சிறுகதை செம்பப்பு சக்கெ!

- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -கணுக்காலின் மேற் கெண்டையில் முதிர்வின் வலைப்போர்த்தியக் கால் தோலில், புடைத்திருந்த நரம்பில் குருதி பெருக, எக்கி பரண்மேல் எதையோ துழாவினாள் ‘செள்ளி’.  அவளின் எழுபது வயதை எப்பொழுதுமே முப்பதாக காட்சிப்படுத்தும் உடல்திறம் இன்றும் இவளுடன் நீண்டிருந்தது. வயதின் முதிர்வினை அண்டவிடாது மாயம் செய்யும் அவளை கண்டு வியக்காதவர்கள் அவ்வூரில் யாருமில்லை. இன்னும் சுருக்கமடையாத உள்ளத்தாலும், குழந்தைகளுக்கான கைதேர்ந்த நாட்டு மருத்துவத்தாலும் அவள் அவ்வூரில் விசலமடைந்து கொண்டே  இருந்தாள். கைகளால் துழாவி துழாவித்தேட அவளுக்கு அது கிடைத்தப்பாடில்லை.

சலித்துக்கொண்டே அடுக்களையில் இருக்கும் முக்காலியை எடுத்துவந்து அதன்மேல் ஏறி தேடினாள். அதன்மேல் ஏறி எட்டிப்பார்த்தாள். பரணின் பாதிவரை மட்டுமே காட்சிப்பட, மேலும் தொடர்ந்த முயற்சியில் கண்விழிப்படலம் நோவுற அவளின் தேடல் தொடர்ந்தது. அவளின் செவிகளோ கடும் வயிற்றுப்போக்கால் அவதியுறும் அவளின் பதினோரு மாதப் பெயர்த்தி ‘மணியின்’ நலிவு ஓலத்தை கூர்மையாக கேட்டுக்கொண்டே தன் மனிதில் நோவினைச் சேர்த்துக்கொண்டிருந்தாள். ‘ஈரமாசியே! ஈரமாசியே!’ என்று தன் குலத்தெய்வத்தின் பெயரினை முனங்கியப்படியே அவளின் தேடல் தீவிரமாகத் தொடர்ந்தது.

பரணின் வலதுப்புற மூலையில் அகப்பட்டது அந்த அழக்கேறிய வெள்ளைத் துணிக்கட்டு. பலகையைவிட்டு இறங்காமலேயே வேகமாக, தன் கண்பார்வையோடு கைநோக்கத்தினைக் கோர்த்து அக்கட்டை விரைவாகப் பிரித்தாள்.

‘நாசமாய்ப்போன கட்டு’…

‘இதை இப்படி கட்டியவள் யார்? ‘

‘ஏய் ‘மாதி!’

‘உனக்கு அறிவில்லையா? ‘

என்று திட்டியப்படியே அவளின் முயற்சி தொடர்ந்தது.  அதே நேரத்தில் தொடரும் மணியின் அழகையொலியோ செள்ளியின் மனதிலுள்ள நம்பிக்கை கட்டினைச் சற்று விரைவாகவே அவிழ்த்துக் கொண்டிருந்தது. அழுக்கேறி இறுகிய அத்துணிக்கட்டினை ‘ஏ சவுன’ என்று வைதபடியே முழு பலத்துடன் அவிழ்த்தாள்.

பழமையூறி பிசிர் பிசிராக நைந்துப்பிரிந்த அத் துணிக்குள்ளிருந்த பொருட்களைத் தன் உள்ளங்கையில் கொட்டி ஆராய்ந்தாள். ஆழப் பெருமூச்சுடன் பலகையைவிட்டு இறங்கி விரைந்து வீட்டின் உள்ளறைக்கு ஓடினாள். இருள்சூழ்ந்த அந்த அறையில் விளக்கேற்றும் எண்ணம்கூட அவளுக்கு எழவில்லை; அதற்கு அவளுக்கு நேரமும் இல்லை. ஏதோ பழக்கத்தில் அவ்வறையின் சுவற்றில் குடைந்து அமைக்கப்பட்டுள்ள ‘கச்சு பள்ளியிலுள்ள’ (படகர்களின் வீட்டில்  வெண்கலம் பொருட்களை வைக்கும் இடம்) மருந்தரைக்கும் ‘அரெகல்லினை’ எடுத்தாள். அதை தன் வலதுக்கரத்தில் ஏந்திக்கொண்டே கொல்லைக்கு ஓடினாள்.

