சிறுகதை: ஒரு மனிதன் பல கதைகள்!

கே.எஸ்.சுதாகர்மனோகரன் மாலை நேரங்களில்தான் அங்கு போவான். விரிவுரைகள் இல்லாத புதன், வியாழன் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவனுக்கு அங்கு வேலை காத்திருக்கும். பெரியதொரு வளவிற்குள் அந்த வீடு தனிமையில் இருக்கும். காரை கேற்றுக்குச் சமீபமாக நிறுத்திவிட்டு கொழுவியிருக்கும் கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே போனால், முற்றத்திலே சாய்வணைக்கதிரையில் சரிந்தபடி ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு நியூமன் இருப்பார். நியூமன் (Robert Newman) ஒரு வெள்ளைக்காரன். கேற்றிலிருந்து வீட்டின் வாசல்வரை செல்லும் பாதையின் இருமருங்கிலும் அழகாக புல் வெட்டப்பட்டிருக்கும். சாய்வணைக்கதிரைக்குப் பக்கத்தில் ஒரு குட்டி மேசையும், இவனுக்கான கதிரையும் இருக்கும். மேசைக்குக்கீழே விரிக்கப்பட்டிருக்கும் பொலித்தீன் கடதாசி மீது சில தட்டுமுட்டுச் சாமான்களுடன் நாலைந்து புத்தகங்களும், அன்றைய புதினப்பத்திரிகையும் வாசிப்புக்காக இருக்கும். இன்று நியூமனைக் காணவில்லை. மனோகரனுக்கான கதிரை போடப்பட்டிருந்தது. தயங்கியபடியே அதற்கண்மையில் போய் நின்று, சுற்றுமுற்றும் பார்த்தான். வீட்டுக்கதவு திறந்து கொண்டது. நியூமன் வெளியே வந்தார். இவனுக்காகவே ஜன்னலிற்குள்லால் பார்த்துக் கொண்டு நின்றிருப்பார் போலும்.

“அமருங்கள். சீக்கிரம் வந்து விடுகின்றேன்” சொல்லிக்கொண்டே மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தார் நியூமன். 

நியூமனிற்கு வாசித்துக் காட்டுவதுதான் மனோகரனுடைய வேலை. இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்கள் வாசிக்க வேண்டும். தொடர்ச்சியாக வாசிக்க வேண்டும் என்பதில்லை. பலதும் பத்தும் இடையிடையே கதைத்துக் கொள்ளுவார்கள். பத்திரிகையை எடுத்து தலைப்புச்செய்திகளைப் படிப்பான். நியூமனிற்குப் பிடித்திருந்தால் அந்தப்பகுதியை முழுவதும் வாசிக்க வேண்டும். இல்லாவிடில் அடுத்த தலைப்பிற்குத் தாவி விடுவான். பத்திரிகை முடிந்து நேரம் இருந்தால் இலக்கியப்புத்தகங்கள் வரலாற்றுநூல்கள் படித்துக் காட்ட வேண்டும். 16ஆம் 17ஆம் நூற்றாண்டு காலத்திற்கு அவர்களின் உரையாடல் போய் வரும். நியூமனிற்கு புனைவு இலக்கியம் (fiction) பிடிப்பதில்லை. அபுனைவு இலக்கியத்தில்தான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்பார்.

மனோகரனின் ஆங்கில உச்சரிப்பு அற்புதம் என்று சொல்லுவார். மனோகரன் அவுஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த காரணத்தால் ஆங்கிலத்தை சரளமாக எழுதவும் பேசவும் முடிகிறது.

ஆனால் அவனின் தாய்மொழி தமிழ்? கேள்விக்குறியாகிவிட்டது.

சிறுவயதில் நான்கு வருடங்கள் மனோகரன் தமிழ் படித்தான். தமிழ் படித்த போது புதிய எழுத்துகள், செய்திகளை அறிந்து கொண்டான். 4ஆம் வகுப்பு வரை சென்ற அவனை தொடர்ந்து கூட்டிச் செல்ல பெற்றோருக்கு வசதி வரவில்லை. இப்போதும் இனிமையாகத் தமிழ் கதைப்பான். ஆனால் சரளமாக எழுதவோ வாசிக்கவோ அவனால் முடியாது. சிட்னியில் இருப்பதுபோல மெல்பேர்ணில் எந்தவொரு அரச பாடசாலையிலும் தமிழ் சொல்லிக் கொடுப்பதில்லை. சனி ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் கொம்மியூனிற்றிக் கிளாசிற்குப் (Community class) போய்தான் படிக்க வேண்டும்.

