சிறுகதை: ஒருநாள் ,ஒரு பொழுது!

 கமலாதேவி அரவிந்தன் -கைகள் கட்டவிழ்க்கப்பட்டிருந்தாலும், பின்புறம் மடிந்த கைகளுடன் குந்த வைத்த நிலையில் அமர்ந்திருந்த செங்கோடனுக்கு உடம்பெல்லாம் அப்படி அதிர்ந்து கொண்டிருந்தது. யாரையும் நிமிர்ந்து பார்க்கவே அவனுக்கு கூசியது. அப்படி துக்கத்திலும் அவமானத்திலும் உறைந்து போயிருந்தான். நினைக்க நினைக்க ரோமக்கால் சிலிர்த்து, முக்கால் ஜடமாக, முழுமூடனைவிடக் கேவலமாகத் தன்னை உணர்ந்தவனுக்கு அழுகை கூட மரத்துப்போயிருந்தது. என்னென்ன கற்பனைக்கோட்டையில் ஆசை ஆசையாய் சிங்கப்பூருக்கு வந்தான். தான் பிறந்து வளர்ந்த மண், தான் பன்னிரண்டு வயதுவரை படித்த மண், என எட்டு ஆண்டுகட்குப்பிறகு சிங்கப்பூருக்கு வந்தவனுக்கு சிங்கப்பூர் விமான நிலையத்தில் கிட்டிய அதிர்ச்சி அவன் சற்றும் எதிர்பாராதது.செல்லில் இருந்த மற்ற மூவரும் செங்கோடனை அணுகி விசாரிக்க முற்பட்டபோது இவனின் கடுத்த மெளனமே அவர்களை வெருட்டியது,” ஹ்ம்ம், என்னமோ இவனுக்குத்தான் துக்கமாம், சரிதான் போடா, அவனவன் பாடு அவனவனுக்கு.‘

 அவர்களும் பிறகு இவனை சீந்தவில்லை

அதற்குள் தட்டில் சாப்பாடு சிறைக்காவலர் கொண்டுவர மற்ற மூவரும் இருந்த பேய்ப்பசிக்கு ஆவலாய் சாப்பிடத்தொடங்கினார்கள்..   தன் உணர்வு பெற்றபோதுதான் செங்கோடன் தன் முன்னால் வைக்கப்பட்டிருந்த உணவையே  பார்த்தான்.சோறும் சைவரும், மீன் துண்டும்  என பார்த்தபோது, அதுவரை வராத அழுகை அப்பொழுதுதான்  முட்டிக்கொண்டு வந்தது. இது கெம்போங் மீன், இந்த மீனை அவன் தொடவே மாட்டான். அய்யா பார்த்துப்பார்த்து, சந்தையில் போய் மீன் வாங்கிவர அம்மா அரைத்துக் கலக்கி, அத்தனை பக்குவமாய் சமைத்து, கிட்டத்தட்ட ஊட்டாத குறையாக,அள்ளி அள்ளி தட்டில் போடும்  மல்லிப்பூசாதமும் வெஞ்சனமும் நினைவுக்கு வர,அத்தனை நேரமும்அடக்கிவைத்த துக்கம் கட்டுப்பாட்டையும் மீறி பொலபொலவென்று கண்ணீராய் வழிந்தோடியது. செங்கோடனின் அப்பா ராமநாதன் தேனீக்குப் பக்கத்தில் உள்ள கிராமமும் அல்லாத டவுனும் அல்லாத ஒரு கிராமத்தைச்சேர்ந்தவர்.பிழைப்புக்கு சிங்கப்பூருக்கு வந்ததென்னவோ உண்மையே என்றாலும்,செங்கோடனுக்கு வயது பனிரண்டாகும்போது அவருக்கு ஊரில் போய் செட்டிலாகிவிடவேண்டுமென்ற ஆவல் மேலோங்கிவிட்டது. அதற்கு முதல் காரணம் பதினாறு வயதுக்குள் இங்கு பிள்ளைகள் தேசியசேவைக்கு போயாகவேண்டும். தேசிய சேவை செய்வதொன்றும் அப்படி லேசுபாசு அல்ல.