தன் தலைமயிர்ப் பிசிர் தெரியாவண்ணம் கச்சிதமாக தலையில் கட்டிய வெண்ணிறத் துணியால் கட்டிய ‘மண்டெப் பட்டு’ (படகரின பெண்கள் தலையில் கட்டும் உடை) அவிழ்ந்ததைக்கூட அவள் உணராது இயங்கினாள். தலைப்பட்டில்லாத செள்ளியை இன்றுதான் முதல்முறையாகப் பார்க்கிறாள் மாதி.

மணியோ! அவளது இறுதி ஓலங்களைக் கண்ணீர் வற்றிப்போன தன் கண்களுக்குள் இறுக்கி மென்முனகலாக மாற்றிக் கொண்டிருந்தாள் அவளின் தந்தை ‘மாதனின்’ மடியில்.

வன்மையாய் முனகும் ‘மாதனின்’ கண்களில் பனிக்கும் கண்ணீர்துளி அவனின் ஒட்டிய தாடைவழி வகிடுகிழித்து வயிறுவரை இறங்கும் காட்சியைச் சுவரோடு நின்றுக்கொண்டிருந்த அண்டைவிட்டு ‘மல்லனால்’ சகிக்க முடியவில்லை.

‘ஏய்! மாதா! ஒன்றும் ஆகாது; அழுதே…’

என்று பலமுறை ஆறுதல் சொல்லியும் அங்கு அழுகைக்கு அணையில்லை.

தன் பின்மண்டையைச் சுவற்றில் மோதி மோதி தன் வலியை வளர்த்துக்கொண்டிருந்த மாதனுக்கு மணியின் முனகல் உயிரின் அடியை உலுக்கிக் கொண்டிருந்தது.

மடியில் மடித்துப்போட்ட இரண்டு கனமான கம்பளிகளையும் தாண்டி தன் ‘கச்சை’ (ஆண்களின் கீழ் உடை) முழுவதையும் நனைத்த மணியின் பேதியின் நெடியுடன் மீளாத துக்கத்தின் நெடியும் சேர்ந்து வீசியது அவனுக்கு.

மூன்று பிள்ளைகளைக் காவு வாங்கி நான்காவதாய் பிறந்தவள் மணி. மாதனின் குலச்சடங்கான ‘தெவ்வச் சடங்கில்’ (அறுவடை திருநாள்) தன் மனைவி ‘மல்லெ’ சோற்றினை மடிப்பிச்சையாகப் பெற்று, முதல்முறையாக ஐந்து மாதம் கருநிலைத்து, கண்மணிப்போல பிறந்த இந்த மணி தந்த மகிழ்ச்சிஒளி அணையப்போவதை எண்ணியெண்ணி அரற்றி அழுத மாதன் சற்றே ஒருகணம் மணியை உற்றுப்பார்த்தான். மணியின் மெல்லிய முனகலும் நின்றுபோயிருந்தது.

‘எவ்வே! பொம்மெ! பொம்மெ! ‘

என்று பதறி, மணியின் கழுத்தை உலுக்க சட்டென அகலத் திறந்த மணியின் கண்கள் பிறைநிலவாய் தேய்ந்து மூடி இறுகியது.

அந்தக் கடைசிப் பார்வையின் மொழி ஓராயிரம் வலிமிகு அம்புகளை மாதனின் உயிரில் தைத்தது.

