப் பட்ட குறும்படம். குழந்தையில்லாத வசதியான வீட்டில் திடீரென ஒரு சிறுவன் முளைத்தால் என்னவாகும் என்பதை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப் பட்ட படம். ஏற்கெனவே பல விருதுகள் பெற்றிருக்கிறது.சிறந்த எடிட்டிங்குக்காக திருமதி. பீனா பால் இப்படத்தின் மூலம் ரஜத் கமல் விருதைப் பெற்றுள்ளார். இவர் ஏற்கெனவே தேசிய விருதையும், கேரள விருதுகளையும் பெற்றவர்.

வைத்திய ரத்னம் பி.எஸ்.வாரியர்:
Dr.P.S.Varier பற்றிய டாகுமென்டரி படம். ஆயுர்வேத மருத்துவமுறையை பிரபலங்களிடையையேயும், பாமரர்களிடையேயும் கொண்டு சென்ற வாரியர், கதகளியைப் பரப்புவதிலும், ஒரு நாடகக் கம்பெனி வைத்து நடத்தியும் தமது கலைச்சேவையையும் செவ்வனே செய்தவர் என்பது போன்ற தகவல்களை முன்வைக்கிறது. சிறந்த முறையில் ஒருவரது வாழ்வைச் சித்தரித்தமைக்காக இயக்குனர் கிருஷ்ணன் உன்னிக்கு விருதை வாங்கித் தந்துள்ளது இப்படம்.

An encounter with a life living:
உடலால் ஊனமுற்றிருந்தாலும், உள்ளத்தில் சோர்வில்லாத ஒரு பெண்ணின் வாழ்வைச் சித்தரிக்கும் இப்படத்தை இயக்கியுள்ள சுஜாவுக்கு இதுதான் முதல் முயற்சி. அங்கு ஒரு தொலைக்காட்சி சானலில் பணிபுரிபவராம் இவர். முதல் முயற்சியிலேயே சிறந்த கலைப்படத்திற்கான விருதை வாங்கியுள்ளார் சுஜா. இவை தவிர நெடுமுடி வேணுவுக்கும், ராஜீவ் விஜய்ராகவனுக்கும் விருது கிட்டியுள்ளது. மலையாளப் பக்கம் பார்த்துவிட்டு இந்தப் பக்கம் பார்க்கவே முடியவில்லை (நான் மீரா ஜாஸ்மினைப் பற்றிச் சொல்லவில்லை, பொதுவாகக் கூறுகிறேன்).நம் பக்கத்திலிருந்து பிதாமகனையும், இயற்கையையும் தவிர வேறு ஒன்றுமே இல்லை.  வருத்தமாய்த்தான் இருக்கிறது, திரையுலகில் காலடி வைக்க முயன்று கொண்டிருக்கும் நன்பரிடம் கேட்டால், அதற்கு காரணம் நீங்கள் தான். ஒவ்வொரு கலைஞனும் இங்கு கோடிகளையு, கொடியையும், கோட்டையையுமே இலக்காக வைத்துச் செயல்படுகிறான். எப்படி நல்ல படம் வரும் என்றார். அதுவும் சரிதான்..! அரசியலை மையப்படுத்தி தமிழில் பல படங்கள் வந்துள்ளன என்றாலும் இவை அரசியல் பற்றியல்லாது கட்சி-அரசியலையே மையப் படுத்தி எடுக்கப் பட்டிருக்கின்றன. பெரும்பாலும், ஒரு அரசியல் கட்சி சார்புடனோ அல்லது ஒரு அரசியல் தலைவர் அல்லது கட்சியைத் தாக்கி அதன் மூலமாக பிரபலம் அடைவது அல்லது பணம் பண்ணுவது அல்லது ஒர் எம்.பி அல்லது எம்.எல்.ஏ சீட்டுக்கு அடிபோடுவது இல்லையேல் கோட்டைக்கு செல்லும் வழியாக அதைச் செய்வது என்னும் அளவில் தான் தமிழ் சினிமாக்கள் அமைந்து வருகின்றன.

