சிறுகதை: இரண்டு மனமில்லை

பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)என்னைக்கும் அப்படிப் பார்த்ததே இல்லை. குனிஞ்ச தலையோடுதான் காலடி வீட்ல படும். நேரா சமையக்கட்டுதான்.அங்கே வச்சிருக்கிற காசைப்பார்த்ததும் இன்னைக்கு என்ன சமைக்கிறதுங்கிறது முடிவாயிடும். மொவத்துல ஒரு அப்பாவிக் களையிருக்கும். சிரிச்ச மொவத்தோடு வீட்டுக்குள் வருவதும் போவதும் நடக்கும். ஒரு அலுப்புமில்லாம சலிப்புமில்லாம  வேலைசெய்யிற ஜீவன்தான் பாக்கியம். எவ்வளவுதான் வருத்தமிருக்கட்டுமே அதை மொவத்தில காட்டுனதேயில்லை. நானும் பாத்ததுமில்ல. முனு வருசமா பார்த்துக்கிட்டுதானே இருக்கேன்.

 எப்பவாச்சும்  நாந்தான் பேச்சுக்கொடுப்பேன். குடும்பத்தை விசாரிப்பேன். நம்மக் கஷ்டத்தை பிறத்தியாருக்குக்கிட்ட சொல்லி என்ன ஆவப்போவுது அப்படிங்கிற அழுத்தமான நம்பிக்கை அவுங்களுக்கு இருக்கலாம் இல்லையா. நமக்குத்தெரியுமா?நாமதான் என்ன செய்யப்போறோம்.? கேட்டுக்குவோம். அவ்வளவுதானே. புருஷன் எள்ளுன்னா பாக்கியம் எண்ணை ஆயிடுவாங்கலாம். எவ்வளவு சமத்தாயிருந்தாலும் புருஷனுக்கு கோவம்வந்தா சாமான்கள ஒடைக்கிறது என்னை அடிக்கிறது அவருக்குப் பழக்கம். ‘எதையுமே நான் கண்டுக்கமாட்டேன். சமைப்பேன்.சோறு போடுவேன்.அதான் என் வேலை. இரண்டு பொண்ணுக்கும் கல்யாணமாயிடுச்சு. ரெண்டு மொவனுக்கும் ஆயிடுச்சு. இப்பத்தான் ரெண்டாவது மொவனுக்குத் திருமணம் ஆனுச்சு. ரெண்டாவது மொவன் வீட்லதான் இருக்கேன்.’

இதையெல்லாம் என்னைக்கோ பாக்கியத்தம்மா எதார்த்தமா சொன்ன வாக்குமூலம். அத இப்ப அவுங்களே மறந்திருப்பாங்க. சொனக்கமா வூட்டுக்குள்ளே நொழைஞ்சதைப் பாத்தேன். அதான் இவ்வளவும்……நான் விசாரிச்சப்ப எதையும் சொல்லல. மகள்கள் ரெண்டுபேரும் அழகா இருப்பாங்க.

நூலைப்போல சேலை என்பதுபோல பாக்கியத்தைப் பாத்தவங்க அவசரமா எடுக்கிறமுடிவுதான் அது. அவுங்களுக்கு வாச்ச அழகுனால

நல்ல இடத்தில வாக்கப்பட்டுட்டாங்க. அழகு அவங்களப்பொறுத்தவரைக்கும் ஆபத்தில்ல. அனுகூலமா அமைஞ்சுப்போச்சு. வூட்டுக்குவந்த மருமவளும் அழகாத்தான் இருப்பா. அவளும் ஒரு நல்ல இடத்தில வேலைக்குப்போறா. மகனுடைய நண்பர்கள் சரியில்லை.

அவனுக்கு அப்பாவைப்போல குடிபழக்கமுண்டு. மவன்ங்கிறதினால் அவன ஒசத்தியா பேசமுடியாது. அவனோட அப்பாகுணம் அப்படியே இருக்கு. அடிக்கடி மருமவளோட சண்டைபோடுவான்.எனக்குத்தான் கஷ்டம். நான் என்ன பண்றது?