‘ஏய்! மல்லெ’

‘ஏய்! மல்லெ ‘

‘வந்திங்கு நம் மணியைப்பாரடி…’

என்று வலி கொண்ட பிடர் சிங்கமாய் கர்ஜித்தான்.

கிருத்துவ தயார் இல்லத்தில் மருந்து கொடுத்தும் கேட்காத நிலையில், மணி மீள்வது அரிது என்று மருத்துவர்கள் சென்ன கணத்தில் சிலையான மல்லெ இப்பொழுதும் அதுவாகவே தொடர்ந்தாள்.

மல்லனோ விரைந்துச்சென்று அவளின் தோள்களை உலுக்கியும் பயனில்லை.

வெறித்த அவளின் பார்வையில் பலமுறை கண்ணீர் நிரம்பி வழிய சலனமற்றவளாகவே தொடர்கிறாள். அமர்ந்து நீட்டிய தன் கால்களைச் சற்று விரித்துக்கொண்டு சிகைவிரி கோலத்தில் அவள் பல பல வலிகளைப் பிரசவித்துக் கொண்டிருந்தாள்.

தன் மகனின் அலறல் கேட்ட கணத்தில், கண்களில் கண்ணீர் களமாட, ஓடிவந்த செள்ளி வேகமாக அரைகல்லில் வயிற்றுப்போக்கு மருந்தான ‘செம்பப்பு சக்கெயை’ (படகர் மரபு மருத்துவத்தில் வாயிற்றுப்போக்கு மருந்து) அரைத்தாள்.

பதற்றத்தில் இரண்டு மூன்று சொட்டுகள் தண்ணீர் மிகுந்துபோக, அதை களிம்புநிலைக்கு மாற்ற வேகமாக அரைத்தாள்.

‘ஏய் ஈரமாசியே! இது என்ன சோதனை

கையில் ஐந்து வசம்பு மணியைக் கட்டினேன்..

அவள் பிறந்து நாற்பதாவது நாளில் வயிற்றுப் பூச்சியை முறித்து எதிர்ப்புச் சக்தியைக் பெருக்க ‘அரெமத்து’ எனும் மரபு மருத்துவத்தை செய்தேன்…

‘முறையா எல்லாம் செய்தேனே…

ஏன் இந்தச் சோதனை? ‘

என்று அவள் புலம்பிக் கொண்டே அரைக்க களிம்பாகியது செம்பப்பு சக்கெ. அதை தனது வலது ஆட்காட்டி விரலில் அக்களிம்பினை எடுத்து வெண்கலக் கோப்பையில் சேகரித்தாள்.

சாணமிட்டு மெழுகிய தரையை தன் இடதுகையால் பொத்தி முனகலுடன் எழுந்து சென்றாள். மாதன் மடியில் கிடந்த மணியை தன் மார்புடன் ஆர அணைத்தெடுத்து சம்மணமிட்டு அமர்ந்தாள்.

குழந்தையை தன் மடியிலிருத்தினால். தன் கைவிரலால் இராகிக் களியின் நிறத்தில் கட்டிவிட்ட மணியின் வாயை விலக்கி, தன் வலது கையின் ஆட்காட்டி விரலால் செம்பப்பு சக்கெயின் களிம்பினை அளித்தாள்.

‘எவ்வே! ஈரமாசியே! எல்லாம் உன்கையில் …’

என்று தன் இடது கையை மேல்நோக்கி தூக்கி தூக்கிக் காட்டியப்படியே ஊட்டினாள்.

ஏகதேசமாக பத்தாவது ஊட்டலில் கொடுத்த மருந்து மணியின் வாயின் வலது பக்கவாட்டில் வழிந்தது.

‘அவ்வே! அவ்வே! ஈரமாசியே!’ என்று கதறினாள்….

மணியின் வாயினை உலுக்கினாள். அவளைத் தன் தோளில் போட்டுத் தூக்கி முதுகைத் தடவினாள், தட்டினாள்; இறுதியாக செள்ளியும் மல்லெயைப் போலவே சிலையானாள்.