எத்தனையோ பிள்ளைகள்  சேவை செய்யமுடியாமல் பாதியிலேயே ஓடிவரவும் முடியாமல், கஷ்டப்படுகிறார்கள் என்று யாரோ சொல்லக்கேட்டு, அந்த சமயத்தில் தமிழ் நாட்டிலிருந்து சிங்கப்பூரில் பிழைப்புக்கு வந்த பலரும், ஆண்பிள்ளைகளை ஊருக்கு அனுப்பிவிட்டு, அவர்கள் மட்டும் இங்கிருந்து உழைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் ராமநாதன் அவர்களையும் விட ஒரு படி மேலே போய், அவரும் மனைவியும் கூட மகனோடு ஊரிலேயே போய் செட்டிலாகிவிட முடிவெடுத்தார்கள். ”புள்ளைய ஊரில விட்டுட்டு அப்படியென்ன சிங்கப்பூரில சொகுசு நமக்கு வேண்டியிருக்கு, “ .மனைவி செண்பகத்துக்கு ஒருநாள் கூட செங்கோடனைப் பிரியமுடியாது. பின்ன என்ன, கலயாணமாகி எட்டு வருஷங்களுக்குப்பிறகு பிறந்த பிள்ளையல்லவா? கிராமத்தில் போய் குடித்தனம் தொடங்கியபோது  ஊரே கொண்டாடியதென்ன? வாழ்ந்த வாழ்க்கை என்ன? டீக்கடைப் பக்கமாக அய்யாவோடு வரப்புக்கு நடக்க முடியுமா?

”பெசல் டீய் சிங்கப்பூர் மச்சானுக்கு, அட, மாப்பிள என்ன தயங்கறாரு ? சீமையிலிருந்து வந்த தம்பிக்கு வெக்கமாட்டு!“ வலுக்கட்டாயமாக கூப்பிட்டு உட்காரவைக்கும் முத்தண்ணனுக்குப் பயந்தே அவன் அய்யாவோடு வரப்புக்குப்போகவே பயப்படுவான். அட, கீரை விற்க வரும் பொம்பள ராமதிலகமே ”சிங்கப்பூரு அக்கா கையால முதல் போணி ஆனாத்தான்,  எனக்கு ரெண்டு காசு குலுங்கும், ”என்று இடுப்பிலிருந்து,ஒரு சாக்குக்கலர் மணிபர்சை திறந்து காட்டும்.அம்மா கீரை வாங்குவதோடு விடுவதில்லை.

ராமதிலகத்துக்கு சூடா ரெண்டு தோசயும், தேங்காச்சட்டினியும் வைத்தே கொடுக்கும். அதுபோலவே கொல்லையில் மண்சுவர் எழுப்ப வந்த காசாண்டியை, ”சாப்பிட்டியா தம்பி,” என்று அய்யா பரிவோடு கேட்க, பெரியதனக்கார வீட்டு ஆளுங்க யாருமே, இதுவரை இப்படி  , தம்பி, என்றழைத்ததில்லையே, என்று சிலிர்த்துப்போய் நிற்பான் காசாண்டி. ஏன், வயல்காட்டில் வேலைக்கு வரும் பொம்பளைகளுக்கும் கூட மதியம் சாப்பாடில் காய் போட்டுத்தான் குழம்பு கொடுக்கணும், பாவம் இல்லையா? அவுங்களும் மக்க மனுசங்க தானே ! ஊட்டப்பிறையிலேயே ஓசிச்சோறு என்ன கசக்கவா செய்யும்? சிங்கப்பூர் அக்கா, சிங்கப்பூர் மச்சான், சிங்கப்பூர் மாப்பிள,என்று பார்ப்பவர்களெல்லாம் கையெடுத்துக்கும்பிடாத குறையாக கொண்டாடியதில் , சிங்கப்பூரை விட்டு ஊருக்கு குடிபெயர்ந்ததில் எந்த வருத்தமுமில்லை. அட, சிங்கப்பூரில் எந்தப்பய நம்மளைக் கண்டா வேட்டிய மடிச்சுக்கட்டி, நமக்கு இப்படி ஒய்யாரம் காட்டியிருக்கிறான்?
பள்ளிக்கூடத்திலயும் சரி, அக்கம்பக்கத்திலயும் சரி,.ஒரு நல்லது கெட்டதுன்னா, இப்படி ஊரே திரண்டு வந்து விசாரிக்கற பாசநேசம் எங்கே கிடைக்கும்? ஒரு தடவ அப்படித்தான் செங்கோடனுக்கு லேசா காயாலா உடம்பு அப்படி சுட்டது.அம்மா தொட்டுப்பாத்துட்டு, சிங்கப்பூரிலிருந்து கொண்டுவந்த யூக்காலிப்ஸ் தைலத்தை நெத்தியிலயும்,கழுத்து, நெஞ்செல்லாம் தடவிட்டு, ரெண்டு சிங்கப்பூர் பெனடோலையும் கொடுத்ததுதான் தெரியும்.கொஞ்ச நேரம் தூங்கி எழுந்ததும் உடம்பு சட்டுனு நல்லாயிடுச்சி.அதுக்குள்ளே எதிர்வீட்டு அத்தை, பக்கத்துவீட்டு பஞ்சாட்சரம் மாமா, ஊர்க்கோடியிலிருக்கற லேடி மாமா வரை , எல்லோருமே, வீட்டுக்கூடத்தில நிரம்பிட்டாங்கன்னா பாருங்களேன்.