அந்தப்பெரிய பங்களாவில் நியூமன் மாத்திரமே இருந்தார். அவரின் மனைவி இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. நியூமனிற்கு மூப்பு காரணமாக கண்பார்வை குறைந்திருந்தாலும் தனக்குரிய வேலைகளைத் தானே செய்து வருகின்றார். மனோகரன் அங்கிருக்கும் சிலதருணங்களில் ஒரு வைத்தியர் அங்கு வந்து போவதைக் கண்டிருக்கின்றான். தவிரவும் அருகே இருக்கும் நண்பர் ஒருவர் கடையில் சில பொருட்களை வாங்கி வந்து கொடுப்பார், நியூமனுடன் உரையாடுவார்.

சிலவேளைகளில் வாசிப்பிலும் நியூமன் ஆர்வம் காட்டமாட்டார். மனோகரனுடன் கதைத்துக் கொண்டிருப்பதைத்தான் பெரும்பாலும் அவர் விரும்புகின்றார். தனிமையில் இருப்பவருக்கு மனோகரன் ஒரு நண்பன்.

மனோகரன் கடந்த இரண்டு மாதமாக இங்கே வந்து போகின்றான். அவனுக்கு முதல் ஒருசிலர் அங்கே வந்து போயிருக்கின்றார்கள். அவர்கள் பற்றுதலுடன் வேலை செய்யவில்லை. காசிலேதான் குறியாக இருந்தார்கள். மனோகரன் நியூமனை எப்படிச் சந்தித்தான் என்பதை உங்களுக்கு சொல்ல வேண்டும். பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது சில பகுதி நேர வேலைகளுக்கு மனோகரன் போவதுண்டு. அப்படித்தான் ஒருநாள் அந்த விளம்பரத்தைப் பார்த்தான். ‘ஆங்கிலம் நன்கு கதைக்க வாசிக்கத் தெரிந்த ஒருவர், வாரத்தில் 3 அல்லது 4 நாட்களுக்கு தேவை.’ இதுதான் மனோகரன் பார்த்த விளம்பரம்.

“இன்று நான் ஹொஸ்பிற்றல் போயிருந்தேன். வரும்போது நூல்நிலையம் சென்று வந்ததால் நேரம் பிந்திவிட்டது” என்று சொல்லிக்கொண்டே நியூமன் வந்து தனது இருக்கையில் அமர்ந்தார். வழமைபோல வாசிப்பு ஆரம்பமாகியது. சற்று நேரத்தில் கீழே குனிந்து, அடுக்கி வைத்திருந்த புத்தகங்களில் ஒன்றை எடுத்தார். கண்ணை அகலத்திறந்து ஒருசேர உற்று அதைப் பார்த்தார். புத்தகத்தின் விளிம்பில் பெருவிரலைப் பதித்து வேகமாக விசிறி பக்கங்களைப் புரட்டிவிட்டு,
“இன்று நூல்நிலையத்தில் இருந்து எடுத்து வந்தேன். பெரிய எழுத்துக்கள் கொண்ட புத்தகங்கள். large printed materials என்று இதைச் சொல்வார்கள். கண்பார்வை குறைந்த என்போன்றவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். உங்களது தாய்மொழியிலும் இப்படிப்பட்ட புத்தகங்கள் இருக்கின்றனவா?” என்று மனோகரனைப் பார்த்துக் கேட்டார்.