ஒரு பேத்தி. செல்லமான பேத்தி. அதுவும் மொவன்வீட்டுப்பேத்தி.  பாட்டி  வரும்போதெல்லாம் பாட்டியோட வரும். ஆனால் கையில் எதையும் எடுக்காது. இந்த தகவல்கள் எல்லாமே நான் பார்த்தும் , பாக்கியம் அம்மாசொல்லியும் தெரிந்துகொண்டவை.

வீட்டுச்சமையலுக்குப் பழக்கப்பட்டவர்கள் உணவுக்கடையில் சாப்பிடுறது கஷ்டம். காசுக்கும் நட்டம். ஒடம்புக்கும் நட்டம். அருமையா பாக்கியம் சமைப்பாங்க. காரக்குழம்பு அவருக்குக் கைவந்தகலை.  காசாசையே இல்லாதவங்கதான் பாக்கியம்.

துணியைத் துவைக்கும்போது என் சட்டையில் சிலவேளை பணம் அப்படியே இருக்கும். எடுக்க மறந்துவிடுவேன்.  அந்த அம்மாவும் அப்படியே துணியைச் சரிபாக்காம துவைச்சு காயப்போட்டுடுவாங்க. இது பல முறை நடந்திருக்கு.

சில நேரம் சாப்பாட்டுக்கு காசு வைக்காம மறந்துட்டு அலுவலகம் போனதுண்டு.

அலசிப்போட்ட துணியிலிருந்துகூட பணத்தையெடுத்து காயப்போட்டு சமையலுக்குச் சாமான்வாங்கி சமைச்சிருக்காங்க.  அப்படியொரு பொறுப்பான அப்பாவி பாக்கியம். சமீபத்தில்தான் பாக்கியம் வீட்டுக்காரரு இறந்துட்டாரு. கண்ணம்மா பேட்டையில்தான்

எரியூட்டினாங்க. நானும் கலந்துக்கிட்டேன். ரெண்டாவது மகனோடதான் பாக்கியம் இருக்காங்க. அடிக்கடி ரெண்டு மவளும் வந்து பாக்கியத்தை அழைச்சுக்கிட்டு போவாங்க. மகள்களோட மகிழ்ச்சியா வீதியில போறதைப்பாத்திருக்கேன். சிலநெரம் முதல் மருமவளோடு போறதையும் பாத்திருக்கேன். முதல் மருமவளும் பாக்கியத்தின் மகளைப்போலவே சாயல்.

‘அவளும் மவளைப்போலவே இருப்பா’ என்று பாக்கியம் வாய்நிறைய மகிழ்ச்சியா சொல்லுவாங்க.

எதையும் எதிர்பார்க்காத பாக்கியத்திற்கு வாழ்க்கை சிரமமில்லாமல் கழிகிறது என்றுதான் சொல்லவேண்டும். எதையும் பெரிசுபடுத்த மாட்டாங்க. பெரிசுபடுத்தத் தெரியாது. ஒருநாள்தான் அப்படி ரொம்ப  வாட்டத்தோட இருந்தாங்க. எனக்கே கஷ்டமாக இருந்திச்சு.

‘என்ன ஆச்சு?’ என்று என்னையே கேட்கவச்சுட்டாங்க.

பாக்கியம் வருத்தத்தோடு சமைச்சா சமையலும் என்ன ஆவுமோ அப்படிங்கிற எண்ணத்துல ‘ என்ன ஆச்சு? சொல்லுங்க. ஏன் இப்படி இடிஞ்சுபோயிருக்கீங்க?” ன்னு கேட்டேன்.

‘எல்லாம் மருமவ தொல்லைதான்’.

பொதுவாக மாமியார்தொல்லைதான் எல்லாவீட்டுலயும்.

இங்கே மருமவ தொல்லை. குடும்பம்னா மருமவளோ மாமியாளோ தொல்லைப்படுறதும், தொல்லைப்படுத்துறதும் சகஜம். பாக்கியம் விதிவிலக்கல்ல.

முதல் மருமவளா?ன்னு கேட்டதுக்கு, “இல்லை. இரண்டாவது மருமவ.  ‘சமைக்கவே தெரியல. கத்துக்கிறதுமில்ல. என்னைப்போயி வேலைவாங்குறா. நான்தான் எல்லாவேலையும் செய்யுறேன். எதுக்கெடுத்தாலும் சிடுசிடுன்னு விழுறா.
மவன் வீட்டுக்குப்போவப்போறேன்” ன்னாங்க.