அம்மாதான் எல்லோருக்கும் எலுமிச்சை ஜூஸ் போட்டுக்குடுத்திச்சு. சாதி சனம்னா என்ன சும்மாவா? எல்லாமே நல்லாத்தான் போய்க்கிட்டிருந்தது, அய்யா சீனித்தண்டு சித்தப்புவுக்கு, ஜாமீன் கையெழுத்துபோட்டு, பெருந்தொகைக்கு கையெழுத்து போடப்போக, சித்தப்பு, மூணாம் மாசமே மாரடைப்பில் பட்டுனு போயிட, பிறகுதான் பிடிச்சது பீடை.சித்தப்புவுக்கு கழுத்து மட்டும் கடன்.வீட்டைக்கூட அடமானத்தில் வைத்து தின்றிருக்கிறார். ஆனால் விழுந்தது கத்தி ராமநாதனின்  உட்கழுத்தில், . அவ்வளவுதான், சாப்பாட்டுக்கான வயலை மட்டும் வச்சுக்கிட்டு, மத்தஎல்லாம் வித்துக்கொடுத்தும் கடன் கொடுத்த புண்ணியவான் ராமநாதனைவிடவில்லை,. ஜாமீன் கையெழுத்து போடும்போது, வாயெல்லாம் பல்லாய் சிரித்த முகம் கர்ண கடூரமாய் பணத்துக்கு கிட்டி போட்டதில், ராமநாதன் சுக்கு சுக்காய் சிதறிப்போனார். அப்படிப்பட்ட அவமானம் அவர் அறியாத ஒன்று.அவ்வளவு பெரிய தொகைக்கு என்ன செய்ய ? மகனின் எதிர்காலத்துக்காக வைத்திருந்த பணத்தையே துடைத்துப்போட்டுக்கொடுக்க வேண்டிய நிலை. பிறகுதான்  செண்பகத்துக்கு மனநிலை பிழறியது, பித்துப்பிடித்தாற்ப்போல் நாள்கணக்கில் பேசாமல் சாப்பிடாமல் இருந்தாள். தூங்கவே மறுத்தாள். விடிய விடிய
தூங்காமல் விழித்துக்கொண்டிருப்பது வழக்கமாகிப்போனது. மலட்டுக்கணங்களின் துவர்ப்பு தாங்காமல் மெளனத்தில் உறைந்து கிடந்தாள் செண்பகம். அப்படி பார்த்துப்பழகிய அசட்டையில் ராமநாதன் ஒருநாள் தூங்கிப்போக, விடிந்து பார்த்தபோது அவள்: கிணற்றில் பிணமாக கிடந்தாள்.

அதற்குப்பிறகு வந்துபோன நாட்கள் சோகத்தின் எல்லையைத்தொட்டது.பணமிருந்தபோது, விழுந்து விழுந்து உபசரித்தவர்களும், வலிய வந்து உறவு கொண்டாடியவர்களும் திரும்பியும் பார்க்கவில்லை. யாரிடமும் போய் சோகம் சொல்லவும் ராமநாதனுக்கு பிடிக்கவில்லை.
இந்த நேரத்தில் தான் சிங்கப்பூரிலிருந்து வந்த நண்பர் சுப்பையா , ”பேசாமல் இவனை சிங்கப்பூருக்கே அனுப்பி வையி, அங்கே ஏதாவதொரு வேலையில சேந்து அவன் முன்னுக்கு வருவான், நான் பாத்துக்கறேன் , “ என்று ஆறுதல் கூற, எதையுமே யோசிக்கவில்லை. அப்படி புறப்பட்டு வந்த செங்கோடனைத்தான் விமான நிலையத்திலேயே காவல் அதிகாரிகள் கைது செய்தனர்.
தேசிய சேவை செய்யாமல் , நாடு விட்டுப்போன செங்கோடன், அரசு அனுப்பிய கடிதங்களுக்குக்கூட பதில் அனுப்பாத குற்றத்துக்கும், இன்னும், என்ன சொல்ல ?