அவை சாதாரண புத்தகங்களைவிட நீளமாக இருந்தன. தமிழில் இப்படியான பெரிய எழுத்துகள் கொண்ட புத்தகங்களை மனோகரன் இதுவரை காணவில்லை. சிலவேளைகளில் இருக்கலாம்.
“உமக்கொரு செய்தியொன்று நான் சொல்ல வேண்டும். இன்றிலிருந்து உமக்குரிய ஒவ்வொருகிழமைச் சம்பளத்தையும் முன்னதாகவே தந்துவிடுவேன்” திடீரென வாசிப்பின் நடுவே பீடிகை போட்டார் நியூமன். மனோகரனுக்கு அவர் என்ன சொல்கின்றார் என்று புரியவில்லை. நியூமனின் முகத்தை உற்று நோக்கினான் அவன்.
“எப்பவாகிலும் நீர் இங்கு வரும்போது, சிலவேளை நான் இங்கு இருக்கமாட்டேன்!”
“ஏன் எங்காவது வெளிநாடு போகப் போகின்றீர்களா?” என்று வியப்புடன் மனோகரன் கேட்டான். புன்முறுவல் பூத்தபடியே நியூமன் தனது இரண்டு கைகளையும் உயர்த்தி மேல் நோக்கிக் காட்டினார். மனோகரன் திடுக்கிட்டுப் போனான். அவனின் நெஞ்சு சற்று வேகமாக அடித்தது. என்ன கதைப்பது என்று தெரியாமல் திக்குமுக்காடினான். திடீரென்று கேட்ட அந்த அதிர்ச்சி தரும் செய்தியை சொல்லில் விளக்கிவிடமுடியாது. அவனது திடீர் மாறுதலைக் கண்ட நியூமன் தானே பேச்சைத் தொடர்ந்தார்.
“நான் ஒரு கான்சர் நோயாளி. சிலவேளை சொல்லாமல் கொள்ளாமல் உங்களைவிட்டுப் பிரிந்து விடக்கூடும்.”

மனோகரன் நிலத்தை நோக்கிக் குனிந்தபடி இருந்தான். அவனால் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. அழுதுவிடுவேனோ என்று பயந்தான். அவனது நிலமையறிந்த நியூமன் 15 நிமிட இடைவேளை விட்டார். வீட்டிற்குள் சென்று இரண்டுபேருக்குமாக தேநீர் தயாரித்து, ஒரு பிளேற்றில் கொஞ்ச பிஸ்கற்றும் அடுக்கி எடுத்து வந்தார். இருவருமாக பிஸ்கற்றைச் சாப்பிட்டு தேநீர் பருகிக் கொண்டார்கள்.
“முதலில் எனக்கு ஒருவருடம் என்று சொன்னார்கள். இன்று எட்டுமாதங்கள்தான் என்று சொல்லிவிட்டார்கள். குருதிப்புற்றுநோய் வேகமாகப் பரவிவிட்டது.”

அருகேயிருந்த ஒரு கொப்பியை நீட்டி, மனோகரனின் தொலைபேசியையும் முகவரியையும் அதில் எழுதும்படி நியூமன் சொன்னார். அவனது விபரங்களை அவர் ஏற்கனவே தெரிந்திருந்தாலும், அது ஒரு பிரத்தியேகமான கொப்பி என்பதை மனோகரன் அறிந்துகொண்டான். அதில் ஏறக்குறைய பத்துப்பேரின் முகவரிகள் இருந்தன.

அங்கிருந்து வீட்டிற்குத் திரும்பும்போது கவலை தோய்ந்த முகத்துடன் வெளியேறினான் மனோகரன். நியூமனை ஒருதடவையேனும் திரும்பிப் பார்க்காமல் காரை நோக்கி வேகமாக நடந்தான். அவன் போவதைப் பார்த்தபடி நியூமன் புன்முறுவலுடன் நின்றிருந்தார்.

அவன் சிந்தனை குழம்பியது. காரை ஓட்டுவதில் கவனம் சிதறியது.

“கெடு குறிக்கப்பட்ட ஒருவரா இத்தனை புத்தகங்களையும் அன்றாட தினசரிகளையும் வாசிக்கின்றார்!”

மனோகரனால் நம்ப முடியவில்லை. இப்படியும் மனிதர்கள் இருக்கின்றார்களா?