அரசியல் உணர்வு கொண்டிருப்பது ஒரு கலைஞனை மெருகேற்றுகிறது என்றே நான் கருதுகிறேன். ஆனால் கட்சி அரசியல் என்பது, ஒரு கலைஞனை உருத்தெரியாமல் அழித்து, அவனை துதிபாடியாகவும், தான் விசுவாசிக்கும் கட்சிகளின் பாதைக்கேற்ப சுய தணிக்கை செய்து கொள்பவனாகவும், இன்னும் சொல்லப் போனால் அரசியல் கட்சியின் துண்டுப் பிரசுர விநியோகிப்பவனாக மாற்றி விடுகிறது. மிருனாள் சென் மீது கூட இப்படிப் பட்ட குற்றச் சாட்டு இருக்கிறது. நல்ல படங்கள் எடுப்பவர்கள் இப்படி சறுக்குவது என்பது வேறு, நம்மூர் சினிமாவில் இடம் பெறும் அப்பட்ட கட்சி அரசியல் சார்புப் படங்கள்(திரையிலும், நிகழ்விலும்) வேறு. அதற்குக் காரணம் இங்குள்ள நிலைமைதான் – சுய நலத்திற்காக மட்டுமல்லாது பலவித ஆக்கிரமிப்புகளை எதிர்கொள்வதற்காகவும் ஒரு தற்காப்பு வியூகமாக கட்சி சார்பு நிலைப்பாட்டை நம் கலைஞர்கள் எடுக்கின்றனர். நடுநிலைமையுடன் இருக்க விரும்புபவர்களும், தாம் வளர்ந்த நிலையில் தமது நலன்களைக் காக்க அல்லது குறைந்த பட்சம் எதிர்வியூகம் வகுப்பவர்களிடமிருந்து தப்பிக்க இந்நிலைப்பாட்டை மேற்கொள்ள நேரிடுகிறது.

இந்நிலை மெதுவாக மாறும் என்றுதான் தோன்றுகிறது. அதன் முன்னோட்டமே அழகி, காதல் போன்ற படங்கள். அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது நம் போன்றவர்கள்தாம். சினிமா குறித்தான நமது நிலைப்பாட்டை சற்றே தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். சினிமாவை சினிமாவாகப் பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும். வேண்டுமென்றே மயக்கத்தில் ஆழ்வது அடிமை மனோபாவம். இதனாலேயே நிஜவாழ்க்கையின் அவலங்களை மலையாள சினிமாவால் வெளிப்படுத்த முடிகிறது. நம் படங்களிலோ, அவலங்களை முன்வைக்கும் போது கூட மசாலாத்தனம் தேவைப்படுகிறது. ‘அழகி’க்கு ‘குருவி கடித்த கொய்யாப் பழம்’ தேவைப்பட்டது போல.