“இப்ப இருக்கிறதும் மவன் வூட்டுலதானே?.”

“இது ரெண்டாவது மவன் வீடு.”

“அப்புறம் ஏன் மவன் வீட்டுக்குப்போகப்போறேன்னு சொல்றீங்க?”

“அதுவா…அது.. வளர்ப்புமவன் வீடு..”

‘இது மருமவளுக்குத்தெரியுமில்லே?’

“தெரியும். தெரியும். எந்தவித்தியாசமும் நான் பாக்கிறதில்ல. அவதான் நடந்துக்கத்தெரியாம நடந்துகிறா. மவளுவ கெஞ்சுறாங்க. ஏம்மா இப்படி கஷ்டப்படுறே. என் வீட்டுக்குவா நல்லாவச்சுக்கிறேன். அருமைதெரியாதவளுக்கிட்டே இருந்துக்கிட்டு எதுக்கு இந்த அவதிப்படுற. புரிஞ்சவளா இருந்தா உன்ன எப்படி வச்சுக்கணும்?அவ புரியுறதெப்போ? நீ நல்லாயிருக்கிறதெப்போ? கோபிச்சுக்கிட்டாளுங்க. நான்தான் சரி கெடக்கிது. திருந்தாமயா போயிடுவா?” வேதனையை வெளிக்காட்டாமே  சமையலில் ஈடுபட்டாங்க பாக்கியம்.

எனக்குள் கொஞ்சம் அச்சம்தான். இன்னைக்கு சமையல் எப்படி இருக்குமோ. எதையோ நெனைச்சுக்கிட்டு எதையோ செஞ்சிட்டாங்கன்னா என்ன செய்யுறது. சாப்பிட முடியுமா?

சின்ன உறுத்தலோடு நேரம் ஓடிக்கொண்டிருந்தது.

சமைச்சு முடிச்சு வெளியேறும்போதுதான் முகத்தில இருந்த இறுக்கம் மறைஞ்சிருந்தது.

பழையமுகம் திரும்பிவிட்டது.

இருள் சூழ்ந்தமுகத்தில் இப்போ ஒரு வெளிச்சம். சுமையை இறக்கியதும் அதே பழைய பாக்கியம்….

சமையலுக்குக்கூட கேட்டச்சம்பளம் குறைவுதான். அந்தச்சம்பளத்தில வேறயாரும் சமைக்கவரமாட்டாங்க. சம்பளத்தைப்பத்தி கேட்டதே இல்லை. நாந்தான் சம்பளத்தைக்கூட்டிக்கொடுத்தேன்.

வர்றதும் போறதும் தெரியாம வீட்டுவேலயமுடிச்சுத்திரும்புறது பாக்கியம் அம்மாவோட பழக்கம். ஆனால் கொஞ்சம் சிக்கனம் தெரியாதவங்கதான். தாராளமா சமைச்சுடுவாங்க. இதுதான் அவுங்கமீது நான் கண்ட அதிகபட்ச குறை. குறையும் இல்லாம கோபமும் இல்லாம  நெறஞ்சமனசோடவாழும் பாக்கியம் எங்களுக்கு உதவி செய்வது நாங்க செஞ்ச பாக்கியம். அன்னைக்கு அவுங்களோட முவத்துல தெரிஞ்ச வருத்தம்தான் இவ்வளவையும் நெனைச்சுப்பாக்க வச்சிடுச்சு. பாக்கியம் வாடியிருந்ததைப்பாத்துத்தான் எனக்கும் மனசு வாடிப்போனிச்சு.

எல்லாத்தையும் முடிச்சுட்டு  போய்வாறேன்னு பாக்கியம் சொன்னபோது “ ஆமா. நீங்க சொந்தமவன் வூட்டுலே இருக்கலாம்லே! எதுக்கு வளர்ப்புமவன் வூட்டுலே இருக்கீங்க?”ன்னு ஒரு கேள்வியைக் கேட்டேன்.

அதற்குப்  பாக்கியம் சொன்னார்  “பெத்தாலும் ஒண்ணுதான்.வளத்தாலும் ஒண்ணுதான்

elango@mdis.edu.sg
************************