இரவு ஒன்பது மணியளவில் மனோகரன் வீடு திரும்பினான். அவனது அப்பா டைனிங் ரேபிளில் அவனுக்காகக் காத்திருந்தார். வேலையிலிருந்து ஓய்வு பெற்றதன் பின்னர், தினமும் அவன் வரும் வரையும் காத்திருந்து அவனுடன் இரவுச்சாப்பாட்டை சாப்பிடுவதுதான் அவரது வழக்கம். மாலை வீட்டை விட்டுப் புறப்படும் போது எப்படி இருந்தாரோ – அதே கோலத்தில் மகனுக்காகக் காத்திருந்தார். அம்மா படுக்கைக்கு நேரத்துடனே போய்விடுவார். அவர் இன்னமும் றெஸ்ற்ரோரன்ற் ஒன்றில் பகுதி நேரமாக வேலை செய்து வருகின்றார். சிலவேளைகளில் இவர்களின் அரவம் கேட்டு எழுந்து வருவார்.

”அம்மாவுக்கும் உங்களுக்கும் சாப்பாடு கொண்டு வந்திருக்கிறேன்.”
“அம்மா இனிச் சாப்பிட மாட்டா. நாங்கள் இருவரும் சாப்பிடுவோம்.”

இருவரும் டைனிங் ரேபிளுக்குப் போனார்கள். மனோகரன் ஒரு கதிரையில் அமர்ந்து கொண்டான். அப்பா நடப்பதை அவதானிக்கின்றார். சாப்பாட்டை இரண்டு தட்டுகளிற்குள்ளும் பிரிக்கின்றான் மனோகரன். ‘வைன்’ போத்தல் ஒன்றை உடைத்து, கப்பிற்குள் ஊற்றி அப்பாவிற்கு நீட்டுகின்றான். சாப்பிடத் தொடங்குகின்றார்கள்.

“இன்னும் இரண்டொரு வருடங்களில் நீ ஒரு டொக்ரர் ஆகிவிடுவாய்… என்ன?”
மனோகரன் சிரிக்கின்றான்.

“அப்பா நான் உங்களிடம் ஒருவிஷயம் விஷயம் கதைக்க வேண்டும்”
“சொல்லு?”
“நான் தமிழ் படிக்கப் போகின்றேன்”
அப்பா மகனை ஆச்சரியமாகப் பார்க்கின்றார்.

“இனி எப்படி நீ சின்னப்பிள்ளையளோடை போய் இருந்து தமிழ் படிக்கப் போகிறாய்?”
“படிப்புக்கு வயது ஏது அப்பா?”

தமிழ் படிக்காததையிட்டு மனோகரனுக்கு இதுவரைகாலமும் கவலை இருந்ததில்லை. கவலை எல்லாம் பெற்றவர்களுக்குத்தான். எத்தனையோ வீடுகளில் பலபேரின் பாட்டா, பாட்டிமார்கள் – தங்கள் பேரப்பிள்ளைகளை – கழுத்திலே தண்ணீர்ப்போத்தலை தொங்கவிட்டு, அவர்களின் புத்தகப்பொதியை சுமந்து சென்று அவர்களுக்கு தங்களின் தாய் மொழியைக் கற்பித்தார்கள். அந்த நேரத்தில் இவர்களுக்கு மொழி பற்றிய பிரக்ஜை இருந்தபோதும் வசதி இருக்கவில்லை.

மனோகரனை நினைத்தபடியே அப்பா சாப்பிடத் தொடங்கினார். சாப்பாட்டை மூக்கு முகம் என எல்லா இடங்களிலும் அப்பிப் பிரட்டினார். ‘வைன்’ உதடுகளில் இருந்து மகிழ்ச்சிப் பிரவாகத்தில் வழிந்தது. மனோகரன் அவரது வாயைச் சுட்டிக் காட்டி சிரிக்கத் தொடங்கினான். நீண்ட நாட்களின் பின்னர் அந்த வீட்டிலிருந்து கிழம்பிய மகிழ்ச்சியும் சிரிப்பும் அது.
கதவை மெதுவாக நீக்கி, பெட் ரூமிலிருந்து அம்மா எட்டிப் பார்க்கின்றாள். அவரின் அந்தப்பார்வை – அந்தக்காட்சி – இரவு என்பதையும் மறந்து அவர்கள் இருவரையும் மேலும் சிரிக்கத் தூண்டியது. அம்மா இவர்களை நோக்கி வருகின்றார். அவர்கள் இருவருக்குமாக “நியூமன்” என்ற மனிதரின் கதை காத்துக் கிடக்கின்றது.

kssutha@hotmail.com