– விக்கித்துப்போய் நின்ற செங்கோடனால் பேசவே முடியவில்லை.

செங்கோடன் தேசிய சேவை செய்யத் தயாராகவே வந்திருந்தான். வந்த உடனேயே தானே போய் அரசு அலுவலகத்தில்  பதிவு செய்யவும் கூடத்தயாராகவே இருந்தான். ஆனால் சிங்கப்பூருக்கு வரும் முன்னர் அரசாங்கத்துக்கு ஒரு மடல் அனுப்பி முறைப்படி செய்யவேண்டிய  ஆவண செயல்பாடுகளில் செயல்பட்டிருந்தால் நிச்சயம் அவன் கைது செய்யப்பட்டிருக்க மாட்டான்.ஆனால் யார் இருக்கிறார்கள் உதவ ? அல்லது  செய்முறையைச் சொல்லிக்கொடுக்கவாவது, அந்த கிராமத்தில், யார் இருந்தார்கள்? விமான நிலையத்திலிருந்து நேராக கெண்டமின் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தபோது அவன் வெளுத்துச் சுன்ணாம்பாகியிருந்தான். மறுநாள் காலையில் கோர்ட்டில் ஆஜராகப்போகும்போது, விரக்தியின் எல்லையில் செங்கோடன் பெரிய சிறைச்சாலைக்குப்போகும் உறுதியைப் பெற்றிருந்தான்.
ஆனால் கோர்ட் வாசலிலேயே, ”தம்பீ, செங்கோடா, அப்படி உன்னை விட்டிடுவோமா, ” என்று கட்டைக்குரலில் பாய்ந்து வந்து அணைத்துக்கொண்டார்  சுப்பையா. அவருடன் அப்பாவின் மற்ற இரு நண்பர்களும் கூட வந்திருந்தார்கள்.  தேசிய சேவை செய்யவே வந்திருக்கிறேன், என்று கணீர்க்குரலில் செங்கோடன் கோர்ட்டில்  சொல்ல தண்டனைப்பணம் மூவாயிரம் கட்டிவிட்டு,சுப்பையா கையோடே தன் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார்.அந்த ஒரு நாள் ஒரு பொழுதை வாழ்நாளில் அவனால் மறக்கவே முடியாது.

டெப்போ ரோட்டிலுள்ள மத்திய ஆள்வளத்தட அலுவலகத்துக்கு முன்னால் வந்து நின்றபோது, தன்னைப்போலவே  அங்கு குழுமியிருந்த பல இளையர்களையும் பார்த்தபோது செங்கோடனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. கவலையில் நின்ற  பெயர் தெரியாத ஒரு சீன நண்பன் இவனைப்பார்த்து நேசத்தோடு சிரித்தான், “உனக்கு பயமாக இல்லையா? “ என்று சீனநண்பன் கேட்க, தாய் மடியில் கிடக்க என்ன பயம் ? என்று துணிந்து அவன் சொல்ல, தேசிய கீதம் ஒலித்தது. பூலாவ் தெக்கோங் கேம்பில் விடியல் காலையிலேயே எழுந்து பயிற்சி செய்யும்போதும் சரி, சாஜன் கட்டளைப்படி மற்ற பயிற்சிகள் செய்யும்போதும், செங்கோடன் மனதில் இருந்த ஒரே எண்ணம் ,தேசிய சேவை முடிந்த கையோடு அப்பாவை எப்படியும் சிங்கப்பூருக்குக் கொண்டு வரவேண்டும்.இனி வாழ்வும் சாவும் இந்த மண்ணில்தான். அதற்கு ஊழித்தாண்டவமே வந்தாலும் மன உறுதியோடு எதிர்த்து நிற்பேன், ஏன் தெரியுமா? நான் சிங்கப்பூரியனாக்கும்.! செங்கோடன் திடலில் வேகமாக ஓடிக்கொண்டிருந்தான்.

kamaladeviaravind@hotmail.com