அவளின் ஒட்டியக் கன்னத்தில் கண்ணீர் வழிந்தது. அதை துடைக்கக்கூட உணர்வின்றி சுவற்றில் சாய்ந்த செள்ளியையும் மல்லன் ஓடிச்சென்று தோளினை உலுக்கினான். சிலையென தொடர்ந்தது அவனது இரண்டாவது முயற்சியும்.

தன் இரு கரங்களையும் தலையில் வைத்து, தேம்பி தேம்பி அழும் மாதனுக்கு ஆறுதல் சொல்ல என்ன உள்ளது… என்று நினைத்து நினைத்துப் பெருகிய மல்லனின் கண்ணீர் அவனையும் சிலையாகவே மாற்றியிருந்தது.

அவ்வீடு முழுவதும் ஒரே நிசப்தம். ஆதிக்குருதியின் நிணம்நாற சுவரோடு சாய்ந்தவர்களைச் சுவராகவே மாற்றியிருந்தாள் மணி.

தன் வலக்கரத்தின் மணிக்கட்டால் கண்களை அழுத்தி துடைத்து கொண்டே செள்ளியை வெறித்து பார்த்தான் மாதன். அவனின் இறுதி நம்பிக்கையும் பொய்த்தது.

அவன் நெடுநேரம் அமர்ந்திருந்ததால் பிடித்திருந்த தன் கால்தசைகளைத் தளர்த்தி, சுவற்றினைப் பொத்தி எழுந்தன். மணியின் மலம் வரைந்த தன் அவிழ்ந்த கச்சையை வெறுமென அனிச்சையாய் சுற்றிக் கட்டினான்.

சிலையான செள்ளிக்கு அருகில் சென்று முட்டியிட்டு அமர்ந்தான். தன் தடித்த கரங்களால் மணியின் கன்னங்களைப் பிடித்து அழுத்தித் தடவினான்.

‘ஏ முத்து! ஏ முத்து! ‘

என்று விளித்தவாறே சம்மணமிட்டு அவளை தன் மடியில் கிடத்தினான்.

‘ஏய் பொம்மெ!

கண்ணைத் திறந்து பாரடி …’

என்று குழைந்து முனங்கினான்.

தளாத வருத்தம் தோய்ந்தது. தரையில் கோப்பையில் வைக்கப்பட்டிருந்த செம்பப்பு சக்கெயின் களிம்பினைத் தன் நடுங்கும் வலதுகரத்தின் ஆட்காட்டி விரலால்  எடுத்தான்.

கார்முகிலென மாறிப்போன மணியின் உதட்டினை விலக்கி வலிந்து ஊட்டினான்.

குமுறும் நெஞ்சத்தில் குழையும் அன்பு மேலும் மேலும் அழுத்த, உயிர்விடும் ஓவமூச்சில் வான்நிலவும் அழுதது. இப்படியே வைகறைவரை நீண்டது தந்தையின் இந்த மானசீகத் தாலாட்டு.

மீளாத துக்கம் மாதனின் கண்களை இருட்ட, அடர்ந்து இருண்ட உலகில் உலவிய மாதனை ஏதே ஒரு ஸ்பரிசம் தீண்டியது.

சுடும் பாதையில் கிடைத்த நிழலாய் அது அவனது சுயத்தில் எள்ளளவு சுகம் கூட்ட, அவனின் சிந்தனையில் மீண்டும் மணி உதித்தாள்.

தீடீரென்று பதறி கண்களைத் திறந்துப் பார்த்தான்.

மணியின் கைகள் அவனது கண்ணத்தில் புது ஜென்மத்தை வரைந்துக் கொண்டிருந்தது.

மணியின் அகலத்திறந்தக் கண்கள் அவனிடம் மீண்டும் அதே கேள்வியைத் தொடுத்துக் கொண்டிருந்தது. ஆதவனும் உதிக்க அவ்வறை முழுவதும் செம்பப்பு சக்கெயின் மணம் நிறைந்திருந்தது.

மின்னஞ்சல்- suniljogheema@gmail.com