சிறிலங்கா அரசு மீது பல்வேறு முனைகளாலும் அழுத்தத்தைக் கொடுப்போம் – உலகத் தமிழர் பேரவை!

மனித உரிமை மீறல் மற்றும் யுத்த மீறல் விவகாரத்தில் சிறிலங்கா அரசாங்கம் மீது பல்வேறு முனைகளில் அழுத்தத்தைக் கொடுக்கும் நடவடிக்கையில் தாம் தொடர்ந்தும் ஈடுபடுவோம் என உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை, 16 ஒக்ரோபர் 2012 – மனித உரிமை மீறல் மற்றும் யுத்த மீறல் விவகாரத்தில் சிறிலங்கா அரசாங்கம் மீது பல்வேறு முனைகளில் அழுத்தத்தைக் கொடுக்கும் நடவடிக்கையில் தாம் தொடர்ந்தும் ஈடுபடுவோம் என உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.  சிறிலங்கா மீதான பூகோள கால மீளாய்வுக் கூட்டம் இரண்டாவது முறையாக நவம்பர் 01ல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறவுள்ள நிலையில், சிறிலங்கா அரசாங்கத்தை வலுவாக எதிர்ப்பதற்கான சந்தர்ப்பத்தை இது வழங்கியுள்ளதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். உலகத் தமிழர் பேரவையானது பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்கான தனது சொந்த அறிக்கையை அண்மையில் சமர்ப்பித்திருந்தது. “நாங்கள் பூகோள கால மீளாய்வில் பங்குபற்றியுள்ளோம். எமது தலைவரான எஸ்.ஜே.இமானுவேல் அடிகளார் வேறு சிலருடன் ஜெனீவா செல்லவுள்ளார். நானும் ஜெனீவா செல்லவுள்ளேன்” என சுரேன் சுரேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் சமூகத்தின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதை நோக்காகக் கொண்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இந்தியத் தலைமைக்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதுவும் சிறிலங்கா மீதான பூகோள கால மீளாய்வுக்கு மேலும் வலுச்சேர்ப்பதாக உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

போருக்குப் பின்னான சிறிலங்காவில் தமிழர் சமூகத்திற்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் எனக்கோரி அனைத்துலக நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர் சமூகம் பரப்புரைகள் மேற்கொண்டு வருவதாகவும், பழமைவாதக் கட்சியுடன் பிரித்தானிய தமிழ் பழமைவாதிகள் அண்மையில் இணைந்து கொண்டமையும் தமது பரப்புரைக்கு மேலும் பலம் சேர்ப்பதாக சுரேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

“சிறிலங்காவில் வாழும் தமழர் சமூகம் எதிர்நோக்கும் தேசிய பிரச்சினை மற்றும் தமிழ் மக்கள் சமமாக, கௌரவத்துடன், நீதியுடன் நடாத்தப்படல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு அரசியற் தீர்வொன்றை வழங்குவதில் இந்தியா தனது ஈடுபாட்டைக் காண்பிப்பது மிக முக்கிய விடயமாகும். இந்தியாவானது பிராந்திய வல்லரசு மட்டுமன்றி, தற்போது இது அனைத்துலக வல்லரசாகவும் வளர்ந்து வருகிறது. தமிழ்த் தேசத்துடன் இந்தியாவானது பிராந்திய ரீதியான நட்பை வளர்த்துக் கொள்வதானது அதன் பாதுகாப்புக்கு மட்டுமன்றி ஒரு உறுதியான பிராந்தியம் ஒன்றை உருவாக்குவதற்கும் முக்கியமானதாக உள்ளது” என சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்தியா சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையிலான பிரதிநிதிகளுக்கும் இந்திய உயர் மட்ட அதிகாரிகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுக்கள் தொடர்பாக கருத்துக் கூறும்போதே சுரேந்திரன் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

“தற்போதைய இந்திய மத்திய அரசாங்கமானது இன்னும் இரு ஆண்டுகளுக்குள் நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி கொள்வதற்கு தமிழ்நாட்டின் உறவைப் பலப்படுத்தி வைத்திருக்க வேண்டிய தேவையுள்ளது. இவ்வாறான சூழலில், தமிழ் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இந்திய உயர் மட்ட அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற அண்மைய பேச்சுக்கள் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது” எனவும் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

‘சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் அமைதியான சூழலில் கௌரவத்துடனும் சுயமதிப்புடனும் வாழ்வதற்கான வழிவகைகள் உருவாக்கப்பட வேண்டும் என்கின்ற நிலையிலிருந்து இந்தியா ஒருபோதும் பின்வாங்காது’ என இந்தியப் பிரதமரால் அளிக்கப்பட்ட வாக்குறுதி தமிழ் மக்களை மேலும் உற்சாகப்படுத்துவதாக உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சமூகத்தின் பிரச்சினைய அனைத்துலக அரங்கில் முக்கியப்படுத்துவதில் இந்தியாவின் பங்களிப்பு மிக இன்றியமையாத, முக்கியமான ஒன்றாக உள்ளதாக சுரேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அடிப்படையில், இந்தியா மிக முக்கிய காரணியாக உள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்காவில் தொடரப்பட்ட இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் தொடர்பாக அனைத்துலக சுயாதீன விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்துலக சமூகத்திடம் கோரிக்கை விடுவதை தமிழர் சமூகம் ஒருபோதும் கைவிடாது என சுரேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

தெற்கில் வாழும் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த மக்களும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகங்களைச் சேர்ந்த அமைப்புக்களும் தமது முயற்சிகளுக்கு ஆதரவாளிப்பார்கள் எனத் தாம் நம்புவதாகவும் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

“புலம்பெயர்ந்த மக்கள் அடிப்படையில் ஒன்றாக இணைந்து, சிறிலங்கா இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான மற்றும் யுத்த மீறல்கள் தொடர்பில் சுயாதீன, அனைத்துலக விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டு உண்மையில் அங்கு என்ன நடந்தது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்போம்” எனவும் சுரேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

“ராஜபக்ச அரசாங்கத்தின் சர்வதிகாரத்தை எதிர்ப்பதில் ஆர்வமுடன் செயற்படும் தென்சிறிலங்காவைச் சேர்ந்த தரப்புக்களுடன் இணைந்து நாம் செயற்படுவோம். சட்ட வல்லுனர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் ஊடாக சிறிலங்காவில் சிதைவுற்றுள்ள சட்ட ஒழுங்குகள் மற்றும் 18ம் திருத்தச் சட்டக் குறைபாடுகள், நல்லாட்சிக்கு ஏற்பட்டுள்ள களங்கம், ஊடக சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளமை மற்றும் நீதித்துறையில் அரசாங்கத்தின் தலையீடுகளும் அடக்குமுறைகளும் காணப்படுகின்றமை போன்றவற்றை அனைத்துலக அரங்கின் முன் கொண்டுவருவதில் தீவிர பங்காற்றுவோம்” எனவும் உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

செய்தி வழிமூலம் : The Sunday Island. By Shamindra Ferdinando
மொழியாக்கம் : நித்தியபாரதி
 

அனுப்பியவர்: சுரேன் சுரேந்திரன்
suren.surendiran@gmail.com