இதெல்லாம் கூட காலனியாதிக்கக் காலவடுக்களோ என்று கூடத் தோன்றுகிறது. வெள்ளைத் தோலைக் கண்டு பிரமித்த நம் விழிகள் இன்னும் சரியான பார்வைக்கு திரும்பவில்லை. அடிமை வாழ்க்கையின் அவலங்களை மறக்கடிக்க அசாதாரண நிழலுலகம் தேவைப்படுகிறது. நிதர்சன அவலத்தை மறந்து குதூகலிக்கவென்று எடுக்கப் பட்ட  நிதர்சனத்துக்கொவ்வாத படங்கள் மவுண்ட் ரோடு கட்-அவுட்டுகள் போன்று பிரம்மாண்டமாகக் காட்சியளித்து நம்மை ஒரு மயக்கத்தில் ஆழ்த்துகின்றன. விரும்பியே இம்மயக்கத்துக்கு ஆட்படுகிறோம். சமூகத்தில் காதலும், காமமும் தேக்கமடைந்து கிடக்க, சூரிய நடிகரும்-ஜோதிமயமான நடிகையும், சினேகமான நடிகையும்-கிரிக்கெட் வீரர் பெயர் கொண்ட நடிகரும் காதலில் ஆழ்ந்து கிடக்கிறார்கள் என்று கிசுகிசு எழுதப்பட்டிருப்பதை ஊன்றி ஊன்றி படித்து மாய்ந்து போகிறோம். நம் மனதில் நாமே கற்பனையை வளர்த்து, அரிதாரம் பூசியவர்களின் மீது நம் இயலாமையின் எதிர்பார்ப்புகளைச் சுமத்தி கற்பனையில் காலம் தள்ளுகிறோம். இங்கில்லாதது அங்கிருக்கும் என நம்பிக்கையூட்டி மூன்று மணிநேர சுவனத்தை நமக்கு பரிசளிப்பதாக உறுதி செய்யும் வியாபாரிகள், நம்மிடம் இறக்குமதி செய்யப்பட்ட தொப்புள்களையும், உயரத்தையும், மூங்கில் தேகத்தையும், வெளுப்புத் தோலையும் காட்டி தரம்கெட்ட சினிமாக்களை தலையில் கட்டிவிடுகிறார்கள்.

அடிமை மனோபாவத்தாலேயே நாம் சினிமாவில் சராசரி மனிதர்களைப் பார்க்க விரும்புவது கிடையாது. கலைஞர்களை சரிக்குச் சமமாக பார்க்க விரும்புவதில்லை. ஒரு நடிகனென்றால் நம்மிடமிருந்து வித்தியாசமாய் இருக்க வேண்டும்,  நம்மைப் போலவே இருந்தால் நம்மிடம் இல்லாத ‘ஸ்டைல்’ ஆவது இருக்க வேண்டும். ‘ஸ்டைலும்’ இல்லாமல் வேறுபடுத்திக் காட்டும் அம்சங்கள் எதுவுமே இல்லாமலிருந்தால் அக்கதாநாயகன் பலநூறு வில்லன்களை நானோ செகண்டில் வீழ்த்தியாவது தனது மேட்டிமையை உறுதிப்படுத்தவேண்டும் என எதிர்பார்க்கிறோம். கலையுணர்வு கொண்டவர்கள் நமக்குத் தேவைப்படுவதில்லை. கற்பனைகளை விற்பனை செய்யும் வியாபாரிகளையே நாடுகிறோம். சுவனத்திற்கு விசா கொடுக்கும் கர்ணன்களாக அவர்களை நிறுவனப் படுத்தி, உப்பரிகையில் உயர்த்திவைத்து அவர்களை அண்ணாந்து பார்க்கவே ஆசைப்படுகிறோம். 

அரசியல் போன்றுதான் இதுவும். ஒரு மாயச்சுழலாக இது நமது சமூகத்தை உள்ளிழுத்துக் கொண்டிருக்கிறது. அறியாமையில் ஆழ்ந்திருப்போர் தம் கவலைகளை மறக்க எது நிஜம், எது நிழல் என்று பார்க்க மறுப்பவர்களாய், கோமாளிக் கூத்துகளையே நிஜமென நம்பிக் களிக்கின்றனர். அறிந்தவர்கள் தமது சுய லாபத்துக்காக இச்சுழலை ஆதரிக்கின்றனர். முக்கியமாக நாம் குற்றம் சொல்ல வேண்டியது, நமது ஊடகத்தாரையும், அறிவுஜீவிகளையும், அறிந்தும் அறியாதது போலிருக்கும் நம்போன்ற குட்டி பூர்ஷ்வாக்களையும் தான். இந்நிலையில் மலையாளப் படவுலகின் சாதனைகளைக் கண்டு ஏக்கம் கொள்ள மட்டுமே முடிகிறது.

nesa_kumar2003@yahoo.com

பதிவுகள் மார்ச் 2005; இதழ் 63